
அப்போது நேரம் இரவு பன்னிரண்டு மணியைத் தாண்டியிருக்கும். பாரிசின் பிரதான தெருவொன்றிலிருக்கும் பஸ் தரிப்பில் பஸ்சிற்காக காத்திருந்தேன். எனக்குச் சற்றுத் தூரத்தில் நின்று கொண்டிருப்பது நமது பையன்தான் என்பது தெரிந்தது. வேலை முடிந்து வீட்டிற்கு போவதற்காக காத்திருக்கிறான் என்பது தெரிந்தது. சில நிமிடங்கள்தான் சென்றிருக்கும். ஒரு கறுப்பின இளைஞன் அவனை அணுகினான். இவன் சற்று அச்சத்துடன் இவனை பார்ப்பது தெரிந்தது. நேரம் என்ன? என்று அந்த கறுப்பின இளைஞன் நம்மவரிடம் கேட்பது எனக்கும் கேட்டது. அவன் பிரெஞ்சு மொழியில் கேட்டான்.

அகதியாகி உணவகக் குசினிக்குள் புகுந்த ஈழத்தமிழர்களில் நானும் ஒருவன். பத்து வருடங்கள் ஓடிவிட்டன. சும்மா சொல்லக் கூடாது நாளொன்றின் முக்காற் பங்கு நேரத்தை இதற்குள்ளாகவே செலவிடும் இயந்திர மனிதனாகிய பின்…. இது உலக அனுபவங்களைக் கொடுக்கும் மையமாக, என் வாசித்தலை தரும் வாசிகசாலையாக, பல்கலாச்சார அறிமுகங்களைத் தரும் பல்கலைக் கூடமாக, விவாதங்களைக் கொடுக்கும் விவாதமேடையாக, இன்னும் எவ்வளவோவாக பரிணமித்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

புறநகர்ப்பகுதியில் ஆடைத் தொழிற்சாலை. புவி வேலைக்கு வந்து இரண்டு மாதங்கள் என்றாலும் அவனது துடிப்பும், நகைச் சுவையும் எல்லோரையும் கவர்ந்து விட்டிருந்தது. இத் தொழிற்சாலையில் எட்டுப்பேர் தமிழர். எங்களுக்குள்ளாக தமிழில் கதைப்போம். ரமணன் நீண்ட நாடகளாக இங்கு வேலை செய்பவர் ஈரத்துணியை பிழியும் இயந்திரத்தில் இவரது வேலை. ஓரு நாள் ரமணனுடன் வேலை செய்ய நிர்வாகம் புவியை அனுப்பியிருந்தது. இயந்திரம் நிதானமாகப் பிழிவதை பார்த்த புவி, “அண்ணே இது சரிப்பட்டு வராது.. ஒரு முனையை நீங்கள் பிடியுங்கோ… மறு முனையை நான் பிடிக்கிறேன்… முறுக்குவோம்.”