
நான் வேலைக்கு பயணிக்கும் இரயிலில் அடிக்கடி அவரைச் சந்திப்பதுண்டு. ஆனால் ஒருநாளும் பேச வாய்ப்புக் கிடைத்தில்லை. ஏனெனில் அவரை எப்போதும் தூங்கி விழும் நிலையில்தான் நான் காண்பதுண்டு. வாயைப் பிளந்தபடி அருகில் இருப்பவரின் தோளில் தூங்கிச் சரிவதும் அவர்கள் இவரை முறைத்துப் பார்ப்பதும் தள்ளி இருப்பதும் அடிக்கடி நிகழ்வதுண்டு. அன்றும் இப்படியான காட்சிதான். நான் வாசித்துக்கொண்டிருந்தேன். இரயில் திடீரென பெரிய சத்தத்துடன் குலுங்கி நின்றது.

அகதியாகி உணவகக் குசினிக்குள் புகுந்த ஈழத்தமிழர்களில் நானும் ஒருவன். பத்து வருடங்கள் ஓடிவிட்டன. சும்மா சொல்லக் கூடாது நாளொன்றின் முக்காற் பங்கு நேரத்தை இதற்குள்ளாகவே செலவிடும் இயந்திர மனிதனாகிய பின்…. இது உலக அனுபவங்களைக் கொடுக்கும் மையமாக, என் வாசித்தலை தரும் வாசிகசாலையாக, பல்கலாச்சார அறிமுகங்களைத் தரும் பல்கலைக் கூடமாக, விவாதங்களைக் கொடுக்கும் விவாதமேடையாக, இன்னும் எவ்வளவோவாக பரிணமித்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

புறநகர்ப்பகுதியில் ஆடைத் தொழிற்சாலை. புவி வேலைக்கு வந்து இரண்டு மாதங்கள் என்றாலும் அவனது துடிப்பும், நகைச் சுவையும் எல்லோரையும் கவர்ந்து விட்டிருந்தது. இத் தொழிற்சாலையில் எட்டுப்பேர் தமிழர். எங்களுக்குள்ளாக தமிழில் கதைப்போம். ரமணன் நீண்ட நாடகளாக இங்கு வேலை செய்பவர் ஈரத்துணியை பிழியும் இயந்திரத்தில் இவரது வேலை. ஓரு நாள் ரமணனுடன் வேலை செய்ய நிர்வாகம் புவியை அனுப்பியிருந்தது. இயந்திரம் நிதானமாகப் பிழிவதை பார்த்த புவி, “அண்ணே இது சரிப்பட்டு வராது.. ஒரு முனையை நீங்கள் பிடியுங்கோ… மறு முனையை நான் பிடிக்கிறேன்… முறுக்குவோம்.”