அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 9 arrow ஈழத்தின் வடபுலப்பெயர்வும் இலக்கியப் பதிவுகளும்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஈழத்தின் வடபுலப்பெயர்வும் இலக்கியப் பதிவுகளும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: என். செல்வராஜா, நூலகவியலாளர், இலண்டன்.  
Monday, 06 September 2004

வரைந்தவர்: தாமரைச்செல்விஈழத்தின் வடபகுதியில் தளம்கொண்டுள்ள பலாலி இராணுவ முகாமிலிருந்து பெருமெடுப்பில் வலிகாமம் பிரதேசத்தை நோக்கிய படைநகர்வொன்றை நடத்தத் திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு முகம்கொடுக்க இயலாமல் 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் பகுதியிலிருந்து மக்கள் அனைவரும் தாம் வாழ்ந்த வீடுவாசல்களையும் தேடிய தேட்டங்களையும் கைவிட்டு பயத்தோடும் பரிதவிப்போடும் குடாநாட்டைவிட்டு பாரிய இடப்பெயர்வொன்றை மேற்கொண்டார்கள். உலகின் எந்தவொரு இனத்திற்கும் வரலாற்றில் ஏற்பட்டிராததும் பாரிய எடுப்பில் இடம்பெற்றதுமான இந்த அவல நிகழ்வில் ஏறத்தாள ஐந்து இலட்சத்தி இருபத்தி ஐயாயிரம் மக்கள் கையில் எடுக்கக்கூடிய பொருட்களுடன் குடும்பம் குடும்பமாக ஒரே நாளில் புறப்பட்டு சேரிடம் அறியாது மூன்று நாட்களாக உண்ண உணவின்றி மரநிழல்களில் தங்கிக் கூட ஓய்வெடுக்கும் வாய்ப்பின்றி ஒருவழிப்பயணத்தை மேற்கொண்ட அந்தக் கையறுநிலை ஈழப்போராட்ட வரலாற்றில் ஒரு பாரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் தனிப்பட்ட சொத்துக்கள் மாத்திரமன்றி ஏராளமான கல்வியியல் நிறுவனங்களும் கூட இந்தப் புலப்பெயர்வால் கைவிடப்பட்டு பாரிய பாதிப்புக்குள்ளாயின. படைப்பாளிகள் பலர் தமது படைப்புக்களையும் சேகரித்துக் காத்து வைத்த நூல்களையும் இக்காலகட்டத்தில் பெருமளவில் இழந்தார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல ஆயிரம் ஆவணங்கள் இவ்விடப்பெயர்வின் பயனாகக் கவனிப்பாரற்று கறையான்களின் பசிக்கு உணவாகி அழிந்தொழிந்து விட்ட செய்தி மனதை வருத்துவதாகவுள்ளது. கிராமம் தோறும் கட்டிக்காத்த சனசமூக நிலையங்களில் நூலகங்களில் பாதுகாத்து வைக்கப்பட்ட நூல்களின் இழப்பு கொஞ்ச நஞ்சமல்ல.

இந்த வரலாற்று அவல நிகழ்வையும் அதற்கு முன்னரும் பின்னருமான வேறும் பல தமிழரின் முடிவில்லாத இடப்பெயர்வுகளையும் ஈழத்து இலக்கியங்களாக நம்மவர்கள் பதிவுசெய்துவைத்துள்ளார்கள். போரின் விளைவாக ஏற்பட்ட இந்த உள்ளக இடப்பெயர்வுகளினைச் சித்திரிக்கும் ஈழத்து இலக்கியங்கள் சிலவற்றைப் பற்றிய குறிப்புரையாக இக்கட்டுரை அமைகின்றது.

1995இன் பாரிய இடப்பெயர்வினைப்பற்றிய முதல் நூலாக எம்மை வந்தடைந்தது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு நூலாகும். வசந்தராஜா அவர்கள் இலண்டனிலிருந்து Tamil Exodus and Beyond என்ற பெயரில் எழுதி வெளியிட்ட அந்த நூல் இலங்கையின் தேசியப் போராட்டம் குறித்த பகுப்பாய்வுக் கண்ணோட்டமாக அமைந்திருந்தது. இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி நிலையத்தின் உயரதிகாரியாக இருந்த வேளையில் சேகரித்த பல தகவல்களின் அடிப்படையில் இவர் இந்நூலைத் தயாரித்திருந்தார். இந்த நூல் பின்னர் 1996இல் “தமிழர் வடபுலப் பெயர்ச்சி: அவலமும் அதற்கு அப்பாலும்.” என்ற பெயரில் எஸ்.சங்கரமூர்த்தி அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு இலண்டன் வாசன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. London N19 3TY: Rajah Publishers, 56 Iberia House, New Orleans Walk. 180 பக்கம் கொண்ட இந்நூல் விரிவான முறையில் தமிழர் புலப்பெயர்வினையும் அதன் பின்னணியையும் அரசியல்ரீதியில் அலசி ஆராய்வதாக அமைந்திருந்தது.

“யாழ்ப்பாண இடப்பெயர்வு” என்ற மற்றுமொரு ஆய்வு நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல்துறையைச் சார்ந்த கார்த்திகேசு குகபாலன் அவர்களால் எழுதப்பட்டிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் குடித்தொகைக் கல்வியில் சிறப்புப்பட்டம் பெற்றவர் கலாநிதி குகபாலன். தனது முதுகலைமானி, கலாநிதி, முதுகலைமானி டிப்ளோமா பட்டக்கல்வி ஆகியவற்றில் குடித்தொகைக்கல்வியை, குறிப்பாக இடப்பெயர்வு சம்பந்தமான ஆய்வினையே தொடர்ந்தும் மேற்கொண்டவர் என்றவகையில் கலாநிதி குகபாலனின் இந்நூல் மிக ஆழமான ஆய்வுநூலாக இன்றுவரை கருதப்படுகின்றது.

கொழும்பில் அச்சிடப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை வெளியீடாக நவம்பர் 1996 இல் வெளியிடப்பட்ட இந்நூல் 160 பக்கங்களைக் கொண்டது. 1995ம் ஆண்டு ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் நிகழ்ந்த மக்கள் இடப்பெயர்வு பற்றிய இந்த நூலினை யாழ்ப்பாண இடப்பெயர்வு பற்றி குடிப்புள்ளியியல் ரீதியாக மட்டுமின்றி சமூகவியல் கண்ணோட்டத்திலும் குகபாலன் ஆய்வுசெய்துள்ளார். 10 நாட்களுக்குள் இடம்பெற்ற இந்த இடப்பெயர்வு 5இலட்சத்து 25 ஆயிரம் மக்களது பாரிய இடப்பெயர்வாகும். இவ்விடப்பெயர்வின் அடிப்படைக்காரணி அரசியலாக இருப்பினும், இந்நூலின் அடிப்படை நோக்கம் கருதி அதற்கு முக்கியத்துவம் வழங்காது, ஆய்வுத்தேவை கருதி இடப்பெயர்வினால் மக்கள் அனுபவித்த, அனுபவித்துவரும் சமூக, பொருளாதார கலாச்சாரப் பிரச்சினைகளைப் பற்றியே விரிவாக அலசப்பட்டுள்ளது.

“யாழ்ப்பாணத்தில் அந்த ஆறுமாதங்கள்” என்றொரு நூல் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.  நவம்பர் 1997இல் இந்நூல் யாழ்ப்பாணம், சுண்டிக்குளி மணிஓசை அச்சகத்தினால் அச்சிடப்பெற்று 90 பக்கங்கள் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது.

1995இல் வலிகாமத்தில் இடம்பெற்ற பாரிய இடப்பெயர்வு இந்த நூலிலும் பதிவுக்குள்ளாகின்றது. பிறந்த மண்ணில் ஆழ வேரோடியிருந்ததால் வலிகாமத்தில் இடம்பெற்ற இடப்பெயர்வில் பங்கேற்காது யாழ்ப்பாணத்திலேயே தங்கிவிட்டவகையில் அங்கு எஞ்சியிருந்த 2000 பேரில் அராலியுர் சுந்தரம்பிள்ளையும் அவரது மனைவியும் அடங்குவர். அவர்களது அந்த ஆறுமாத வெளி உலகத் தொடர்பற்ற வாழ்க்கை அனுபவம் இங்கு பதிவாகியிருக்கின்றது. பாரிய இடப்பெயர்வை வித்தியாசமான பார்வையில் அணுகும் அனுபவம் இந்நூலாசிரியருக்குக் கிடைத்த தனித்துவமான வாய்ப்பாகும். காலத்துக்குக்காலம் இவர் கொழும்பு, வீரகேசரி பத்திரிகையில் எழுதிய தனது அனுபவக்குறிப்புகளையே இங்கு “யாழ்ப்பாணத்தில் அந்த ஆறு மாதங்கள்” என்ற நூலில் தொகுத்திருக்கின்றார்.

“யாழ்ப்பாணத்தார் கண்ணீர்” என்ற கவிதை நூல் முதுபெரும் எழுத்தாளர் வரதர் அவர்களால் யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடாக, ஜுன் 1997இல் வெளிவந்திருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து ஆனந்தா அச்சகத்தில் அச்சிடப்பட்ட 32 பக்கம் மட்டுமே கொண்ட இச்சிறு நூல் உருவில் சிறிதாயிருந்தபோதிலும், காட்டமானதொரு புதுக்கவிதைநூலாக அமைந்துள்ளது. பதினான்கு ஆண்டுக்காலக் கண்ணீர்க் கடலிலிருந்து ஒரு சிறு துளி என்ற குறிப்புடன் வெளியாகிய புதுக்கவிதை இது. வீரகேசரி வார இதழில் 26.5.1996 அன்று முதலில் வெளியாகியது.

1995 ஒக்டோபர் 30ம் திகதி யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிகழ்ந்த பாரிய இடப்பெயர்வின் அவலங்களை “யாழ்ப்பாணத்தார் கண்ணீர்” என்ற இந்நூலில் ஆசிரியர் ஒரு கண்ணீர்க் கவிதையாக்கியுள்ளார். சத்திய ஆவேசம் கொண்ட ஒரு கவிஞனின் ஆழ்மனத்தில் உறங்கிக் கிடந்த மானிட நேயம் இங்கு கவிதாபுலம்பலாக விரிந்துள்ளதை அவதானித்து ரசிக்கமுடிகின்றது. ஓவ்வொரு வரியும் தாம் அனுபவித்த அவலத்தினையும் இழப்புக்களையும் ஏமாற்றங்களையும் எடுத்துக்கூறுகின்றது. இந்நுநூலுக்கு முன்னுரை எழுதியுள்ள செங்கை ஆழியான் அவர்களது உரையின் ஒரு பகுதியை கீழே தருகின்றேன்.

“அந்தச் சோக நாடகத்தின் சமூகப் பயன் ஈழத்து வரலாற்றில் ஒரு கறை.  கட்டியெழுப்பிய சுதந்திர மாளிகையின் தாங்குநிலையை ஐயறவைத்துள்ள பூகம்ப அலை. ஆயிற்று. அந்த சோகநாடகம் ஆரம்ப கட்டத்திற்கே திரும்பவும் மீண்டுவிட்டது. இந்த நாடகத்தில் நடித்த இலட்சோபலட்சம் மக்களில் பலர் காணாமல் போய்விட்டார்கள். இழந்துவிட்ட சொர்க்கத்திற்கு மீண்டுவந்த உணர்வு செத்துப் பலகாலமாகின்றது. எல்லாமிருந்தும் எதுவுமேயில்லாத உணர்வு. இந்த நாடகத்தின் ஒவ்வொரு அசைவிலும் மனுக்குலம் அகௌரவப் படுகின்றது. இடிபடுகின்றது. மனுக்குலத்தின் இருதயம் குத்தப்பட்டுக் குருதி வடிகின்றது. ஓடியபோது இருந்த பயமும் பரிதவிப்பும் திரும்பி வந்தபோது பயமும் அவமானமுமாக மாறி விட்டன. வீடுகளுக்குள் முடங்கிச் சிறைப்படுத்திக்கொள்வதன் மூலம் வீதிகளில் சந்திக்கின்ற அவமதிப்புக்களையும் மனக்காயங்களையும் குறைத்துக்கொள்ளும் தந்திரோபாயத்திற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் வந்துவிட்டனர்”.

இப்படியாக ஈழத்தின் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர்களால் 1997 ஏப்ரலில் எழுதப்பட்ட இந்த முன்னுரை புலப்பெயர்வின் வடுக்களை உணர்வுபூர்வமான பதிவுகளாக்கியிருக்கின்றன.

தமிழரின் பாரிய புலப்பெயர்வின் அவலத்தைப் பதிவுசெய்துள்ள சிறுகதைகள் ஏராளம் வெளிவந்திருக்கின்ற போதிலும் சிலவே தனித் தொகுப்புக்களாக்கப்பட்டுள்ளன. வேறும் பல சிறுகதைகள் அவற்றின் ஆசிரியர்களின் சிறுகதைத் தொகுதிகளுக்குள் இரண்டறக் கலந்து தனித்துவமான அடையாளத்தைப் பெறத் தவறிவிட்டன. இவற்றில் சில கதைகள் வலிகாமம் இடப்பெயர்வில் பங்கேற்காது புகலிடத்தில் இருந்தவண்ணம் கற்பனையில் ஊற்றெடுத்து எழுதப்பட்டபுனைகதைகளாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றைத் தவிர்த்து உண்மைநிலையினை உணர்ந்து அனுபவித்த எழுத்தாளர்களின் புலப்பெயர்வு அவலங்களை கதைக்களமாகக் கொண்டு வெளிவந்த சிறுகதைகள் தாயகத்தில் தொகுக்கப்பட்டு வெளியிடப்படவேண்டும்.

“யாழ்ப்பாணம்” என்ற தலைப்பில் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை அவர்கள் 1999இல் மற்றொரு நூலை சிறுகதைத் தொகுப்பாக வெளியிட்டிருந்தார். யாழ்ப்பாணம் மேனகா அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்ட 110 பக்கங்கள் கொண்ட தொகுப்பு இதுவாகும். ஈழத்து சிறுகதை வரலாற்றில் சமகாலச்சூழலைப் பிரதிபலித்து இலக்கியம் படைத்தவர்களில் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை முக்கியமானவர் என்று அடையாளம் காணப்பட்டவர். வாசகர்களோடு நேரடியாக உறவைக்கொள்ளும் எழுத்துநடையில் மெல்லிய கிண்டல் ஊடுபரவ, சமகால வாழ்க்கையனுபவங்களையும் அவலங்களையும் தக்க விவரணப்பாங்கில் இவர் படைத்துவந்துள்ளார். 60 கதைகள் வரையில் எழுதியிருந்தும், நூலுருவில் இவர் வெளியிட்ட ஒரேயொரு சிறுகதைத்தொகுதி “யாழ்ப்பாணம்” என்ற நூலாகும். சமகால நிகழ்வுகளைப் பகைப்புலமாகக் கொண்ட 10 கதைகள் இதில் உள்ளன. வன்னி, மலையகம், யாழ்ப்பாணம், கொழும்பு என்று இவரது கதைத்தளங்கள் விரிகின்றன. இதிலுள்ள யாழ்ப்பாணம் என்ற கதை இன்றைய கட்டுரைக்கு முக்கியமானது. 1995 இடப்பெயர்வுக்குப் பிந்திய யாழ்ப்பாணச் சூழலை இந்தத் தலைப்புக்கதை மிக அழுத்தமாகப் பதிவுசெய்கிறது. அக்காலகட்டத்தில் அவரது வாழ்ந்துபட்ட அனுபவங்கள் இக்கதையில் தரிசனத்திற்குள்ளாகின்றது.

அழுவதற்கு நேரமில்லை

“அழுவதற்கு நேரமில்லை” என்று மற்றொரு சிறுகதைத் தொகுதியும் அண்மைக்காலத்தில் வெளிவந்துள்ளது. தாமரைச்செல்வி என்ற ஈழத்தின் குறிப்பிடத்தக்கவொரு வன்னி எழுத்தாளர் எழுதிய சிறுகதைகள் இவை. பரந்தன்: குமரபுரம், சுப்ரம் பிரசுராலயம் டிசம்பர் 2002 இல் கிளிநொச்சி: நிலா பதிப்பகத்தின் வழியாக பதிப்பித்துள்ள 96 பக்கம் கொண்ட இச்சிறுகதைத் தொகுப்பு முற்று முழுதாக 1995இன் பாரிய இடப்பெயர்வின் அவலங்களையே சித்திரிக்கின்றது. தாமரைச்செல்வியின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பு இதுவாகும். 

“அழுவதற்கு நேரமில்லை” கதைத் தொகுதியில் அடங்கியுள்ள ஒரு சிறுகதை தவிர மற்றைய 11 கதைகளும் இடப்பெயர்வின் பின்வந்த நாட்களில் எழுதப்பட்டவை என்பதால் அதன் கதைக்களங்கள் அந்த நிகழ்வின் அவலங்களைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளன. 1995இல் ஏற்பட்ட வடபுலப்பெயர்ச்சி-வன்னிக்கான யாழ்ப்பாணப் புலப்பெயர்வு மிகப்பெரிய தாக்கத்தை ஈழத்தவரில் பின்னாளில் ஏற்படுத்தியது. இதனு}டாகவும் இதனைத் தொடர்ந்தும் அகதிப் பிரச்சினை அங்கு மோசமடைந்து மிக உக்கிரமான நிலையை தாயகத்தில் கண்டிருந்தது. இந்தப் புதிய நிலைமையைச் சுட்டிக்காட்டும்வகையில் இதிலுள்ள அனைத்துக் கதைகளும் அமைந்துள்ளன. 11 சிறுகதைகளும் ஒருங்கு சேர வாசிப்பவர்களுக்கு 1995இன் வடபுலப்பெயர்வின் அவலத்;தை மாறுபட்ட கோணங்களில் தொடர்ச்சியாகத் தரிசிக்கும் அரிய வாய்ப்புக் கிட்டியிருப்பதுடன், அனுபவப்பகிர்வாக வெளியான கதாசிரியரின் வார்த்தை ஜாலமற்ற வசன அமைப்புக்கள், போன்றவற்றால் வாசகர்களை தாயகத்தில் அந்த நீண்ட பயணத்தில் நீண்டநேரம் ஆத்மார்த்தமாகச் சஞ்சரிக்க வைப்பதில் வெற்றியும் கண்டிருக்கின்றார்;.

நாவல்களைப் பொறுத்தவரை இலங்கையின்  பிரபல படைப்பிலக்கியவாதியான செங்கை ஆழியான் அவர்கள் எழுதிய “போரே நீ போ”  என்ற நாவல் குறிப்பிடத்தகுந்தது. கொழும்பு பூபாலசிங்கம் பதிப்பகம், ஜுன் 2002 இல் கொழும்பு: சக்தி என்ரர்பிரைசஸ் மூலம் அச்சிட்டு இந்நு}லை வெளியிட்டுள்ளார்கள். 194 பக்கம் கொண்ட இந்நு}ல் தாயகத்தின் சமகாலப் பிரச்சினைகளை ஒரு பாமரக் குடிமகனின் பார்வையில் கூறும் நாவலாகும். 1995இல் நிகழ்ந்த பாரிய இடப்பெயர்வின்போது, இடம்பெயர்ந்த மக்களையும், இடம்பெயராத மக்களையும் இணைத்த ஒரு நு}லாக - நாவலாக இது அமைகின்றது. மானிடவாழ்வின் பெறுமதி வாய்ந்த உயிர்களையும் இளமைக் கனவுகளையும் போரும், அதன் வெளிப்பாடாயமைந்த புலப்பெயர்வும் எவ்வளவுது}ரம் நாசப்படுத்தி வருகின்றதென்ற அவலநிலைகளை “போரே நீ போ” சித்;;திரிக்கின்றது. யாழ்ப்பாணம், உதயன் பத்திரிகையில் தொடராக இது வெளிவந்தபோது மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கப்பட்டது.

தாயகத்தில் இடம்பெற்ற 1995இன் பாரிய இடப்பெயர்வினைப்பற்றிய இலக்கியங்கள் ஈழத்து இலக்கியப்பரப்பில், குறிப்பாக ஈழவிடுதலைப்போராட்ட இலக்கியங்களுக்குள் தனித்துவமானதொரு இடத்தினை வகிக்கும் என்பது நிச்சயம்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 21:09
TamilNet
HASH(0x55f4a3cc9138)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 21:09


புதினம்
Thu, 28 Mar 2024 21:09
















     இதுவரை:  24714097 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4309 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com