அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 31 May 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 9 arrow எங்களுக்கானதொரு சினிமா!?
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


எங்களுக்கானதொரு சினிமா!?   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: யதீந்திரா  
Thursday, 09 September 2004
பக்கம் 2 of 4

3

பொதுவாக ஒரு விடயம் சொல்லப்படுவதுண்டு. ஈழத்து தமிழ்ச் சூழலில் தனித்துவமானதொரு சினிமா வளர்ச்சியடையாமல் போனதற்கான காரணம், தென்னிந்திய தமிழ் சினிமாவின் வருகையும் அது ஈழத்து தமிழ்ச் சூழலில் ஏற்படுத்திய அகநிலைத் தாக்கமும் என்பதாகும். ஈழத்தின் சினிமா ஆய்வாளர்கள் எனப்படுவோரும், சினிமா சார்ந்து சிந்திப்போரும் இதனை அடித்தளமாகக் கொண்டே தங்கள் மதிப்பீடுகளை முன்னிறுத்தி வந்திருக்கின்றனர். எங்களுக்கானதொரு தனித்துவமான சினிமா வளர்ச்சியில் மேற்படி காரணம் கணிசமான செல்வாக்குச் செலுத்தியிருப்பது உண்மைதான். தென்னிந்திய தமிழ்ர்களின் வாழ்வியலுக்கும் ஈழத்து தமிழ்ர்களின் வாழ்வியலுக்குமிடையில், ஒரு இணைவுத்தன்மை இருப்பதை நாம் அறிவோம். திராவிடர் என்ற ஒற்றை இன அடையாளம், மொழி, கலாசாரரீதியான (பெருமளவிற்கு) ஒத்த தன்மைகள், போன்ற இணைவுப் புள்ளிகள். எல்லைகளை அறுத்து இருபகுதி மக்களையும் ஒரு நேர் கோட்டில் நகர்த்தியது என ஒருவர் கூறின் அது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. இந் நிலைமை ஈழத்துத் தமிழர்கள் பொதுவாகவே தென்னிந்திய தமிழர்களின் வளர்ச்சியை தங்களது வளர்ச்சியாகவும் கருதும் நிலைக்கு கொண்டு சென்றது. இந் நிலைமையை நாம் ஆரம்ப கால கலை, இலக்கிய வெளிப்பாடுகளில் தெளிவாகப் பார்க்கலாம். தமிழக இலக்கியம் குறித்து ஈழத்து இலக்கியகர்தாக்கள் மத்தியில் ஒரு பிரமிப்பு இருந்தது. ஜெயகாந்தன் பாதிப்பு, புதுமைப்பித்தனைப் பின்பற்றுதல், மௌனியை தழுவுதல் என்பதெல்லாம் பெருமைக்குரிய விடயங்களாகவே கருதப்பட்டன. இன்று நாம் உலகத்தோரின் கவனத்தை ஈர்த்த சமூகமாக இருக்கும் போதும், தமிழக படைப்பாளிகள் கூட இலக்கியத்துக்கான களம் உங்களிடம்தான் இருக்கிறது என்று சொல்லும் போதும், மேற்காட்டிய நிலைமைகளை ஆங்காங்கே காணக்கூடியதாகத்தான் இருக்கிறது. இன்றும் எமது சூழலில் வாசிப்புப் பழக்கமுள்ளோரில் அதிகமானோர் தென்னிந்திய சனரஞ்சக எழுத்தாளர்களின் கவர்ச்சிக்கு ஆட்பட்டிருக்கின்றனர் என்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். இத்தகையதொரு பின்னணியில் அசைவுற்ற ஈழத்து தமிழ்ச் சூழலில் எங்களுக்கானதொரு தனித்துவமான சினிமா வளர்ச்சியில் தென்னிந்திய தமிழ் சினிமா இடையூறாக அல்லது தடங்கலாக அமைந்தது என்ற வாதம் இலகுவாக நிராகரித்து விட முடியாததுதான். ஆனால் இதனையே முழுமையான காரணமாக பற்றிக்கொண்டு, சிங்கள சினிமாவின் வளர்ச்சியில் பிரம்பிப்பதுதான்  முரண்பாடானது. அது முரண் என்பதற்கு அப்பால் ஆபத்தானதும் கூட. எனவே இன்றைய ஈழத்து தமிழர்களின் எந்த துறைசார் வளர்ச்சியின்மையோடும் சிங்களத்தின் ஒடுக்குமுறை வரலாறும் பின்னிப் பிணைந்திருக்கின்றது. இந்த உண்மையை புறமொதுக்கி அல்லது ஓரம் கட்டி நாம் எந்த மதிப்பீடுகளையும் செய்ய முடியாது.

விமல்நாம் இந்த இடத்தில் இன்னொரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தென்னிந்திய தமிழ் சினிமாவின் தாக்கமே எங்களுக்கானதொரு சினிமா வளர்ச்சியை சிதைத்து விட்டதாக கூறும் பலரும், ஆரம்பத்தில் சிங்கள சினிமாக் கலைஞர்கள் தென்னிந்திய சினிமாவையே முழுமையாக நம்பியிருந்தனர் என்பதை இலகுவாக மறந்து விடுகின்றனர். ஆரம்பத்தில் வெளிவந்த சிங்களத் திரைப்படங்கள் வெறுமனே சிங்களம் பேசும் சினிமாக்களே அன்றி, சிங்கள சினிமா அல்ல என்பது சிங்கள திரைப்பட விமர்சகர்களின் கருத்தாகும். இது பற்றி விமல் திசாநாயக்கவும் அஷ்லி ரத்னவிபூஷணவும் தொகுத்த “இலங்கை சினிமா ஓர் அறிமுகம்” என்ற நூலில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்ப்போம். “இலங்கை சினிமாவின் முதல் தசாப்பத்தின் போது தென்னிந்திய மசாலாப் படங்களின் மோசமான போலிகளுக்கும் அசலான உள்ளுர் சினிமாவொன்றுக்கான வேட்கைக்கும் இடையே ஒரு மோதல் நிலை இடம் பெற்று வந்தது. இம் மோதல் போலிகளுக்கும் தேசியத்துக்கும் இடையில் இடம்பெற்றது. எவ்வாறிருப்பினும், அதிகாரபூர்வமான தேசிய சினிமா ஒன்றின் உருவாக்கத்திற்கு குரலெழுப்பியவர்கள், தாம் எடுத்து வர விழையும் சினிமாக் கலையின் அடிப்படையில் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் விஷயத்தில் போதிய கவனம் செலுத்தாதிருந்தமையால் தமது முயற்சியில் தோல்வியையே சந்தித்தனர். பிந்திய 1950கள் அளவில் இந்த நிலைமை சாதகமான முறையில் மாற்றமடையத் தொடங்கியது அக்கால கட்டத்தின் போது நாட்டில் இடம் பெற்று வந்த சமூக பின்புலத்தில் நாங்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.” இந்த பின்னனியை கருத்தில் கொண்டு பார்த்தால், ஆரம்பத்தில் வெறுமனே சிங்களம் பேசும் சினிமாவாக இருந்த நிலைமை மாறி ஒரு தனித்துவம் வாய்ந்த சிங்களத் தேசிய சினிமா எவ்வாறு உருவாகியது? அத்தகையதொரு உருவாக்கத்திற்கு பின்னிருந்த அரசியல் எத்தகையது?

கடந்த அரை நூற்றாண்டிற்கும் மேலாக சிங்களப் பெருந் தேசியவாதம் ஈழத்தமிழரின் முதுகின் மேல் கொலு வீற்றிருக்கிறது. சிங்கள பெருந் தேசியவாதத்தால் இறுகிப் போயிருக்கும் சிறிலங்கா அரசு ஈழத்து தமிழர்களின் வளர்ச்சியையும் தனித்துவத்தையும்  சிதைக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டு வருகிறது இன்றுவரை. இத்தனை அழிவுகளுக்குப் பிறகும் சிங்களம் சிறிதளவில் கூட ஒரு நிலை மாற்றத்திற்கு தயாராக இல்லை. இன்றைய சிங்களத்தின் அரசில் போக்கை ஆழ்ந்து அவதானித்து வரும் ஒருவருக்கு இது ஒன்றும் புதிய தகவலுமல்ல. சிங்களம் எந்தளவு தூரம் ஈழத்து தமிழர்களின் இருப்பை சிதைப்பதில் திடசங்கற்பம் பூண்டிருந்தது என்பதைச் சுட்டிக்காட்ட இரண்டு சுவார்ஸயமான உதாரணங்களை பதிவு செய்கிறேன்.

அ) 1960ம் ஆண்டு மேற்கு ஜேர்மன் அரசு வடக்கு, கிழக்கில் ஆட்டு மந்தைகளை விருத்தி செய்வதற்காக நல்லின ஆட்டுக் கிடாய்களை வழங்கியது. தமிழன் எப்படி நல்லினக் கிடாய்களை வளர்க்க முடியும். சிங்கள அரசியல்வாதிகள் அதை தடுத்து அனுராதபுரத்திற்கு மாற்றியெடுத்தனர்.

ஆ) 1983ம் ஆண்டு யூலை இன அழித்தொழிப்பு தாக்குதலில் பாதிக்கப் பட்ட தமிழ் மக்களுக்கு உதவும் நோக்கில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஒரு தொகுதி உணவுப் பொதிகள் வந்திறங்கின. இதைக் கேள்வியுற்ற சிறில்மத்தியு என்ற சிங்கள அரசியல்வாதி கலவரத்தில் சிங்களத் தொழிலாளர்கள்தான் அதிகம் பாதிக்கப் பட்டிருப்பதாகக் கூறி தாக்குதலில் ஈடுபட்ட சிங்களவர்களுக்கே பொதிகளை வழங்கி உற்சாகமளித்தார்.

சிங்களத்தின் அகோர ஒடுக்குமுறை பற்றி யாவரும் அறிவர். சிங்கள ஒடுக்கு முறையின் பட்டியல் மிகவும் நீண்டதும் கூட. ஆனால் சிங்கள அதிகாரப் பரப்பினுள் எங்களது கலாசாரத்தை எங்களது தேசியத்தை பிரதிபலிகக் கூடியதொரு சினிமாவை வடிவமைத்திருக்கலாம் என்பது வெறும் கற்பனாவாதம்தான் என்பதை மேற்காட்டிய உதாரணங்கள் தெளிவுறுத்தும். (அப்படியான கற்பனையில் இன்னும் பலர் இருக்கின்றனர்)
மேலும் சில...
ஆக்காண்டி
பொதுப்புத்தி அவமதிக்கப்படுகின்றது
சமாதானச்சுருள் திரை மாலை
அழுத்தம்
தமிழ்த் திரையுலகு: [பகுதி 1] [பகுதி 2]

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 31 May 2023 06:08
TamilNet
HASH(0x55f82b964b40)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Wed, 31 May 2023 06:08


புதினம்
Wed, 31 May 2023 06:08
     இதுவரை:  23670995 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2448 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com