அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 21 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow சலனம் arrow அமெரிக்கா பற்றிய விவரணப்படம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அமெரிக்கா பற்றிய விவரணப்படம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மதி கந்தசாமி  
Thursday, 23 September 2004

'ஃபரனைட் 9/11' (Fahrenheit 9/11) - என் அனுபவம் 

படம் - நன்றி: http://www.imdb.comசிலநாட்களுக்கு முன்பு 'ஃபரனைட் 9/11' பார்க்கலாம் என்று போயிருந்தேன்.  எனக்காக ஓர் ஆச்சரியம் காத்துக்கொண்டிருந்தது. என்ன தெரியுமா? இரவு 7.00  மணிக் காட்சிக்கு, இருநூறு பேர் பார்க்கக்கூடிய திரையரங்கில் 12 இடங்களே  காலியாக இருந்தன. அதற்கடுத்த காட்சி கொஞ்சம் பரவாயில்லை. 15 இடங்கள்  மிச்சமிருந்தன. இதுவரை எனக்கு இந்தமாதிரி ஆனதேயில்லை, அதுவும்  இந்தியாவுக்கு வெளியே. சில வருடங்களுக்கு முன்பு வந்து 'ஹரிபொட்டர்'  முதலாவது படத்திற்குச் சிறுவர்கள் ஆரவாரமாக வரிசைகளில் நின்றது ஞாபகம்  இருக்கிறது. ஆனால், அது 'ஹரிபொட்டர்'. 'ஃபரனைட் 9/11' ஏறக்குறைய  இரண்டு மணி நேரம் ஓடக்கூடியது என்றாலும் திரைப்படம் அல்ல. இது  விவரணப்படம். வரலாற்றில் இரண்டாவது முறையாக கான் திரைப்பட விழாவில் Palm d'Or வாங்கி, ஏறக்குறைய 20 நிமிடங்கள் அவையோரின் கரகோஷம்  பெற்றது. இதற்கு முன்னர் விருது பெற்ற விவரணப்படம் 1956இல் வெளியாகிய  Le Monde du silence, (The Silent World).

'ஃபரனைட் 9/11' இல் அப்படி என்னதான் விசேஷம் இருந்தது?

ஏற்கெனவே செய்தி நிறுவனங்களிடமும், பொதுவிலும் கிடைக்கக்கூடிய  விஷயங்களை வைத்து எடுத்திருக்கும் இப்படத்தில் 2000ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல், ஒசாமா பின்-லாடன் குடும்பத்தினருடன் அமெரிக்க அதிபர் குடும்பம், நண்பர்களுக்கு எழு பதுகளில் இருந்து இருக்கும் உறவு,  அதிபராகப் பதவியேற்றாலும் வெள்ளை மாளிகையில் தங்காத - நாட்டு நலனைக் கவனிக்காத - அதிபர், 9/11 விபத்து நடந்தபிறகு அதில் ஈராக்கைச்  சம்பந்தப்படுத்தும் முயற்சி, ஈராக்கிற்கு இராணுவத்தை அனுப்பவது, ஆரம்பத்தில்  உற்சாகமாக இருந்த இராணுவத்தினரும் அவர்களின் குடும்பத்தினரும் படிப்படியாகச் சோர்வடைவது, பிள்ளைகளைப் பலிகொடுத்த இராணுவத்தினரின்  குடும்பத்தினரின் சோகம், அவர்களைவிட அதிக அளவு துக்கத்திலும் கோபத்திலும் இருக்கும் ஈராக்கிய மக்கள், ஏழை எளியவர்களாகப் பார்த்து ஆசைகாட்டி முப்படைகளுக்கு ஆட் சேர்க்கும் அமெரிக்க முப்படையினர், அதேநேரத்தில்  அமெரிக்க செனட்டர்களில் ஒரே யொருவரின் பிள்ளை மட்டும் இராணுவத்தில்  இருப்பதை மக்களுக்குத் தெரிவிப்பது என்று பல விஷயங்களை மக்களுக்குக்  காட்டியிருக்கிறார் நெறியாளர் மைக்கேல் மூர்.

அத்தோடு, அமெரிக்காவில் 9/11இற்குப் பிறகு 'பேர்ட்ரியோடிக் அக்ட்' என்ற  பெயரில் சாதாரண பிரஜைகளின் உரிமைகளைப் பறித்தல், இராணுவத்தினத்தினர், ரோந்துப்படை யினரின் சேவை நாட்டுக்குத் தேவை என்று சொல்லிக்கொண்டே அவர்களின் சம்பளத்தைக் குறைத்தல், அதனால் வோஷிங்டன் மாகாணத்தில், மேற்குக் கடற்கரையோரம் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு ஒரேயொரு  ரோந்துப்படை வீரர் என்று இருக்கும் நிலை, அதுவும் முழுநேர வேலை  கிடையாது. ஒதுக்கப்பட்ட நிதியும் சமீபத்தில் இன்னும் குறைக்கப்பட்டுவிட்டதாம். 'பேட்ரியோடிக் அக்டின்' இன்னுமொரு பலி வயதானதொரு வெள்ளை அமெரிக்கர். புஷ்ஷம் அவரது அரசும் போர் தொடுப்பதற்கான முக்கிய காரணம், அவர்கள்  முதலீடு செய்திருக்கும் இராணுவ தளபாட கம்பனிகள் பணம் சம்பா  திப்பதற்காகவே என்று அவர் உடற்பயிற்சி நிலையத்தில் சொல்ல, அதைத் தெரிந்து கொண்டு அவரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து எச்சரிக்கை செய்து விடுவித்திருக்கின்றனர். ஜனநாயக அரசுமுறையின் காவலன் என்று சொல்லும்  அமெரிக்கா வில் நடந்தது இது என்பதை நம்ப முடிகிறதா? மேலே சொன்ன விஷயங்களையெல்லாம் ஒவ்வொன்றாக நீங்கள் 'ஃபரனைட்  9/11' விவரணப்படத்தில் பார்க்கலாம். அப்படத்தில் குறிப்பிடப்படும்  விஷயங்களுக்கான ஆதாரங்களை  http://www.michaelmoore.com/warroom/f911notes/ என்ற  இணையத்தளத்தில் Factual Back-Up For Fahrenheit 9/11  என்ற  தலைப்பின்கீழ்  கொடுத்திருக்கிறார்.இவ்விவரணப் படத்தில், எனக்குப் பிடித்த பகுதிகளைக் கொஞ்சம் விரிவாகப்  பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

2000ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து தொடங்குகிறது. ஜெப் புஷ் ஆளுநராக இருக்கும் ஃப்ளோரிடா மாநிலத்தில் நடந்த குளறுபடிகளைக்  காட்டுகிறது. அம்மாநில சிறுபான்மையினருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் சும்மா இருக்கவில்லை. அமெரிக்க செனட்டில் அது குறித்து முறையிடுகிறார்கள். சிறுமான்மையினத்தவரின் பிரதிநிதிகள் செனட்டில் வந்து  தம்மைப்பற்றிய விவரங்களைச் சொல்லி, எவ்வாறு சிறுபான்மையினத்தவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது என்று அவர்களெல்லோரும் கையெழுத்திட்டு கொடுத்திருக்கும் புகார் மனுவையும் காட்டிப் பேசிக்கொண்டிருக்கும்போதே செனட்டர்கள் யாரேனும் கையெழுத்திட்டிருக்கிறார்களா என்று அவைத்தலைவரும் அப்போதைய அமெரிக்க உதவி ஜனாதிபதியுமான ஆல் கோர் கேட்கிறார். ஆனால், ஒரு செனட்டரும் அவர்களின் புகாரில் கையெழுத்திட முன்வரவில்லை. குடியரசுக்கட்சி செனட்டர்கள் உட்பட. அமெரிக்க செனட்டில் ஒரு விஷயம்  விவாதிக்கப்படவேண்டுமானால், செனட்டர்கள் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஆரம்பத்தில் ஓரிரு பிரதிநிகளை முழுமையாகப் பேசவிட்ட அவைத்தலைவர், பிறகு வந்தவர்களையெல்லாம் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே இடைமறித்து பேச்சை முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார்.  வலுக்கட்டாயமாக அவர்களின் பேச்சுகள் இடையிலேயே நிறுத்தப்படுகின்றன. கூடவே எவ்வாறு அதிபர் தேர்தலின்போது என்ன நடந்தது என்றும் காட்டுகிறார்கள். கூடவே Fox செய்தி நிறுவனம் கடைசி நிமிடத்தில், புஷ்  வெல்லப்போகிறார் என்று சொல்கிறது. ஏனைய செய்தி நிறுவனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக, புஷ் வெல்லப்போகிறார் என்று சொல்கிறார்கள். Fox இல் தேர்தல்  செய்திகள் சம்பந்தமான தீர்மானத்தை எடுப்பது வேறு யாருமல்ல John Ellis என்னும் புஷ்ஷின் உறவினர்தான்.

படம் - நன்றி: http://www.imdb.comஒருவழியாக அதிபராகிய புஷ், பதவியேற்றுப் பேரணியில் வலம் வருகையில் ஆர்பாட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்படுகிறார். நிலமை ஒன்றும் சீரடையவில்லை. அடுத்த எட்டு மாதங்களும் புஷ் விடுமுறையில் இருந்தார். தொலைக்காட்சி நிருபரொருவர், ரெக்ஸாஸில் இருக்கும் புஷ்ஷின் பண்ணையில்  சந்தித்து, எப்போதுதான் வெள்ளை மாளிகைக்குச் செல்வீர்கள் என்று கேட்க,  திக்கித்திணறிய புஷ் அங்கே இருந்தால் என்ன, இங்கே இருந்தால் என்ன?  அதுதான் தொலைபேசி, தொலைநகல் வசதிகள் இருக்கின்றனவே என்கிறார்!செப்டம்பர் 11ஆம் தேதி புஷ் ஃப்ளோரிடாவில் இருக்கும் ஓர் ஆரம்பப் பள்ளிக்குச்  சென்று கொண்டிருந்தவர், முதலாவது விமானம் தாக்கியதை அறிந்த பின்னரும் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். அங்கே மாணவர்களுடன் அமர்ந்து புத்தகம் வாசிக்கக் கேட்டுக்கொண்டிருந்தவரிடம், இரண்டாவது விமானம் மோதிய  செய்தியைக் கூறிய பிறகு ஏறக்குறைய ஏழு நிமிடங்கள் என்ன செய்வது  என்றறியாமல் தடுமாறியது வகுப்பாசிரியையின் கமெராவில் பதியப்பட்டிருக்கிறது. இதுபோக, ஓகஸ்ட் மாதம் அதிகாரிகள் புஷ்ஷைச் சந்தித்து அமெரிக்கா மீது தாக்குதல் நடாத்த இருப்பதாக வந்திருந்த தகவல்களைக் கூற முயன்றதைப் பார்க்க முடிந்தது. ஆனால் அதிபரோ எதையும் கேட்கவில்லை. அதிகாரிகள்  யாரையும் சந்தித்துப் பேசவில்லை. பல வருடங்களுக்கு முன் பின் லாடனுக்கு  அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கியதையும், தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 1997ஆம் ஆண்டு ரெக்ஸாஸ் வந்து Unocal என்ற நிறுவனத்திடம்  டர்க்மெனிஸ்தானில் இருந்து அப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தானுக்கு எண்ணெய் கொண்டு போகும் குழாய்களை அமைப்பது பற்றிப் பேசியதையும்  பார்க்க முடிந்தது. Unocal  தலிபான் அமைப்பினரோடு ஒப்பந்தம் செய்த  அன்றே, கஸ்பியன் கடலில் குழாய் அமைக்கும் ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனம் Halliburton. அதன் உரிமையாளர் இப்போதைய அமெரிக்கத் துணை  ஜனாதிபதி. தாக்குதல் நடந்த உடனேயே விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டது.  புஷ்ஷின் தந்தையின் விமானம்கூட பறக்க அனுமதிக்கப்படவில்லை. ஆனால்,  தாக்குதல் நடந்த சில தினங்களுக்குள் வெள்ளை மாளிகையின் அனுமதியோடு  பின் லாடனின் உறவினரும் இன்னும் சில சவுதி நாட்டவரும்  அமெரிக்காவிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர். பின் லாடனின் உறவினருக்கும் சவுதி நாட்டவருக்கும் வெள்ளை மாளிகைக்கும்  அப்படி என்னதான் தொடர்பு? அதையும் படத்தில் பார்க்க முடிகிறது. புஷ்ஷோடு  இராணுவப் பயிற்சி பெற்ற ஜேம்ஸ் பாத், பின் லாடன் குடும்பத்தினரின் அமெரிக்க  மானேஜர்  அவர்கள், பணத்தை எங்கேயெல்லாம் முதலீடு செய்யலாம் என்று  சொல்பவர். புஷ் எழுபதுகளில் ஆரம்பித்த ஆர்பஸ்டோ என்ற நிறுவனத்தில்  ஜேம்ஸ் பாத் வழியாக சலேம் பின் லாடன் பணம் முதலீடு செய்திருந்திருக்கிறார். சில வருடங்களுக்குப் பிறகு புஷ் சேர்ந்த இன்னுமொரு நிறுவனம் Carlyle Group. புஷ் குடும்பத்தினர் நிறைய முதலீடு செய்த இந்த Carlyle  நிறுவனத்தின் முக்கிய தொழில் இராணுவத் தளபாடங்கள். 1994 ஆம் ஆண்டு பின்  லாடன் குடும்பத்தினரும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இரட்டைக்  கோபுரங்கள் தாக்கப்பட்ட அன்று Carlyle நிறுவனக் கூட்டமொன்று  நடந்ததும், அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் முந்நாளைய அமெரிக்க  அதிபர் George H.W. Bush, ஷஃபிக் பின் லாடனும் முக்கியமானவர்கள். செப்டம்பர் 11ஆம் தேதிக்குப் பிறகு பின் லாடன் குடும்பத்தினர் Carlyle  கம்பனியில் இருந்து விலக நேர்ந்தது. டிசம்பர் 2001இல் Carlyle கம்பனி ஒரே  நாளில் 237 மில்லியன் டாலர் லாபமீட்டினார்கள்.அமெரிக்க அதிபருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் இராணுவ தளபாடம் தயார்  செய்யும் நிறுவனத்திற்கும் சவுதி நாட்டவருக்கும் - குறிப்பாக பின் லாடன்  குடும்பத்தினருக்கும் இருக்கும் தொடர்பைக் காட்டிய பிறகு அமெரிக்காவில் சவுதி நாட்டவருக்கு இருக்கும் செல்வாக்கைக் காட்டுகிறது. 9/11இல் என்ன நடந்தது  என்று கண்டுபிடிக்க ஒரு விசாரணைக் குழுவினை ஏற்படுத்த முதலில் மறுத்த  வெள்ளை மாளிகை, பிறகு அந்த விசாரணைக் குழுவின் அறிக்கையில் 28  பக்கங்களைத் தணிக்கை செய்தது. அமெரிக் காவில் 860 பில்லியன் டாலர்களை  சவுதி நாட்டவர் முதலீடு செய்திருக்கிறார்களாம். இது அமெரிக்காவின் மொத்தச் சந்தையில் 6 - 7 சதவிகிதம். இதுபோக அமெரிக்க வங்கிக ளில் ஏராளமான  பணத்தையும் வைத்திருக்கிறார்களாம். இதுபோக 2001 மார்ச் மாதம் தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் நடாத்தினார்கள். எதற்காகத் தெரியுமா? அவர்களைப் பற்றிய  கருத்து களை அமெரிக்கரும் உலக மக்களும் மாற்றிக்கொள்வதற்காகவாம்!  இப்போதைய அப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் முன்பு Unocal நிறுவனத்தில்  வேலை செய்தவர் என்ற துணுக்கும் கிடைக்கிறது. 'ஃபரனைட் 9/11' விவரணப்படத்தில் மேலே சொன்ன எல்லாவற்றையும்  தெட்டத்தெளிவாக வைத்திருக்கிறார் மைக்கேல் மூர். இப்போதைய சூழ்நிலைகளில் வேண்டுமென்றே மக்களிடையே குழப்பத்தையும் பயத்தையும் உண்டுபண்ணி,  ஈராக் அமெரிக்காவை முற் றுகையிட இருக்கிறது என்று சப்பைக்கட்டு கட்டி,  அமெரிக்க மக்களைத் தேவையில்லாமல் பலிகடா ஆக்கிக்கொண்டிருக்கிறது  இப்போதைய அரசு. இதுபோன்றதொரு விவரணப்படம் இதுவரை வந்ததில்லை.  இப்படம், வரும் நவம்பரில் வரவிருக்கும் தேர்தலில் மாறுதலை உருவாக்கும் என்று சொல்கிறார்கள். அமெரிக்க ஊடகங்கள் சில நடந்துகொள்ளும்விதத்தைப் பார்த்தால் அது உண்மை  என்றே கருத இடமுண்டு. கடந்த மாதம் வெளிவந்த 'ஃபரனைட் 9/11' பற்றி விமர்சனம் கூறுகையில், சில செய்தி நிறுவனங்கள் மைக்கேல் மூரைப்பற்றிய  தனிப்பட்ட தாக்குதல்களையும் வைத்தன. மைக்கேல் மூரை discredit செய்வதன்மூலம் அவரிலும் அவருடைய 'ஃபரனைட் 9/11' படத்திலும் நம்பிக்கை  இழக்கவைக்கச் செய்யும் முயற்சியே இது. ஆனால், அம்முயற்சிகள் வெற்றி  பெறவில்ல என்பதையே குறைந்த தியேட்டர்களில் திரையிடப்பட்டிருந்தாலும்  மில்லியன் கணக்கில் வசூல் வந்துகொண்டிருப்பது காட்டுகிறது. மார்ச் 2003இல்  ஈராக் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, போரில் ஈடுபட்டிருக்கும்  இராணுவத்தினரின் சம்பளத்தைக் குறைக்க முயன்றது, ஓய்வுபெற்ற  இராணுவத்தினருக்கான சலுகைகளைக் குறைக்க முனைந்தது என்றும் நிறைய  விஷயங் களைப் பார்க்க முடிகிறது. ஏழ்மையான இடங்களுக்குச் சென்று பலவேறு சலுகைகளைக் கொடுப்பதாக ஆசைகாட்டி இராணுவத்தில் சேர்ப்பதை மைக்கேல்  மூரின் சொந்த ஊரான Flint, Michiganஇல் காண முடிகிறது. போரின்  தொடக்கத்தில் மிகவும் சந்தோஷத்துடன் இருந்த ஒரு தாயார், எப்படி அவர் மகன்  இறந்ததும் குமுறுகிறார். ஈராக்கில் இராணுவ ராங்குகள் மற்றும் விமானத்தில் இருந்து போர் புரியும் இராணுவத்தினரின் ஆரம்பகால உற்சாகம் படிப்படியாகக்  குறைவதும், சேதமுற்ற ஈராக்கிய குடியிருப்புகள், படுகாயமுற்ற சிறுவர் சிறுமியர், வீதியோரங்களில் கிடக்கும் பொதுமக்களின் சடலங்கள் என்று வெகுநாட்கள்  மனதில் நிற்கும் காட்சிகள்.குடும்பத்தினரை இழந்த ஈராக்கியப் பெண்ணொருவர் அழுதுகொண்டே ஆவேசமாக  அமெரிக்காவையும் அதன் மக்களையும் சபிப்பது கண்டு சில அமெரிக்கராவது  மனமுருகி இருப்பார்கள், இருக்கிறார்கள் என்பதையே, இவ்விவரணப்படம்  வெளியாகி நான்கு வாரங்களாகியும் நான்காம் இடத்தில் நிற்பது காட்டுகிறது.  அதுவும் 'ஸ்பைடர் மான்' திரைப்படம் வெளியாகும் வரை Box Officeஇல்  முதலிடத்தில் நின்றது. சில திரையரங்குகளிலேயே திரையிடப்பட்டாலும் இப்படம்  இதுவரை ஏறக்குறைய 94 மில்லியன் டொலர் சம்பாதித்திருக்கிறது. இது  அமெரிக்காவில் மட்டும்! ஏனைய நாடுகளில் எவ்வளவு சம்பா தித்திருக்கிறது,  எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் போன்ற புள்ளிவிவரங்கள் இன்னும்  கிடைக்கவில்லை.

இச்செய்திப்படம் திரையரங்குகளை வந்தடைவதற்குப் பட்ட பாடும் கொஞ்ச நஞ்சமல்ல. இப்படத்தை முதலில் தயாரிக்க ஒப்புக்கொண்ட நிறுவனம் டிஸ்னி.  ஃப்ளோரிடாவில் டிஸ்னிலாண்ட் மற்றும் நிறைய துணை  நிறுவனங்களைக்கொண்ட டிஸ்னி முதலில், இப்படத்தை விநியோகிக்க  முடியாதென்று சொல்லிவிட்டது. பிறகு டிஸ்னியின் ஒரு அங்கமான, ஆனால்  தனித்தியங்கும் Miramax,; இன் சொந்தக்காரர்கள் Weinsteir சகோதரர்கள் தம்  சொந்த செலவில் திரையிட்டிருக்கின்றனர்.'ஃபரனைட் 9/11' இயக்குநர் மைக்கேல் மூர். போன வருஷம் Bowling For Columbine என்ற இன்னுமொரு விவரணப்படத்திற்கு ஒஸ்கார் விருது பெற்ற  இவர், ஒஸ்கார் விழா மேடையிலேயே ஈராக் போருக்கெதிராகக் குரல்  கொடுத்தவர். Bowling For Columbineதவிர 1989இல் Roger and Me என்ற விருது பெற்ற விவரணப்படம் எடுத்தவர். Roger and Meஇல் மைக்கேல்  மூரின் சொந்த ஊரான Flint, Michiganஇல் இருந்த 'ஜெனரல்  மோட்டர்ஸ்'இன் வாகனத் தொழிற்சாலை மூடப்பட்டு ஏறக்குறைய 30,000 பேர்  வேலை இழந்ததுபற்றி ஜி.எம். C.E.O. Roger Smith உடன் நேர்காணல் செய்ய  முயன்றதையே படமாக எடுத்திருந்திருந்தார். இடையில் சில  விவரணப்படங்களையும் தொலைக் காட்சிக்கென பிரத்தியேகமான படங்களையும்  இயக்கி இருக்கிறார். இதுபோக Stupid White Men: ...And Other Sorry Excuses for the State of the Nation!, Dude, Where's My Country?, Downsize This! Random Threats from an Unarmed American ஆகிய நூல்களையும் எழுதி இருக்கிறார்.

படம் - நன்றி: http://www.imdb.comமற்றப் படங்களில் செய்யும் சேஷ்டைகளைக் குறைத்திருக்கிறார் மைக்கேல் மூர்.  அவருடைய சொந்த ஊரான Flint, Michiganஐச் சேர்ந்த ஓர் இராணுவ வீரனின் தாயா ரைப் பேட்டி எடுக்கும்போது முழுக்க முழுக்க அந்தப் பெண்ணையே  பேசவிட்டு, தான் ஓரிரு வசனங்கள் மட்டுமே பேசி, அந்தப் பேட்டியை இந்த  விவரணப்படத்தில் மிக முக்கியமானதாக ஆக்கியிருக்கிறார். சமுதாயத்தில்  முன்னேற வேண்டுமானால், இராணுவத் தில் சேருங்கள் என்று பிள்ளைகளுக்குச்  சொல்லிக்கொடுத்த அந்தத் தாய், ஆரம்பத்தில் மகன் ஈராக்கிற்குச்  சென்றிருப்பதையும், மகள் முன்னம் இராணுவத்தில் இருந்ததையும் பெருமையுடன் சொல்கிறார். அவருடைய வீட்டில் அமெரிக்கக் கொடி பறக்கவிடப்படாத நாளே  கிடையாது. அதுவும் கொடி நிலத்தில் படாமல் தான் கவனமாக இருப்பதைப் பெருமையாகச் சொல்லும்போது அவரையும் அவரைப் போன்றவர்களின்  நாட்டுப்பற்றைப் புரிந்துகொள்ள முடிகிறது. சில மாதங்களுக்குப் பிறகு அத்தாயார், மகனைப் பறிகொடுத்து அவன் போர்க்களத்தில் இருந்து அனுப்பிய கடைசிக்  கடிதத்தையும் கண்ணீரோடு படிக் கும்போது கலங்காதவரும் கிடையாது. உண்மையைச் சொல்லப்போனால், மைக்கேல் மூர் அந்தத் தாயார் சம்பந்தப்பட்ட பகுதியை இத்தனை லாவகமாகக் கையாளுவார் என்று எதிர்பார்க்கவில்லை. எடிட் செய்யப்பட்ட விதம் இவ்விவரணப் படத்திற்கு மேலும் வலுச் சேர்க்கிறது. மிகக் குறைவான நேரமே அவர் திரையில் தோன்றி, மற்ற நேரங்களிலெல்லாம்  குரல் மட்டும் கேட்குமாறு பார்த்துக்கொண்டது நல்ல உத்தி. காட்சிகளுக்குத்  தக்கபடி பாடல்களும் இசையும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சிலசமயங்களில்  சிறிது ரசனைக்குறைவாக இருந்தாலும், படத்தின் கருத்துகளை  ஒத்துக்கொள்பவர்கள் ரசிக்கவே செய்கிறார்கள். ஈராக்கிற்குச் சென்ற இராணுவத்தினரில் அமெரிக்க செனட்டர்களில் ஒருவரின்  மகன் மட்டுமே இருப்பதை அறிந்துகொண்ட மைக்கேல் மூர், முப்படைகளில்  சேர்வதற்கான விண்ணப்பப் படிவங்களை அமெரிக்க செனட்டர்களிடம் கொடுக்கும் காட்சி எல்லோரையும் சிரிக்க வைக்கும். அதிலும் செனட்டர்கள், மைக்கேல் மூர்  வருகிறார் என்பதைப் பார்த்தவுடனேயே ஓடி ஒளிகிறார்கள். மூர் சொல்வதைக்  கேட்ட ஒரு அமெரிக்க செனட்டர் மைக்கேல் மூருக்கு என்னவாயிற்று என்று ஒரு பார்வை பார்க்கிறாரே அதற்கு மட்டுமே பொன்னால் பொழியலாம்.பின்வரும் வரிகளோடு இவ்விவரணப்படம் முடிகிறது.

George W. Bush: There's an old saying in Tennessee... well, it's an old saying in Texas, I believe also in Tenneessee. "Fool me once..."
[pauses]

George W. Bush: "... shame on you".
[pauses]

George W. Bush: "Fool me..."
[pauses once again]

George W. Bush: . "I won't get fooled again."

Michael Moore: For once, we agreed.

(இந்தக் கட்டுரை கனடாவில் இருந்து வெளிவரும் காலம் இதழில் இருந்து நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது.)

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sun, 21 Apr 2024 07:08
TamilNet
HASH(0x56249714b590)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sun, 21 Apr 2024 07:08


புதினம்
Sun, 21 Apr 2024 07:08
     இதுவரை:  24789762 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5171 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com