அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 10 arrow அகம் புறம்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அகம் புறம்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: தா.பாலகணேசன்  
Wednesday, 06 October 2004

(உள்நோக்கியும் வெளிநோக்கியுமாக சித்திரங்களால் ஆன கோட்டுப்பாலம்.
யாழ்பாணத்தில் கடந்த 5ம் திகதி புரட்டாதி மாதத்தில் இருந்து ஐப்பசி மாதம் வரை
நிகழ்ந்த ஓவியக் காட்சி பற்றிய வரைவு.)

1.

சிங்களப் பயங்கரவாதத்தினுடைய நிழலை ஊடுருவலை  அகத்தை பிம்பத்தை எழுப்பிய காட்சிப் புலம் அது.
மாற்றுச் சிந்தனையும் கலகக் குரலும் கொண்ட தமிழ் கலைஞர்களும் சிங்களக் கலைஞர்களும் இணைந்து 'அகம் புறம்' என ஒரு காட்சி புலத்தை அமைத்தனர். யாழ்பாணப் பல்கலைக் கழகத்தில் ஓவியப் பயில் நிலையிலுள்ள தமிழ்க் கலைஞர்களின் அகம் புறம் ஓவியக் காட்சி முறையில் புத்தாக்க வெளிப்பாட்டு முறையைக் கொண்டிருந்தனர். 'வரலாற்றினுடைய வரலாறு' எனும் பொருளில் அவர்கள் இக் காட்சியகத்தை அமைத்திருந்தனர் சனாதனன் உடன் கண்ணன், தமிழினி, குமுதா, வசந்தி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். மக்கள் பங்களிப்புடன் கூடிய கூட்டுக் கலை ஆக்கச் செயற்பாடாகவும் அவை இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்கிலும் இவ்வாறான பண்புகளுடன் கூடிய ஓவியக் காட்சிகளை (குறிப்பாக பிரான்சில்) நாம் கண்டிருக்கிறோம். நாங்கள் அது போன்றதொரு கண்காட்சிக் கூடத்துள் நுழைந்த அனுபவத்தையே அங்கும் பெறக் கூடியதாக இருந்தது. கழித்து எறியப்பட்ட நகர் புறத்து பொருட்களைக் கொண்டே

அந்த ஓவியர்கள் நவீன சிற்பங்களை செதுக்கியதைப் போன்று எங்களுடைய கலைஞர்களும் போர்க்கால அழிவுப் பொருட்களை கொண்டு கலையாக்கச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தார்கள்; இந்த செயற்பாட்டில் தமிழ் சிங்கள இரு கலைஞர்களிடையேயும் ஒத்த பண்பு இருந்தது. அது அரச பயங்கரவாதத்தை படிமமாகவும் குறியீடாகவும் எம் மனக் கண்களில் நிழலாட விடுவதும், பயங்கரவாதத்தின் மிக நுண்ணிய உறைந்த பக்கங்களை வாசிக்கச் செய்வதுமாக இருந்தது.

புத்தரிடம் தனது பாம்பு கடித்து இறந்த மகனை உயிர்பித்துத் தருமாறு ஒரு தாய் கேட்கிறாள். அதற்கு அவரோ மரணமே நிகழாத வீட்டிலிருந்து ஒரு பிடி அரிசி எடுத்து வந்தால் நான் உங்களுக்கு அவனை உயிர்பித்துத் தருகிறேன் என்கிறார். தமிழ்த் தாயோ தனது பிள்ளைக்கு ஒரு துன்பமும் நேர்ந்து விடக் கூடாது என இறைவனிடம் மன்றாடி நேர்த்திக் கடன் செய்வதற்காக மடிப்பிச்சை ஏந்தும் ஒரு மரபு இருக்கிறது. இந்த இரு பண்புகளையும் உள்வாங்கிய இந்தத் தமிழ் கலைஞர்கள் பயங்கரவாதம் தன் கால் பதித்த தாய் நிலம் தோறும் பயணம் செய்கிறார்கள் மடிப் பிச்சைக்காரரைப்போல. 'ஓவியக்காட்சி ஒன்று நிகழ்த்துவதற்கு உங்களிடம் போர்க்கால அழிவின் பொருட்கள் இருந்தால் தாருங்கள்" என்று கேட்கிறார்கள். அதற்கு ஒளரு தாய் பின்வருமாறு பதில் சொல்கிறாள்:

'இடம் பெயர்ந்து  இடம் பெயர்ந்து
களைத்துப் போனேன் 
இனிமேல் இடம் பெயர்வதில்லை - என்ற
முடிவுக்கே வந்து விட்டேன்

'மல்ரி பரல்' அடித்து உடம்பின்
எந்தப் பாகமும் கிடையாமல்
ஒரு மகன் போயிற்றான்

இன்னொருத்தன் உடல் முழுதும்
எரிகாயமென ஆனான்
இப்போ ஒரு பொருளும்
எனக்கு ஞாபகமாக இல்லை"
அதை அவ்வாறே பதிந்து ஒரு கண்ணாடி போத்தலுள் வாசிக்கும் வண்ணமாய் வைக்கிறார்கள்.

அவர்கள் வீடு வீடாக சைக்கிள்களில் பயணம் செய்தார்கள் படலைக்குப் படலை தட்டினார்கள். அவர்கள் நின்றிருக்கும் அந்த வீடு, அந்த நகர், போர்க் கால சிற்பமாக அவர்களுக்குத் தெரிகிறது. சன்னம் தின்ற சுவர்கள் ஓவியமாக கண்களில் படர்கிறது. காற்று தீராத அழுகுரலோடு ஒரு வீட்டில்

குந்தியிருக்கிறது. யார் உள்ளே ? பயங்கரவாதம் கால் மேல் கால் போட்டு குந்தியிருக்கிறது. அதன் காலின் கீழ் மிதியுண்ட ஆடல் பெண்ணொருத்தியின் சலங்கை உடைந்து கிடக்கிறது. ஒற்றைச் சலங்கை - இப்போ கையில் எடுக்கிறான் கலைஞன். மீண்டும் சலங்கையின் நாதம் ஒலிக்கிறது பல்வேறு காட்சிப் படிமங்களை எழுப்பியபடி.

'அரிக்கன்லாம்பின் உடைந்த கை பிடி" விளக்கேற்றிய நினைவுகள், எரிபொருள் தடைகள் ஒளியிருந்த வீடு, ஒளியின் கீழ் இருந்த வாழ்வு, படீர் படீரென பல்வேறு படிமங்களை வளர்த்துச் செல்லும். அரச அதிகாரம் தலைவிரித்தாடிய கோரத் தாண்டவத்தின் நினைவுகள் மெல்ல யாழ் நகரெங்கும் அதிரும் அவனுடைய அகம் அங்கே வெளிச்சமிட்டு காண்பிக்கப்படும்.

'தவமணி செல்வலிங்கத்தின் அடையாள அட்டையும், கடவுச் சீட்டும்" சொந்த நாட்டிலேயே தொடர்ந்து அந்நியர்களாக விசாரிக்கப்பட்டு வந்த வரலாறு விரிந்து செல்லும் 'உசிர் போனாலும் இந்த மண்ணோடதான் ஒண்டிக்கிடப்பன்" என்று சொன்ன வார்த்தை அதிர்கிறது. செம்மண் புழுதி ஏறுகிறது, அனல் கரை புரளுகிறது. காற்றாடியாக சுழலும் மரங்களைக் காணவில்லை வியர்த்து உடல் நனைகிறது அகம், புறம் தேடும் படலம் தொடர்கிறது.

உரு அழிந்து கொண்டிருக்கும் ஒரு அழகிய குடும்பத்தின் புகைப் படம், தகப்பன் கையில் குழந்தையை ஏந்தி வைத்திருக்க தாய் கேக் தீத்துகிற புகைப்படம், பூப்புனித நீராட்டு விழா, கலியாண வீடு, காணி உறுதிகள், காணாமல் போனோர், ஏ.கே ரவைகள், எவுகணையின் உடைந்த பகுதி, பெண்ணுடைய உடைந்த  சிலையின் பாகங்கள், குழந்தையின் ஒற்றைச் செருப்பு தேர் முட்டியில் இருந்து வீழ்ந்த சிலை, கல்லறையில் விழுந்து கிடந்து அழும் சிறுமி, விடுதலைப் போர் வீரன்,பத்திரிகைகளின் தலைப்ச் செய்திகள்,கத்தியல் அறுந்த கயிறு, ஈர்கோலி, அறுந்த ஒலிநாடா, திருகணி, சேகரின் திறப்புக் கோர்வை, கண்ணிவெடி தொடர்பான விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரம், வெடி அபாயம், எறிந்த பேனாக்கள், கிழிந்த புத்தகங்கள், உடைந்த சைக்கிள் கம்பிகள், எலும்புத் துண்டுகள், கதவுப் பிணைச்சல் என நீள்கிறது. ஐநூறுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குச் சென்று இந்தக் கலைப் பொருட்களைத் திரட்டினார்கள்.
மனிதனின் கைப்பட்டு அளைந்த பொருட்களுக்கு அவ்வளவு கலைத்துவம் இருக்கிறதா? அவனுடைய கனவுகள், ஆசைகள், விருப்பங்கள், ஓய்வுகள்,அவற்றுள் உறைந்திருக்கின்றனவா? எத்தனையோ அகவுணர்வின் தாக்கங்கள் அவற்றுள்ளும் ஏறி இருக்கிறதா? உழைப்பாலும் காதலாலும் அவை உருவாக்கப்பட்டிருந்தனவா?
ஒரு வாழ்வின் பண்பாட்டின் சுருதியை அவை இசைக்கின்றனவா? இந்த பண்பாட்டுச் சுருதியின் நரம்புகளை யார் அறுத்து எறிந்தான்? அதிகாரத்துவம் தன் கோரப் பற்களால் அவற்றைக் குதறி எறிந்திருக்கிறது.  அரச பயங்கரவாதிகள் கசாப்புக் கடைக்காரனாக நின்று வாழ்க்கையை கடை விரித்திருக்கிறார்கள். இங்கேதான் தொங்குகிறது அவனின் அகமும் புறமும்.

2.

பௌத்த பண்பியல்புகள் பலவற்றை  தமது அரசியல் வாழ்வுக்கான குறியீடாகவே சிங்கள அரச பயங்கரவாதத்தின் பிரதிநிதிகள் கருதி வந்திருக்கின்றனர். தமிழ் மக்களுடைய வாழ்வில் மட்டுமல்ல சிங்கள மக்களுடைய வாழ்விலும் கோரப் பற்களை பதித்திருக்கிறார்கள். தமிழ் விரோத உணர்வுக் கருத்தியல் கட்டமைக்கப்பட்டு அவ் வெறுப்புணர்வானது உச்சத்தை அடைந்திருக்கிறது. சிங்கள மக்களுக்குள்ளும் அரச பயங்கரவாதம் தன் கால்களைப் பதித்தது என்கிற விடயத்தை சிங்களக் கலைஞர்கள் காட்சிப் படுத்தினார்கள்.

இரு பேரினவாத அரசியல் கட்சிகளும் போட்ட வேசங்கள் வெட்ககரமானவை. தேசம் முழுதும் அது விளைத்திருக்கும் கோரம் வெளியில் தெரியத் தொடங்குகிறது. அத்தகைய ஒரு முன்னெடுப்பாகவே இத்தகைய கூட்டுச் செயற்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
படைப்பின் மூலம் ஒரு பண்பாட்டின் அதிர்வை இசைத்துக் காட்டுவதும், கோடிட்டு காட்டுவதும் கலைஞனின் வேலையாகிறது. அவர்கள் அத்தகைய முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். சோ.பவின் 'தென்னிலங்கைக் கவிதைகள்" சிங்கள மொழிபெயர்ப்பும், சிங்கள சிறுகதை மொழிபெயர்ப்பும், சிங்கள நாடக அரங்கப் பயில்கை பரிமாறல்கள் எனும் தொடரும் முயற்சிகள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்திருக்கின்றன. பயங்கரவாதத்தின் அகப் பண்பாடு, அக வளர்ச்சி, அகத் தூண்டல், அக வளம் குறித்து தமிழ்-சிங்கள கலைஞர்கள் கோடுகளாலும், போர் அழிவுப் பொருட்களாலும், நிறங்களாலும், துணிகளாலும் இன்னோரன்ன பொருட்களாலும் பேச முனைந்த செயற்பாடு புதியதொரு பண்பாட்டுத் தளத்திறகான அக புற சமிக்ஞையே.
இன வாதப் பூதம் விழிங்கித் துப்பியதன் குறியீடாக யாழ்ப்பாணம் நூல் நிலையம் விளங்குகிறது. அதிகாரத்துவும் தன்னை அழகுறக் காண்பித்த அவ்விடத்திலேயே அகம் புறம் காட்சிப் படுத்தப்பட்டமை பார்வையாளனுக்கு பல செய்திகளை வழங்கும். வரலாற்றின் பயங்கரவாத பண்பாட்டுத் தொடர்ச்சியின் சுவடுகளைப் பின்பற்றி ஒரு பூதம் எம்முன் எழுப்பி நிறுத்தப்படுகிறது.
சிங்கள ஓவியர்களின் ஓவியங்கள் இத்தகைய அதிர்வையே எமக்குள்ளும் ஏற்படுத்துகின்றன
காண்பியம்(4).ஜே.வி.பியினுடைய புரட்சியை அடக்கும் முகமாக நிகழ்ந்த படுகொலைகளைச் சித்திரிக்கிறது. ரயர் போட்டு கொழுத்திய பிறகு அவ்விடத்தில்  கைகள் மட்டும் எஞ்சி இருக்குமாம் அதனைச் சித்தரிக்கிற ஓவியச் சிற்பமிது. 

காண்பியம்(19) அரச பயங்கரவாதம் தனது இரத்தமாக, வேராக, நிழலாக, அதன் ஆன்மாவாக  புத்தரை எழுப்புகிறதைச் சித்தரிக்கிற ஓவியச் சிற்பமிது. இதனால்தான் ஒரு கவிஞர் 'புத்தர் வெளி நடப்புச் செய்துவிட்டார்" எனத் தனது கவிதையில் குறிப்பிடுகிறார். வெளி நடப்பு என்பது பண்பாட்டுச் சிதைவு எனவும் பொருள்கொள்ளலாம். புத்தருடைய போலிச் சிலைகளின் பெருக்கம் அவரது மௌனித்த நிலை அவர்களுக்கு வாய்ப்பானதாக அமைய அவர்கள் இழுத்துக் கொண்டு திரிகிறார்கள் ஒரு பண்பாட்டு மோதலுக்கான கருவியாகவும். கலைஞன் காலம் அரித்த புத்தர் சிலையைக் கண்டெடுத்திருக்கிறான். வன்முறை அரசியலின் குறியீடாக எழுப்பி அதன் கரங்களால் சிதைக்கப்பட்ட புத்தரை எடுத்து வந்திருக்கிறான். அக வெளியில் சென்று உதிர்க்க வேண்டியவைகளை உதிர்க்காது ஓடுகளையும் சிலைகளையும் காவுவதை காட்சிப் படுத்தியிருக்கிறான். இவ்வாறு பல அலைகளை அப் புத்தர் சிலை எழுப்புகிறது. காண்பியம்(08) சிங்கள கிராமத்தில் வறுமையில் வாடும் இளைஞன் ஒருவன் ராணுவத்தில் சேர்வதற்காக வந்திருக்கிறான். அவனுடைய மார்பு அளவு எடுக்கப்படுகிறது. எதிரியினது ஏமாற்றும், பொய்யும், புரட்டும், சுரண்டலும், பலியிடலுமான குண இயல்புகளை சிங்களக் கலைஞர்களே சொல்வதானது அகத்தின் பார்வை வீச்சை அகலப்படுத்துகிறது.

காண்பியம்(20),(14),(1) அறிவும் ஞானமும் பெண்ணுக்கு வாய்ப்பதை பௌத்த பின்னணி தவிர வேறு சமயங்கள் கருதியிருக்காது என ஆய்வாளர்கள் மணிமேகலையை ஆதாரம் காட்டி ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கையில் பௌத்த பின்ணணியைக் கொண்ட சமூகத்தில் பெண் பற்றியக் கருத்தியல்கள் மிக மோசமானவையாக இருக்கின்றன.
தன்னுடைய சமூகமே கருத்தியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் வளங்களை அகலித்து வளர அனுமதிக்க முடியாதவன் எப்பேற்பட்டவனாக இருப்பான்? ஒரு விலங்குப் பண்ணையொன்றுள் சென்று திரும்புவதைப் போன்ற உணர்வை கலைஞர்கள் அகத்தில் தொற்றவைக்க நினைத்திருப்பார்களா?எங்களுக்கு செம்மணியைப் போலவே காண்பியம்(03) சிங்களத் தாயும் தனது மகனின்  புகைப்படத்தோடு முகாம் முகாமாக போய் வந்தாள். பட்டலந்த, களனி, பலவத்த, சூரியவௌ, முதியங்கணய, நாகதீபம், புஸ்ஸா, கதிர்காமம், சிவனொளிபாதம், குருவிட்ட, மகியங்கணைய, திவாகுசா, அபயகிரிய, இருவான்வலிசாய புனித வழிபாட்டுத் தலங்கள் ஈறாயும் திரிந்தாள். அங்கெலாம் பூக்கள் அழுகிக் கிடக்கின்றது. கரியும் மண்ணும் கலந்து கிடக்கிறது, சிட்டி விளக்குகள் உடைந்து கிடக்கிறது, நெல் மணிகள் சிதறுண்டு கிடக்கிறது. தமிழ் தாயும், சிங்களத் தாயும் உணர்வாலும், மொழியாலும், அழுகையாலும் இங்கே ஒன்றுபட்டு நிற்பதை  போன்றே பயங்கரவாதத்தை வெல்வதற்கு ஒன்றுபட்டு உழைப்பதற்கான கோட்டுப் பாலத்தை அவர்கள் வரைந்திருக்கிறார்கள். ஆயினும் அரச பயங்கரவாதம் அதைத் தாண்டாது என்பதற்கு தீவில் ஒரு உத்தரவாதமும் இல்லை.

காண்பியம்(24). இராப் போசன விருந்தை காட்சிப் படுத்தியிருக்கும் ஓவியன் பன்னிரெண்டு கோப்பைகள் அடுக்கியிருக்கிறான். அவற்றில் எரிந்து கருகிப் போன உணவுகளை படைத்துவைத்திருக்கிறான். பன்னிரெண்டு கிளாசுகள் வைத்திருக்கிறான் இந்த நாட்டை இரவு யாரிடம் யார் காட்டிக் கொடுக்கப் போகிறார்களோ? அந்த மேசையில் இருந்த மனுகாட்டில் அவன் மூன்று மொழிகளிலும் எழுதியிருக்கிறான்.
'உங்களுக்கு தர என்னிடம் இதுதான் இருக்கிறது. இது உண்ணும் படியாக இராததால் உண்ணும் படியான உணவை உருவாக்கத்தக்க பண்பாட்டினைப் பற்றி தயவு செய்து எழுதுங்கள்." என்று.

தா.பாலகணேசன் 4.10.2004

  


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 19:08
TamilNet
HASH(0x55bfc40223b8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 19:08


புதினம்
Thu, 28 Mar 2024 19:08
















     இதுவரை:  24713745 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4058 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com