அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 11 arrow யாசர் அரபாத்: ஒரு முடிவுறாத வராலாறு.
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


யாசர் அரபாத்: ஒரு முடிவுறாத வராலாறு.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Sunday, 14 November 2004

 

'Today I have come bearing an olive branch and a freedom fighter's gun. Do not let the olive branch fall from my hand. I repeat: do not let the olive branch fall from my hand.'


பிரான்சின் தலைநகரான பாரிசின் இராணுவ மருத்துவ மனையில் பாலஸ்தீன மக்களின் நேசத்திற்குரிய அந்தத் தலைவர் இறந்து விட்டதாக இன்று அதிகாலையில் (11-11-2004) அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக யாசிர் அரபாத் அவர்கள் வாழ்வுக்கும் இறப்புக்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருந்தார். அவருடைய நிலையை அறியத் துடிக்கும் கோடானுகோடி ஆர்வலர்களுடன், அகதியான நானும் பாரிசின் புறநகர்ப் பகுதியில் இருநதபடி ஊடகங்களை துழாவிக் கொண்டிருந்தேன்.
1974ம் ஆண்டில் ஐநா மன்றத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அரபாத் அவர்கள் ஆற்றிய நீண்ட உரையின் இறுதி வரிகள் என் நினைவுகளில் அலை மோதிக்கொண்டிருந்தன.

'இன்று நான் இந்த மன்றத்திற்கு ஒலிவ் கிளையினையும் விடுதலை வீரனின் சுடுகருவியையும் ஒருங்கே
காவியபடி வந்திருக்கின்றேன். சமாதானத்தின் சின்னமான இந்த ஒலிவ் கிளை என் கைகளில் இருந்து நழுவிவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். மீளவும் வேண்டுகிறேன் இந்த ஒலிவ் கிளை என் கைகளில் இருந்து நழுவிவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்...'

இதனை முப்பது ஆண்டுகளின் முன்னால் பத்திரிகையில் படித்தபோது  இருந்த உணர்வுகள்தான் தற்போதும் என்னுள் கிளர்ந்தெழுகின்றன. அன்று அந்த மாமன்றத்தில் இளமையான தோற்றத்துடன் தனக்கே உரியதான மரபான கெபியத்(keffieh) என்று சொல்லப்படும் வெள்ளையில் கறுத்த கட்டங்களிட்ட துணியை தலையுடன் இறுக இணைக்கும இரண்டு கறுப்பு வளையங்களுடனான அந்த உலகப் புகழ்பெற்ற தலையணியுடன்  காட்சியளிக்கும் அந்த நிழல் படத்தை பார்த்த உணர்வு இப்போதும் கிளர்ச்சி ஊட்டுவதாகவே உள்ளது.
 
1969ம் ஆண்டில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை யாசர் அரபாத் ஏற்றதன் பின்னால் பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் உலக அரங்கின் கவனத்திற்கு வந்தது. அதனூடாக யாசர் அரபாத் அவர்களும் உலகக்கண்ணை உறுத்துபவராக மாறத்தொடங்கினார். எழுபதுகள் தொடங்கி பாலஸ்தீன மக்களின் நேசத்திற்குரிய தலைவராக உயர்வு பெற்ற அவர், உலகெங்கும் தேசிய இன விடுதலைக்காய் போராடுவோரின் இலட்சிய வீரராகவும் கணிக்கப்ட்டார். அரசியல் ஆர்வலராய் போராட்ட கனவை வளர்த்துக் கொண்டிருந்த என்னொத்த தலைமுறையினரும் -பொடியன்கள்-  அவர்பால் ஈர்ப்புக் கொண்டதில் ஆச்சரியமில்லை.
ஈழப்போராட்டம் முகிழத் தொடங்கிய எழுபதுகளின் தொடக்கத்தில் என்னொத்த தலைமுறையினரை பாதித்த சர்வதேச நிகழ்வுகளில் வங்கதேச விடுதலை போராட்டமும், ஐ.நா.மன்றத்தில் யாசர் அரபாத் அவர்கள் ஆற்றிய உரையும், ஐரிஷ் விடுதலைப் போராளியான பொபிசாண்டசின் மரணமும் முக்கியமானவை என்று கருதுகிறேன். அந்த தலைமுறையினர் தற்போது அவற்றை இரைமீட்டுப் பார்ப்பார்கள்  என்றும் நினைக்கின்றேன்.  இவை நாம் முன்னெடுக்க விரும்பிய தேசிய விடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கையையும் உறுதியையும் எமக்கு அளித்தன. எமது பாதை சரியென்பதையும் அவை உணர்த்தின.
ஈழப்போராட்திற்கும் வெளிநாட்டிற்குமான தொடர்பென பலரும் 1983க்கு பின்னரான இந்தியத்தொடர்பையே அறிந்து வைததிருக்கின்றனர். ஆம் 83 கலவரதி்றகு பின்னால் நம்மவர் இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்றதும், அல்லது அந்த வேளையில் போராளிகள் அங்கு தங்கியிருந்ததும், அப்போராளிகளுக்கு இந்தியா பயிற்சி வசதிகளை அளித்தது என்ற சிறிலங்கா அரசின் குற்றச்சாட்டும் போன்ற இன்னோரன்ன சம்பவங்கள் பலரறிந்தவை. பலருக்கும் இவையே நினைவிருக்ககூடும்.
ஈழப்போராட்டத்தின் வெளிநாட்டுடனான தொடர்பு 1976ம் ஆண்டில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன்  ஏற்பட்டதை பலரும் அறியார். தற்போது இதனை வாசித்துக் கொண்டிருக்கும் பலருக்கும் இவை ஆச்சரியத்தை அளிக்க கூடும். அது இரகசியமான விடயமுமல்ல. அப்போது இலண்டனில் வசித்துக்கொண்டிருந்த ஈழப்போராட்டத்தில் ஆர்வம் கொண்ட ஆய்வாளரான இ.இரத்தினசபாபதி அவர்களுக்கும் அப்போதைய பாலஸ்தீன விடுதலை இயக்க இலண்டன் பிரதிநிதியாக இருந்த சாயித் ஹமாம் (Saïd Hammami) அவர்களும் இடையே ஏற்பட்டதான நட்புறவு ஈழப்போராட்டதில் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் சில அதிர்வுகளை ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாதது. அந்த உறவின் விளைவாய் ஈழத்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையேயான அரசியல் இராணுவ உறவுகள் இறுக்கம் பெற்றன என்பதும் வரலாற்று குறிப்பு.
எனது போராட்டப் பயணத்தில் அதாவது எனது தலைமுறையை சார்ந்தவர்கள்-பொடியன்கள்- 70ம் ஆண்டுகளின் பின்னால் முனைப்பு பெற்று தீவிர செயல்பாடுகளில் இறங்கி சிறைக்குச் சென்று மீண்டு பொலிசாரின் கண்காணிப்புக்கு உள்ளாகியிருந்த தலைமுறையினரில் ஒருவனாகிய நான் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தாரை அதன் புகழ்மிக்க தலைமையை சந்திக்க நேரும் எனக் கனவுகூடக் கண்டதிலலை. ஆனால் அது 1978ல் சாத்தியமானது. அந்தப் பொழுதுகள் இன்றும் நினைவுகளில் பசுமையாக இருக்கின்றன. 1978ல் பிற்பகுதியில் லெபானான் தலைநகரான பெய்ருத்துக்கு சென்ற குழுவில் ஒருவனாக இடம்பெற்றிருந்தேன். லங்காராணி நாவலி்ன் ஆசிரியர் அருளர் (அப்போது அந்த நாவல் எழுதப்படவில்லை.) அந்தக் குழுவிற்கு தலைமையேற்றிருந்தார். இது அருளரின் இரண்டாவது பயணமாகும். முதலில் அவர் இலண்டனில் இருந்தபோது இரத்தினசபாதியின் ஏற்பாட்டின் பேரில் 1976ல் லெபனான் சென்றிருக்கிறார். அதன்பின் பலரும் இலண்டனில் இருந்து அங்கு சென்று விட்டு இலங்கைக்கு வந்து சேர்திருந்தனர். நாங்கள் லெபனான் சென்றபோது உள்நாட்டுக்கலவரம் ஏற்பட்டு அமைதிகாக்கும் படையின் கட்டுப்பாட்டில் நகரம் இருந்தது. நகரம் சிதைந்து கிடந்தது. இப்படியான காட்சிகளை நான் முன்னர் பார்த்திருந்ததில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை. ஆனால் கடந்த வருடம் சாவகச்சேரியைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தபோது அந்த 78ம் ஆண்டு பெய்ரூட் நகரம் நினைவுக்கு வந்தது. ஆனால் பெய்ரூட்  இந்தளவு சிதைவைக் கொண்டதாய் இருக்கவில்லை.
பெய்ருத்தில் இருந்தபோது பால்தீன அகதிமுகாம்களை சென்று பார்த்தோம். பல்வேறு பணித்தலங்களுக்கும் சென்றோம். அவர்களின் தோழமைமிகக் வரவேற்புடன் பல பணிகளை நாம் மேற்கொண்டோம். அவர்களுக்கு நாங்கள் காவிச் சென்ற இலங்கைத் தேயிலைப் பொதிகளை அன்பளிப்புகளாக வழங்கினோம். அனுபவங்களை பகிர்ந்து கொண்டோம். எங்களைப்போல் உலகெங்கும் இருந்து பலரும் அங்கு வந்திருந்தனர். அவர்யார் எந்த நாட்டவரென்பதெல்லாம் இப்போது அவசியமில்லை. அப்போதுதான் பாலஸ்தீனர்களின் உரையாடலில் அடிக்கடி அபுஅம்மார் (Abou Ammar) என்னும் பெயர் மரியாதையுடன் உச்சரிக்கப்படுவதை அவதானித்தேன். ஆம் யாசர் அரபாத் மக்களாலும் போராளிகளாலும் அபுஅம்மார் என்னும் பெயராலேயே சுட்டப்பட்டார். அது அவருடைய போர்க்கள பெயராக அறியப்பட்டடிருந்தது. அபுஅம்மார் அவர்கள் பாலஸ்தீன விடுதலையில் அக்கறை கொண்டது போலவே உலகெங்குமான ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தேசியங்கள் குறித்தும் அக்கறை கொண்டிருந்தார். அதனால்தான் ஈழத்தவரான என்போன்றோரெல்லாம் அங்கு  செல்ல வாய்ப்பானது. அந்த பகழ்மிக்க போராளியின் பெயரின் ஈர்ப்பினால் பின்னர் சிறிது காலம் எனது பெயரின் முன்னால் அபு என்பதை இணைத்து பெயரை உச்சரித்து வந்தேன்.  இப்படி அபு என்பதை தங்கள் பெயரின் முன்னால் ஒட்டி அழகுபார்த்த என்னொத்தவர் தோழர்கள் எனக் கூறிக்கொண்டோர் சிலரை இன்றைக்கு எண்ணிப்பார்கிறேன் கவலைதான் மிஞ்சுகின்றது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் பல போராளிகளின் போர்களப்  பெயர்கள் அபு என்றே தொடங்கும். அவர்களின் இராணுவ தளபதியான புகழ்பெற்ற அபுஜிகாத்தை நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.
இத்தனை நெருக்கமான தொடர்பும் உறவும் ஈழப்போராட்டத்திற்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இடையே நிலவி இருந்த போதும் இன்று நின்று நிதானித்து ஒரு கால்நூற்றாண்டின் முன்னரான அந்த நிகழ்வுகளை யோசிக்கையில் அவைகள் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதா? என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாதுள்ளது. இதனை மிகுந்த கவலையுடனே தெரிவிக்க வேண்டி இருக்கின்றது.  சிலவேளைகளில் இந்த தொடர்புகள் ஈழப்போராட்டத்தில் தேவையற்றதான சிக்கல்களுக்கு முரண்களுக்கு வழிவகுத்து விட்டனவோ என்ற எண்ணமும் என்னிடத்து உண்டு. போராட்டம் முதிரா நிலையில் போராளிகள் பதமாகாத நிலையில் இவ்வகை உறவுகள் எத்தகைய சீரழிவுகளை ஏற்படுத்தும் போலிகளை பதர்களை உருவாக்கும் என்பதற்கு கலைக்கப்பட்ட அந்த ஈரோஸ் இயக்கம் சிறந்த உதாரணமாகலாம். பாலஸ்தீன உறவு உள்ளது என்பதை மட்டுமே தனது பலமாக கொண்டு பரப்புரை செய்து கட்டியெழுப்பட்ட அந்த இயக்கத்தின் பயிற்சி பெற்ற உறுப்பினர்கள் எவரும் இன்றைக்கு இந்தபோராட்டதின் ஒத்ததிசையில் இல்லையென்பது ஒரு மோசமான எடுத்துக்காட்டாக மாறி நிற்கின்றது.  வரலாறு அவர்களை மன்னிக்குமா தெரியவில்லை. அவர்களுக்கான காலம் இன்னும் கடந்துவிடவில்லை என்பதே என்நிலைப்பாடு. இவர்களின் பரப்புரையினால்தான் இருநூறுக்கும் மேற்பட்டதான தோழர்கள் தம் இன்னுயிரை ஈந்தார்கள் என்பதை எப்படி மறப்பது.
ஆனல் பாலஸ்தீன விடுதலை இயக்கப் போராட்டமும் யாசர்அரபாத் அவர்களின் வாழ்வும்  உலகளாவிய தேசியவிடுதலைப் பேராட்டங்களுக்கு வழங்கியுள்ள பாடங்கள் ஏராளம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  ஈழப்போராட்டததிற்கு இத்தனை நெருக்கமாக  பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் இருந்தபோதும் அதன் போராட்ட அனுபவங்கள் பரிசோதித்து பார்க்கப்பட்டனவா எனக்கு தெரியாது.
Mohammed Yasser Abdul-Ra'ouf Qudwa Al-Husseini, என இயற்பெயர் கொண்ட யாசர் அரபாத் அவர்கள் 1929ம் ஆண்டில் கெயிரோவில் பிறந்தார். கட்டிடக்கலை பொறியலில் இளங்கலைப் படிப்பை 1951ல் எகிப்தில் முடித்த அவர் குவைத்தில் பணியாற்றினார்.1955ல் எகிப்தில் கமால் அப்துல் நசாரின்(Gamal Abdel Nasser) ஆட்சியில் ஒருதடைவை கைது செய்யப்ட்டிருக்கிறார். குவைத்தில் அபுஜிகாத் அவர்களை சந்தித்ததின் பின்னால் அவருடன் இணைந்து பத்தா அமைப்பை 1957ல் நிறுவினார். அதனூடாக அவர் பாலஸ்தீன அரசியலில் போராட்டத்தில் தீர்க்கமாக காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னால் முழுமையாக அவருடைய ஆளுமை தலைமைத்துவம் வழிகாட்டல் என்பவற்றினூடாக பாலதீன விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பத்தா என்றும் சிறிய அமைப்பை நிறுவிய அபுஅம்மாரும் அபுஜிகாத்தும் அதற்ககூடாக ஆக்கிரமிக்கப்ட்ட பாலஸ்தீனத்திற்குள் இருந்த பல்வேறு கருத்துக்கள் கொண்ட அமைப்புகளை இணைத்து பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அதாவது  பிஎல்ஓ (PLO)என்னும் ஐக்கிய முன்னணியை உருவாக்கினர். 1969ல் அதன் மூன்றாவது செயலதிபராய் தலைவராய் பொறுப்பேற்ற யாசர் அரபாத் அவர்கள் உலக அரங்கின் முக்கிய விடுதலைப் போராளியாக அல்லது விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான இலட்சிய உருவாக மாறத்தொடங்குகிறார்.  இவருடைய போராட்ட வாழ்விற்கூடாக நாம் அறிந்து கொள்ளக்கூடியது பல. தேசிய விடுதலைப்போராட்டத்திற்கு தேவையான அனுவங்கள் பல இந்த விடுதலைபோராட்டத்துள் அவரது தலைமைத்துவ வழிகாட்டுதலில் பொதிந்து கிடக்கின்றன.
பால்தீனத்தை சுற்றியதான அண்டைநாடுகளான யோர்தான் சிரியா லெபனான் எகிப்து போன்ற நாடுகள் அரபு நாடுகளாக இருந்த போதும் இந்த அரபு நாடுகளை நம்பியமை எவ்வகைகளில் பாலஸ்தீன விடுதலையை முன்னெடுக்க  உதவிபுரிந்தன அல்லது முன்னெடுப்பதற்கு தடையாக இருந்தன என்பதை கற்றுக்கொள்வது உலங்கெங்குமான தேச விடுதலைப் போராளிகளுக்கு உதவக்கூடியதொன்றே. இது நமது ஈழப்போராட்டத்திலும் அனுபவமாக வழிமொழியப்பட்டுள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது. அதாவது அண்டைநாடான இந்தியா நமக்கு எந்தவகையில் துணையாக இருந்தது என்பதை 1987ம் ஆண்டின் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னான அமைதி காக்கும் நிகழ்வுகள் உலகிற்கு எடுத்துக்காட்டின. இந்த பின்னணியில் அண்டைநாடுகள் பாலஸ்தீன விடுதலையில் எவ்வகையான சிக்கல்களை உருவாக்கியிருக்கும் என்பது நாம் புரிந்து கொள்ளக்கூடியதே. யோர்தானில் இருந்தும் பின்னர் லெபனானில் இருந்தும் வெளியேற்றப்பட்ட பாலஸ்தீன விடுதலை அமைப்பின் வரலாற்றை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த அண்டை நாடுகள் தங்கள் உள்ளக அரசியலுக்கேற்ப அல்லது தம்நலம் சார்ந்து பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை பயன்படுத்த முனைந்ததும் அந்த சிக்கல்களுக்குள் பாலஸ்தீனம் சிக்கித் தவித்ததும் இந்நிலையிலும் அதிலிருந்து மீள யாசர் அரபாத் அவர்களின் சூழ்ச்சித் திறன் மிக்க நுண்ணரசியல் அறிவும் அவருடைய தலைமைத்துவ வழிகாட்டலும் உதவின என்பது முக்கியமான விடயங்களாகும்.
அதே போன்றுதான் பல்வேறு கருத்துக்களை கொண்ட இயக்கங்களை குழுக்களை தான் நோய்வாய்பட்டு தலைமையகமான மொகாற்றாவில் இருந்து வெளியேறும் வரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து அரவணைத்துச் சென்ற முறைமை கூட தேசிய விடுதலை இயக்கங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும். அவைகளில் பல தவறுகள் நிகழ்ந்ததாக இன்று ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படும் போதும் அவர் பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்பததையே ஒரே பிரதிநித்துவமாக நிறுவி அதனை பேச்சுவார்த்தை மேசையில் அமர்த்தி தான் நினைத்தவை சிலவற்றை செவ்வனே நிறைவேற்றி விடைபெற்று சென்றுள்ளார். இதன் சாதக பாதகங்கள் பற்றி வராறுதான் சொல்லவேண்டும்.
அதேபோல் பாலஸ்தீன விடுதலை இயக்கமும், அதன் போராட்டமும், அதன் தலைவரும் எவ்வகையாக சர்வதேச ஆதரவு மற்றும் சர்வதேச சமுகத்தி்ன் உறவுகளை கட்டி எழுப்பினார்கள் என்பதையும், அவற்றின் ஊடாக பெறப்பட் தீர்வின் பலாபலன்களையும் நாம் கண்கூடாக கண்டுவந்திருக்கின்றோம். அவற்றின் அணைப்பிற் கூடாக பெற்ற வெற்றி தோல்விகளை சர்வதேசம் திணித்த தீர்வுகளை ஆய்வு செய்வதன் மூலம் நாம் கண்டடைய வேண்டும்.  இன்றைய பாலஸ்தீன அரசின் இறையாண்மையின் எல்லை எதுவரையானது  என்பதை அபுஅம்மார் அவர்கள் நோய்வாய்ப்பட்ட வேளையில் வெளிப்படையாக நாம் கண்டுகொண்டோமல்லவா?.  சர்வதேச ஆதரவு எந்தளவுக்கு விடுதலைப் போராட்டங்களுக்கு உதவும், எந்தளவுக்கு நெருக்கடிகளைத் தரும், எந்தளவுக்கு திணிக்கும் என்பவையெல்லாம் தன் மரணத்தின் ஊடாக அவர் விட்டுச் சென்ற பாடமாகத்தான் நாம் கொள்ள வேண்டும்.
பாலஸ்தீன விடுதலை இயக்கம் அமைக்கப்ட்டதன் முதல் பிரகடனத்தில் உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாடு என்பதை இல்லாதொழிப்பதே நோக்கமாக அறிவிக்கபட்டிருந்தது. ஆனால் 1987ல் பாலஸ்தீன தேசிய காங்கரஸ் கூடிய போது முதல் பிரகடனத்தில் மாற்றங்களை கொணர்ந்தது. இஸ்ரேலை அங்கிகரித்து போராட்ட தந்திரோபாயத்தை மாற்றி அமைத்தது. இது அவர்களை சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயலாற்ற வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை திணிப்பு சார்ந்ததா அல்லது முதிர்ச்சி சார்ந்ததா அல்லது காலத்தின் மாற்றம் சார்ந்ததா என்பதை நாம் அனுபவஙகளாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றே கருதுகின்றேன்.
அதேபோல்தான் பாலஸ்தீன விடுதலை இயக்கம் தனது தலைமறைவு நிழல் அரசினை வெளிநாட்டில் நிறுவி நடாத்தியதையும் நாம் அறிவோம்.  பின்னர் 1994ம் ஆண்டு உடன்படக்கைகளின் பின்னால் மட்டுப்படுத்தப்பட்டதான அதிகாரங்கள் கொண்ட துண்டாடடப்பட்ட பாலஸ்தீன நிலப்பரப்பில் அதே தலைமறைவு நிழல் அரசை தாயகத்தில் மாற்று அரசாக நிறுவ முயன்றபோது ஏற்பட்ட சிக்கல்களை முரண்களை, எதிர்கொண்ட சவால்களைக்கூட நாம் பாடமாக எடுத்துக்கொள்ள முடியும் என்றே நம்புகின்றேன்.
யாசர் அரபாத் என்று அறியபட்ட அபுஅம்மார் அவர்கள் போராட்டத்தையே தன்னுடைய வாழ்க்கையாக மாற்றியிருந்தார். ஏறத்தாழ அரைநூற்றாண்டுகால வாழ்வினை இந்த போரட்டத்திற்கு அர்பணித்தார். மக்களின் நேசததிற்குரிய தலைவராக தேசியத் தலைவராக இருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக இருந்தார்.  70கள் 80களில் காவிய நாயகனாக போற்றப்பட்டிருக்கினறார். தற்போது தனது 75வது வயதில் அவர் மரணமுற்றிருக்கும் இவ்வேளையில் அவரது கனவு அல்லது இலட்சியம் நிறைவேறியிருக்கின்றதா என்று பார்க்கும் போதும் கவலைதான் மிஞ்சுகின்றது. ஆம் யாசர் அரபாத் அவர்கள் ஒரு முடிவுறாத வரலாறு.. அடுத்த தலைமுறை தொடரவேண்டியதான முடிக்க வேண்டியதான வரலாற்றை கனவை விட்டுச சென்றுள்ள தலைவர். 
இந்த தலைவரை போராளியை சந்திக்க வேண்டும் என்று நெஞ்சில் தவிப்புடன் பெய்ரூத் நகரில் இருபந்தைந்து ஆண்டுகளின் முன்னிருந்த நினைவுகளும் உணர்ச்சிகளும் தற்போது பீறிட்டெழுகின்றன. எங்கள் ஆவலை தணிக்கும் வகையில் அவர் உரையாற்றும் உள்ளக கருத்தரங்கொன்றில் அன்று அவரை தரிசிக்க கிடைத்த வாய்பின்போது பெற்ற உளக்கிளர்ச்சியுடன் இப்போது நான் அவருக்கு புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து மக்கள் சார்பாக ஈழப்போராட்ட ஆர்வலர்கள் அப்பால் தமிழ் குழுமத்தினர் சார்பாக என் அஞ்சலியை செலுத்துகின்றேன். 
வெல்லட்டும் பாலஸ்தீனம்!

(இலண்டனில் இருந்து ஒலிபரப்பாகும்  ஐபிசி வானொலியிலும், பாரிசில் ஒளிபரப்பாகும் ரிரிஎன் தொலைக்காட்சியம் ஆற்றிய அஞ்சலி உரைகளின் பிரதி இங்கே இடம்பெறுகின்றது. அந்த ஊடகங்குளுக்கு என் நன்றிகள்)

 

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 29 Mar 2024 09:20
TamilNet
HASH(0x55f1e6095d40)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 29 Mar 2024 09:20


புதினம்
Fri, 29 Mar 2024 09:20
















     இதுவரை:  24715681 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4277 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com