அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 14 September 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Monday, 31 May 2004
பக்கம் 3 of 5

இலங்கைத் தமிழரின் புலப்பெயர்வு கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் முற்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த மலேசிய புலப்பெயர்வுதான் யாழ்ப்பாணத்தின் (கம்பவாரிதியின் மொழியில் செம்பாட்டு மண்ணில் பிறந்து..) கடல்தாண்டி வாழத் தலைப்பட்ட முதல் நிகழ்வாகும். (செம்பாட்டுமண் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மூன்றிலொரு பங்கும் இல்லாதது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்) அதற்கடுத்து இலங்கை சுதந்திரமடைந்ததன் பின் யாழ்ப்பாண மேட்டுக்குடியினர் படிப்பிற்காகக் சென்று இலண்டன் கனவை உருவாக்கிய பயணமாகும். இதற்குப்பின் 1960களின் பிற்பகுதியில் எண்ணெய் வளநாடுகள் நோக்கிய செல்வம் தேடும் பயணமும் புலப்பெயர்வும் நிகழ்கின்றது. அதற்கும் பின்னர்தான் மிகப்பெரிய அளவினதாக 1980களில் நிகழ்ந்த தற்போதைய (ஐரோப்பா,கனடா, அவுஸ்திரேலியா) புலப்பெயர்வு தொடங்கியது. இப்புலப்பெயர்வுக்குப் போரும் பொருளாதாரமும் முக்கிய காரணங்கள் என்பது மறுக்க முடியாதது. முன்னைய புலப்பெயர்வுகள் (மலேசியா, இங்கிலாந்து, மத்தியகிழக்கு) தனியே பொருளாதாரக் காரணியை கொண்டவை. பின்னையதான புலப்பெயர்வுதான் கம்பவாரிதி ஜெயராஜுக்கு உறுத்தலாக இருக்கின்றது. ஏனெனில் இந்தப் புலப்பெயர்வில் இடம்பெற்றவர்களில் பெரும்பான்மையினர் சாதாரணர்கள், சாமானியர்கள், பாமரர்கள் ஆம் சூத்திரர்கள். (கட்டுரையாளரின் மொழியில் "பிளேன் ரீ" க்கும் வழியற்றவர்கள் உ-ம்: "பிளேள் ரீக்கும் வழியில்லாமல் காய்ந்து திரிந்த உங்கள் தோற்றத்தில் கோர்ட்டாலும், சூட்டாலும், ரையாலும் ராஐகளையே வந்துவிட்டது") 
யாழ்ப்பாணக் குடாநாட்டின் பொருளாதாரத்தை முன்னரே மணியோடர் பொருளாதாரமென கம்யூனிஸ்ட் கட்சியினர் (மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா உட்பட) அரசியல் நையாண்டி செய்வதுண்டு. இதற்குக் காரணம் கடல் கடந்தவர்களும், குடாநாட்டுக்கு வெளியே அரச உத்தியோகங்களுக்குச் சென்றவர்களும் அனுப்புகின்ற பணவரத்தால்தான் யாழ்பாணம் உயிர் வாழ்கின்றது என்பதையும், அதற்கு வேறெந்த அடிப்படைப் பொருளாதார வளமும் இல்லை என்பதையும் சுட்டடிக்காட்டத்தான். இதில் உண்மையும் இருக்கக் கூடும். எனது பிரச்சனை அதுவல்ல. அவ்வேளையில் குடாநாட்டுக்கு வெளியே புலம்பெயர்ந்தவர்கள் மணியோடர் அனுப்பியதுடன் மட்டுமல்லாது ஊர்வருகையில் காட்டிய பணப்பவிசுசையும் போலிப் பெருமையையும் கலாச்சாரச் சீரழிவையும் கம்பவாரிதிக்கு சுட்டிக்காட்டத்தான். அறுபதுகளில் இலங்கைப் பத்திரிகைகளில் வெளிவந்த சுந்தரின் புகழ்பெற்ற கேலிச்சிந்திரங்களான சவாரித்தம்பர், மைனர் மச்சான், மிஸ்டர் அன்ட மிஸிஸ் டாமோடரன் போன்றதான தொடர்களை பார்த்திருந்தால் - படித்திருந்தால் கம்பவாரிதி கருதும் மொழி, பண்பாட்டு சீரழிவுகள் எப்போது தொடங்கியது யாரால் தொடங்கப்பட்டது என்பது தெரியவந்திருக்கும். அத்துடன் அக்காலத்தில் நித்திகனகரெத்தினத்தினால் பாடப்பட்ட துள்ளலிசைப் (பொப்பிசை) பாடல்களைத்தன்னும் கம்பவாரிதி கேட்டிருப்பாரானால் இன்றைய புலம்பெயர்வையும் புலம்பெயாந்தோரையும் பற்றி இவ்வகை அழுக்கான கட்டுரையை அவர் எழுதியிருக்க மாட்டார். கடந்த கால்நூற்றாண்டுக் காலத்துக்குள் புலம்பெயர்ந்தோரின் தமிழ்மொழிப் பரிச்சயம் பற்றிக் கவலைகொண்டவருக்கு கொழும்பு ரமிலர் பற்றியோ கறுவாக்காட்டு ரமிலர் பற்றியோ அறியாமல் போனதும் ஆச்சரியம்தான் (அதற்குள் அவர் சங்கமித்து விட்டது காரணமாகலாம்). 1977ம் ஆண்டு இனக்கலவரத்தில் அடிபட்டு கொழும்பில் இருந்து லங்காராணி கப்பலில் பார்மேனியன் நாய்களுடன் வந்திறங்கிய கொழும்புவாழ் பெருங்குடி ரமிலர்களின் ரமில் கேட்டு ரமில் ராய் வடித்த கண்ணீர் கம்பவாரிதி கண்டதில்லைப் போலும்.
மலேசியப் புலப்பெயர்வினால் யாழ்பாணச் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் சாட்சியத்தை காரைபெயர்ந்து கிடக்கும் நாற்சார் வீடுகளில் இன்றைக்கும் காணலாம். தெல்லிப்பளை, மல்லாகம், உடுவில், மானிப்பாய், வட்டுக்கோட்டை, உரும்பியராய் பகுதிகளில் அப்போது பணப்பவிசுடன் கட்டிய உருக்குலைந்து கிடக்கும் வீடுகள்  அந்தக்கதையைச் சொல்லும்.  இலண்டன் சீமைக்குச் சென்றவர்கள் இலண்டன் மாப்பிளை தேடி விரதமிருந்த குமர்களை கைப்பிடித்து செல்வதற்கு வந்துசென்ற வேளைகளில் அவர்கள் காட்டிய பவிசுகள் கொஞ்சமா?. அவர்கள் வீட்டுக் கொண்டாட்டங்கள், அவர்கள் அணிந்து காட்டிய கையில்லாத பிளவுசுகள், தொப்புள் காட்ட கட்டிய சேலைகள், அலங்காரங்கள் கொஞ்சமா? அன்றைக்கு அந்தச் சாதாரணர்கள் வாய்பிளந்து, இந்த பணக்கொழுப்புகளின் ஆட்டங்களைக் கண்டு முகஞ்சுழித்து நின்றதெல்லாம் அவர் அறிந்ததில்லைப் போலும். அவ்வேளைகளில் கம்பவாரிதி கம்பனடிப்பொடி கணேசனின் செருப்பைத் தலையில் சுமந்து திரிவதில் சுகம் கண்டிருப்பார் (இராமனின் பாதரட்சையை பரதன் சுமந்தானல்லவா அந்த நினைப்பு). சிலவேளை தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் காலில் சாஸ்டாங்கமாய் விழுந்து கம்பராமாயண கலாச்சாரத்தை அல்லது கந்தபுராணக் கலாச்சாரத்தைக் கற்றுக் கொண்டிருந்திருப்பார்.(1981ம் ஆண்டில் ஜெயராஜ் மதுரையில் ஒரு அரசியல்வாதியின் காலில் விழுந்த அசிங்கம் பற்றி அப்போதைய தினபதி ஆசிரியர் எஸ்.டி.சிவநாயகத்தின் கட்டுரையை படித்தவர்கள் ஞாபகம் வைத்திருக்கலாம்).



     இதுவரை:  25665971 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 11908 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com