அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 21 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 14 arrow உட்டுவான்கண்டே ராசா
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


உட்டுவான்கண்டே ராசா   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….முத்துலிங்கம்  
Tuesday, 08 March 2005

சந்தனக் கடத்தல் வீரப்பன் 17 வருடங்கள் காட்டு ராசாவாக இருந்தான். இவன் 2000க்கு மேற்பட்ட யானைகளையும், கணக்கிலடங்காத சந்தனக் காடுகளையும் அழித்தவன். இவனைப் பிடிப்போருக்கு 3 கோடி ரூபா வெகுமதியென அரசு அறிவித்திருந்தது. கடந்த ஒக்டோபர் 18ம் தேதி, இரவு பதினொரு மணிக்கு பாப்பாரப்பட்டி கிராமத்து ரோட்டில் தமிழ் நாட்டு பொலீஸ் வீரப்பனையும் கூட்டாளிகளையும் சுற்றி வளைத்தது. அவனுடைய கூட்டாளிகளில் ஒருவன் உளவு கொடுத்திருந்தது வீரப்பனுக்கு தெரியாது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து வீரப்பன் சுடுவதற்கு எத்தனித்தபோது பொலீஸார் அவனை சுட்டுக் கொன்றனர். இப்படியான செய்திகள் சமீபத்தில் பல பத்திரிகைகளில் வெளியாயின. பொலீஸ் அவனை அக்கிரமக்காரன் என்று வர்த்தாலும் பலர் வீரப்பனை கருணையானவன் என்றும், அவ்வப்போது ஏழைக் கிராமவாசிகளுக்கு உதவிகள் செய்தவன் என்றும் சொல்கிறார்கள். இவனைப் போலவே ஒருத்தன் 160 வருடங்களுக்கு முன்பு இலங்கையிலும் வாழ்ந்தான். அவன் கொள்ளை, கொலைகளுக்கு அஞ்சாதவன் என்றாலும் ஏழை மக்கள்மீது தணியாத அன்பு வைத்திருந்தான். அவன் பெயர் சாரடியல். கடைசி இராச்சியமாக இருந்த கண்டி அரசு 1815ல் வீழ்ந்து வெள்ளைக்காரர்களின் பிடியில் முழு இலங்கையும் அகப்பட்டது. திடீரென்று தோன்றினான் ஒரு மலைக்கள்ளன். அவன் உட்டுவான்கண்டே குன்றுகளில் மறைந்திருந்து தாக்குதல்களை நடத்தினான். எந்த ஓர் அரசனும் எதிர்த்து நிற்கத் துணியாத வெள்ளைக்கார சாம்ராஜ்யத்துக்கு சரியான சவாலாக அவன் அமைந்திருந்தான். அவன் கட்டுப்பாட்டில் இருந்த கண்டி பாதையில் சனங்களும் அரச அதிகாரிகளும் பயணம் செய்ய பயப்பட்டனர். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கண்டி அரசன் சிறீ விக்கிரமராஜசிங்கன் இறந்த சில வருடங்களிலேயே இந்த அட்டகாசங்கள் தொடங்கிவிட்டன. இன்னொரு குட்டி அரசன் தோன்றிவிட்டானோ என்று பிரிட்டிஷ் ஆட்சி கலக்கம் அடைந்தது.

ஒரு சிறு சம்பவம்தான் சாரடியலை வெள்ளைக்காரனுக்கு பிடிக்காத கொள்ளைக்காரனாக மாற்றியது. காட்டுபாவா என்று ஒரு சிறு வியாபாரி. அவன் உட்டுவான்கண்டே கிராமத்துக்கு அடிக்கடி வந்து சாமான்கள் விற்றுப் போவான். அந்தக் கிராமத்தில் வசித்த ஏழைகளில் பலர் அவனுக்கு கடனாளியானார்கள். அந்தக் கடன் பளுவில் இருந்து அவர்களுக்கு மீள வழியில்லை. சாரடியல் ஓர் இரவு அவனைக் கொள்ளையடித்தான். அவனுடைய மீசையை பாதி மழித்து அலங்கோலமாக்கி துரத்திவிட்டான். கொள்ளையடித்த பணத்தை மக்களுடன் பங்குபோட்டுக்கொண்டான். கிராம மக்கள் விடுதலையானார்கள். அதுதான் அவனுடைய முதல் கொள்ளை. அப்படித்தான் அவன் தன்னை உட்டுவான்கண்டே ராசாவாக பிரகடனம் செய்தான். அதைத் தொடர்ந்து மேலும் பல சம்பவங்கள். ஒரு முறை சூட்கேஸ’ல் 3000 ரூபாவை அடைத்துக்கொண்டு சில்வா என்பவர் காட்டு வழியில் பிரயாணம் செய்தார். கடுகனாவா தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் கூலியாட்களின் சம்பளப் பணம். எப்படியும் அதைக் கொண்டுபோய் சேர்த்துவிடவேண்டும். எந்த நிமிடத்திலும் சாரடியல் தாக்கிவிடுவான் என்ற பயம் அவரை நடுங்க வைத்தது. அப்போது ஒரு வழிப்போக்கன் அவருக்கு துணையாகச் சேர்ந்துகொண்டான். அவர் வீடுவரை கொண்டுவந்து சேமமாக விட்டான். நன்றி நண்பரே, உங்கள் பெயர் என்ன என்று கேட்டார் சில்வா. அவன் சாரடியல் என்று கூறி மறைந்து விட்டான்.

அடிவயிற்றில் கட்டிய பணப்பையுடன் அந்தக் கிழவன் நடக்கிறான். அது அடிவயிற்றில் பற்றிய தீபோல எரிகிறது. சாரடியலின் குன்றைத் தாண்டி கிழவன் போகவேண்டும். னைத்தபடியே நடக்கிறது.

'இது ராசாவின் பாதை என்பது உனக்கு தெரியாதா? எடு பணத்தை.' சிறிது ஈரமாகிப்போன துணிப்பையை கிழவன் உருவி எடுக்கிறான். அவன் கைகள் நடுங்குகின்றன.

'ஐயா, நான் ஏழை தச்சன். வாழ்நாள் முழுக்க சேமித்தது. என் மகளுடைய சீதனம்.' சாரடியல் நிமிடம்கூட தாமதிக்காமல் பையைப் பறித்துக்கொண்டு சடுதியில் மறைந்துபோகிறான்.

அடுத்த நாள் இரவு, அதே நேரம் சாரடியல் பணத்தை கிழவனிடம் திருப்பி கொடுக்கிறான். அத்துடன் இன்னும் 500 ரூபாயும் சேர்த்து. இது உன் மகளுக்கு என் சீதனம். கிழவன் வாயைப் பிளந்து அவனை பார்த்துக்கொண்டே நிற்கிறான். சாரடியலின் தயாள குணத்தை மக்கள் மெச்சினார்கள். ஆனால் அவன் எந்த மிடம் என்ன செய்வான் என்பதை ஒருவராலும் சொல்லமுடியாது.

நாகோட்டி செட்டி, எக்கச்சக்கமான வட்டியில் பணம் கொடுத்து அதை மீட்பதற்காக எதையும் செய்யும் துணிவு கொண்ட பணக்காரன். ஈவிரக்கம் இல்லாதவன். உட்டுவான்கண்டே கிராமத்தில் பல ஏழைகள் இவனிடம் கடன்பட்டு அடிமைகளாயிருந்தனர். ஒரு நாள் சாரடியல் பிச்சைக்கார வேடம் அணிந்து ஒரு மரத்தடியில் காத்திருந்தான். நாகோட்டி செட்டி அவ்விடத்தில் வர அவனிடம் பிச்சை கேட்கிறான். செட்டி அவனைப் பார்த்து காறித் துப்பிவிட்டு மேலே செல்கிறான். சாரடியலின் கிறிஸ் கத்தி செட்டியின் வயிற்றை கிழிக்கிறது. அவன் உடம்பில் இன்னும் பல ஓட்டைகள் போடுகிறான். செட்டியின் உயிர் ஏதோ ஓர் ஓட்டைவழியாக போய்விடுகிறது. உட்டுவான்கண்டே ராசா தன் குடிகளைக் காப்பாற்றிய சந்தோசத்தில் கத்தியை துடைத்துக்கொண்டு அமைதியாக தன் வேடத்தை களைகிறான்.

சாரடியலுக்கு ஆரம்ப காலத்தில் ஒரு காதலி இருந்தாள். பெயர் மெனிக்கா. அவன் அவளைஅணுகியபோதெல்லாம் அவள் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. அவன் கையிலே ஒரு பூ பூனைபோல துள்ளி அவள் பின்னால் நிற்கிறான்.

ஓ மெனிக்கா!                       
என் காதலி, என்னை காதலி.                                               
மெனிக்கா கண்களை                                                                    
மேலும் கீழும் சுழட்டுகிறாள்.                                                             
நீ  ஒரு  காற்று                                                                                     
இன்று இங்கே                                                                                                 
நாளை எங்கேயோ                                                                        
காகத்தைப் போல.

சாரடியலின் அட்டூழியங்களை ஒரு முடிவுக்கு கொண்டுவர வெள்ளைக்கார அரசாங்கம் தீர்மானிக்கிறது. இருநூறு பவுண்டுகள் சன்மானம் என்று தண்டோரா போடுகிறது . எங்கும் அறிவித்தல்கள்; வேண்டும் சாரடியல், உயிரோடு அல்லது பிணமாக. உட்டுவான்கண்டே என்றால் சிங்களத்தில் 'ஒட்டக முதுகு' என்று அர்த்தம். ஒட்டக முதுகுபோல வளைந்திருக்கும் மலைகளில் போய் ஒளிந்துகொள்கிறான் சாரடியல். பொலீஸாருடைய வலை பெரிதாக விரிகிறது. ஊருக்கு ஊர் உளவாளிகளை ஏவி விடுகிறார்கள். மூலை முடுக்கெல்லாம் தேடுதல் நடக்கிறது. இது தெரியாமல் மெனிக்காவும் அலைகிறாள். அவள் காலம் கடந்துபோய் சாரடியலை மலை அடிவாரங்களில் தேடுகிறாள். கவிதை இப்படி போகிறது.

இருள் நிறம்                                                                                    
மெலிந்த உருவம்                                                                              
பட்டுக் கச்சு                                                                                        
இறுக்கி வழுக்கும்                                                                                  
மார்பு விளிம்புகள்                                                                               
பாட்டிக் சேலை                                                                                        
வரிந்து தாங்கும் பிருட்டம்.                                                                   
பின் மதியச் சூரியனை                                                                          
கூசிப் பார்க்கும் விழிகள்.                                                 
தெருமுனைக் காவல்                                                
பொலீஸ்காரனிடம் பக்கவாட்டில் நகர்ந்து சிறிய மக்கட்டு நெருப்பு வளையல்கள் அசைய                        
'எத்தனை மைல்கள் மாவனெல்லைக்கு?'                       
'எத்தனை மைல்கள் உட்டுவான்கண்டேக்கு?'            
புல்லினும் மெல்லிய குரல்.                                                        
காற்று மரித்து கிடந்தது                                                                    
கல்போல.

சாரடியலுக்கு ஒரு விசுவாசமான கூட்டம் இருந்தது. அவர்கள் திட்டம் தீட்டினார்கள். ஒரு குதிரை வணிகன் மேல் சாரடியல் பல நாட்களாக கண் வைத்திருந்தான். அந்த அரபு வியாபாரி ஒரு குற்றமும் செய்யாதவன். அவனுடைய குற்றம் எல்லாம் அவன் பணக்காரனாக இருந்ததுதான். சாரடியல் ஒரு தந்திரம் செய்து இந்த குதிரை வியாபாரியை தீர்த்துக்கட்ட தீர்மானித்தான். தன்னிடம் உத்தமமான குதிரைகள் இருப்பதாகவும் அவற்றை சகாய விலையில் பெற இன்ன இடத்துக்கு வரவேண்டும் என்றும் தகவல் கொடுத்தான். குதிரை வணிகன் ஓர் அழகான அரபுக் குதிரையில் ஏறி குறிப்பிட்ட இடத்துக்கு புறப்பட்டான். கல்கெதர என்ற அந்த ஏழைக் கிராமத்து வீதிகளுக்கு முற்றிலும் பொருத்தமில்லாத உயர் ஜாதி புரவி அது. குதிரையிலேயே பிறந்து வளர்ந்த ஒரு ராஜகுமாரன் ஆரோகத்து வந்ததுபோல அவன் இருக்கிறான். சாரடியல் அவன் மேலே பின்னால் இருந்து பாய்கிறான். அவனுடைய கிறிஸ் கத்தி அரபு வணிகனின் கழுத்தை கிழிக்கிறது. வணிகன் இறந்த பிறகும் அந்தக் கத்தி நிறுத்தாமல் குத்துகிறது. எசமான் விழுந்த பிற்பாடும் தன் கடமை தீரவில்லை என்பதுபோல கம்பீரமாக நிற்கிறது வெண்புரவி. அதன் பிடரி மயிர் சந்திர ஒளியில் மின்னுகிறது. ஒரு பாவமும் அறியாத அந்தப் பிராணியை தன் துப்பாக்கியால் சுடுகிறான் சாரடியல். இறந்து முடிந்த பிறகு அது தொப்பென்று நிலத்திலே விழுகிறது.

எசமானுக்கு கத்தி, அவனுடைய வாகனத்துக்கு துப்பாக்கி. இப்படி ஓர் ஒழுங்கு முறையில் கொலைகள் நடந்து முடிகின்றன. இந்த அக்கிரமத்தைப் பார்த்து அவனுடைய கூட்டாளிகள் கூட விக்கித்துப்போய் நிற்கிறார்கள். இவ்வளவும் அந்த அரபு வணிகனிடம் இருந்த 500 ரூபாய் காசுக்காகத்தான். சாரடியலின் கடைசிக் கொலை.

துரோகிகளால் நிறைந்த இந்த உலகம் பற்றி வெள்ளைக்கார அரசுக்கு நிறையத் தெரிந்திருந்தது. அது ஒரு வியூகம் வகுத்தது. சாரடியலின் குழுவிலேயே உளவு பார்க்க ஒருவனை ஏற்பாடு செய்தது. அந்த நண்பனின் பெயர் சிறீமாலே. சார்ஜண்ட் மஹாட் தலைமையில் ஒரு பொலீஸ் படை மாவனல்லையில் ஒரு வீட்டை சுற்றிவளைத்தது. பொலீஸ் உளவுப்பிரிவு இந்த தகவலை சேகரித்திருந்தது. சிறீமாலே அடையாளம் காட்டுவதற்காக முன்னே சென்றான். ஓட்டையை மறைத்த கிடுகு மறைப்பை நீக்கி சிறீமாலே எட்டிப் பார்த்தான். 'அங்கே நிற்கிறான், அங்கே நிற்கிறான்' என்று நடுக்கத்தோடு கூறிவிட்டு சிறீமாலே தாவி ஓடினான். சாரடியலும் அதே கணம் பார்த்துவிட்டான். அவன் சுடுவதற்கு ஆயத்தமாகி துப்பாக்கியை எடுத்து கீழும் மேலும் வளம் பார்த்தான். அந்தச் சமயம் பார்த்து சார்ஜண்ட் மஹாட் குறிவைத்து சுட்டான். அவன் துப்பாக்கி குண்டு சாரடியலின் பிருட்டத்தை துளைத்தது. ஆவென்று சாரடியல் கீழே விழுந்து தரையை தழுவினான், ஆனால் சாவை தழுவவில்லை. பயம் என்ற வார்த்தை சிங்களத்துக்கும் தமிழுக்கும் பொது. அதை எழுத்துக்கூட்டி எழுதப் பழகியிருந்தான் சாரடியல், ஆனால் அவனுக்கு பயம் என்றால் என்னவென்று தெரியாது. பொலீஸ் பிடியிலிருந்து பல தடவைகள் தப்பியிருக்கிறான். சிறுவனாய் இருந்தபோது பள்ளிக்கூடத்தில் செல்வந்தர்களுடைய பிள்ளைகளுடன் சேர்ந்து படித்தான். அவர்கள் கழுத்திலும், கைகளிலும் சங்கிலிகள் அந்து பகட்டாக வருவார்கள். இவனைப் படிப்பித்த புத்த குருமார் இவனை முகச்சுழிப்போடு ஏற்றுக் கொண்டார்கள். இவன் தகப்பன் ஒரு வண்டியோட்டி. தாயோ கோப்பி விற்பவள். கூடப்படித்த பிள்ளைகள் இவனை பழிப்பு காட்டி இம்சை செய்வார்கள். இவனுக்கு பின்னால் 'கோப்பி கோப்பி' என்று கத்துவார்கள். ஒரே வழி அவர்களைக் கால்களில் போட்டு மிதிப்பதுதான். அவனுக்கு எப்பொழுதும் கிடைக்காத ஒரு மரியாதை அப்போது கிடைக்கும். கோர்ட் வளாகத்தில் என்றும் இல்லாதமாதிரி சன வெள்ளம் மோதி அடித்தது. சாரடியலைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியுற்றார்கள். அவன் புஜபல பராக்கிரமம் இல்லாத ஒரு சாதாரண வாலிபனாக, சாந்தமான முகத்தோடு காணப்பட்டான். அவனைக் கைது செய்தவர் வெள்ளைக்கார அதிகாரி சாண்டர்ஸ்; வழக்கை விசாரித்தவர் வெள்ளைக்கார நீதிபதி தொம்ஸன். அவருக்கு உதவிய ஜூரர்கள் முழுக்க வெள்ளைக்காரர்கள். அதி வேகமான விசாரணை. கைது செய்த நாளிலிருந்து 15வது நாள் நீதிபதி சாரடியலுக்கு தூக்கு தண்டனை வழங்கினார். தூக்கில் இடுவதற்கு சில நாட்கள் முன்பாக சாரடியல் கத்தோலிக்க மதத்தை தழுவியிருந்தான். கர்த்தரின் ஜெபங்களை இரவு பகலாக மனனம் செய்தான். அவருடைய பெரும் மன்னிப்புக்கு தன்னை தயார்ப் படுத்தினான். 1864 ம் ஆண்டு, மே மாதம் ஏழாம் தேதி அதி காலை தூக்கு தினம். அவனுடைய கத்தோலிக்க பெயர் ஜோசெப். அது அவனுக்கு பிடித்திருந்தது. நல்ல சாவுக்கு இந்தப் பெயர் உத்திரவாதம் என்று பாதிரியார் சொல்லியிருந்தார். காலை உணவை சாப்பிட்டான். மீதியாய் இருந்ததை தன் மறியல் நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்தான். அதுவே அவனுடைய கடைசி கொடை. அவனுடைய தண்டனையை சிறை அதிகாரி வாசித்தபோது மதிப்பு குறையாமல், மௌனமாக செவி மடுத்தான். எதிர்பாராத தருணத்தில் முழங்காலில் இருந்து மன்னிப்புக் கோரினான். தூக்கு மேடையில் அவனை ஏற்றினார்கள். அவனுடைய கால்களும், கைகளும் கட்டப்பட்டிருந்தன. 'இந்தக் கயிறுகள் தங்கச் சங்கிலிகளாக மாறட்டும்' என்று கூறினான். அங்கே கூடியிருந்த சனங்களைப் பார்த்து 'என் பாவங்களுக்கெல்லாம் இன்று கணக்கு தீர்க்கும் நாள்' என்றான். அவன் முகம் மூடப்பட்டது. ஸ்தோத்திரத்தை ஒருமுறை கூறினான். உட்டுவான்கண்டே ராசாவின் வாழ்க்கை, 32 வயது முடிய இன்னும் சில நாட்களே இருக்கும்போது, தூக்கு மேடையில், அந்த அதிகாலையில், பல சனங்களின் முன்னால் ஒரு முடிவுக்கு வந்தது.

'அவன் முழு ஸ்தோத்திரத்தை ஒரு முறை கூறினான். மறுபடியும் 'பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' என்று ஆரம்பித்தான். அப்பொழுது அடிப் பலகை விலகி, கயிறு கழுத்திலே இறுக்க கீழே விழுந்தான். அந்த ஸ்தோத்திரத்தின் மீதியை அவன் பரமண்டலத்திலே முடித்திருப்பான்' என்று எழுதிவைத்தார் அன்று சாரடியலின் கடைசி நேரங்களில் அவனுடன் கூட இருந்த டஃபோ பாதிரியார்.


பின்குறிப்பு:

The Mountain Lord என்ற புத்தகத்தை எழுதியவர் பெயர் Rienzi Crusz. இவர் இலங்கையைவிட்டு 1965ல் வெளியேறி, இங்கிலாந்திலும் கனடாவிலும் படித்து பட்டம் பெற்று, கனடிய பல்கலைக் கழகம் ஒன்றில் நூலக அதிபராக கடமையாற்றி சமீபத்தில் ஓய்வு பெற்று கனடாவில் வசிக்கிறார். பன்னிரெண்டு ஆங்கில கவிதை தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். இவருடைய கவிதைகள் நேரடியானவை, ஆனால் கனதி மிக்கவை. The Mountain Lord புத்தகத்தில் சாரடியலின் வாழ்க்கையை கடிதங்களாகவும், கட்டுரைகளாகவும், கவிதைகளாகும் தந்திருக்கிறார். கையிலே தூக்கினால் புத்தகத்தை முடித்தபிறகுதான் கீழே வைக்கமுடியும். படிக்கவேண்டிய புத்தகம்.


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sun, 21 Apr 2024 07:08
TamilNet
HASH(0x56249714b590)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sun, 21 Apr 2024 07:08


புதினம்
Sun, 21 Apr 2024 07:08
     இதுவரை:  24787208 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2665 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com