அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 16 arrow செவிவழிக் கதை
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


செவிவழிக் கதை   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: க.முகுந்தன்.  
Tuesday, 03 May 2005

கதைசொல்லலும், கதைகேட்டலும் எம்மரபில் வந்த அருமையான பழக்கம். எங்கள் வாழ்வில் நாம் விட்ட தவறுகளை நாசுக்காக இடித்துரைத்த கதைசொல்லிகளாக எமது பெரியோர், பெற்றோர், ஆசிரியர்கள், சுற்றத்தார், நண்பர்களென.. செவி வழி வந்த கதைகள் ஏராளம். தவிரவும் பொன்மொழிகள், பழமொழிகள், பாடல்கள்.. என்பனவும் எமதான அறவாழ்வை நெறிப்படுத்தின. இக்கதைசொல்லிகளின் மொழியை அப்படியே பதிவு செய்யமுடியாது. இவர்கள் கைதேர்ந்த நடிகர்கள். சிலவேளைகளில் தாமாகவும் கதை புனையக்கூடியவர்கள். இவர்கள் பற்றி தனியாகவே ஆராய வேண்டும். ஆனால் நல்லாசிரியனுக்கு இத்தகைய பண்பு சிறப்பானது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கண்டிப்பு பற்றி பலரும் உரையாடுவதைக் கேட்டிருக்கிறோம். கண்டிப்பதாகச் சொல்லி நாங்களிடும் கோபக்கார சினிமாத்தன வேடத்தை நினைத்தால் சிரிப்புதான் மிஞ்சும். நறுக்கென நாலு வார்த்தை கூறும் கண்டிப்பின் பாரத்தைச் சுமந்தவர்களல்வா நாம்.

நான் பதின்பருவப்பிராயத்தில் இருந்தபோது ஒருநாள், எனது தந்தை கேட்டார்
“வைத்தியரிடம் யார் செல்வார்?”
“நோயாளி”
“சட்டத்தரணியிடம் யார் செல்வார்?”
“குற்றவாளி அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவர்”
“சோதிடரிடம் யார் செல்வார்?”
“..!..” பதில் தெரியாமல் நான் முழிக்கிறேன்.
“முயற்சியில் தோல்விகண்டவர்கள், முடிவெடுக்கும் ஆற்றலில்லாதவர்கள் அல்லது பலகீனமான தன்னம்பிக்கையுள்ளவர்கள்” அப்பாவின் விளக்கம் எனக்குப் புதிய பார்வையைக் கொடுத்தது. அப்பா தொடர்ந்தார்..
“சாதம் என்றால் என்ன தம்பி? சாதகமாக்கிக் கொள்வது அதாவது நிலையை அனுசரித்து(சாதமாக) வாழ உந்துதல் அளிப்பது. இதனால்தான் சாதகம் எனப் பெயர் வந்தது. இதுமட்டுமல்ல செல்லாடல்திறன் அதாவது பேச்சுவன்மை இந்தச் சோதிடர்களுக்கு முக்கியமானது.”

இங்கே சொல்லாடல் தொடர்பாக என் தந்தை வழியில் கேட்ட கதையொன்று பதிவாகிறது. சிலவேளையில் இக்கதை வேறோர் புதினத்தில் பதிவுற்றிருக்கவும் கூடும்.

புகலிட வாழ்வில் வந்தொதுங்கிய நாம் சிந்திப்பதற்கும், செயற்படுவதற்கும் பணிகள் பலவுள்ளன. நம்மை நாமே ஆளுகைப்படுத்தும் மனமகிழ் மன்றங்கள் இன்றைய தேவையாகின்றன. தனி, கூட்டு ஆளுகையை மேம்படுத்தும் மகிழ்வூட்டு நிகழ்வுகளை ஒழுங்கமைப்பது இந்த இயந்திர வாழ்வோட்டப் போராட்டத்தில் வெற்றியடைய அவசியமானது. இதற்காக இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும், பற்றாளர்களும், தன்னார்வத் தாராளர்களும் கூட்டாக உழைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

 

செவிவழிக்கதை

சோதிடரும் இராசாவும்


ஓர் ஊரில் சோதிடப்பிரியரான இராசா வாழ்ந்து வந்தார். இவரது விருப்பறிந்த சோதிடர்கள் நாளாந்தம் அரண்மனைக்கு வந்து பரிசுகள் பெற்றுச்செல்வது வழக்கம். மூப்படைந்த இராசா ஒரு நாள் இறந்துபோனார். பட்டத்து இளவரசன் பதவியேற்கிறான். இவன் துடிப்பானவன். மந்திரிசபையில் மாற்றம் ஏற்படுமோவென பதவியிலிருப்போர் அச்சமடைந்தனர். ஆனாலும் இராச சோதிடர்கள் கவலைகொள்ளவில்லை.

புதியவர் பதவியேற்றபின் வழமைபோல் தலைமைச் சோதிடர் பதவியேற்பு. பிறப்பு தொடர்பான இராசாவின் சாதகக்கணிப்பை அரசபை நிகழ்வில் அவர் வெளிப்படுத்தினார்.
“நல்ல பாக்கியவனாக வாழ்வார். நாட்டுமக்கள் மகிழ்வுற்றிருக்க இவர் பாடுபடுவார். ஆனாலும் ஒரு குறை இவரது சாதகத்தில் இருக்கிறது.” என்றவாறு நிதானித்தார் தலைமைச் சோதிடர்;.

“எதுவென்றாலும் கூறும்” அரசர் ஆவலுடன்

“அரச சாதகப்படி, இவரது கண்முன்னாலேயே இவரது குடும்பம் அழியும்”

வெகுண்டெழுந்தார் இராசா. “யாரங்கே இவனைப்பிடித்து பாதாளச் சிறையில் அடையுங்கள்” கட்டளையில் கனல் பறந்தது.

பரம்பரைக்கே சாதகம் சொன்ன மூத்த தலைமைச் சோதிடருக்கு நிகழ்ந்த கதிகண்டு அவை அரண்டுபோனது. திடீரென சோதிடர்மீது நம்பிக்கையை இழந்த அரசபீடத்தைக் கண்டு வெதும்பியவாறு வெட்கித் தலைகுனிந்தது சோதிடர் குழாம்.  தமது எதிர்காலக் கனவின் சிதைவை எண்ணி அழுதனர் சிலர்.

மந்திரிகள் கூடி ஆலோசித்தனர். இறுதியில் சாதகக்கணிப்பில் தவறிழைக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற முடிவு மேலோங்கியது. இதை ஆராய சோதிட நிபுணர் குழு நியமிக்கப்பட்டு மூன்று மாத அவகாசமும் கொடுக்கப்பட்டது.

தலைதப்பியது தம்பிரான் புண்ணியமென சில சோதிடர்கள் ஊரைவிட்டு வெளியேறினர். நகர் சோபை இழந்து, சந்திப்புகளில் கூடுவோர் மத்தியில் கிலேசமும், மெதுவாகப்பேசும் பழக்கமும் குடிகொண்டன.

நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்படும் நாள் வந்தது. அரச சபை கூடியது.  சோதிட நிபுணர்குழுவின் தலைவர் அறிக்கையை வாசித்தார்.
கிரகங்களின் நிலைபற்றிய விபரணம் முதற்பகுதியில் இடம்பெற்றது. ஆவலுடன் எதிர்பார்த்த பலன் கூறும் இரண்டாம் பகுதியைத் தொடர்ந்தார் தலைமை சோதிட நிபுணர். “….. இளவரசரின் கண்முன்னாலேயே இவரது வம்சமிழப்பேற்படும் -என்பது இவரது சாதகத்திலுள்ள பெரிய குற்றம்..” மிகுதியைக் கேட்காமமேயே வெகுண்டெழுந்த இராசா “யாரங்கே நாட்டிலுள்ள சோதிடர்களெல்லோரையும் சிறையில் அடையுங்கள்!” உத்தரவு பறக்க காவலாளிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர்.

புதிய நிலையை உணர்ந்து பக்கத்தூர்களில் இருந்த சோதிடர்களும் ஓடிவிட்டனர். நகரின் இயல்பு வாழ்க்கை திடீரென மாற்றமுற்றதால் நகர் சோபை இழந்தது. இதனை மீட்க மந்திரிகள் தொடர் ஆலோசனைகள் செய்தும் வழி கிட்டவில்லை.

இவ்வாறாக இரண்டு ஆண்டுகள் கழிந்தன. ஒரு நாள், மக்கள் கூடிக்கூடிக் கதைத்தனர். ஒரு வித்தியாசமான வெளியூரான் அவ்வூருக்கு வந்தான். இவன் தன்னைச் சோதிடன் எனக்கூறியதே மக்கள் குழுமிக் கதைத்ததற்குக் காரணம். மீண்டும் ஊர் களைகட்டத் தொடங்கியது. வதிந்திகளும், ஊகங்களும் பரவத்தொடங்கின. மந்திரிமார் உசாரானார்கள். அவனை அழைத்து விசாரித்ததில் அவன் சோதிடன் என்பது உறுதியாயிற்று. தகவல் இராசாவுக்கு எட்டியது. காலம் கொடுத்த இடைவெளி இராசாவை நெகிழச்செய்திருந்தது போலும், அவரும் சாதகம் பார்க்க ஒப்புக்கொண்டார். ஆனால், ஒரு நிபந்தனையை விதித்தார். ‘தவறாகப் பலன் சொன்னால் மரணதண்டனை வழங்கப்படும்!’ என்பதே அந்த நிபந்தனை.

நிபந்தனையை ஏற்றுக்கொண்ட புதியவன், ஒரு வாரகால அவகாசமும், இராச பரம்பரை தொடர்பான முழுமையான தகவல்களும், தங்குவகற்கு தனிமையான ஓரிடமும் கேட்டான். அரச சபை ஏற்றுக்கொண்டது. புலன் கூறும் நாளும் தீர்மானமாயிற்று. ஊரெல்லாம் இவன் பேச்சுதான். இவனது துணிச்சலை பலரும் மெச்சினர். சிலர் இவன் மேல் பரிதாபம் கொண்டனர். சிலரோ விநோதமாக எண்ணி எள்ளி நகையாடியினர்.


குறிப்பிட்டதினம் வந்தது. ஊரே அரண்மனை வளாகத்தில் கூடியது. மந்திரிகள் புடைசூழ இராசா தனக்கான சிம்மாசனத்தில் வீற்றிருக்க, அவர் எதிரில் பிரேத்தியேகமாகப் போடப்பட்ட விசேட ஆசனத்தில் ஓலைக்கட்டுகளுடன் புதியவன் அமர்ந்திருந்தான்.

பலன் கூறுவதற்கான வேளைவந்ததும், விசேட மணி ஒலித்தது. ஊசி விழுந்தால் ஒலிகேட்குமளவுக்கு அமைதி. புதியவன் எழுந்து நின்றுகொண்டு பலனைச் சொல்லத் தொடங்கினான். அவனது கணீரென்ற குரல் அனைவரையும் வசீகரித்தது.

“மன்னா! இப்படியொரு சாதகத்தை நான் என் வாழ்நாளில் பார்த்ததேயில்லை. என்னே அருமையான சாதகம். என்னே வீரியமான சாதகம். போர் பல வென்று மிக நீண்ட ஆட்சியை வழங்கப்போகும் மன்னனல்லவா நீ! உன்னால் நாட்டுமக்கள் வசதிகள் பல பெற்று வாழப்போகிறார்கள்…”…
“இது மட்டுமல்ல உனக்கு மகா ஆயுள் இராசயோகம் இருக்கிறது. அதாவது உனது குடும்பத்தில் நீ மட்டும்தான் மிக மிக நீண்ட ஆயுளுடன் நீடுழி வாழ்வாய்!!”…

மன்னன் ஓடிவந்து ஆரத்தழுவினான். சபை எழுந்து நின்று ஆரவாரித்தது. நெகிழ்ந்தது அவை.
“நீ என்னவேண்டுமாயினும் கேள் தருகிறேன்!” மன்னன் வாக்குக் கொடுத்தான்.

புதியவன் யோசித்தான். “நான் கேட்பதைத் தரமுடியுமா?” தயக்கத்துடன்..
“என்ன தயக்கம் சோதிடரே, நீர்தான் என் சபையின் சோதிடர், நீர் எதை வேண்டுமாயினும் கேட்கலாம்.” மன்னர் மகிழ்வுற்றுள்ளதைக் கண்ட மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

“சரி, கேட்கிறேன்!” என்று ஒப்புக்கொண்ட புதியவன் மூச்சை ஒரு முறை நிதானமாக இழுத்து விட்டுத் தொடர்ந்தான்;.
“மன்னா, சிறையிலடைபட்டுள்ள சோதிடர்களை விடுவிக்க வேண்டும்” என மிக்க தயக்கத்துடன் தெரிவிக்க...

“ப்பூ இவ்வளவுதானா?..”  வெடிச்சிரிபுடன் இராசா சிரிக்கிறார். பின் நிதானித்தவராக ஆணையைப் பிறப்பிக்கிறார், “அனைவரையும் உடனேயே விடுவிக்கிறேன்”

மகிழ்வுடன் சபை கலைகிறது.

மாலையில், விடுவிக்கப்பட்ட சோதிடர் குழாம் புதியவருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இராப்போசன விருந்துக்கு ஏற்பாடு செய்தது. இதுமட்டுமல்லாது இவரையே தமக்கான தலைமையை ஏற்கக்கோருவதென்றும் முடிவெடுத்தது.

விருந்தில் எல்லோரும் மகிழ்வோடு கலந்துகொண்டனர். பின்னர் கலந்துரையாடல் தொடங்கியது. பலரும் புதியவரின் சோதிட நுடப்பத்தை அறிவதிலேயே நாட்டம் காட்டினர். ஆனால், புதியவர் அலட்டிக்கொள்ளாது மகிழ்வோடு அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தார். ஆனாலும் கோரிக்கை வலுப்பெற்றதால் புதியவர் தன் ஆற்றல் தொடர்பாக விளக்கமளிக்க நிர்ப்பந்தமானார்.

“அப்படியொன்றும் நான் பெரிதாகக் கண்டுபிடிக்கவில்லையே! நீங்கள் சொன்னதையே நானும் சொல்லியிருக்கிறேன். நானும் உங்களைப் போன்ற ஒருவன்தான்!
“நீங்கள், ‘இராசாவின் கண்முன்னாலேயே அவர் பரம்பரை அழியும்’ என்றீர்கள்
“நான், ‘இராசாவுக்கு மிக நீண்ட ஆயுள் இராசயோகமுண்டு என்றேன். அதாவது அவரது பரம்பரையில் இவர்மட்டும் மிக நீண்ட ஆயுளுடன் வாழ்வார்’ என்றேன்
“இவ்விரு கூற்றுகளுக்குமிடையில் என்ன வித்தியாசத்தைக் காண்கிறீர்கள்?

“நண்பர்களே!, நமக்கு முக்கியமானது நாவன்மை. நாம் சொல்லும் வார்த்தைகளால் ஊரே அதிரும். ஆக நாம் பொருத்தமான வார்த்தைகளைக் கொண்டே உரிய பலனைச் சொல்ல வேண்டும்.”

புதிய பாடம் கற்ற மாணவர் போல் அமர்ந்திருந்தது சோதிடர் குளாம்.


 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 11:03
TamilNet
HASH(0x559bbbb3b8b0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 11:03


புதினம்
Thu, 28 Mar 2024 11:03
















     இதுவரை:  24712185 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5502 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com