அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 02 May 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow நிலக்கிளி arrow நிலக்கிளி அத்தியாயம் -19
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


நிலக்கிளி அத்தியாயம் -19   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Saturday, 28 May 2005

எருமைகளை மீண்டும் விலக்கிக் கொண்டு குமுளமுனைக்குச் செல்லும் பாதையில் அவர்கள் இறங்கும்போது, நன்றாக இருண்டு போயிருந்தது. வைகாசிமாத வளர்பிறை நாட்களாதலால் வானம் நிர்மலமாக இருந்தது. ஆங்காங்கு விண்மீன்கள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன.
ஏறக்குறைய அரைமைல் தூரம் அவர்கள் நடந்திருப்பார்கள். குளக்கட்டிலிருந்து ஆரம்பிக்கும் அந்தப் பாதையை ஒட்டியவாறே அந்த வாய்க்காலும்  சென்றது. அந்த வாய்க்காலின் ஓரமாகச் சென்று, இடதுபுறமிருந்த காட்டைப் பார்த்தான் கதிராமன். வாய்க்காலுக்கும் பாதைக்கும் வலதுபுறத்தே வயல்வெளி விரிந்து கிடந்தது. இடப்பக்கத்தில், இருண்டகாடு வாய்க்காலின் ஓரம்வரை படர்ந்திருந்தது.
எந்த இடம் குடியிருப்புக்குச் சிறந்தது, எது வயலாக்குவதற்கு ஏற்றது என்ற விஷயமெல்லாம் கதிராமனுக்கு மிக நன்றாகத் தெரியும்.
அவன் வாய்க்காலைக் கடந்து அப்பால் இருந்த காட்டை நோக்கிச் சென்றான். நிலவு காலித்துவிட்ட அவ்வேளையில் காடு சந்தடியற்றுக் கிடந்தது. வாய்க்காலில் குளத்துநீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. கதிராமன் காடடோரமாக இருந்த ஒரு மேட்டில் ஏறி, பெரியதொரு மரத்தின்கீழ் தலைச்சுமையை இறக்கிவிட்டு, பின்னாலேயே வந்த பதஞ்சலியின் தலைமேல் இருந்த பெட்டியையும் பக்குவமாக இறக்க உதவினான். பின் கைக்கத்தியின் உதவியுடன் அந்த மரத்தின் அருகிலிருந்த சிறு செடிகளையும், அண்மையிலிருந்த சிறு பற்றைகளையும் மளமளவென்று வெட்டி ஒதுக்கினான். பதஞ்சலி பட்டுப்போனதொரு மரக்கிளையை விளக்குமாறாக உபயோகித்து நிலத்திலிருந்த சருகுகளைக் கூட்டிச் சுத்தமாக்கினாள்.
இன்னமும் இரண்டொரு நாட்களில் முழு நிலாவாகப் போகும் வளர்பிறைச் சந்திரன் அந்தப் பிராந்தியத்தின் மேல்வரும் வேளையில், கதிராமன் அந்த மரத்திற்குச் சற்றுத்தள்ளி சுள்ளிகளைக் கொண்டு ஒரு தீவறை மூட்டினான். சடபுடவெனச் சத்தமிட்டுக்கொண்டு வளர்ந்த தீயின் ஒளியில் பதஞ்சலி தான் கூட்டித் துப்பரவுசெய்த இடத்தில் பாயை விரித்துவிட்டு, கொண்டுவந்த பொருட்களை ஒரு பக்கமாக எடுத்து வைத்தாள். நெருப்பை மூட்டிவிட்டு எழுந்து நின்று சுற்றுப்புறத்தை ஒருதடவை கூர்ந்து கவனித்த கதிராமன் திருப்தி அடைந்தவனாக வாய்க்காலுக்குப் போய்க் கைகாலைக் கழுவிக்கொண்டு வந்தான்.
முழுகிய கூந்தலை அள்ளிமுடிந்து அடக்கமாக உட்கார்ந்து பதஞ்சலி தனக்குப் பரிமாறுவதைக் கதிராமன் கண்கொட்டாமல் பார்த்தான். அடிக்கடி நாணத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்த அவளுடைய அகன்ற விழிகளில் அங்கே எரிந்து கொண்டிருந்த நெருப்பின் ஒளி பளபளத்தது. நீண்டு வளர்ந்து செழுமையாக இருந்த அவளுடைய விரல்களும், கைகளும் அவள் பரிமாறுகையில் ஏதோ அபிநயம் பிடிப்பதுபோற் தோன்றின. நேரம் ஒரு உணர்ச்சியைப் பிரதிபலித்த அவளுடைய முகத்தை ஆசையுடன் பார்த்திருந்த கதிராமனை நோக்கி, 'சாப்பிடுங்கோவன்!" என்று அவள் செல்லமாகக் கடிந்து கொண்டாள்.
கதிராமன் ஆசையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வாழ்க்கையில் உள்ள சின்ன விஷயங்களையும் சுவைத்து அனுபவிக்கத் தெரிந்த அவன் அந்நிலையிலும் அவள் படைத்த உணவை மிகவும் இரசித்துச் சாப்பிட்டான். அவனுடைய கருமையான கட்டுடலையும், முகத்தில் அரும்பியிருந்த இளந்தாடியையும் கள்ளமாகப் பார்த்தவாறே அவனுக்கு மேலும் பரிமாறினாள் பதஞ்சலி. அவன் சாப்பிட்டு முடிந்ததும்,தண்ணீரை எடுத்து அவன் கைகளுக்கு ஊற்றித் தானே அவன் கைகளைக் கழுவினாள். அவளுடைய மென்மையான விரல்களின் ஸ்பரிசம் அவனுள் புதுமையானதொரு ஒணர்வை ஏற்படுத்தியது. இறுகப்பற்றிய அவனுடைய விரல்களை மெல்ல விடுவித்துக் கொண்ட பதஞ்சலி அவன் சாப்பிட்ட தட்டிலேயே தானும் சாப்பிட்டுவிட்டு எழுந்தாள்.
கதிராமன் கைத்தாங்கலாகப் பாயில் படுத்தபடி பதஞ்சலியையே பார்த்துக் கொண்டிருந்தான். வாய்க்காலில் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்த அவள் அடிக்கொரு தடவை அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டாள். அவர்களிடையே வெகுநேரமாகப் பேச்சுவார்த்தை எதுவும் இல்லாமலிருந்தது. காட்டிலே தன்னிச்சையாக வாழும் மலைப்புறா ஜோடிகளைப்போல் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட பார்வையிலேயே ஆயிரம் அர்த்தங்களைப் பரிமாறிக் கொண்டனர்.
எல்லா அலுவல்களையும் முடித்துக்கொண்டு வந்த பதஞ்சலி, அவனருகில் உட்கார்ந்து புகையிலையை எடுத்துச் சுருட்டொன்று சுற்றி அவனுக்குக் கொடுத்தாள். இத்தனை பக்குவமான பணிவிடையைக் கதிராமன் என்றுமே அனுபவித்ததில்லை. அவளுடைய கரத்தை அவன் மெல்லப் பிடித்து இழுத்தபோது, அவனுடைய நெஞ்சோடு உரிமையுடன் சாய்ந்து கொண்டாள் பதஞ்சலி.
அவர்களுக்கு மேலே பெருமரம் நிலவுக்குக் குடை பிடித்தது. எங்கேயோ பிறந்த சின்ன நீரோடையொன்று கலகலவென்று சிரித்தபடியே ஆடிவந்து, இருண்ட காட்டின் மத்தியில் ஆழமும் அமைதியுமாய்க் கிடந்ததோர் நீர்மடுவில் விழுந்து தழுவிச் சங்கமித்தது.


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 02 May 2024 06:28
TamilNet
HASH(0x558b6b0694f8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 02 May 2024 06:30


புதினம்
Thu, 02 May 2024 06:30
















     இதுவரை:  24852921 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2407 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com