அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 20 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 17 arrow பூபாள இராகங்கள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பூபாள இராகங்கள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: என்.செல்வராஜா  
Thursday, 09 June 2005
பக்கம் 3 of 3

3.

2004ம் ஆண்டு முதல் படைப்பிலக்கியத்தையும் தமது நிகழ்ச்சிநிரலில் சேர்த்துக்கொண்டு விட்டார்கள் என்று நம்பமுடிகின்றது. இலண்டன் "பூபாள ராகங்கள் 2004" விழாக் குழுவும், கொழும்பு தினக்குரல் பத்திரிகையும் இணைந்து உலகளாவிய ரீதியில் நடாத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்து குவிந்த 232 சிறுகதைகளில் இலங்கையிலிருந்து 222 கதைகளும் உலகின் ஏனைய பகதிகளிலிருந்து 10 கதைகளும் இடம்பெற்றுள்ளன. இப்போட்டியில் 139 பெண் படைப்பாளிகளும் 94 ஆண் படைப்பாளிகளும் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.

பூபாள ராகங்கள் சிறுகதைத்தொகுதி 2004 என்ற இத்தொகுப்பினுள் 13 எழுத்தாளர்களின் ஆக்கங்கள் அமைந்திருப்பதால் 13 கோணங்களில் சிறுகதைகளை வாசகர்களால் உள்வாங்க முடிகின்றது. வேறுபட்ட எண்ணங்கள், அனுபவங்கள், உணர்வுகள், மொழிவளம், எழுத்து வளம், பிரதேச வழக்கு என்பன இங்கு நிறைந்திருக்கின்றன. அனுபவ எழுத்தாளர்கள், அறிமுக எழுத்தாளர்கள் என்று தரவேறுபாடின்றி, கலந்து ஓர் கதம்பமாக இத்தொகுப்பில் மணம்பரப்புகின்றார்கள்.

பூபாள ராகங்கள் சிறுகதைத் தொகுதி 2004 ஒழுங்குசெய்த இந்தச் சிறுகதைப் போட்டியில் முதலாம் பரிசு அனுபவ எழுத்தாளர் சோ.ராமேஸ்வரன் அவர்களுக்கும், இரண்டாம் பரிசு புலொலியூர் க. சதாசிவம் அவர்களுக்கும், மூன்றாம் பரிசு சாரங்கா என்ற புனைபெயரினுள் மறைந்திருக்கும் குணாளினி தயானந்தன் அவர்களுக்கும் கிடைத்துள்ளன.

ஆறதல் பரிசுகள், வைத்திய கலாநிதி ச. முருகானந்தன், கனகசபை தேவகடாட்சம், சிவனு மனோகரன், வளவை வளவன் மா.செல்லத்தம்பி, நீ.பி.அருளானந்தம், விக்னராஜா சிவகுமாரி, வெள்ளத்தம்பி தவராஜா ஆகியோருடன் பாத்திமா இன்சியா மசூர், மு.பஷீர், எம்.எஸ்.அமானுல்லா ஆகிய மூன்ற முஸ்லிம் எழுத்தாளர்களுக்கும் கிடைத்துள்ளது.

இரண்டாம் பரிசுபெற்ற புலோலியூர் க. சதாசிவம், தான் பரிசு பெற்றிருந்தமையை அறிந்திருந்த போதிலும் அதனைப் பெற்றுக்கொள்ளும் முன்னரே காலமாகி விட்டமை வருத்தத்துக்குரிய செய்தியாக உள்ளது. புலோலியூர் என்றதுமே நமது நினைவுக்கு வருபவர் சதாசிவம் என்ற பண்பட்ட எழுத்தாளராவார். வைத்தியப் பணியில் ஈடுபட்ட இவர், நாவலுக்காக இலங்கைத் தேசிய சாகித்திய விருதினை இரு தடவைகள் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஏழு நூல்களை இவர் எழுதி வெளியிட்டுள்ளார். அமரர் புலோலியூர் சதாசிவம் பற்றி பின்பொரு இலக்கியத்தகவல் திரட்டில் இவர் பற்றிய விரிவான தகவல்களை திரட்டித் தரவிருக்கின்றேன்.

இனி பூபாள ராகங்கள் சிறுகதைத்தொகுதி 2004 என்ற இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகள் பற்றிய கண்ணோட்டத்தைச் சொலுத்துவோம்.

புலம்பெயர்ந்து, அந்நியச் சூழலில் வாழும் தமிழர் வாழ்வை விமர்சனம் செய்வதாக முதற்பரிசு பெற்ற கொழும்பு, சோ.ராமேஸ்வரனின் முகவரியைத் தேடுகிறார்கள் சிறுகதை அமைந்துள்ளது. புலோலியூர் க. சதாசிவம் அவர்களின் அகலிகைக்கு சாபவிமோசனம் என்ற கதையில் புராண இதிகாசக் கருப்பொருளை நவீன கதைகளில் பயன்படுத்தும் உத்தி காணப்படுகின்றது. இது இத்தொகுதியில் இரண்டாவது பரிசு பெற்ற கதை.

பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு, அவலப்படும் வயோதிபத் தம்பதியின் மன உளைச்சல்களை காற்றிலாடும் வெறுங்கூடுகள் என்ற சிறுகதை தருகின்றது. இக்கதை சாரங்கா அவர்களால் எழுதப்பட்டு 3ம் பரிசு பெற்றுள்ளது.

ஆறதல் பரிசு பெற்ற கதைகளில் நாட்டின் போர்ச்சூழலால் சாதாரண மக்கள் எதிர்நோக்கும் அவலங்களைச் சொல்வதாக எம்.எஸ்.அமானுல்லாவின் ஒற்றை மாட்டு வண்டி அமைகின்றது. மு.பஷீர் அவர்களின் நிஜங்களின் வலியும் நாட்டின் போர்ச்சூழலால் சாதாரண மக்கள் எதிர்நோக்கும் அவலங்களைச் சொல்வதாக அமைந்துள்ளது. தாய்மையோடு தொடர்புடையதாக பாத்திமா இன்சியா மசூர் அவர்களின் ஒருபிடி சோறு, நீ.பி.அருளானந்தம் அவர்களின் அம்மாவின் இரக்கம் ஆகிய இரு சிறுகதைகளும் அமைந்துள்ளன. செவிவழிக் கதைகள், கர்ணபரம்பரைக் கதைகள் என வழங்கும் நாட்டார் வழக்கியல் கதையொன்றின் அடிப்படையிலமைந்ததாக கனகசபை தேவகடாட்சத்தின் அம்மான் என் கண் என்ற கதை அமைந்துள்ளது. தமிழக எழுத்தாளர் சுஜாதாவின் விஞ்ஞானக்கதைகள் பாணியில் அமைந்ததாக விக்னராஜா சிவகுமாரியின் மாமனிதம் என்ற கதை அமைகின்றது. மனித வளர்ச்சிப் படிமுறையில் மேலும் கூர்ப்படைந்த ஒரு மானிட சமூகம் பற்றியதாகக் கதை விரிகின்றது.

வைத்திய கலாநிதி அ.ச.முருகானந்தன் அவர்கள் எழுதிய சின்னச் சின்னத் தூறல்கள், வளவை வளவன் அவர்களின் உறவுகள், ஆகியவை குடும்பச் சூழலில் அன்புக்கு ஆட்பட்டு ஆசாபாசங்களில் மூழ்கும் சாதாரண பெண்கள் பற்றியதாக அமைந்துள்ளன. சிவனு மனோகரனின் விலங்கிடப்பட்ட விலாசங்கள் என்ற கதை சற்று வித்தியாசமாக பெண்ணியச் சிந்தனைகளைக் கொண்ட ஒரு எழுத்தாளரின் மனப்பதிவுகளாகவும் ஆதங்கங்களாகவும் அமைந்துள்ளன. ஆண் எழுத்தாளரின் பெண்ணியப்பார்வை என்னும்போது கதையின் கரு சற்று வித்தியாசமாக உள்ளதை உணரமுடிகின்றது. இத்தொகுப்பில் மேற்கண்ட மூன்று கதைகளும் பெண்ணியம் தொடர்பான சிந்தனைப்போக்கைக் கொண்டனவாக அமைந்துள்ளன. இத்தொகுப்பிலுள்ள வெள்ளத்தம்பி தவராஜாவின் ஆடுகள் ஒரு உருவகக் கதையாகும்.

இத்தொகுப்பு முயற்சி கொழும்புத் தினசரிப் பத்திரிகையான தினக்குரல் புதினப்பத்திரிகையுடன் இணைந்து பாரிய ஊடக விளம்பரத்துடன் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனினும் புலத்தில் இருந்து 10பேர் மாத்திரமே பங்குபற்றியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. தமது படைப்பிலக்கிய ஆற்றல்களை பட்டைதீட்டிக்கொண்டு தம்மை வளர்த்து உயர்வு நிலையை அடைய புலத்திலுள்ள எழுத்தாளர்கள் முன்வராதது கவலைக்குரிய விடயமாகும். 232 சிறுகதைகளில் இலங்கையிலிருந்து 222 கதைகள் அனுப்பப்பட்டுள்ளன. உலகின் ஏனைய பகுதிகளிலிருந்து 10 கதைகள் மாத்திரமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பல படைப்பாளிகள், புலம்பெயர்ந்து வந்தபின்னர் சுயம்புநிலையில் தான்தோன்றீஸ்வரர்களாக உருவானவர்கள். இவர்களது படைப்பிலக்கியத் தரம் பற்றிய பரீட்சைகளுக்கு இத்தகைய அமைப்புகள் காலத்திற்குக் காலம் அத்திபூத்தாற் போல அறிமுகப்படுத்தும் போட்டிகள் நல்லதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தரும். இவ்வாய்ப்புகளை உரியகாலத்தில் பயன்படுத்தித் தமது படைப்பிலக்கிய ஆற்றலைப் பட்டைதீட்டிக்கொள்ள புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்கள் முன்வரவேண்டும்.

© N.Selvarajah. Prepared for Kalai Kalasam, IBC Tamil 04.03.2005




மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 20 Apr 2024 09:53
TamilNet
HASH(0x558b3fc24630)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sat, 20 Apr 2024 09:53


புதினம்
Sat, 20 Apr 2024 09:53
















     இதுவரை:  24784920 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2480 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com