அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 15 July 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 18 arrow அமானுஷ சாட்சியங்கள்..
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அமானுஷ சாட்சியங்கள்..   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சுமதி ரூபன்  
Saturday, 02 July 2005

"ஏதோ ஒரு வெளியில் விடுபட்டவளாய் கைகளை அகல விரித்துப் பறந்து கொண்டிருக்கிறேன். இது சுதந்திரத்தின் குறியீடு அல்ல இருக்கைக்கும் இறத்தலுக்குமான போராட்டம். வானுக்கும் மண்ணுக்குமான இடைவெளி. ஆரம்பத்திற்கும் முடிவுக்குமான தத்தளிப்பு. சிந்தனைகள் மாறிமாறி மோதி என்னைக் குழப்பதிற்குள் தள்ளி விட.. வெறுமனே பறந்த வண்ணம் நான்.."

என்ர பெயர் நளாயினி. எல்லாரும் என்னை நளா நளா எண்டு கூப்பிடுவீனம். வயது 18. உயரம் 5’6.5”. கனேடிய உடுப்பு சைஸ் 8க்குள்ள என்ர உடம்பு கச்சிதமாகப் புகுந்து கொள்ளும். நீண்ட தலைமயிரை தூக்கி துணி ரப்பரால இறுக்கித் தொங்க விட்டிருப்பன். புதுசா ஏதாவது அலங்காரம் செய்ய ஆசை இருக்கு, கூட கொஞ்சம் தயக்கமும் இருக்கு. கனடா வந்து மூன்று மாதங்கள். முழுநேரப் படிப்பு, பகுதி நேர வேலை எண்டு நேரத்தை ஓடிப் பிடிச்சுக் கொண்டிருக்கிறன். என்னைக் காசு கட்டிக் கனடாவிற்கு கூப்பிட்ட அண்ணாவுக்கும் அக்காவுக்கும் காசைக் கெதியாத் திருப்பிக் குடுத்து விடவேணும் எண்ட வெறி எனக்குள்ள. (அவர்கள் கேட்காவிட்டாலும்)

அக்கான்ர ஒப்பாரி கேட்டு முடிய அண்ணர் எனக்கு போன் அடிச்சு தன்மையா நிதானமா
“என்ன நளா இது.. ஏன் இப்பிடியெல்லாம் செய்யிறா.. அக்கா உனக்காக எவ்வளவு எல்லாம் செய்திருக்கிறா” நான் குறுக்கிட்டன்
“அப்ப நான் என்ன செய்ய? உன்னோட வந்து இருக்கட்டே”.
“என்னடி விளக்கமில்லாமல் கதைக்கிறாய் என்ர வீட்டில எங்க இடமிருக்கு நானே என்ன செய்யிறதெண்டு தெரியாமல்..” நான் திரும்பவும் குறுக்கிட்டன்.
“அப்ப என்ன அண்ணா செய்யிறது? வேலை செய்யிறன் தானே தனியப் போய் எங்கையாவது இருக்கட்..”
“என்னடி எங்கள எல்லாம் அவமானப்படுத்தவெண்டே அங்கையிருந்து இஞ்ச வெளிக்கிட்டு வந்திருக்கிறா.. நீ வரமுதல் எவ்வளவு நிம்மதியா, சந்தோஷமா நானும் அக்காவும் இருந்தனாங்கள் தெரியுமே? இப்ப நீ வந்தாப் பிறகு எப்ப பாத்தாலும் பிரச்சனை. எங்கள நிம்மதியா இருக்க விட மாட்டியே” குரல் உயந்தது.
“நானென்னண்ண பொய்யே சொல்லுறன்”
குரலின் கடினம் கரைய கனிவு கலந்து “இல்லை நளா.. நான் அப்பிடிச் சொல்லேலை ஆம்பிளைகள் கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் இருப்பினம்..இஞ்சத்தையான் ஆக்கள மாதிரி உடுப்புகளைக் கண்டபடி போடாத, கொஞ்ச நாளைக்குப் பல்லக் கடிச்சுக் கொண்டு கண்டும் காணத மாதிரி இரு அம்மாவும், அப்பாவும் கெதியா வந்திடுவீனம் பிறகு எல்லாம் ஓ.கேயாயிடும். அதுக்கிடேலை சின்ன விஷயத்தைப் பெரிசாக்கி எங்கட குடும்ப மானத்தைக் கப்பலேத்திப் போடாத”
“சரி அண்ண அப்பிடியெண்டா ஒண்டு செய்வமே?”
“சொல்லம்மா..”
“இல்லையண்ண உனக்கும் பதின்மூண்டு வயசில பொம்பிளப்பிள்ளை பெஞ்சாதி எல்லாம் இருக்கீனம் தானே அவேலில ஒராள கொஞ்ச நாளைக்கு அத்தானோட கொண்டு வந்து விடன் நான் நிம்மதியா இருப்பன்”

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”

எனக்கான சிறை என்னால் வடிவமைக்கப் பட்டது. பல வகை ஆணிகள் பூட்டுக்களால் அறைக்கதவு இறுகிக் கொண்டது. வெளியில் சாப்பிட்டு அறைக்குள் ரீ குடித்து எனக்கான தொலைபேசி எனக்கான தொலைக்காட்சி என்று என்னை நானே அடைத்துக் கொண்டேன்.
அக்கா பிள்ளைகள் கதவைத் தட்டும் “சித்தி சித்தி” எண்டு குரல் கேக்கும். கொடூரமாக எனைக் கொச்சைப் படுத்திச் செல்லும் அக்காளின் குரல். “சரக் சரக்” கெண்ட சப்பாத்துச் சத்தத்துடன் ஆண்மை வீரியத்தைத் தூக்கி நிற்கும் “பெர்பியூம்” வாசனையுடன் நிதானமாய் வேலைக்குச் சென்று திரும்பும் அத்தான் உருவமாய். தன் கணவனின் ஆண்மையில் திருப்தியும் பெருமையும் காணும் அக்காள்.

சம்பளக் காசு வந்தவுடன வாடைக்கும் சாப்பாட்டுக்கும் எண்டு கொஞ்சத்தை அக்காட்டக் குடுத்தாள் நளா
“உன்னைக் கொண்டு உழைப்பிச்சுக் காசு சேக்கத்தானே இஞ்ச கூப்பிட்டனாங்கள் இஞ்ச எங்க சாப்பிடுறா எண்டு சாப்பாட்டுக் காசு தாறாய். உங்களுக்கெல்லாம் கொழுப்படி”
“எனக்குச் சும்மா ஒரு வீட்டில இருக்க விருப்பமில்லை”
“ஓ உங்களுக்கு கனடா வந்தவுடனயே பிளான் பிடிபட்டிட்டுது ஆ.. காலமடி”

வாடைக்காசை மேசையில வைச்சிட்டு நளா போனாள். அது தொடப்படாமல் மேசையில் பல நாட்களாகக் கிடந்தது.

விரிந்து கிடந்த கனேடியக் கரிய வானத்தில் இலைகளைத் தொலைத்த குச்சி மரங்கள் பல் நிற பல்புகளாய்ப் பூத்து வழி காட்ட அத்தான் அவசரமில்லாது காரை ஓட்டினார். நளாவின் கைகளைத் தனக்குள் புதைத்து “அம்மா அப்பா எப்பியெடி இருக்கீனம் அவையளும் வந்திட்டாப் பிரச்சனை தீந்திட்டும்” அக்கா வார்த்தைகளால் குறுக்கிட கண்களை வெளியே அலையவிட்ட நளாவின் கனவில் பரந்து கிடந்தது எதிர்காலம். குளிரும் உடலின் சிறிய உதறல் மகிழ்ச்சி தர அக்கா பிள்ளைகளை இழுத்து மடியில் போட்டாள்.
“நல்லாப் படிக்க வசதியிருக்காம் முடிஞ்சா கொஞ்ச நேரத்துக்கு ஏதாவது வேலையும் செய்தியெண்டா உன்ர செலவுக்கு உதவும் நாங்களும் கெதியா வந்திடுவம்” அம்மாவின் குரல் அடிக்கடி ஒலித்தது.
அண்ணா தூர இருக்கிறார். நளாவின் அனைத்து வேலைகளையும் சிரித்த முகத்தோடு தன் பக்கம் எடுத்துக் கொண்டார் அத்தான். காரில் முன்னால் இருத்தி ‘இமிகிரேஷன்’ பள்ளிக்கூட ‘அட்மிஷன்’ இத்யாதி இத்யாதி. குளிர் காற்றடிக்க காரின் யன்னல் சாத்திய முழங்கை நளாவின் மார்போடு தேய்த்துச் சென்றது. நளா உடலை ஒடுக்கிக் கொண்டாள்.
இரவு கட்டிலில் புரண்டு “ச்சீ அத்தான் அப்பிடிப் பட்டவரில்லை” சமாதானமாய் நித்திரை கொண்டாள். அக்கா வேலையால் வருமுன்னே நளாவும் அத்தானும் சமையல் முடித்து வைத்தார்கள். கைகள் இடறுப்படும் போது “சொறி” என்றவாறு பார்வையைத் தாழ்த்திக் கொண்ட போது நளாவிற்கு நிம்மதியாக இருந்தது. குளிக்கும் போதும் உடை மாற்றும் போதும் கதவோரத்தில் நிழல் ஆடியது. வேலையால் அடிக்கடி வெள்ளண வீட்டுக்கு வரத்தொடங்கிய அத்தானின் பார்வைகள் நிறம் மாறிப் போயிருந்தன. நளா வேலை எடுத்துக் கொண்டாள். பாடசாலை வேலை என்று அக்காவிற்கு முன்னால் சென்று பின்னால் வீட்டிற்கு வரப் பழகிக் கொண்டாள். எல்லாமும் சமாதானமாயிற்று.

பஸ்சிற்கு நிண்டவளை கடந்து சென்ற கார் சிறிது தூரம் போய்ச் சுற்றி வந்து அழைத்தது. மறுக்கும் துணிவின்றி மீண்டும் சமாதானமாகி ஏறிக்கொண்டாள். படிப்பு வேலை பற்றி யதார்த்தமா மிக யதார்த்தமாக வார்த்தைகளை வீசிய படியே பார்வையை தூர ஊடுவ விட்ட அத்தான் மேல் நளாவிற்கு நம்பிக்கையும் மதிப்பும் ‘ஸ்யரிங்கை” மாற்றும் போது நளாவின் துடையை விரல்கள் உரஞ்சிச் செல்லும் வரை இருந்தது. கால்களை இழுத்துக் கொண்டாள். பேச்சுக்கள் தடைப்பட்டது. மௌனம் ஊடுவியது.
வேலைத் தளத்தில் இறக்கி விடும் போது பார்வையில் நிஷ்டூரம்.

இருமி இருமிக் களைத்துப் போன அக்காள் மகளை தன்னோடு அணைத்துக் கதை சொல்லிப் படுக்க வைக்க முனைந்து கொண்டிருந்த நளாவின் அறைக்குள் திடீரென புகுந்த அத்தான்இ மகளின் தலை தடவி “எப்பிடி இருக்கடா” என்றவாறு நளாவின் ஒற்றை மார்பை இறுக்கிப் பிடித்துப் பிசைந்து விலகிச் செல்ல திடுக்கிட்டு உடல் உதற விறைத்துப் போனாள்.

“என்னடி சொல்லுறாய்? என்னடி சொல்லுறாய்? பிள்ளை மாதிரி நினைச்சு எல்லாம் ஓடியோடிச் செய்யிற எங்கட வாழ்க்கையைக் கெடுக்க வந்த பாவியடி நீ. நீ இப்பிடிச் சொன்னனீ எண்டு தெரிஞ்சா மனுசன் துடிதுடிச்சுப் போயிடும். “காட்அட்டாக்” வந்து செத்துப் போயிடும்”

பனி படர்ந்த வெளியில் பஸ்சிற்காகக் காத்திருந்த போது வந்து நின்ற காரைத் துச்சம் செய்து விறைத்து நின்றாள் நளா. கார் மறைந்து போனது.

ஒருநாள் -
பல்கனி கம்பியில் சாய்ந்த படியே சாம்பல் பூத்த இரவில் “செல்” போனில் சிரித்த படி நின்றவனை யாரும் பார்க்காத கணம் ஒன்றில் வேகம் கொண்டு தள்ளி விட்டு வீறிட்டுக் கதறி சாய்ந்து விழும் அவன் உருவம் உடைந்து சிதைய மட்டும் பார்த்துக் கொண்டு நின்றாள் நளா

இன்னுமொரு நாள் -

“பாஸ்ரா” அவியப் போடத் துள்ளிக் குதித்துக் கொதிக்கும் தண்ணீரைப் பாத்திரத்துடன் தூக்கி சுவரோரம் சாய்ந்த படி அவளையே வெறித்து நிற்கும் அவன் முகம் நோக்கி வீசி ஊத்தினாள் நளா

இன்னும் இன்னும் ஒருநாள் -

போத்திலை உடைச்சுத் துகளாக்கி சாப்பாட்டுக்குள் கலந்து கொடுத்தாள் நளா
நாட்கள் நகர்ந்தது இன்னும் இன்னும் பல நாட்கள் கனவுகளில் அவள் தொடர்ந்தாள்..

தொலைக்காட்சியில் வேண்டாததற்கெல்லாம் வெற்றுடம்போடு வந்து போனார்கள் அழகிகள்.
அண்ணியின் முகம் தூக்கிய முகச்சுளிப்பில் மொத்தத்தையும் தெரிந்து கொண்டாள். அண்ணா பார்வையைத் தவிர்த்துக் கொண்டான்.
அம்மா அப்பா வரும் நாளை கணக்கிட்டுக் கணக்கிட்டு நாள்காட்டியில் கட்டம் போட்டாள்.

சோதனைக்காகப் படித்தவற்றை இரைமீட்டு இரைமீட்டு மனதில் நிம்மதியுடன் நித்திரையாகிப் போனவள் கனவில் இப்போதெல்லாம் வெறுமை.

இருப்பிற்கும் இறத்தலுக்குமான இடைவெளியின் ஊஞ்சலாடும் இரவுகளின்இ எண்ணிக்கையைத் தள்ளி விடியும் பொழுது பெருமூச்சாகக் கழியும்.

ஆழ்ந்த நித்திரையில் அவள். மூச்சு சீராக வடிந்து கொண்டிருந்தது. புற அசைவுகள் இம்சிக்காத சமவெளியில் நீச்சலாய்.. ஒலிகள் செவிப்பறையைத் தாக்காத நிசப்தம். தொடைகள் குளிர புழுப்போல் எதுவோ ஊர்ந்து ஊர்ந்து.. வீரிய மூச்சு காதோரம் கூடேற்ற.. பலம் கொண்டு இரு கைகளாலும் தள்ளி உடையை இழுத்து விட்டு.. “அக்கா அக்கா” என்று குரலெடுத்துக் கத்தியவளின் தொண்டை கட்டிப் போயிருந்தது. கதவுகள் அகலத்திறந்து மூடியது.
நடுச்சாமம் சுடு நீரில் அழுதழுது முழுகினாள். நித்திரையற்று இரவைக் கழித்து வெளிச்சம் காணுமுன் உடுத்து கதவை இறுக்கப் பூட்டி வெளியேறினாள். சோதினைப் பேப்பரில் கேள்விகள் நித்திரையற்ற அவள் கண்களுக்குப் புழுவைப்போல் நெழிந்தன. தன் உடலை அருவருப்போடு பார்த்துக் கொண்டாள். கண்களுக்குத் தண்ணீர் தெளித்து முடிந்தவரை பதிலளித்து வெளியே வந்து குளிர்ந்து போன சீமெந்து இருக்கையில் இருந்து சத்தமில்லாது வாய் விட்டழுதாள். இது என்ன விதி? அவளுக்குப் புரியவில்லை.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டும் அறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி”

உறைந்த குளிருக்குள் வாயால் புகை போக்கி போல் மூச்சு விட்டபடி வேகமாகக் கடந்து செல்லும் ஆண்களின் உடல்களில் “அந்த” பகுதியில் அவள் கண்கள் நிலைத்து நின்றது. எல்லா ஆண்களுக்குமே காம வேட்டைக்கு அலைவது போல் துருத்திக்கொண்டு நின்றது “அந்த” இடம்.
வீட்டிற்கு வந்த போது இருட்டிவிட்டிருந்தது. அக்காள் கண்டும் காணாது சமையலில் இருந்தாள். பிள்ளைகள் ரீவியில் மூழ்கிப் போய் இருந்தார்கள். எல்லோரும் தமக்கான வாழ்கையில் லயித்திருந்தார்கள். பூட்டைத் திறந்து அறைக்குள் வந்தாள். உறவுகள் இல்லாத உலகொன்றில் தனித்து விடப்பட்டவள் போல் தவிப்பு. கண்கள் சொருகிச் சொருகி வந்தன. கட்டிலில் சரிந்து கண்களை மூடினாள். அத்தானின் ஆண் வீரியம் கலந்த “பெஃர்பியூம்: வாசனை மூக்கைத் தாக்கியது. திடுக்கிட்டெழுந்தாள். அறையை ஒருமுறை சுற்றிப் பார்த்தான். பொருட்கள் அசையாது அப்படியே இருந்தன. எழும்பி போய் பூட்டைப் பார்த்தாள். இறுக்கமாக இருந்தது. நேற்று அவள் தோய்த்து “ஹீற்ரறில்” காயப்போட்ட அவள் “அண்டவெயார்” “பிரா” இரண்டையும் காணவில்லை. திடுக்கிட்டவளாய் உடுப்பு வைக்கும் லாச்சியைத் திறந்து பார்த்தாள். உள்ளே “அதுகள்” அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தன. நிம்மதிப்பெருமூச்சோடு விரலால் தனது உடைகளை அழைந்தவள் கையோடு ஒட்டிக்கொண்டு வந்தது ஆண்களின் “அண்டவெயார்” ஒன்று
“இல்லை நளா நான் சொல்லுறதைக் கேள்”
“ஐயோ கடவுளே இவளுக்கேன் புத்தி இப்பிடிப் போகுது”
அண்ணாவுக்கு நன்றிக் கடன். தன்னைக் கனடாவுக்கு கூப்பிட்டு விட்ட அத்தானில நன்றிக் கடன். தன்னிலும் பத்து வயசு மூத்த அத்தானை நிமிந்து பாத்துக் கேள்வி கேட்கப் பயம். அக்கா பிள்ளைகள் பற்றிய அங்கலாய்ப்பு. “பொறுத்துக் கொள்ளடி அம்மாஇஅப்பா வரமட்டும்”

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்”

அனைத்தையும் விலத்தி விறைத்துப் பொறுத்துக் கொண்டாள்.
அம்மாஇ அப்பாவும் வந்து விட்டார்கள் இனித் தனியாக ஒரு இடம் பார்த்து மூன்று பேருமாக.. நிம்மதிப் பெருமூச்சு.
வீடு சந்தோஷக் களை கட்டியது. சொந்தங்கள் வந்து போயின. அக்கா அவள் முகம் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினாள். அண்ணா படிப்பைப் பற்றி விசாரித்தான். தன்னையும் கலகலப்பாக்க முனைந்து அத்தான் வேலையால் வீட்டிற்கு வரும் போது மட்டும் அறைக்குள் அடைந்து.
வீடு முட்டச் சனம். சமையல்இ சாப்பாடு ஊர்க்கதைகள் எண்டு நீண்ட ஒரு இரவில் அனைத்தையும் மறந்து போயிருந்த நளாவை “பெடியன் அழுறானடி ஒருக்கா என்னெண்டு பார்” அம்மா சொல்ல பாதியில் விட்ட ஊர்க்கதையைக் கேட்கத் துடிக்கும் அவசரத்தில் “வாறனப்பு” என்ற படியே ஓடி அறைக்கதவைத் திறக்க அரை குறை நித்திரையில் அழும் மகனைத் தட்டி விட்ட படியே தனது சாரத்தைத் தளர்த்தி மறு கையால் புடைத்து நிற்கும் தனது குறியை தடவிய அத்தானின் பசளை படர்ந்த பார்வையைத் தழுவிய நளா போன வேகத்தில் அறையை விட்டோடி தனது அறைக்குள் புகுந்து கொண்டு கதவைப் பூட்டிக் கொண்டாள்.
அம்மாஇ அப்பாவுடன் தனியா இடம் பார்த்து சென்ற பின்னரே மீண்டும் நளா மூச்சு விடத் தொடங்கினாள்.
“என்ன உனக்கும் அக்காக்கும் ஏதும் பிரச்சனையே. ரெண்டு பேரும் முகத்தைத் தூக்கிக் கொண்டு அலையிறியள்” அம்மா கேட்டா
இப்ப நிம்மதியா இருக்கிறன். அத்தானில அம்மாக்கு நிறம்பவே மதிப்பு இருக்கு அதைக் கெடுப்பானேன்.
“ச்சீ ஒண்டுமில்லையம்மா”
படுக்கையில் புரண்ட போது ஒருநாள் அம்மா அப்பாவிடம் சொன்னது நளாவின் காதில் விழுந்தது. “அந்தாளைப் போல ஒரு நல்ல பெடியன் எங்கட நளாக்கும் கிடைச்சிட்டிது எண்டா நிம்மதியா இருக்கும்”
கனேடியச் சட்டம் பெண்களுக்கு எத்தனையோ சலுகைகளைச் செய்து வைத்திருக்கின்றது. பாலியல் துன்புறுத்தல் என்பது இங்கே மிகப் பாரதூரமாக குற்றமாக கணிக்கப்பட்டு குற்றவாளியாக காணப்படுபவருக்கு பல ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது.
இங்கே எனது விட்டுக்குடுப்பு எதற்குள் சேர்த்தி. அக்காள் எண்ட பாசமா? குடும்பமானமா? கடைசிக்காலத்தில் அப்பாஇ அம்மாவை நிம்மதியாக இருக்க விட வேண்டும் என்ற எண்ணமா?
“அக்காவும் பிள்ளைகளும் இப்பதான் வந்திட்டு போகீனம் கொஞ்சம் வெள்ளண வந்திருந்தாச் சந்திச்சிருப்பாய்”
ஒரு சின்ன யோசினைக்குப் பிறகு “அத்தான் வரேலையோ?”
“பின்ன அந்தாள் வராமல்..” பெருமையான சிரிப்பு முகத்தில் வடிய “எனக்கும் அப்பாக்கும் சுவெட்டர் எல்லே கொண்டு வந்தவர் இந்தா உனக்கு ஒரு சொக்லேட் பெட்டி தந்தவர்”
கறுப்பு சொக்லேட்டின் உள்ளிருந்து வெண்நிறத்தில் வழியும் பாணியின் படம் போட்ட பெட்டி அவளிற்கு அருவருப்பூட்ட அம்மாவிற்குத் தெரியாமல் குப்பைத் தொட்டிக்குள் போட்டு விட்டு தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.
அவளின் கனவுகள் இப்போது குரூரத்தைத் தவிர வேறொண்டையும் கொண்டிருப்பதில்லை...

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 15 Jul 2024 20:12
TamilNet
HASH(0x563a371f2808)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 15 Jul 2024 20:12


புதினம்
Mon, 15 Jul 2024 20:12
     இதுவரை:  25364276 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4659 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com