அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 04 October 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 18 arrow ஈழத்தமிழ் அரங்க வரலாறு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஈழத்தமிழ் அரங்க வரலாறு   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பேராசிரியர் கா.சிவத்தம்பி  
Tuesday, 05 July 2005

"என்னில் உள்ள நல்லவைகள் எல்லாம் எனது நண்பர்கள்  மூலமும் நான்  பழகியவர்கள் மூலமும் கிடைத்தவைகள்தான்...”

பேராசிரியர் கா.சிவத்தம்பி 
அவர்களுடனான நேர்காணல்.

(இது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் கூத்தரங்கம் இதழில் வெளிவந்தது. நன்றியுடன் மீள பிரசுரமாகின்றது.)

கேள்வி: ஈழத்தமிழ் அரங்க வரலாற்றிற்கு சாட்சியாக  இருப்பவர்களில் நீங்களும் ஒருவர் உங்களுக்கும் ஈழத்தமிழ்  அரங்கத் துறைக்கும் உள்ள ஈடுபாடு பற்றிக் கூறுங்கள் ?

பதில் : எனக்கு அதிஸ்டவசமாகவோ அல்லது  துரதிஸ்டவசமாகவோ பல துறைகளில் ஈடுபாடு இருந்தது.  அதிலும் நாடகத் துறையில் எனக்கு ஒரு துறையில்தான்  ஈடுபாடு என்று சொல்லமுடியாது. நாடகத்துறையில் எனக்குள்ள  ஈடுபாடு அல்லது அதற்குள் புகுந்தது, ஈர்க்கப்பட்டது பற்றித்  தெடங்குவது, எனது நாடக ஈடுபாடு பற்றிக் கூறுவது  சிக்கலானதாகவோ அல்லது சிக்கலானதிலும் பார்க்க ஒரு நீண்ட  விடயமாகவோ போய்விடும். எனவே நான் இதனை இவ்வாறு  எடுத்துக் கூறலாம் என்று கருதுகிறேன்.

இன்று பிரதானமாக நான் ஒரு இலக்கிய ஆய்வாளனாகவோ,  இலக்கிய வரலாற்று சமூக வரலாற்று ஆய்வாளனாகவோ,  ஆசிரியனாகவோ மாத்திரமே தெரிந்தாலும் நாடகத்துறை பற்றிய  என்னுடைய ஈடுபாடுகள் என்னைப் பொருத்தவரையில்  என்னுடைய ஆளுமை வளர்ச்சியிலும் எனது பல்கலைக்கழக  வாழ்க்கை நிலையிலும்கூட குறிப்பாக பிற்காலத்தில் மிக  முக்கியமான பங்கு வகித்தது என்று கூறலாம். எனக்கும்  நாடகத்துறைக்கும் உள்ள தொடர்பை நான் நான்கு அல்லது  ஐந்து நிலைகளில் வைத்துக் கூறவேண்டும்.

முதலாவது ஒரு நடிகனாக எனக்கு நாடகத்துறையில் ஏற்பட்ட  ஈடுபாடு உண்மையில் நாடகம் பற்றிய எனது முதல் ஈடுபாடும்  அதுதான். அந்த நடிப்புத்துறையிலும் இரண்டு அம்சங்களை நான்  விரிவுபடுத்திக் காட்ட வேண்டும். ஒன்று வானொலித்துறையில்  வானொலி நாடகங்களில் நடித்தது, அந்தநாடகங்களோடு உள்ள  சம்பந்தம். மற்றையது மேடை நாடகங்களோடு உள்ள தொடர்பு.

இரண்டாவது நானொரு நெறியாளனாகத் தொழிற்பட்டமை லேனா  கல்லூரி நாடகமொன்று, அதற்கு மேலே கொழும்பு  பல்கலைக்கழக நாடகங்கள் சிலவற்றை நெறிப்படுத்தியவன்  கருத்துக் கூறியவன் (நாடகத்தை எழுதியவன் எனறு கூற  முடியாது.) நாடகக் கதைகளுக்குப் பொறுப்பாக இருந்தவன் என்ற  வகையிலே ஒரு நெறியாளனாக தயாரிப்பாளனாக இருந்த  இரண்டாவது தன்மை.

மூன்றாவது அது முக்கியமானது கொஞ்சம் வித்தியாசப்பட்டது.  அதுதான் இலங்கைக் கலைக் கழகத்தின் தழிழ்நாடகக் குழுவோடு  எனக்குள்ள தொடர்பு உண்மையில் அதுவும் இரண்டு  நிலைப்பட்டது.
1. பேராசிரியர் வித்தியானந்தன் காலத்து அவர் தலைவராக  இருந்த காலம் முழுவதும் நான் அவருடன் செயலாளராக  இருந்தது.
2. 1974 -1977 இல் நான் தலைவராய் இருந்தது. அதிலும் பார்க்க  முக்கியம் பேராசிரியர் வித்தியானந்தன் நாட்டுக் கூத்து மரபு  அதனையொரு வடக்கு கிழக்கு அடிநிலை வாழ் மக்கள்  நிலையில் மீளுருவாக்க நாடகப் பணிகளில் பலவற்றை  கொழும்பு நிலைப்பட நின்று செய்கின்ற பொறுப்பை நான்  பார்த்தேன்.

நான்காவது அல்லது மூன்றாவதில் இருந்து எழுந்து நின்ற ஒரு  முக்கிய பணி என்னவென்றால் பேராசிரியர் வித்தியானந்தன்  இந்த நாட்டுக் கூத்து மரபை வளர்தெடுத்து அவருடைய  மாணவனாக அவருடைய உதவியாளனாகச் சென்று வந்த அந்த  வேளைகளில் அந்த முயற்சிகளிடைய ஒரு முக்கியமான  முகிழ்ப்பாக முக்கியமான ஒரு நிறைவு நிலையாக அந்த  நாடத்தை பல்கலைக்கழக அரங்கிற்கு கொண்டுவந்தது.  இன்னொரு வகையில் சொன்னால் அந்தக் கூத்துக்களை இந்த  நவீன மயப்படுத்தியது அல்லது நவீன அரங்கிற்கு கொண்டு  வந்தது என்கின்ற அந்தத் தொழிற்பாடும் அதில் கர்ணன் போர்,  நொண்டி நாடகம், இராவணேசன் என்ற மூன்று நாடகங்களிலும்  கணிசமான ஈடுபாடும் இருந்தது. எனக்கு மாத்திரமல்ல  கைலாசபதிக்கு, நா.சுந்தரலிங்கத்துக்கு, பாலகிருஸ்ணனுக்கு அது  ஒரு முக்கியமான விசயம். அதன்பிறகு கூத்து எங்களுடைய  நவீன தேவைகளுக்கு உள்வாங்கப்படுவதற்கு அந்த அரங்க  முன்மாதிரி ஒரு காரணமாக இருந்தது.

அது மாத்திரமல்ல இப்பொழுது அது சம்ந்தமாகப் பலத்த ஒரு  விவாதம் இருக்கிறது. அப்படி எடுத்து அதை புறொசீனியம்  அரங்கிற்கு கொண்டுவந்தது சரியா? பிழையா? என்பது ஒரு  முக்கியமான விடயமாக உள்ளது.

ஐந்தாவதாகச் சொல்லக்கூடியது நாடகம் பற்றிய என்னுடைய  ஆய்வு. தமிழ் நாடக வரலாற்றைப் பற்றி எனக்கு முன்னால் பலர்  ஆராய்ந்துள்ளார்கள். ஆனால் என்னுடைய ஆக்கம் தான்  வெளிவந்தது ஆங்கில நூல். நான் கலாநிதிப்பட்டம் பெற்றது  1970 என்றாலும் அந்த ஆய்வு நூலாக பிந்தி வெளிவந்தது.  இருந்தாலும் அந்த நூல் சம்பந்தமாக ஒரு சில  முக்கியத்துவங்கள் உண்டு. அதில் அந்த ஆராய்ச்சி வழியாக  நாங்கள் மேற்கொண்ட அது இலங்கை நிலையில் அதற்குள்ள  தாக்கம், மற்றது இலங்கைக்கு வெளியே உள்ள தமிழக  நிலைப்பட்டதாகவோ அல்லது நாடகத்தின் வரலாறு சம்பந்தமாக  உள்ளது. இந்த நாடக ஆராய்ச்சியோடு மாத்திரம் நான் நிற்காமல்  இந்த நாடகத்தினுடைய மற்ற அம்சங்களையும் குறிப்பாக  தொடர்பாடல் அதனோடு சேர்த்து நான் சினிமா பற்றிச் செய்த  ஆய்வு முக்கியமானது என்று கருதுகிறேன். இன்றைக்கு  முக்கியமாக என்னுடைய 81ம் ஆண்டு Tamil films as a  mediam of political communication அதன் பிறகு என்னுடைய  'தமிழ் சமூகமும் சினிமாவும்' என்கின்ற அந்தக் கட்டுரை  தமிழகத்தில் ஒரு கணிசமான தாக்கம் அதைப் பின்னர்தான்  நாம் பார்க்கிறோம். அந்த ஆய்வுப்பரப்பை அடுத்து பின்னுக்குப்  பல்கலைக்கழகத்துக்குள்ளால் வருகிற ஆராய்ச்சியாளரை  வழிபடுத்துகிற அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிற  அந்தப் பெரியவாய்ப்பு.

ஆறாவது நாடகத்தை ஒரு கற்கை நெறியாக நான் கொண்டு  வந்தது. அதற்கு எனக்குப் பலர் உதவியிருக்கிறார்கள்.  முக்கியமாகச் சண்முகலிங்கம். சண்முகலிங்கம்  இல்லையென்டால் அதைச் செய்திருக்கேலாது. அந்த நாடகத்தை  ஒரு கற்கைநெறியாக படிக்கவேண்டிய ஒருவிடயம். அரசியல்  பொருளியல் கர்நாடக சங்கீதம் மாதிரி படிக்கப்படவேண்டிய  விடயம் அதற்கு சில Theorys   இருக்கு. அதற்கு சில  Disciplines இருக்கு என்று சொல்கிற அந்தமுறைக்கு  கொண்டுவந்து அதனை ஒருகற்கை நெறியாக்கிய அந்தத்  தொழிற்பாட்டோடு நிறையத் தொடர்புண்டு. அது முதலில்  பல்கலைக்கழகத்திற்குள் நாடகடிப்புளோமா பயிற்சி என்று நடந்த  போது அதனூடாகத்தான் சண்முகலிங்கம், சுந்தரலிங்கம், காரை  சுந்தரப்பிள்ளை, சிவானாந்தன் எல்லாரும் வந்தார்கள். அதுக்கான  பாடத்திட்டம் வகுக்கிறது. அதில் விரிவுரை பண்ணினது போக  க.பொ.த.உயர்தரத்திற்கு ஒரு பாடமாக நாடகத்தை கொண்டு  வந்தது. அதன் பிறகு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்  நாடகமும் அரங்கியலும் ஒரு பாடமாக புகுத்தியமை பின்  விசேட பாடமாக்கியமை எனபன.

இது பெரிய மாற்றங்களுக்கு காலாக இருந்த. பல விசயங்கள்  அதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. என்னுடைய நாடக ஈடுபாடு  என்பது இந்தவகையில் பல கிளைகளாக உள்ளன. அவற்றை  நான் ஒவ்வொன்றாகச் சொல்ல வேண்டும். வாழ்கை வரலாறாகச்  சொல்வதற்கு நான் எங்கே தொடங்கி நடித்தேன் என்று சொல்வது  கஸ்டமாக இருக்கும். ஒவ்வொரு கட்டமாகச் சொல்வது  பொருத்தமாக இருக்கும்.

கேல்வி :-  போரா வித்தியானந்தன், பேரா. கணபதிப்பிள்ளை  போன்ற அரங்க வரலாற்று மனிதர்களுக்கு அருகில் நின்று  செயற்பட்ட உங்கள் அனுபவத்தையும் அவர்களோடு நீங்கள்  இணைந்து நின்று சாதித்தவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள் ?

பதில் :-   இலங்கை பல்கலைக்கழகத்தில் நான் 1952ம் ஆண்டு  கலைத்துறை மாணவனாகப் பேராதனைக்குப் போனேன். அந்த  வருடம் தான் கலைத்துறை மாணவர்கள் நேரடியாக  பேராதனைக்குச் சேர்க்கப்பட்டார்கள். அதற்கு முன்னர்  கொழும்பில் இருந்து பேராதனைக்குப் போனார்கள். நாங்கள் தான்  முதற்குழுவினர். அங்கு போன உடனே கலைப்பீடத்தில்  தமிழ்த்துறை கொழும்பில் செய்த முயற்சிகளைச்  செய்துகொண்டிருந்தார். அப்போது நாங்கள் முதலாம்  வருடமாணவர்கள். அதிலே நாடகம் போடுவதற்கு ஆட்களை  தெரிவு செய்தார்கள். ஏற்கனவே நான் இலங்கை வானொலியில்  நடித்து குறிப்பாக யாழ்ப்பாணப் பாத்திரங்களில் நடித்த ஒரு  மெல்லிய அனுபவம் இருந்தது. பேராசிரியர் கணபதிப்பிள்ளையின்  'உடையார் மிடுக்கு'த்தான் முதலில் போடப்பட்டது. எங்களுக்குப்  பயிற்சி இருந்தது. பல்கலைக்கழகத்துக்கு வாறபலருக்குப் பயிற்சி  இல்லை. அதனால் எங்களுடைய நண்பர்கள் நல்லசிவம்,  த.கனகரத்தினம்,ஆறுமுகசாமி,சிவகுருநாதன், பரம உதயன்  இப்படிப் பலபேர் நடித்தோம். நான் உடையாராக நடித்தேன்.  1952,1953 இல் இது போடப்பட்டது.


பேராசிரியர் வித்தியானந்தனோடையும், கணபதிப்  பிள்ளையோடையும் உண்மையில் நாடகத்தின் மூலமாகத்தான்  நாங்கள் கிட்ட வந்தோம். மிக மிகக் கிட்ட வந்து அதுக்குப்பிறகு  முற்றிலும் புலமைசார்ந்த ஒரு நட்பாக மாறியது. புலமைசார்ந்த  ஒரு மாணவ ஆசிரிய உறவாக மாறியது. இரண்டு பேரும்  இரண்டு விதமான ஆட்கள். வித்தியானந்தன் போற இடமெல்லாம்  எங்களை கூட்டிக்கொண்டு போவார். அந்தளவுக்கு எங்களால்  இனைந்துபோக முடியும். இளைஞர்களோடு சேர்ந்து பழகக்கூடிய  தன்மையுள்ளவர்கள். அந்தச் சூழலில்தான், அந்த நாடகத்தினூடாக  வந்த உறவுதான் வித்தியானந்தனுடனாது. அது 'கலைக்கழகத்  தமிழ் நாடகக் குழுவில்' நாங்கள் செய்த எல்லாக்  காரியங்களுக்கும் தளமாக அமைந்தது. 1956ம் ஆண்டில்  பண்டார நாயக்கா அரசாங்கம் கலாசாரத்திற்கு தனியான  திணைக்களம் வைத்து அந்த அமைச்சுக்குக் கீழ் கொண்டு  வந்தது. Arts council  – கலைக்கழகம் - கலாசார  திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு சிங்கள,தமிழ் இசை  நடனம் நாடகம் ஆகியனவற்றிற்குத் தனிக்குழுக்கள்  அமைக்கப்பட்டன. அவை மிகுந்த கட்டுப்பாட்டு உணர்வுடன்  செயற்பட்டன. அதில் வித்தியர்(சு.வித்தியானந்தன்) தலைவராக  நியமித்த உடனே ஏழுபேரைத் தன்னுடைய அங்கத்தவர்களாகக்  கொண்டு வந்தார். வித்தியானந்தனோட உள்ள உறவு அந்த  அடிப்படையில் வந்தது. வித்தியானந்தனில் உள்ள மிகப் பெரிய  சிறப்பு தன்னுடைய மாணவர்களுடைய ஆழ அகலங்களை  தாரதம்பியங்களை அறிந்து அவர்களோடு மிக நெருங்கிய  உறவை வைத்திருப்பார். உதவிகள் செய்யச் சொல்லி கேட்பார்.  சில விசயங்களுக்குப் பொறுப்பாக விடுவார். நாங்களும் மிக  உற்சாகத்தோடு வேலை செய்வோம். அவரிடமிருந்து நாங்கள்  பெற்ற பேறுகள் பல. நாங்கள் அவருக்கு என்ன செய்தேமோ  தொரியவில்லை. பல்கலைக்கழக நாடகங்களை நாங்கள்  அதனுடைய நடிப்பு, கட்டமைப்பை சற்று விரிவுபடுத்தி  கொழும்பில் கொண்டுவந்து போட்டோம். “தவறான எண்ணம்”  அதன்பிறகு யாழ்ப்பாணத்தில், திருகோணமலையில்  மட்டக்களப்பில் போட்டோம். ஜம்பத்தாறாம் வருஸம் தான்  சரச்சந்திரா “மனமே” போடுறார். நாங்கள் பேராசிரியர்  கணபதிப்பிள்ளையின் பெர்னாட்சோ பாணியில்  “உடையார்மிடுக்கு” “தவறான எண்ணம்” போட்டம். ‘சுந்தரம்  எங்கே’ என்பதை எழுதினோம். அதிலும் பார்க்க ‘துரோகிகள்’ என்ற  நாடகத்தைப் போட்டம். பேராசிரியரது நாடகங்கள் சரியான  முறையில் ஆராயப்படவில்லை. நான் நம்புகிறேன். இலங்கைத்  தமிழ் அரங்கினுடைய முதலாவது அரசியல் நாடகம் அது தான்அவருடைய நாடகங்கள் 'தவறான எண்ணம்', 'துரோகிகள்'  அரசியல் நாடகங்கள் புலிகள் நாடு,புலி இயக்கம், புலிக்கொடி  என்று வரும். இது நாங்கள் சொல்லிக்கொடுத்ததில்லை. அவர்  தானாகச் செய்தார். நாங்கள் எழுதினது. அவ்வளவுதான். அவருக்கு  ஏதோ ஒரு திரிஸ்டி இருந்தது. Creative artist க்கு அந்த திரிஸ்டி  வரும்.

நான் கரவெட்டியில் பிறந்து வளர்ந்தவன். எனக்குத் தெரியும்  கிருஸ்ணாழ்வாருடைய நாடக மரபு. பார்சித் தியேட்டருடைய  மரபு நல்லாகத் தெரியும். அதுக்கு ஒரு பண்பாட்டு ஏற்புடமை  இருக்கு. இன்னொண்று கூத்துக்கு அது சாதி அடிப்படையில் சாதி  அடிப்படைக்கு அப்பால் அந்த ஒரு மரபு இருக்கு. நாங்கள்  நாடகத்தைக் கொண்டு போய் Ticket  அடித்து அதை தெருத்  தெருவாக, வீடுவீடாகக் கொண்டு போய் விற்று ஒரு பள்ளிக்  கூடத்தில 40 பேரைக் கூட்டியவாறதும் சரி அல்லது 100 பேரைக்  கூட்டிவாறதும் சரி அதிலும் பார்க்கப் பெரிசா எப்பிடி இருக்கும்  எண்டு சொன்னால் இன்ன கூத்து இன்ன இடத்தில நடந்தது  என்றால் போதும் அந்தக் கோயில் வீதிக்கு அக்கிராமத்துச் சனம்  முழுக்க வரும்.

இலங்கை தழிழருடைய ஒரு செல்நெறி சொர்ணலிங்கத்திற்  கூடாக வருகுது. இன்னொரு செல்நெறி  பல்கலைக்கழத்துக்குள்ளாலையும் கணபதிபிள்ளைக்குள்ளாலையும்  வருகுது. சரத்சந்திராவினுடைய முயற்சி எங்களுக்கு ஒரு  ஆயிரம் கோடி சூரியப்பிரகாசம் எண்டு எங்கட பாரம்பரியத்தில  சொல்லுவினம் அதுமாதிரியான ஒன்றுதான். இது தான்  தமிழர்களுடைய கூத்து மரபினுடைய சிங்கள வடிவமானது  நாடக வடிவங்களில் இருந்தது இதனை நாங்கள் எடுத்துக்  கொண்டோம். இது அவர்களுடைய அதுக்குள்ள கொஞ்சம் கிறீக்  கொஞ்சம் யப்பானிஸ் என எல்லாப்பண்புகளையும் கொண்டு  நான் தாறன் என்று கிரேக்க அரங்க அடிப்படையில் அதனைத்  சரச்சந்திரா தந்தார் அது எங்களுக்கொரு பெரிய சவால் 1956  இல் தான் வித்தியானந்தனையும் கலைக்கழகத்துக்கு தமிழ்  நாடககுழுவுவிற்கு தலைவராக இருக்கச் சொல்லிக் கேட்டார்கள்.

துரோகிகளுக்கு பிறகு 1956 இல் இருந்து மௌனகுருவினுடைய  ‘கர்ணன் போர்’ போடும் வரையும் ஒரு நான்கு ஜந்து வருசம்  நாடகம் பல்கலைகழகத்தில் போடவில்லை. இதனால் மிகவும்  சுவாரசியமான வளர்ச்சி ஒன்று வருகிறது. இந்தக் கூத்தரங்கை  நவீன மயப்படுத்திக் கொண்டு வாறதன் காரணமாக அதாவது  வித்தியானந்தன் தொடர்ந்து இதைச் சொய்து கொண்டு வந்ததால்  பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இந்த நவீன நாடகம் என்று  சொல்கின்ற அரங்கமரபைப் பிறகு மாணவர்கள் மண்டப  அடிப்படையில் விடுதிகள் அடிப்படையில் தாங்கள் ஏற்றுக்  கொள்கிறார்கள். தில்லைநாதன் 'மானிடம் என்பது புல்லோ' என்ற  நாடகம் எழுதி boys hall இல் நடித்தார்கள். இந்தக் ‘கர்ணன் போர்’  ‘மனமே’ சிங்கள சமூகத்தில் ஏற்படுத்திய பெரிய தாக்கத்தை  ஏற்படுத்தியது.
வித்தியானந்தன் நாங்கள் செய்வதற்கு இடம் தந்தார். இது  முக்கியமான விசயம். ஆட்டங்களை மாற்றுகிறபோது  ஆட்டங்களை எப்படி ஆடவேனுமெண்று சொல்லுகிறதுக்கு  வித்தியானந்தன் இடத்தைதந்தார். அதைப்பற்றி வாசிக்கிறதுக்கு  தூண்டினார். நான் பல்கலைக்கழகத்துக்கு வெளியால் வந்தபிறகு  56இல் இருந்து றேடியோ சிலோனில் நான் இருந்ததனாலும்  கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு நான் தயாரிப்பாளராக  இயக்குனராகப் போனதாலும் என்னுடைய வட்டம் சாடையாகப்  பெரிதாகியது. நான் கொழும்பு பல்கலைககழகத்தில் முதல்  சரவணமுத்து மாமாவிடம் பின்னர் கே.சுந்தரராஜனோடு சேர்ந்து  செய்த பிறகுதான் தனியச் செய்யத்தொடங்கினன். எனக்கு  அதுக்குள்ளால ஒரு Groupபவந்தது. அந்தக் Group க்குள்ளால  தான் இந்தச் சுந்தரலிங்கம், சிவானந்தன், டாக்டர் சிவபாதசுந்தரம்  ஆட்கள் வந்தார்கள். தாசீசியஸ் உடன் தொடர்புகள்  ஏற்படுகின்றது. அப்போ நாங்கள் செய்தது என்னென்டால் நான்  இந்த Group பையும் வித்தியாரோட சேர்த்தன். எங்களை எப்பிடி  வரவேற்றாறோ அதே மாதிரி அவர்களையும் வரவேற்றார்.

'கர்ணன் போர்’ தயாரிப்பில் எல்லோரும் வந்தார்கள். மௌனகுரு  என்ற பையன் கர்ணனுக்கு ஏற்ற பாத்திரத்துக்கு ஆடுகிறான்  என்று இல்லாமல் கர்ணன் என்ற பாத்திரமே ஆடுகிறான் போன்ற  பிரமை. அதை மௌனகுரு என்ற பையன் செய்கிறான். ஆதில்  நா.சுந்தரலிங்கம் Lighting & Makeup  செய்கிறார். இப்படியாக  எல்லோரையும் இனைத்துக் கொள்கிற ஒரு பெரிய தன்மை  வித்தியருக்கு இருந்தது. அவரை பெரிய ஒரு Creative artist  என்று சொல்லலாம். வித்தியானந்தனுக்கு கலைத்துவம் எங்கே  இருக்கு என்பதை இணங்கானுற தன்மை ரொம்பத்திறந்த மனசு.  மற்றவர்கள் முன்னுக்கு வருவது தனக்கு ஆபத்தானது என்ற  எண்ணம் அவருக்கு ஒரு காலமும் இருந்ததில்லை.  அதனால்தான் அவருடைய மாணவர்கள் எல்லோரும் நாங்கள்  ரொம்ப முன்னுக்கு வந்தம். அவர் ஒரு பெரிய மனிசன்.  நிச்சயமாகச் சொன்னால் என்னில உள்ள நல்லவைகள் எல்லாம்  எனது நண்பர்கள் மூலமும் நான் பழகியவர்கள் மூலமும்  கிடைத்தவைகள்தான் அதை நான் ஏற்றுக் கொள்ளுவேன். அந்தத்  தொடர்ச்சியை நான் எந்தளவுக்கு வைத்திருப்பனோ  தெரியேல்லை. எந்தளவுக்கு கையளித்திருப்பனோ  தெரியவில்லை. ஆனால் அந்தப் பெரிய மனிசரோட உள்ள  தொடர்பை நான் மிகப் பெரிய விசயமாகப் பார்க்கிறன்.

கேள்வி :-   இலங்கை கலையககழகத்தின் தோற்றம் வளர்ச்சி  அதன் செயற்பாட்டின் பேறு உங்கள் பங்களிப்புப்  பற்றிச்சொல்லுங்கள்.?

பதில் :-      இங்கிலாந்து இருந்த முறைமையைப் பின்பற்றி  அரச உதவியோடு ஆனால் தனிப்பட்ட ஒரு நிறுவனமாக இந்த  Theater in the round   என்ற நிறுவனம் அழைக்கப்பட்டது.  1954ல் பேராசிரியர் கணபதிப்பிள்ளை தான் தமிழ்  நாடகக்குழுவின் தலைவராக இருந்தவர். சூனா,சொர்னய்யா  போன்றவர்கள் அங்த்தவர்களாக இருந்தவர்கள்.

1956ம் ஆண்டில் கலாசார அமைச்சு உருவாக்கப்படுகிறது.  அதனுடாக சிங்களக் கலாச்சாரத்தை வளர்க்கிறதென்பது ஒரு  முக்கிய விசயமாச்சு. பண்டாரநாயக்காவின் வருகை என்பது  வெறுமனே ஒரு அரசியல் நிகழ்சிமாத்திரமல்ல. அது ஒரு சிங்கள  மக்களினுடைய அரசியல் சமூக கலாசார பண்பாட்டு வளர்ச்சி.  1956ல் தான் ‘மனமே’ வந்தது. அடுத்த வருடத்தில்தான் ஜேம்ஸ்  பீரிசினுடைய ‘றேக்காவ’ வந்தது. அது வெறுமனே ஒரு அரசியல்  எழுச்சி அல்ல. அந்தக் கால கட்டம் இப்போதைய மாதிரி  இல்லை. நல்ல காலம். ஆந்தக் கால கட்டத்தில் தமிழுக்கும்  சமமான இடத்தைக் கொடுக்கிற ஒரு நிலமை இருந்தது.  1972இல் Ceylon cultural of council எண்டு மாத்தி கலாசாரப்  பேரவை எண்டு சொல்லி அதுக்குள்ள இதுகளெல்லாம் வருகுது.  இந்தக்கலைகழக தமிழ் நாடகக் குழுவுக்கு சிங்கள  நாடககுழுவுக்கு கொடுத்தளவு காசு கொடுக்கப்பட்டது.


நாங்கள் தொடங்கின பெரிய வேலை நாட்டுக் கூத்து மீட்பதுதான்  நிறைய கஸ்டப்பட்டு வித்தியானந்தன் இதைச் செய்தார். தமிழ்  நாடகக் குழுவில் செயலாளராக நான் இருந்தன். இதில்  அங்கத்தவராக சண்முகசுந்தரம் எங்களுக்குப் பின்னால் நிக்கிற  ஒரு சக்தி. தெல்லிப்பளையைச் சேர்ந்தவர். அற்புதமானவர்  வித்தியருடைய பல சாதனைகளுக்கு எங்களுடைய பல  சாதனைகளுக்கு சண்முகசுந்தரம் பின்னுககு உள்ள ஆள்.  வைரமுத்து கண்டுபிடிக்கபபடுவதற்கு காரணமே சண்முகசுந்தரம்  தான். சுண்முகசுந்தரம் ஒரு பெரிய கலைஞன்.

அந்த கலைக்கழக தமிழ் நாடகக்குழு தமிழ் கூத்து மரபை  முன்னுக்கு கொண்டு வந்தது.

1. à®•à¯‚த்து அண்ணாவிமாரை முன்னுக்கு கொண்டு  வந்தது.
2. à®•à¯‚த்து எழுத்துக்களைக் கொண்டு வந்தது.
3. à®•à¯‚த்தையே நவீன அரங்குக்கான ஒரு படிப்பாகியது.
4. à®Žà®²à¯à®²à®¾à®µà®±à¯à®±à®¿à®²à¯à®®à¯‡ முக்கியம் கல்வி நிலைப்பட்ட,  பாடசாலை மையப்பட்ட விடயமாக்கியது.

1959ம் ஆண்டு மட்டக்களப்பில் தாம் நாம் முதன்முதல்  பாடசாலையில் கூத்து போட்டி வைத்தது. மௌனகுரு  கூத்தாடினார். மட்டக்களப்பில் அதற்குமுதல் அந்தஅந்த  சாதிக்காரர் அந்த அந்தக் கூத்தைத்தவிர இருசாதிக்காரர் ஒரு  கூத்தைச் சேர்ந்து ஆடுகிறதில்லை. பாடசாலையில் தான் அது  தொடங்கியது. எப்பிடியெண்டால் ஒட்டு மொத்தமான ஒரு  பேரியக்கமாக அது வளர்ந்தது. அந்தக்கால கட்டத்தில் இருந்த  ஒரு முக்கியமான விசயம் இலக்கியத்தைத் தவிர ஈழத்து  இலக்கிய பாரம்பரியத்தின் பிரச்சனை இருந்தது.  கலைத்துறையில் எங்களுக்கு எண்டு ஒரு கலைமரபு இல்லாதது  போல இருந்தது. இந்தநாட்டுக் கூத்து அந்தத்தேவைகளை  நிறைவு செய்தது. நாங்கள் இன்னொன்றையும் செய்தோம் அந்த  நவீன நாடகத்தில் ஈடுபட்டவர்கள் எல்லோரையும் ஏதோ ஒரு  வகையில் விழா என்ற மையப்புள்ளிக்குள் சேர்த்தது.  எல்லாநாடகங்களையும் கொண்டு வந்து கொழும்பில்  போட்டோம். நாங்கள் எந்தப் பிரதேசத்தையும் விடவில்லை.  மட்டக்களப்பு மன்னார் திருகோணமலை எல்லாவற்றிலும் பார்க்க  மலையகத்து காமன் கூத்தையும் நாங்கள் இங்கு கொண்டு  வந்தோம். என்னால்தான் அல்லது எங்களாலதான் அல்லது  வித்தியானந்தனால் இதெல்லாம் வந்தது என்று நான்  சொல்லவரவில்லை. ஆனால் அதுக்குள்ள எங்கேயோ நாங்களும்  நிக்கிறோம்.


கலைக்கழகத்தால் வந்த இரண்டு விசயம் என்கிற நிறுவனம்  உருவானது. நாடகம் என்ற நிறுவனமயப் படுத்தப்படாத சமூக  அங்கிகாரம் இல்லாது இருந்த கலைவடிவத்திற்கு ஒரு  நிலையான ஒரு ஸ்திரமான வடிவத்தைக் கொடுத்தது. இதை  நாங்கள் செய்யக்கூடியதாக இருந்ததற்கும் துணிவோட  செய்வதற்கும் சற்று ஆழஅகலமாகவும் செய்யக் கூடியதாகவும்  இருந்ததற்கு காரணம் அந்த நாட்களில் சிங்கள நாடக  வளர்ச்சியில் இருந்த அத்தனை பேரும் எங்களுக்கு நண்பர்களாக  இருந்தது தான் காரணம். வித்தியாந்தனும் சரத்சந்திராவும் ஒரே  பல்கலைக்கழகத்துக்கு பேராசிரியர்கள் அந்தளவிற்கு  அவர்களுடைய நட்பு இருந்தது.

1956இல் மனமே முலம் வந்த சிங்கள நாடக  வளர்ச்சிகளுக்குள்ளால் வந்த அனைவருமே எங்களுடைய  நண்பர்கள். நாங்கள் அவர்களோடு ஊடாட முடிந்தது.  எங்களுடையதை காட்டமுடிந்தது. அவர்களுடையதைப்  பெறமுடிந்தது. நாங்களும் அதை ஒதுங்கிச் செல்லவில்லை.  நாடகம் செய்யும்போது அவர்களைக் கூப்பிடுவோம்.

நாடகத்தை மீட்டெடுப்பது என்பது தமிழர்களுக்கு மாத்திரம்  செய்து கொண்ட ஒரு முயற்சி அல்ல. அது ஒட்டு மொத்தமான  ஒரு இலங்கை மட்டத்தில் செய்யப்பட்ட ஒரு முயறசி.  கலைக்கழகத்தின் முக்கியத்துவங்களில் அது ஒன்று. அந்த  வளர்ச்சிகாரணமாக 1974இல் நாங்கள் போட்ட தேசிய நாடக  விழா தான் சிங்கள தமிழ் நாடகங்களை ஒரே அரங்கிற்குக்  கொண்டு வந்தது. அதில Sinhalesh drama festival Tamil   drama  festival   1974,  1976இல் நாங்கள் போட்டது எனக்கு  மிக சந்தோசம். ஆந்த 16 அல்லது 17 நாளும் ஒரு நாளைக்கு  தமிழ் நாடகம் அடுத்த நாளைக்கு சிங்கள நாடகம். அந்த  வரலாறுதான் கொண்டு வந்தது.

கலைக்கழகத்தினுடைய முக்கியதுவம் பற்றி பேசுகிறபோது  பின்னேக்கிப் பாக்கிற போது ஒரு குற்றப்பாடு இருக்கிறது அது  அந்த நாடகக்காரருடைய நாடகத்தை நீங்கள் அவர்கள் இந்த  நாடகத்தை எடுத்து போட்டிங்கள் அவர்களுடைய கலை  வடிவத்தை நீங்கள் பறிச்சுப் போட்டிங்கள் அவர்களுக்கு அந்த  கலை வடிவம் இல்லாமல் போச்சு எண்டு. அது சரி நான்  ஒத்துக்கௌ்ளுகிறேன்.

சாதி அடிப்படையில் இருந்ததை பொதுக்கலை வடிவமாக்கியது  கலையை எடுத்ததில் எவ்வளவோ பிழை இருக்கு. அதை  புரசீனியத்திற்குரிய கலையாக கொண்டு வந்ததில் எவ்வளவோ  பிழை இருக்கலாம் அதைநான் ஒத்துக் கொள்கிறன். ஆனால்  அந்த நேரத்தில் புரொசினியம் அரங்கில் தான் காட்ட வேண்டி  இருந்தது. ஏன் தெரியுமா! எங்களுக்கு வேற கலை தெரியாது  எங்களுக்கு வேற கலை தெரிந்திருந்தாலும் நான் படித்தது தான்  Theater in the round  ஜப் பற்றி ஆனால் அதுக்குள்ளையும்  நாங்கள் வேற விசயம் செய்யப்பார்த்தோம். நாடகம் என்பது  எங்களுடைய பண்பாட்டு நிறுவனங்களில் ஒன்றாக வளர்வதற்கு  வேண்டிய தளத்தையும் களத்தையும் கலைக்கழக தமிழ்  நாடககுழு செய்தது.


நன்றி-கூத்தரங்கம்

 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


    


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 04 Oct 2024 09:03
TamilNet
The JVP has recently lent itself to US efforts to consolidate the unitary state and realise its long-held ambition to capture state power in Colombo. In this regard, they have also engaged with a range of actors, from the IMF, Washington, and New Delhi, as well as attempted to woo Eezham Tamils and other Tamil-speaking people to opt for the NPP in the 2024 SL Presidential Elections. Norway-based Eezham Tamil anthropology scholar Dr Athithan Jayapalan writes that the NPP and Lionel Bopage speak of equality without addressing the right of an oppressed nation to secession in the face of national oppression and genocide. Instead, the NPP, aligned with the US position, vows to neutralise the Eezham Tamil political struggle for self-determination.
Sri Lanka: JVP always denied Eezham Tamils?inalienable self-determination: Anthropology scholar


BBC: உலகச் செய்திகள்
Fri, 04 Oct 2024 09:03


புதினம்
Fri, 04 Oct 2024 09:17
















     இதுவரை:  25782485 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 7736 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com