அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 05 December 2023

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow பிரெஞ் படைப்பாளிகள் arrow மடம் போவாறி (Madame Bovary)
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மடம் போவாறி (Madame Bovary)   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: வாசுதேவன்  
Wednesday, 06 July 2005
நாவற் சுருக்கம்: மடம் போவாறி (Madame Bovary) - G. Flaubert


சார்ல் போவாறி ஒரு மந்தநிலை மாணவன். இழுபறி நிலையிலிருக்கும் குடும்பத்தின் ஒரு ஆண்பிள்ளை. தோல்விகளைச் சந்தித்த வாழ்க்கையின் காரணமாய் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தன் மகன் மீது திணித்து வைத்திருக்கும் தந்தையினதும், திருப்தியற்ற வாழ்க்கையின் காரணமாய் விரக்தியடைந்து, சினமடைந்து வாழும் தாயினதும் மகன். மருத்துவராக தொழில் புரியும் நிலைக்கு கடினமான நிலையில் அனுமதிக்கப் படுகிறார்.
இவர் தாயின் அழுத்தத்தினால், மிகவும் பணக்காரியான அதே நேரத்தில் அழகற்றவளாகவும், அடக்கியாளும் குணம் கொண்டவளுமான ஒரு உயர்குடி விதவையைத் திருமணம் செய்கிறார். இப்பெண், சார்ல் போவாறியில் நிறைந்த அன்பு கொண்டிருந்த போதும், தனது தீவிர கண்காணிப்புகளாலும் அடக்குமுறைகளாலும் கணவரின் வாழ்க்கையை நரகமாக்குகிறார்.

குளிர்கால இரவொன்றில், சார்ல் அவ்வூரிலுள்ள பணக்கார விவசாயப் பண்ணையார் ஒருவரின் வீட்டிற்கு அவரின் கால்முறிவுக்கு வைத்தியம் பார்க்கச் செல்கிறார். அவ்வேளையில் அவருக்கு அப்பண்ணையாரின் மகளான எம்மா மீது விருப்புணர்வு தோன்றுகிறது. அடுத்துவரும் நாட்களில், சார்ல் பண்ணையார் வீட்டுக்கு அடிக்கடி செல்வதைக் கண்ணுற்ற அவரின் மனைவி பொறாமை கொண்டு அவர் அங்கு செல்வதற்குத் தடை போடுகிறார்.

அடுத்து வரும் வசந்தகாலத்தின் போது, சார்ல் போவாறியின் மனைவி அவரின் நொத்தாரினால் ஏமாற்றப்பட்டு ஏராளமான சொத்தை இழந்ததை அடுத்து, நோய்வாய்ப்பட்டு, ஒரு வாரத்தில் திடீரென மரணமடைய, சார்ல் போவாறி தனித்து ஒட்டாண்டியாகின்றார்.

சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் பண்ணையார் வீட்டிலிருந்து சார்ல்க்கு அழைப்பு வருவதும், அவர் அங்கு மீண்டும் செல்வதும், அவருக்கு மீண்டும் எம்மா மீதான காதலுணர்வை அதிகரிக்கின்றது. எவ்வாறு எம்மாவைத் திருமணத்திற்குக் கேட்பது,தெரிவிப்பது எனத் தடுமாறி, இறுதியில் எம்மாவுடனான திருமணம் நிச்சயமாகி அடுத்த வரும் வசந்த காலத்தில் திருமணவிழா நடாத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது. எம்மா சாமப் பொழுதில், தீப்பந்தங்களின் ஒளியில் திருமணம் செய்யும் கனவு கண்டு கொண்டிருந்த போதும், நாட்டுப்புறப் பாணியில் திருமணவிழா சோபையின்றி நடந்தேறுகிறது. சார்ல் போவாறி எம்மா எதிர்பார்த்தது போன்று விழாவைக் கலகலப்பாக மாற்றி விருந்தினரைக் குதூகலம் செய்யும் திறமை கொண்டவராக இருக்கவில்லை.

எம்மா, திருமதி போவாறி (மடம் போவாறி) ஆகிறார். திருமணத்தையடுத்துப் புதிய தாம்பத்திய வாழ்வில் சார்ல் புதிய இன்ப வாழ்வைச் சுவைக்கின்றார். வாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படுகின்றது. எம்மா ஒரு பூரணமான மனைவியெனும் புளகாங்கிதத்தில் அவர் திளைக்கிறார். தன் மனைவி வீட்டை ஒழுங்காகப் பராமரிப்பதும், விருந்தினர்களை உரிய முறையில் உபசரிப்பதும், பியானோ வாசித்து மகிழ்விப்பதுமான எம்மாவின் போக்கு அவருக்குப் பெரும் திருப்தியையளிக்கின்றது.
ஆனால், எம்மாவிற்கு, அதாவது மடம் போவாறிக்கு இவையெவையும் திருப்தியளிப்பனவாகத் தோன்றவில்லை. திருமண-காதல் வாழ்வைப் பற்றி, தன் இளமைக்காலத்தில் ரோமான்ரிக் புத்தகங்களை, காதலுணர்ச்சி பொங்கும் கவிதைகளை வாசித்தறிந்து கண்ட கனவிற்கும் நிஜத்திற்கும் இருக்கும் இடைவெளி எம்மாவிற்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. கனவுக் காதலனாக எண்ணிய கணவன் மர்மமற்றவனாக, புதுமையற்றவனாக, நாளாந்த வாழ்வைக் கற்பனை வளத்தால் செழிப்பூட்டாதவானாக இருப்பது மடம் போவாறியைச் சலிப்பிற்குள் தள்ளிவிடுகின்றது.

இக்காலகட்டத்தில்தான், அயலூர் ஒன்றிலுள்ள உயர்குடிப் பண்ணையார் ஒருவரின் மாளிகையிலிருந்து நடனக் களிப்பு விழாவொன்றிற்கான அழைப்பு போவாறி குடும்பத்திற்கு வந்து சேருகின்றது. இவ்விழா எம்மாவிற்கு அளவுகடந்த ஆனந்தத்தை அளிக்கிறது. தான் கனவு கண்ட 'அரிஸ்ரோக்கிரட்டிக்' சமுகத்தின் படாடோபங்கள் எம்மாவிற்கு வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதிய நோக்கைக் கொடுக்கிறது. தான் விவசாயக் குடும்மொன்றிலிருந்து வந்த விடயத்தையே மறக்குமளவிற்கு எம்மாவிற்கு விழா மகிழ்ச்சி வழங்குகிறது. ஆனால், விழா முடிவு எம்மாவை மீண்டும் கவலைக்குள் தள்ளிவிடுகின்றது. மீண்டும் சார்ல் உடனான சலிப்பான வாழ்வைத் தொடர வேண்டும் என்ற எண்ணம், அவரை நடனக் களிப்பு விழா மீதான நினைவுகளுக்குள் நிரந்தரமாகத் தள்ளிவிடுகின்றது. பாரிசுக்குப் போகவேண்டுமென்று மனதில் ஆசை தோன்றுகிறது. அவர் பல்ஸாக், ஜோர்ச் சான்ட் போன்றவர்களின் புத்தகங்களை வாசிக்கின்றார். வீட்டுப் பராமரிப்பு , குடும்ப வாழ்வு போன்றவற்றில் மடம் போவாறிக்கு வெறுப்பு ஏற்படுகின்றது. நடனக் களிப்பு விழா நடைபெற்று ஒன்றரை வருடங்கள் கழிந்த பின்பு அவரின் உடல் நிலை பாதிப்படைகிறது. நிலைமையை உணர்ந்த சார்ல் போவாறி, மனைவி எம்மாவிற்கு மாற்றம் தேவைப்படுவதை உணர்ந்து இயோன்வீல் என்னும் வேறிடத்திற்கு இடம்பெயர்ந்து வாழ்கின்றார். எம்மா போவாறி கருத்தரிக்கின்றார்.

புதிய இடம், புதிய சூழல், புதிய மனிதர்கள், இவையெல்லாம் தனக்குப் புதிய வாழ்வைக் கொண்டுவருமென எம்மா கருதினார். மருந்துக்கடைக்காரர் ஓமே, வரிஅதிகாரி பினே, கோயிற் குருவானவர் பூர்னிசியன், நொத்தாரின் உதவியாளர் லெயோன் போன்றோரின் அறிமுகம் போவாறி குடும்பத்திற்குக் கிடைக்கின்றது. எம்மா போவாறி லெயோனுடனான உரையாடல்களின் போது தனக்கும் லெயோனுக்கும் வாழ்வு பற்றிய பொதுவான நோக்குகள் இருப்பதைக் கண்டறிகிறார். ஆண்குழந்தையை விரும்பியபோதும் எம்மாவிற்கு ஒரு பெண்குழந்தை பிறக்கிறது. ஒரு நாள் எம்மா தனது குழந்தையை குழந்தை பார்க்குமிடத்திற்குக்கொண்டு செல்லும் போது, லெயோனும் அவர்களுடன் வழி செல்கிறார். போகும் வழியில் இருவரும் கைகோர்த்தவாறு செல்லும் விடயம் அன்றுமாலையே ஊர் முழுவதும் ஊர்நிர்வாகியின் மனைவியினால் பரப்பப்படுகின்றது.

எம்மாவிற்கு மீண்டும் வாழ்க்கை சலிப்புடன் தொடர்கிறது. லெயோன் தெருவால் போகமாட்டானா என வழியைப் பார்த்து ஏக்கம்கொள்ளும் நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார். மருந்துக் கடைக்காரர் ஓமே வீட்டுக்கு போவாறி குடும்பத்தினர் அடிக்கடி விருந்துக்கழைக்கப்படுவதும், அதே வேளையில்அங்கு லெயோன் வருவதும் எம்மா போவாறிக்கும் லெயோனுக்குமான நெருக்கத்தை அதிகரிக்க, இருவருக்குமிடையேயான உறவு வலுவடைந்து, தம்மிடையே அவர்கள் பரிசுகள் பரிமாற்றமும் செய்துகொள்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை ஒன்றின்போது, இயோன்வீல் சுற்றுப்புறத்திலான ஊர்சுற்றலின் போது, தனது கணவனுடனான வாழ்வின் வெறுமையும் அதே நேரம் இளைஞனான லெயோனுக்கும் தனக்கும் உள்ள நெருக்கமும், அவன் தன்மீது கொண்டுள்ள காதலும் எம்மாவுக்குத் தெளிவாகப் புலப்படுகின்றது.

இருப்பினும், ஆசைகளுக்கு அடிபணியாது, நல்ல தாயாகவும் மனைவியாகவும்இருக்கவேண்டும் என்று மடம் போவாறி தன்னுடனேயே போராட்டம் நடாத்துகிறார். இதற்கெல்லாம் காரணம் தனக்குப் பொருத்தமான கணவனான சார்ல் போவாறி நடந்துகொள்ளாததுதான் என உணரும் எம்மாவிற்குத் தன் கணவன் மீது ஆத்திரமுண்டாகி அது வெறுப்பாக உருவெடுக்கின்றது.

ஓரு நாள் மாலை, ஆலயமணியின் ஓசை அவருக்குத் தன்னிளமைக்கால நினைவுகளை மீளக் கொண்டுவந்து, தன் துன்பங்களுக்கெல்லாம் ஆத்மீகம் சிலவேளை சபீட்சம் தேடித்தரும் என எண்ணிய எம்மா, ஊர் மத குருவிடம் தனது துன்பங்களைப் பகிர்ந்து கொள்கிறார். இருப்பினும், எம்மாவின் உளநெருக்கடிகளை உணரச் சக்தியற்ற மதகுருவினாலும் அவருக்க தென்பளிக்க முடியவில்லை. வீடு திரும்பும் எம்மா தனது சினத்தை மகள் மீது காட்டி அவளைத்தள்ளி விட கீழே விழும் குழந்தைக்குச் சிறு காயமேற்படுகிறது. அப்போ அங்கு வரும் சார்ல் போவாறி குழந்தைக்கு வைத்தியம் செய்து காயத்திற்கு மருந்திடுகிறார். குற்ற உணர்வால், எம்மா அன்றிரவு முழுவதும் தூங்கும் தனது குழந்தையின் பக்கத்தில் விழித்திருக்கின்றார்.

அடையமுடியாத காதலி எம்மா மீது லெயோனுக்குச் சலிப்பு ஏற்படுகின்றது. தனது படிப்பை முடிக்கும் இலக்கில் பாரிசுக்கு இடம் பெயர முன்னர் எம்மாவிடம் விடை பெறச் செல்லும் லெயோன் தன் உணர்வுகளை வெளியிடச் சொற்களைத் தேடியும் அவை அவனுக்கு அகப்படவில்லை. லெயோன் புறப்பட்ட பின்னர் எம்மாவின் ஆத்மாவில் மீண்டும் இருள்சூழ்கிறது. இக்காலத்தில் இவ்விடத்திற்குப் புதிதாக வரும் நவீனபொருட்கள் விற்கும் வியாபாரி லேறோவிடம் நிறையப் பொருட்களை வாங்கி பணவிரையம் செய்கிறார் எம்மா. இத்தாலி மொழி பயில முயற்சி செய்கிறார். பல புத்தகங்களுக்குள், நீண்ட வாசிப்புகளுக்குள் தஞ்சமடைகிறார். இந்நிலையைக் கண்ட சார்ல் தனது தாயாரை வரவழைத்து தனது மனைவியின் நிலையை மாற்ற ஆலோசனை செய்கிறார். எம்மாவை நாவல்கள் வாசிப்பதிலிருந்து தடைசெய்யவேண்டும் எனத் தாயார் ஆலோசனை செய்கிறார்.

ஊரில் நடைபெறும் விழாவொன்றின் போது, எம்மா றோடோல்ப் எனும் வசதிபடைத்த ஒருவரால் கவரப்பட்டு, அவரின் கவர்ச்சி வலையில் வீழ்ந்து விடுகிறார். எம்மாவின் நிலையில் மாற்றம் உண்டு பண்ணுவதற்காக அவர் குதிரை ஊர்வலம் போகவேண்டும் என றோடோல்ப் ஆலோசனை கூற, அதற்கு இணங்கிய சார்ல் பேவாறி, எம்மாவை றோடோல்ப் உடன் குதிரைப்பயணம் செய்ய அனுப்புகிறார். காடுகளுக்குள்ளால், குதிரையில் செல்லும் எம்மாவிற்கும், றோடோல்ப் க்கும் தனிமையில் அந்நியோன்னிய உறவு ஏற்படுகின்றது. 'எனக்கும் ஒரு காதலனுண்டு, எனக்கும் ஒரு காதலனுண்டு' என எம்மா அடர்ந்த காட்டினுள் சத்தமிட்டுக் கூறுகின்றார். தினமும் இருவரும் சந்திக்கிறார்கள். எம்மா றோடோல்ப்பின் மாளிகைக்கே நேரே செல்லத் துணிந்துவிட்டார். ஆனால், எம்மாவின் இந்நடவடிக்ககையால் விடயம் வெளியே தெரிந்தவிடுமோவென றோடோல்ப் அஞ்சுகிறார்.

ஒருநாள் அதிகாலையில் எம்மா தன் கள்ளக் காதலனைச் சந்திக்கப் போகும் வழியில் வரிஅதிகாரி பினேயிடம் அகப்பட்டுவிடுகிறார். தம் கள்ள உறவு ஊரெல்லாம் வெளிச்சமாகிவிடப்போகிறதே அச்சம் காரணமாக எம்மா தன் காதலனின் மாளிகைக்குப் போவதை நிறுத்தி இருள் நேரங்களில் தோப்புகளில் சந்தித்துக்கொள்கிறார்கள். றோடோல்ப்பில் காதல் வயப்பட்டிருந்த போதும், எம்மாவிற்குச் தன் வாழ்வின் மீதான சிந்தனை திருப்தியைக்கொடுக்கவில்லை. தன் குழந்தையுடன் மீண்டும் நெருங்கிய தொடர்பை உருவாக்குகின்றார். தன் கணவருடன் மீண்டும் சுமூகமான உறவை உருவாக்க வேண்டும் என்றும் எண்ணுகிறார். இருப்பினுமென்ன, சார்லின் தோல்விகள் அவரைப் பற்றி ஒரு உயர்ந்த அபிப்பிராயத்தை எம்மாவிடம் ஏற்படுத்தத் தவறி விடுகின்றன. மீண்டும் எம்மா றோடோல்ப் உறவு பலமடைகிறது.

கணவன் சார்ல் மனைவி எம்மாவுடனும், தன் குழந்தையுடனும் வளமான எதிர்காலம் பற்றிய கனவுகளில் ஈடுபட்டிருக்க, எம்மா தன் காதலடனுடன் உறவில் இறுக்கம் கொண்டு அவருக்குப் நிறையப் பணம் செலவளித்துப் பரிசில்கள் வழங்குகிறார். லேறோவிடம் இப் பரிசில்களையெல்லாம் வாங்கி, பின் கடனை அடைப்பதற்கு கணவனிடமே பணத்தைத் திருடவேண்டிய நிலை எம்மாவிற்கு. குடும்ப நிதி நிலை பலவீனமடைகிறது. எம்மா கொண்டுள்ள அன்பின் அழுத்தம் அவர் காதலினிடம் இருக்கவில்லை. ஆனாலும், இருவரும் ஒன்றாக வேறிடம் சென்று வாழுவதற்கான திட்டத்திற்கு றோடோல்ப் தலையசைக்கிறார். தப்பிச் செல்வதற்கான பொருட்கள் யாவும் லேறோவிடம் கடனாக வாங்கப்பட்டுவிட்டன. ஆனால், இறுதி நேரத்தில் காதலனால் எம்மா கைவிடப்படுகிறார். உறவு முறிந்த விட்டதெனக் கடிதம் ஒன்றை எழுதிவிட்டு றோடோல்ப் வேறிடம் போய்விடுகிறார்.

தாங்க முடியாத் துயரத்துடன் தற்கொலைக்குத் திட்டமிடும் எம்மா நோயாளியாகிறார். சார்ல் தன் மனைவியை மிகவும் கவனமாகப் பராமரிக்கின்றார். ஒரளவு குணமடைந்து வரும் எம்மா, தனது பழைய காதலை நினைவுகூரும் சம்பவமொன்றினால் மீண்டும் நோயாளியாகிறார். லேறோ சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எம்மா பட்ட கடன்களையெல்லாம் அடைக்குமாறு கணவனை வற்புறுத்த வேறுவழியின்றி சார்ல் கடன்பட்டு எம்மாவின் கடனை அடைக்கின்றார். எம்மாவின் நோய்தீர இசை சாதகமகவிருக்கலாம் எனும் ஆலோசனையின் பேரில், சார்ல் போவாறி தன் மனைவியை அழைத்துக் கொண்டு, றுவான் என்னுமிடத்திலுள்ள ஒரு 'ஒபேரா' நிகழ்ச்சிக்குச் செல்கின்றார். நிகழ்சிகளினாலும், 'ஒபேரா' வின் கட்டடக் கலைச் செழிப்பிலும் ஆனந்தமடைந்த எம்மாவிடம் அங்கு எதேச்சையாக வந்த லெயோன் வணக்கம் தெரிவிக்க வருகின்றார். மீண்டும் நிகழ்ச்சிகளை காண்பதற்காக தன் மனைவியை றுவானில் மேலும் ஒரு நாள் தனியாக விட்டுவிட்டு, சார்ல் போவாறி வீடு திரும்புகிறார்.

மறுநாள் லெயோன் எம்மாவுடன் நெருங்க எடுக்கும் முயற்சிகளுக்கு எம்மா இடம் கொடுக்கவில்லை. இருப்பினும் எம்மாவுக்கும் லெயோனுக்குமான உறவு இங்கு புதுப்பிக்கப்படுகிறது. றுவானில் தங்கியிருந்த பின்னர் எம்மா மீண்டும் தனது கிராமத்திற்குப் பயணமாகிறார். லேறோவின் தூண்டுதலின்பேரில் குடும்பவருமானத்தைப் பராமரிக்கும் உரிமையைத் தனக்கும் பெற்றுக்கொள்கிறார். தொடர்ந்து எம்மாவிற்கும் லெயோனுக்குமான கடிதப்பரிமாறல்கள் நடைபெறுகின்றன. பல சாட்டுகள் கூறி எம்மா வாரத்தில் ஒமுறை லெயோனைச் சந்திப்பதற்காக றுவான் நகரம் செல்கிறார். இதன் காரணமாக உருவாகும் செலவுகளுக்கு லேறோ விடம் மீண்டும் கடன்படவேண்டிய நிலை எம்மாவிற்கு.

ஒருநாள் லெயோன் எம்மாவை அணைத்துக் கொண்டிருந்த சமயம், அது லேறோவின் கண்களில் பட , லேறோ இச்சந்தர்ப்பத்தைப் பயனபடுத்தி தனது கடன்களை அடைக்கும்படி வற்புறுத்துகிறார். சார்ல் போவாறி தனது தந்தை வழிச்சொத்தான ஒரு வீட்டை வித்துக் கடனடைக்கின்றார். தொடர்ந்தும் எம்மாவும் இத்தடவை கணவன் சார்ல்லும் லேறோவிடம் கடன் படுகின்றனர். எம்மா தான் விரும்பிய போதெல்லாம் றுவான் நகரத்திற்குச் செல்லும் உரிமை பெறுகிறார். அடிக்கடி தன்னிடம் எம்மா வருவது லெயோனுக்குத் தொந்தரவாகத் தோன்றுகிறது. அதேவேளை, லெயோனின் பலவீனங்கள் எம்மாவிற்குத் தெரியவரும் நிலையில் லெயோனின் மீதான எம்மாவி;ன் காதல் வேகம் தணிகின்றது.

கடன் தொல்லை மீண்டும் எம்மாவின் கழுத்தை நெரிக்கிறது. கணவனின் வேலை வருவாயைத் தானே வாங்கி, வீட்டிலுள்ள பொருட்களை வித்து, பலரிடம் கடன்வாங்கி, தனது திருமணப்பரிசொன்றை அடகு வைத்து எனப் பலவழிகளால் பணம் சேர்த்து நிலைமையைச் சமாளிக்கிறார். லெயோன் தன் தொழிலுக்குப் பிரச்சனை வரக்கூடாதென எண்ணி எம்மாவிடமிருந்து சிறிது சிறிதாக விலகிக் கொள்கிறார். லேறோ எம்மா வீட்டுத் தளபாடங்களை ஏலத்தில் விற்கத் திட்டமிட்டதைக் கேள்வியுற்ற எம்மா, அவரிடம் நேரே சென்று கெஞ்சியும், அவர் எதற்கும் மனம் இளகாதது மட்டுமன்றி, எம்மாவை இளக்காரமாகவும் நடத்துகிறார்.

எம்மா எல்லாரிடமும் தனக்கு உதவும்படி கேட்டும் யாரும் உதவ முன்வரவில்லை. லெயோன் கூட கைவிட்ட நிலையில் இன்னும் பாக்கியிருப்பது முன்னாள் காதலன் றோடோல்ப் மட்டுமே. இந்தச் செல்வந்தக் காதலன் விரும்பினால், எம்மாவிற்குத் தேiவாயன மூவாயிரம் பிராங்குகளும் ஒரு கணப்பிரச்சனை. ஆனால், றோடோல்ப் ம் கைவிட்டுவிட்டான். திருமதி எம்மா போவறியின் நிராசை எல்லை கடந்துவிட்டது. பைத்தியம் பிடித்ததுபோல் மாறிவிட்ட தீவிரத் துக்கத்தால் எம்மா தற்கொலைபண்ணுவதற்காக நஞ்சருந்துகிறார். குடலுக்குள் சென்ற நஞ்சு தன் வேலையை ஆரம்பிக்கிறது. வரவழைக்கப்பட்ட மருத்துவர்கள் எல்லோரும் எம்மாவைக் காப்பாற்ற முடியாதெனக் கைவிடுகின்றனர்.

சகிக்முடியாத, சொல்லால் வர்ணிக்கமுடியாத மரண உபாதைகளின் பின் திருமதி. போவாறியின் ஆத்மா பிரிகிறது. கணவன் சார்ல் போவாறி உடைந்து நொருங்கிப்போகிறார். மரணச் சடங்கு முடிந்த அடுத்த நாளே கடன்காரர்கள் எல்லோரும் வாசலில் வந்து நிற்கிறார்கள். சார்ல் எம்மாவுக்குச் சொந்தமான பொருட்களை எவற்றையும் விற்க அனுமதிக்கவில்லை. எல்லோரும் அகப்பட்டதைப் பிடுங்கிக் கொண்டு சார்லை விட்டகல்கிறார்கள். லெயோனுக்குத் திருமணம் நடக்கிறது. சார்ல் கண்டெடுத்த கடிதம் ஒன்று எம்மாவிற்கும் றோடோல்ப் க்குமான உறவைப் புரியப்படுத்தி சார்லை மிகுந்த, துக்கத்துள்ளாக்கிய போதும் சார்ல் எம்மாவிற்கு ஒரு அழகான கல்லறையைக் கட்டுகிறார். பின் ஒரு நாள் அவர் தன் மனைவிக்கு லெயோன் எழுதிய காதல் கடிதத்தையும் கண்டுகொள்கிறார். தன் மனைவி தனக்கு ஒரு போதும் விசுவாசமாக இருந்ததில்லை என்பது அவருக்குச் சந்தேகமறப் புரிகிறது.

ஆகஸ்ட் மாதக் கோடை நாளொன்றில், றோடோல்ப் ஐச் சந்திக்கும் சார்ல் போவாறி அவருடன் எவ்விதக் கோபமும் இன்றி கலந்துரையாடுகின்றார். மறுநாள், போவாறி தோட்டத்திலுள்ள பந்தலின் கீழ் வாங்கில் ஒன்றில் இருந்தவாறே இறந்து விடுகிறார்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


மேலும் சில...
குயிஸ்தாவ் ப்ளோபேர்

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 05 Dec 2023 18:29
TamilNet
HASH(0x558f1cbb01b8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 05 Dec 2023 18:29


புதினம்
Tue, 05 Dec 2023 18:29
     இதுவரை:  24329119 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 2264 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com