அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 29 March 2024

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow பிரெஞ் படைப்பாளிகள் arrow எமில் ஸோலா
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


எமில் ஸோலா   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: வாசுதேவன்  
Wednesday, 06 July 2005
"Since they have dared, I too shall dare. I shall tell the truth because I pledged myself to tell it if justice regularly empowered, did not do so fully, unmitigated. My duty is to speak; I have no wish to be an accomplice."
Emile Zola (1840-1902)

Emile Zola பிரஞ்சுச் செவ்விலக்கியப் போக்குக்கெதிராகவும், அதிலிருந்து வித்தியாசமானதாகவும் இலக்கியப்போக்கு ரோமான்ரிசத்தை உருவாக்கிக்கொண்டது. சமூக-அரசியல்-வரலாற்றுக் காரணங்களால் இம்மாற்றம் புரிந்துகொள்ளப்பட வேண்டியது. இதே போன்று பிற்காலத்தில், ரோமான்ரிசப் போக்கிற்கெதிராக றியலிஸப் போக்கு பிரஞ்சுக் கலை இலக்கியத்தில் இடம்பிடித்துக்கொண்டது. சமூக யதார்த்தங்களை ஆதாரங்களாகக் கொண்டு பின்னப்பட்ட இலக்கியப் படைப்புகள் இவ்வகை இலக்கியங்களில் ஏராளமாகப் படைக்கப்பட்டன. குறிப்பாக பல்ஸாக் கின் "மானிட நாடகம்" எனும் பலநாவல்கள் அடங்கிய நீள் தொகுப்பு இதற்கு உதாரணமாகக் கூறப்படலாம். சமூக விடயங்களின் மீதான துல்லியமான அவதானங்களிலிருந்து பிறப்பெடுத்து உருவாகும் றியலிசப் படைப்பாக்கங்கள் சமூக யதார்த்தங்களை கலையின் சேவைக்காகப் பயன்படுத்துவதிலிருந்து பிறந்தவை. இங்கு சமூக யதார்த்தங்கள் இலக்கிய அழகியலின் துணையோடு படைப்புகளாயின.
19 ம் நூற்றாண்டின் இரண்டாவது பிற்பகுதியல் உருவாகிய "நேச்சரலிச" (யெவரசயடளைஅந)போக்கு, றியலிசத்திலிருந்து சற்று வேறுபட்டு, சமூக யதார்த்தங்களை விஞ்ஞான ரீதியாக அவதானித்து படைப்பாக்கங்களை முன்வைக்கிறது. இப்பாணியிலான இலக்கியப் படைப்புகள் சமூக அவதானங்களிலிருந்து சமூக-மானிடவியல் மாறிலிகளை விஞ்ஞான ரீதியான நோக்கில் வெளிக்கொணர முற்படுபவை. றியலிசப் போக்கில் சமூக அவதானம் இலக்கியத்தின் இறுதி இலக்காக அமைந்தது. மாறாக, நேச்சரலிசப் போக்கில் இலக்கியம் சமூகம் பற்றிய விஞ்ஞான ரீதியான கண்ணோட்டக் கருவியாக பரிணமிக்கிறது. றியலிசத்தில் எது இலக்காகப் பட்டதோ அது நேச்சரலிசத்தில் பாதையாக கருதப்படுகிறது.
பிரஞ்சு றியலிசப்போக்கின் முன்னோடி எனக் கருதப்படும் எமில் ஸோலாவின் இலக்கியப் படைப்புகளின் எண்ணிக்கையும் முக்கியத்துவமும் உலகப்புகழ் வாய்ந்தவை.
ஏழு வயதில் தந்தையை இழந்த எமில் ஸோலா, கடினமான ஏழ்மைச் சூழ்நிலையில் அடிக்கடி வீடு மாறியும், கடன்பட்டும் வாழவேண்டிய குடும்பநிலைக்குள் தள்ளப்படுகின்றார். பதின்மூன்று வயதாகையில், புத்திக்கூர்மை காரணமாக வகுப்பேற்றம் செய்யப்படும் எமிலுக்கு, பிற்காலத்தில் தனது வறுமைநிலை காரணமாகவும், வேரறுந்த விரக்தி நிலை காரணமாகவும் பரீட்சையில் சித்தியடையாதுபோய்,19 வயதில் படிப்பை முற்றுமுழுதாகக் கைவிட்டு, 20 வயதிலேயே வேலை செய்து பிழைக்கும் நிலை உருவாகின்றது. இத்தாலியை அடியாகக் கொண்ட இந்தப் பிரபல பிரஞ்சு எழுத்தாளர் 1862 ல் (22 வயதாகையில்) மட்டுமே பிரஞ்சுக் குடியுரிமையைப் பெற்றார். பிரஞ்சு மொழித்திறமை போதாமையாலேயே பரீட்சையில் எமில் சித்திபெறாமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடமே "ஹாஷெத்" எனும் பிரபல பதிப்பகம் ஒன்றில், சாதாரண தொழிலாளியாக வேலையில் இணைந்து பின்னர் தன்னம்பிக்கை நிரம்பிய முயற்சியினால் விளம்பர சேவையின் பொறுப்பாளராகக் கடமையாற்றும் எமில் ஸோலா, அதே வேளையில் இலக்கிய, கலை விமர்சகராகவும் காணப்படுகிறார். இவரது விமர்சனங்கள் கொங்கூர், ப்ளோபேர் போன்ற எழுத்தாளர்களையும், மனே போன்ற ஓவியர்களையும் அவர்களது பொதுப்புத்தியெதிர்ப்புத் தன்மை காரணமாக உயர்நிலையில் வைத்துப் பார்க்கின்றன. இவரது முதலாவது 'சிறுகதைத்' தொகுப்பு 1864 ல் வெளியாகியது.
Emile Zola 1868 ல் பத்திரிகைச் சுதந்திரம் தளர்த்தப்பட்டு, எண்ணிக்கையில் அதிகமான அரசியல் எதிர்ப்புப் பத்திரிகைகள் உருவாகியபோது, இவர் தன்னை அரசியல் பத்திரிகையாளராக அடையாளம் காட்டிக்கொண்டார். இரண்டு வருடங்களாக, அக்காலத்தில் ஆட்சிபுரிந்த லூயி நெப்போலியனுக் கெதிராகவும் அவனது ஆட்சிக்கெதிராகவும் பல சர்ச்சைக்குரிய கட்டுரைகளை ஸோலா எழுதினார். பிரான்ஸின் மூன்றாவது குடியரசு உருவாகியபோது பாராளுமன்ற அலுவல்கள் சம்பந்தமான செய்தியாளராக இருந்த இவர், இக்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களை நன்றாகத்தெரிந்து கொண்ட காரணத்தினால் அவர்கள் மீதும் அக்கால அரசியல்வாதிகள் மீதும் வெறுப்புக் கொண்டிருந்தார்.
லூயி-நெப்போலியனின் ஆட்சியின் போதான ஒரு குடும்பத்தின் சமூக வாழ்வியலை சகல கோணங்களிலும் ஆய்வு செய்து நாவல்களாக உருவாக்கம் செய்வதுதான் ஸோலாவின் திட்டத்தின் அடித்தளமாக இருந்தது. இதைத் தொடர்ந்து, எட்டு மாதங்களாக (1868-1869) அவர் வாழ்வியலுக்கும் மனிதர்களுக்குமிடையேயான பரம்பரை உறவுகள், தொடர்புகள் சம்பந்தமான ஆய்வொன்றை நடாத்தினார். இக்காலகட்டத்தில் அண்ணளவாகத் தினமும் ராஜாங்க நூலகத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட பல புத்தகங்களை வாசித்தார். இறுதியில், நாவல்களில் உலாவரப்போகும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் தீட்டப்பட்டு, குறிப்புகள் எடுக்கப்பட்டு, குடும்ப உறவுகள் தீர்மானிக்கப்பட்டு, குடும்பப் பரம்பரைவிளக்கப் படமும் வரையப்பட்டது. குடும்ப வரலாற்று அடிப்படையில் தனிமனிதர்களின் குணாம்சங்களும் தீர்மானிக்கப்பட்டது. எட்டு வருடங்கள் கழித்து இப்பரம்பரை விளக்கப்படம் 'ஒரு காதற் பக்கம்' என்ற நாவலின் முன்குறிப்புடன் வெளியாகியது. அக்காலத்து விமர்சகர்கள் இதை ஒரு பகிடியாகவே எண்ணினார்கள். ஆனால், ஸோலா தனது முழுமையான நாவற் திட்டத்தை வடிவமைத்து அதனைப் பதிப்பாளர் டொலகுறுவா விடம் கொண்டு சென்றார். இத்திட்டத்தின் பெயர்தான் 'லெ றூகோன்-மக்கார்'. இம்மாபெரும் திட்டத்தை ஸோலா உருவாக்கி முதலாவது நாவலை எழுதத் தொடங்கிய போது அவரின் வயது இருபத்தியொன்பது மட்டுமே என்பது குறிப்பிடப்படவேண்டியது. இருபது நாவல்கள் இத்திட்டத்தைப் பூர்த்தி செய்தன.

ஒரு குடும்பத்தின் இரண்டு கிளைகள். அவற்றில் ஒன்று எல்லோராலும் அறியப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றையது 'கள்ளொழுக்கத்தினால்' உருவாகியது. இவ்விண்டு கிளைக்குடும்பங்களினதும் தலைவிதி நேரெதிர்மாறானதாகக் காணப்படுகிறது. றூகோன் குடும்பம் வசதிபடைத்தவர்களாகவும், செல்லாக்கு மிக்கவர்களாகவுமிருக்க, மக்கார் குடும்பம் ஏழைகளாகவும் அடிமட்டவாழ்க்கை வாழ்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.
தனது நாவற் பிரபஞ்சத்தில் அனைத்து மனித குணாம்சங்களையும், இயல்புகளையும் ஸோலா துல்லியமாகப் பிரதிபலிக்கின்றார். வாசகர்கள் ஒவ்வொருவரும் தம்முடன் ஒத்த நிலைப்பாடுடைய ஒரு பாத்திரத்தை ஸோலாவின் நாவலில் காணாமலிருப்பது அரிது என்று கூறுமளவிற்கு ஸோலாவின் நாவல்கள் சமுகத்தை ஒட்டு மொத்தமாக அதன் அனைத்து விபரங்களுடன் படம்பிடித்துள்ளன.
ஸோலாவின் நாவல்கள் அனைத்தும் நீண்ட அவதானங்களின் பின் வரையப்பட்டவை.
சமுக-பொருளாதார உறவுகள் மாற்றங்கண்டு, அதன் காரணமாக வர்க்கங்களுக்கிடையேயான உரசல் நிலையும், போராட்டங்களும் வெடித்த ஒரு காலகட்டத்தில், ஒரு சிறந்த பத்திரிகையாளனின் பாணியில் ஸோலாவின் நாவல்கள் படைக்கப்பட்டன. குறிப்பாக 1877 ம்ஆண்ட வெளியாகிய "அசொமுவார்" எனும் நாவல் அடிமட்ட உழைக்கும் வர்க்கத்தின் நாளாந்த வாழ்க்கையையும் அவர்களின் இன்னல்களையும் வெளிக்கொணர்ந்து ஸோலாவை முதன்முதலில் இக்கிய உலகின் மேல்மட்டத்திற்குக் கொண்டு வந்த நாவலாகும். இந்நாவலினால் பெற்ற வருமானத்தில்தான் ஸோலா 'மெடொன்' எனுமிடத்தில் தனது நிரந்தர இருப்பிடத்தையும் வாங்கிக் கொண்டார். 1885 ல் வெளியான "ஜேர்மினல்" எனும் நாவல், நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் கடினமான வாழ்வையும் அவர்களின் போராட்டங்களையும் நுண்விரங்களோடு சித்தரிப்பது. இந்நாவலை எழுதுவதற்குமுன் ஸோலா நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுடன் பல மாதங்கள் வாழ்ந்து அவர்களின் வாழ்பனுபவங்களை நேரடியாக உள்வாங்கிக் கொண்டார். 'லு குயூரே' , "நாநா" போன்ற நாவல்களும் புகழ்பெற்றவை.
ஆறு வருடங்களாக ஒரே வீட்டில் ஒன்றாக வாழும் தன் வாழ்க்கைத் துணையான கப்ரியல் மெலே என்னும் பெண்ணைத் தனது முப்பதாவது வயதில் ஸோலா திருமணம் செய்து கொள்கின்றார். விசுவாசமும், தியாக உணர்வும் கூடிய இப்பெண்ணுடன் நீண்ட கால வாழ்க்கையை வாழுகின்ற போதும், நாற்பத்தியெட்டு வயதாகும் வேளையில், ஆடை தோய்க்கும் இருபது வயது நிரம்பிய, இளமை வனப்புடைய நங்கையான ஜான் றோஸ்ரோவுடன் ஸோலாவிற்குக் காதலுறவு ஏற்படுகின்றது. ஸோலாவிற்கு இளமையை மீண்டும் திரும்பப் பெற்றதுபோலான ஒரு வாழ்வு மகிழ்வழிக்கிறது. இப்பெண்ணுடனான காதலுறவில் ஸோலா ஒரு பெண் குழந்தைக்கும் ஒரு ஆண் குழந்தைக்கும் தந்தையாகின்றார்.
அநீதியான முறையில் குற்றம் சாட்டப்பட்ட யூதரான கப்ரன் ட்றபுயிஸ் ன் விடயத்தில் தலையிட்ட ஸோலா, "நான் குற்றஞ்சாட்டுகிறேன்" என்ற தலைப்பில் அக்கால ஜனாதிபதிக்கு "வைகறை" என்னும் பத்திரிகையில் எழுதிய பகிரங்கக் கடிதம் பிரான்ஸில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், ஸோலாவிற்கெதிராக யுத்தத்திற்கான அமைச்சரின் கோபக் கனலையும் திசை திருப்பியது. ஒரு வருடச் சிறைத்தண்டனையும் மூவாயிரம் பிராங்குகள் அபராதமும் ஸோலாவிற்கான தண்டனையாக வழங்கப்பட்டன. ஆனால், ஸோலா இங்கிலாத்திற்குத் தப்பிச் சென்று விட்டார். விரைவில் தண்டனை மேல்முறையீட்டில் நீக்கப்பட்டு ஸோலா மீண்டும் நாட்டுக்குத் திரும்பினார். ஒரு எழுத்தாளன் என்ற வகையில் ஸோலா தனது முழுச் செல்வாக்கையும் பயன்படுத்தி அநீதிக்கெதிரான குரலை எழுப்பியது இன்றுவரை அவருக்குச் சர்வதேசிய ரீதியான புகழை ஈட்டிக்கொடுத்துள்ளது.
எமில் ஸோலா 1902 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது வீட்டில் மர்மமான முறையில் மூச்சடைப்பால் இறந்தார். இம்மரணம் விபத்தினாலானதா அல்லது திட்டமிட்ட கொலையா என்பது பற்றிய விவாதங்கள் இன்னமும் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளன. 1908 ம் ஆண்டு அன்னாரின் சாம்பல் "பந்தயோன்" எனும் மாமனிதர்களின் உயர்பீடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


மேலும் சில...
ஆந்த்ரே ஜீத் (1869-1951): ஒரு அறிமுகம்
அல்பிரட் து மியூசே
குயிஸ்தாவ் ப்ளோபேர்
விக்டர் ஹியூகோ
சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்ல் போதலயர்.
பல்ஸாக் அல்லது நுண்விபரிப்பின் அறுதிப் பலம்.

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 29 Mar 2024 05:14
TamilNet
HASH(0x555c8fa264a8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 29 Mar 2024 05:14


புதினம்
Fri, 29 Mar 2024 05:14
















     இதுவரை:  24715130 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4400 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com