அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 15 July 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow பிரெஞ் படைப்பாளிகள் arrow விக்டர் ஹியூகோ
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


விக்டர் ஹியூகோ   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: க.வாசுதேவன்  
Friday, 02 September 2005

The supreme happiness of life is the conviction that one is loved;  loved for oneself, or better yet, loved despite oneself. (victor Hugo)

victor Hugoபாரிஸ் கம்யூனின் கொள்கையை நான் முழுதாக  ஆதரிக்கிறேன். ஆனால், அந்தக் கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கும்  மனிதர்களின் செயற்பாடுகள் முழுவதையும் நான்  ஆதரிக்கவில்லை எனக் கூறிய ஹியூகோ, அவர்களுக்கு  அடைக்கலம் கொடுத்த செயலானது, துன்பநிலையிலிருக்கும்  மனிதர்களில் எவரும் எனக்கெதிரிகளல்ல என்ற அவரின்  மனிதாபிமானக் கோட்பாட்டுடன் இசைவானது. மரண  தண்டனைக்கெதிரான ஹியூகோ வின் போராட்டமும்  இவ்வகையானதே.

மறுமலர்ச்சிக்காலம் முதல் நொதித்த மக்கள் சினம் வெடித்து  18ம் நூற்றாண்டின் இறுதியில்,பிரான்ஸில், முடியாட்சிக்கும்  தேவாலயத்திற்கும் உயர் குடிகளுக்குமெதிரான மாபெரும்  புரட்சியாக உருவெடுத்தது.
இந்த மாபெரும் பிரஞ்சுப் புரட்சி சுயநலவாதிகளாலும்  பயங்கரவாதிகளாலும் அதன் முடிவிற்கு வராமலே  பரிதாபமாகப் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து , அரசியல்  சீர்குலைவுகளையும் பாதுகாப்பு உறுதியின்மைகளையும்  பயன்படுத்தி இராணுவவீரன்
நெப்போலியன் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி தன்னைச்  சக்கரவர்த்தியாகப் பிரகடனம் செய்த மூன்று ஆண்டுகளின்  பின்னர் பிறந்தார் 19ம் நூற்றாண்டின் மிகப்பெரிய  பிரஞ்சுக்கவிஞர் விக்டர் ஹியூகோ.
பிரஞ்சுப்புரட்சியில் முடியாட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு,  சுதந்திர ஜனநாயகக் குடியரசு நிறுவப்பட்டு,  "சுதந்திரம்,சமத்துவம், சகோதரத்துவம்" என்ற கோசம் தாரக  மந்திரமாக மாறியிருந்த காலத்தில், ஆபத்துக்குள்ளான  முடியாட்சியை மீண்டும் நிலைநிறுத்தும் பட்சத்தில் அண்மைய  ஐரோப்பிய முடிமன்னர்கள் பிரான்ஸின்மீது போர்  தொடுத்தபோது, 64 வயதாகியிருந்த யோசப் ஹியூகோ  நாட்டையும் குடியரசையும் காப்பாற்ற இராணுவத்தில் பயிற்சி  பெற்று எல்லைப்புற யுத்தத்திற்குச் சென்றார்.
குடும்பத்தில் அவரது ஐந்து ஆண்பிள்ளைகளும் யுத்தத்தில்  இணைந்தார்கள். அவர்களில் இருவர் அந்நியப்படைகளினால்  களத்தில் கொல்லப்பட , மிகுதி மூவரும் தமது வீர,தீர  இராணுவச் சேவைகளினால் உயர் பதவியை அடைந்தார்கள்.  இம்மூவரில் ஒருவரான லெயோபோலட் ஹியூகோவே விக்டர்  ஹியூகோவின் தந்தையாவார்.
முடியாட்சியில் விசுவாசம் மிக்க பிரான்ஸின் மேற்கத்தைய  பிரதேசமான வோண்டே எதிர்ப்புரட்சி செய்தபோது அதை  அடக்குமுகமாக புரட்சி அரசினால் லெயோபோல்ட் அங்கு  அனுப்பப்பட்டார். அங்குதான் அவர் விக்டர் ஹியூகோவின்  தாயான சொபியைச் சந்திக்கிறார். நெப்போலியனின் ஆட்சியில்  லெயோபோல்ட் இராணுவ ஜெனரலாக இருந்தபோதும் அவரது  மனைவி நெப்போலியனில் வெறுப்புக் கொண்டவராகவே  காணப்பட்டார். விக்டர் ஹியூகோவைப் பொறுத்தவரையிலும்,  இளமைக்காலத்தில் இம்மாவீரனின் தீரச் செயல்களால்  கவரப்பட்டிருந்தபோதிலும், பிற்காலத்தில் தனது தாயாரின்  கருத்துக்களுடனே உடன்பாடுடையவராகவே இருந்தார்.
நெப்போலியனின் இராணுவத்தளபதிகளின் நாட்டுப்பற்றையும்  அவர்களின் மன உறுதியையும் புகழ்ந்து பல கவிதைகளையும்  கூட விக்டர்ஹியூகோ எழுதியுள்ளார்.விக்டர்ஹியூகோவின்  இலக்கிய உலக நுழைவு அவரது 17 வது வயதில் தனது சகோதரர்களுடன் இணைந்து இலக்கியச்  சஞ்சிகையொன்று வெளியிடுவதன் முலம் ஆரம்பிக்கின்றது.  நெப்போலியனின் வீழ்ச்சியின் பின் முடிசூடிக்கொண்ட 18 வது  லூயி மன்னனின் ஆதரவாளராகவும் அவரது ராஜபரம்பரைக்கு  விசுவாசமானவராகவும் அரசியல் நிலைப்பாட்டைக்  கொண்டிருந்த விக்டர்ஹியூகோ ஆரம்ப காலத்தில் ஒரு முடியாட்சி  விசுவாசியாகவே இருந்தார்.அரசபீடமும் அவருக்கு  மானியங்கள் வழங்கி அவரைக் கொரவித்தது.
இளவயதிலேயே தனது இலக்கியப் படைப்புகளிற்கான சிறந்த  பரிசில்களைப் பெற்றுப் புகழீட்டிய இம்மகாகவிஞர் தனது 10  ஆண்டுகால இடைவிடாத இலக்கியப்பணியில் இருபதிற்கும்  மேற்பட்ட கவிதைத் தொகுதிகள், பத்திற்கும் மேற்பட்ட  நாடகங்கள், அதேயளவு நாவல்கள், பயணக்கட்டுரைகள் எனப்  பல்வேறு தரப்பட்ட ஆக்கங்களைப் படைத்துள்ளார்.
செவ்விலக்கியப் பாணியில் ஆரம்பத்தில் எழுதத் தொடங்கிய  போதும், பின்னர் உருவாகிய ரோமான்ரிஸப் போக்கில் தன்னை  இணைத்துக்கொண்ட இக்கவிஞர் தனது இலக்கியத்தை  அரசியலிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாதளவிற்கு சமகால  சமூக,
அரசியல் போராட்டங்களில் தன்னை நெருக்கமாகப்  பிணைத்திருந்தார்.
19 ம் நூற்றாண்டில் பிரான்ஸில் நடைபெற்ற மிகப்பெரிய  அரசியல் மாற்றங்கள் அனைத்திலும் ஆதரவாகவோ  எதிராகவோ கருத்தைத் தெரிவித்து தனது இலக்கியச்  செல்வாக்கை சமுக மாற்றங்களின் முன்னேற்றத்திற்காகப்  பயன்படுத்தினார்.
1848 ல் லூயி-பிலிப் மன்னனின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு,  இரண்டாவது குடியரசு நிறுவப்பட்ட வேளையில், பிரான்ஸின்  இன்னொரு ரோமான்ரிஸக் கவிஞரான லமார்த்தீன் அரச  முதலமைச்சராகி தேர்தல்கள் நடத்தப்பட்ட வேளையில்  விக்டர்ஹியூகோ மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு  செய்யப்பட்டார்.
1849 ல் ஏழ்மையை எதிர்த்து விக்டர்ஹியூகோ ஆற்றிய உரை  வரலாற்றுப் புகழ் வாய்ந்தது.
மூன்று வருடக் குடியாட்சியின்  பின்னர் தேர்தலினால் தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது குடியரசின் தலைவர்  லூயி-நெப்போலியன் அரசைக் கவிழ்த்து மீண்டும்  முடியாட்சியை நிறுவியபோது விக்டர்ஹியூகோ தனது  கடுமையான எதிர்பைத் தெரிவித்தது மட்டுமல்லாமல்  மக்களைப் புரட்சிக்கும் தூண்டினார். இதையடுத்து, அரசனின்  பகைமையைச் சம்பாதித்த கவிஞர் நாட்டைவிட்டுத் தப்பியோடி தனது எழுதுகோல் போராட்டத்தைத் தொடங்கினார்.
குறிப்பாக "தண்டனைகள்" என்ற கவிதைத்தொகுப்பு லூயி-  நெப்போலியனுக்கெதிரான ஒரு நையாண்டித்தொகுப்பாகும்.  பத்தொன்பது வருட அன்னிய வாழ்க்கையின்போதும் விக்டர்ஹியூகோவின் எழுத்துப்பணி சளைக்கவில்லை.அரசனால்  மன்னிப்பு வழங்கப்பட்டு, மீண்டும் நாட்டிற்கு வரும்படி அழைப்பு  விடுக்கப்பட்ட போதும் "சுதந்தரம் நாட்டிற்குள் வரும்போது  நானும் அங்கு வருவேன்" எனக்கூறி அவர் அழைப்பை  மறுத்தார்.
ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் இடைவிடாது  குரலெழுப்பிய விக்டர் ஹியூகோ 1851 ம் ஆண்டில் நடைபெற்ற  முடியாட்சி நிறுவலைத் தொடர்ந்து என்றுமில்லாதவாறு  உறுதியான ஒரு குடியரசுவாதியாகத் தன்னை வெளிப்படுத்திக்  கொண்டார்.
1869 ல் லோசானில் நடைபெற்ற சமாதானத்திற்கான  மாநாடொன்றில் அவராற்றிய உரை ஒடுக்கப்பட்டோரின்  பிரதிநிதியாக அவரை உயர்த்தியது. அவ்வுரையில் பின்வருமாறு  கூறினார்: "நிர்க்கதியாகிக் குரலிழந்தவர்களுக்காக நான் குரல்  கொடுப்பேன். அவர்தம் குறை வார்த்தைகளை நான் நிறைவு  செய்வேன் (...). மனிதர்களின் இரைச்சல் காற்றின்  இரைச்சலைப்போன்று தெளிவற்றிருக்கின்றது. அவர்கள்  கூக்குரலிடுகின்றார்கள். ஆனால் அவர்கள் கூறுவதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  இவ்வாறு கூக்குரலிடுவது எதுவுமே கூறாமலிருப்பதற்குச்  சமமானது. எதுவுமே கூறாமல் இருப்பதானது போராட்டத்தைக்  கைவிடுதலாகும் (...) . நான் அவர்களுக்கு விமோசனம்  தேடுவேன். அவர்களின் குறைகளை வெளிக்கொணர்வேன். நான்  மக்களின் மொழியாயிருப்பேன்."
1871 ல் வெடித்த பிரபல "பாரிஸ் கொம்யூன்" கிளர்ச்சியின்  போது, ஆரம்பத்தில் இக்கிளர்ச்சியை எதிர்த்த போதும்,  நசுக்கப்பட்ட புரட்சியாளர்களுக்குப் புகலிடம் அளித்து  அவர்களுக்காகக் குரல் கொடுத்தார் விக்டர்ஹியூகோ.
ஏழைகளைத் திருடாத வரித்திட்டம், ஏழைகளின் வாழ்நிலையை  உயர்த்தும் சமுக மாற்றங்கள், யுத்தமற்ற அமைதியான  வாழ்க்கை மரண தண்டனையொழிப்பு போன்றவற்றிற்காக  நிரந்தரமாகப் போராடியவர் இக்கவிஞர்.
1885 ல் இவர் காலமானபோது, என்றுமில்லாதவாறு பல  மில்லியன் மக்கள் பாரிசில் திரண்டு இறுதி அஞ்சலி  செலுத்தினர். தனிப்பட்ட வாழ்வில் மிகவும் துன்பகரமான  இழப்புகளையெல்லாம் அனுபவித்த போதும்  ஒடுக்கப்பட்டவர்களுக்கான அவரது போராட்டம் இடைவிடாது  தொடர்ந்தது.
"பாரிஸ் மாதா கோவில்", "பாவப்பட்டவர்கள்",  "கடற்தொழிலாளர்கள்" போன்ற நாவல்கள் அவரின் போராட்ட  ஆயுதங்களாகும். மிகப் புகழ் பெற்ற முதலிரண்டு நாவல்களும்  பல நூற்றுக்கணக்கான தடவை மேடையேற்றப்பட்டும்  திரைப்படங்களாக்கப்பட்டும் உள்ளன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்ஸில் நிலவிய சமூக  ஏற்றத்தாழ்வுகள், அநீதிகள் போன்றவற்றைப் பதிவு செய்த இந்த  மூன்று நாவல்களும் மற்றும் எண்ணிறைந்த கவிதைகளும்  இத்தேசியக் கவிஞரின் சுயநலமற்ற, தூரநோக்குக் கொண்ட,  மனிதாபிமானப் பார்வைகளாகும்.
இறக்கும் தறுவாயில் தனது சொத்தில் ஏழைகளுக்கும் ஒரு  பங்கைக் கொடுத்த விக்டர் ஹியூகோ கடைசியாக எழுதிய  வார்த்தை: "அன்பு செலுத்துதல் என்பது அதைச் செயலில்  காட்டலாகும்".
மிகச்சிறந்த நாட்டுப்பற்றாளராகவும் அநீதி எதிர்ப்பாளராகவும்  இருந்த விக்டர் ஹியூகோவின் 200 வது பிறந்த நாளையொட்டி  பிரான்ஸ் முழுவதும் கருத்தரங்குகள், காட்சிகள் போன்ற  பல்வேறு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
என்றுமில்லாதவாறு அநீதிகளும் சமத்துவமின்மையும்  அதிகரித்துவிட்ட இன்றைய உலகில் இவ்வறிஞரின்-  போராளியின் கருத்துகள் அவற்றை அழிப்பதற்கு உதவினால்  அதுவே அவரின் காலம் கடந்த வெற்றியாகும்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


மேலும் சில...
ஆந்த்ரே ஜீத் (1869-1951): ஒரு அறிமுகம்
அல்பிரட் து மியூசே
குயிஸ்தாவ் ப்ளோபேர்
எமில் ஸோலா
சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்ல் போதலயர்.
பல்ஸாக் அல்லது நுண்விபரிப்பின் அறுதிப் பலம்.

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 15 Jul 2024 19:11
TamilNet
HASH(0x55662f218468)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 15 Jul 2024 19:11


புதினம்
Mon, 15 Jul 2024 19:11
     இதுவரை:  25363913 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4328 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com