அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 15 July 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 24 arrow 'புதிய பார்வை' - நேர்காணல்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


'புதிய பார்வை' - நேர்காணல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மணா  
Tuesday, 21 February 2006
பக்கம் 1 of 4

சென்னையில் இருந்து வெளிவரும் புதியபார்வை டிசம்பர் 16-31 2005  இதழில் இந்நேர்காணல் வெளிவந்தது. பின்னர் அதன் தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் மதி கந்தசாமியால் தட்டெழுத்து செய்யப்பட்டு அவரது வலைப்பதிவில் வெளியரங்கமாகியது. அவரது வலைப்பதிவில் வந்தவையும் விடுபட்ட மிகுதிப் பகுதியும் இணைக்கபட்டு மீள இங்கு பிரசுரமாகின்றது. அத்துடன் புதியபார்வையில் வெளிவந்தபோது இருந்த சில தகவல் சொற்பிழைகள் திருத்தப்பட்டுள்ளது. இதனை தட்டெழுதி தனது வலைப்பதிவில் உள்ளிட்டதுடன், அப்பால் தமிழில் வெளியிட தனது பிரதியை மனமுவந்து அனுப்பியமைக்கு மதி கந்தசாமிக்கு நன்றிகள்.

இலங்கையில் இன்னொரு போரை நாங்கள் விரும்பவில்லை
ஈழத்துக் கவிஞர் கி.பி.அரவிந்தன் நேர்காணல்

"குழந்தை தோளில் சரிகின்றது
நெஞ்சுக்குள் ஏதோ குமைகின்றது
'நீங்கள் அகதியானது உங்களுக்குச் சரி
என்னை ஏன் அகதியாக்கி அலைச்சலாக்கி..'
மடிபற்றி எழுகின்றது கேள்வி"
'கனவின் மீதி' தொகுப்பில் கி.பி.அரவிந்தன்

கிபி அரவிந்தன்'இனி ஒரு வைகறை', 'முகம் கொள்' என்கிற கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து 'கனவின் மீதி' மூலம் ஈழத்துக் கவிதையுலகில் தனியிடத்தை உருவாக்கிக் கொண்ட கி.பி. அரவிந்தனுக்குப் பல முகங்கள். பதினேழு வயதிலேயே வீட்டை விட்டு. போராட்டத்தில் இறங்கிய இவருடைய சொந்தப் பெயர் கிறிஸ்டோபர் ஃபிரான்ஸிஸ். இனப்பிரச்சினையினால் சொந்த நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து பதினைந்து ஆண்டுகளாக பாரீசில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

பல பத்திரிகைகளுடன் இணைந்து தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிற இவர் பி.பி.சி. தமிழோசையின் பாரீஸ் நகர ஃப்ரீலான்ஸ் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறவர். ஐரோப்பிய தமிழ்த் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிற 53 வயதான அரவிந்தன், பல வருட இடைவெளிக்குப் பிறகு சென்னைக்கு வந்திருந்தார். ஹோட்டல் அறை ஒன்றில் இந்த நேர்காணலுக்காகச் சந்தித்தபோது தயக்கங்கள் இல்லாமல் ரொம்ப காலமாகப் பழகிய நண்பரைப்போல பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். புலம்பெயர்வின் இடையறாத வலி தொற்றிய அவருடைய பேச்சு அவர் தங்கியிருந்த அறையைக் கதகதப்பு மிக்கதாக உணரச் செய்திருந்தது.


இனி அவருடன் நிகழ்த்திய நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:

கிபி அரவிந்தன்


கி.பி. அ-ன்:
1953ஆம் வருடம் நான் பிறந்தது யாழ்ப்பாணத்தில். என் தாய் தந்தையரின் சொந்த ஊர் நெடுந்தீவு. என் பள்ளிப்படிப்பை ஆரம்ப காலத்தில் நெடுந்தீவிலும் பிறகு மட்டக்களப்பிலும் அதன்பின் தொடாந்தும் நான் படித்தது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில். எழுபதுகளுக்குப் பின்னால் தீவிரமான இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினேன். என் அப்பா அரசு ஊழியர். உணவுக் கட்டுப்பாட்டு திணைக்களத்தில் வேலை செய்தார். அம்மா மருத்துவ தாதியாக யாழ் மருத்துவமனையில் பணியாற்றினார். நாங்கள் ஏழு பேர். நான் மூத்த ஆள். எனக்குக் கீழ் ஆறு பேர்.

மணா:
1960களிலேயே இனப் பாகுபாட்டுப் பிரச்சினை தொடங்கிவிட்டதா?

கி.பி. அ-ன்:

அப்போது நான் சிறுவனாக இருந்தேன். 60களில் நடந்த முக்கியமான நிகழ்வு சாதி எதிர்ப்புப் போராட்டம். அது கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில்தான் நடந்தது. நான் சிறு பையனாக இருந்தேன். அதில் ஈடுபடவில்லை.

இலங்கையில் தமிழர்கள்  மத்தியில் இறுக்கமான சாதி அமைப்பு இருந்தது. சாதிய ஒடுக்குமுறை நீண்டகாலமாக இருந்து வந்தது. 1965க்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சியினால் சாதி எதிர்ப்பு ஓர் இயக்கமாக முன்னெடுக்கப்பட்டது. மிகப்பெரிய போராட்டமாக மாறி துப்பாக்கிச் சூடுவரை சென்றது. தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையை ஒழித்தல், சமபந்தி போஜனம் போன்றவை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன.


மணா:

தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் எடுத்துக்கொண்ட விஷயத்தை அங்கே பொதுவுடைமை இயக்கம் செய்ததா?

கி.பி. அ-ன்:
ஆமாம். சாதிய அடக்குமுறையை முக்கியமான பிரச்சினையாக பொதுவுடைமை இயக்கம்தான் எடுத்துப் போராடியது. சாதி எதிர்ப்பால் சமூகத்தில் சின்னதொரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. அதனால் சரிவு என்று சொல்ல முடியாது. சமூகக் குலுக்கம் என்று சொல்லலாம். சாதியப் படிநிலைகள் குலுங்கின. அப்போது ஏற்பட்ட சின்ன அதிர்வு, மனோ நிலைகளில் சின்னதொரு மாற்றத்தைக் கொடுத்தது. இந்தச் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட உத்திகள், பயிற்சி முறைகள் பின்னாளில் ஈழப் போராட்டத்தில் உதவியாக இருந்தன. ஈழத்தின் ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சியில் இந்தச் சாதி எதிர்ப்புப் போராட்டம் முன்னோடியாக இருந்தது.

மணா:
இந்தப் போராட்டம் இலங்கையின் எந்தப் பகுதியை முன்னிறுத்தி நடந்தது.

கி.பி. அ-ன்:
சாதிய அடக்குமுறையின் தீவிரம் வெளிப்படையாக தெரிய வந்தது குடா நாட்டில்தான். இங்குதான் மக்கள் செறிவாக வாழ்ந்தார்கள். அதனால் சாதிய ரீதியான பிரச்சினை துலாம்பாரமாக தெரிய வந்தது. அதற்கான போராட்டம் கட்டாயத் தேவையாகவும் இருந்தது. அந்தப் போராளிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் பற்றிய அறிவுதான் பிறகு ஏற்பட்ட போராட்டத்திற்கு கைமாற்றப்பட்டது.

மணா:
தமிழகத்தில் 1960களில் மாணவர்கள் மத்தியில் இயல்பான மொழி உணர்வு, இன உணர்வு பரவலாக ஏற்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில் திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வருவதற்கு அதுதான் பின்னணியாக அமைந்தது. அதுமாதிரியான ஓர் உணர்வு இலங்கையில் இருந்ததா?

கி.பி. அ-ன்:
1950, 60களில் தீவிரமான செயல்பாடு கொண்டதாக கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. இலங்கை அளவில் அரசியல் ரீதியாக செல்வாக்கு படைத்தவர்களாக இருந்தார்கள்.  தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த தேசிய உணர்வு, தேசியம் பற்றியதான சிந்தனை தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அப்போது எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. அதனால்தான் அது மக்களிடம் சரிவை சந்தித்தது. மக்களின் உணர்வை அவர்கள் முழுமையாகப் புறக்கணித்தார்கள். இலங்கை என்கிற தேசிய அளவிலான பார்வையுடன் எதையும் பார்க்க வேண்டும் என்பதான உணர்வில் கம்யூனிஸ்ட் கட்சியினர் இருந்தார்கள். ஆனால் இவர்கள் தொடக்க நிலையில் தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று பேசியவர்கள்தான். பிறகு மாறிவிட்டார்கள்.

மணா:
அந்தக் காலகட்டத்தில் அரசியல் உணர்வென்பது தவிர்க்க முடியாத விஷயமாக மாணவர்களிடம் இருந்ததா?

கி.பி. அ-ன்:
பொதுவாக இலங்கைத் தமிழர்களிடம் தமிழரசுக் கட்சியின் செல்வாக்குதான் அதிகம் இருந்தது. அக்கட்சியின் கருத்தோட்டம், எண்ணப்போக்கு என்பது இங்கிருந்த (தமிழகம்) திராவிட இயக்கத்தின் மொழி பற்றியதான கருத்துக்கள் எல்லாம் கிட்டத்தட்ட இணைவாக்கம் கொண்டதாக இருந்தன.

தமிழ் உணர்ச்சியை ஊட்டி ஊட்டி, மேன்மைப்படுத்தி அதைத்தான் தமிழரசுக் அக்ட்சியினர் அரசியலாக்கினார்கள். ஆனால் அதற்கேற்ற வகையில் செயல்திட்டங்களோ, அதை வழிநடத்தும் முறைகளோ அவர்களிடம் சரியாக அமையவில்லை. இலங்கை அரசியலில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதில்தான் அவர்களுக்குக் கவனம் இருந்தது. அதை வைத்துக்கொண்டு தமிழ்பேசும் மக்களுக்குட் தீர்வைப்பெற்றுத் தர முயற்சித்தாலும் தோல்விதான் ஏற்பட்டது.

1965இல் தமிழரசுக் கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் சேர்ந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கிறார்கள். அதில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர் அமைச்சராகிறார். ஆனால் பாராளுமன்றத்தில் அடையாள அட்டை மசோதா போன்று மிக மோசமான சட்டங்களைக் கொண்டு வருகிறபோது தமிழரசுக் கட்சிக்குள் இருந்த தீவிரமான கருத்துக் கொண்டவர்களுக்கு இடையில் பெரிய முரண்பாடு தோன்றியது. தேசிய ரீதியிலான தீவிர நிலை எட்டும் அதே வேளையில்தான், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முனைப்பாக முன்னெடுக்கிறது கம்யூனிஸ்ட் கட்சி.

1968 ஆம் ஆண்டு முக்கியமான காலகட்டம். மாணவர்கள் உலகில் எழுச்சிகளும், போராட்டங்களும் நிகழ்ந்தன. 65-70 காலகட்டத்தில் பார்த்தீர்கள் என்றால் வியட்நாம் போர், சேகுவாராவின் கொலை என உலகம் முழுவதும் வெவ்வேறான நிலைமை. 1970ல் இலங்கையில் புதிய ஆட்சி. ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியும் எல்எஸ்பியும் கம்யூனிஸ்ட் கட்சி எனச் சிறு சிறு கட்சிகள் சேர்ந்து ஆட்சிக்கு வருகிறார்கள்.

உடனடியாக அவர்கள் வந்து கல்வி பற்றியதான ஒரு கொள்கையை வெளியிடுகிறார்கள். அது தமிழ் மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயம். தரப்படுத்துதல் என்ற முறையில் சொல்லப்பட்டது. இதை எதிர்த்து மாணவர்கள் அணிதிரண்டு வீதிக்கு வருகிறார்கள். அது கல்வி அடிப்பையில் கொண்டு வரப்படவில்லை. இன ரீதியான ஒடுக்குமுறை என்று சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இன்றைக்கு முக்கியமாக இருக்கிறவர்களின் அரசியல் பயிற்சிக்கான தொடக்கநிலையாக அதைச் சொல்லலாம். 'நானும் மாணவர்களின் அந்தப் பேரணியில் கலந்து கொண்டேன்' என்று பலரும் சொல்லுமளவிற்கு அது ஒரு தொடக்கப்புள்ளியாக இருந்தது.

மணா:
உங்கள் குடும்ப அளவில் ஏதும் பாதிப்பு நிகழ்ந்ததா?

கி.பி. அ-ன்:
என் தந்தைக்கு பெரியார் கருத்துகளின் மீது ஈடுபாடு உண்டு. வீட்டில் நிறையப் புத்தகங்கள் வைத்திருந்தார். என்னுடைய சிறுவயதில் அவர் திராவிட கருத்துக் கொண்டவராக இருந்தார். ஆசைத்தம்பி, மு.கருணாநிதி, மதியழகன், சி.பி.சிற்றரசு, இப்படி பலரின் புத்தகங்கள் அவரிடம் இருந்தன. ஒரு பெட்டிக்குள் வைத்திருந்தார். பதினைந்தாவது வயதில் புத்தக வாசிப்புத் தொடங்கும்போது பெரியார் மீது எனக்கு விருப்பம் வந்தது. அன்றைக்கு பெரியாரின் சிந்தனைகளை சரியாகப் புரிந்துகொண்டிருப்பேனா என்று தெரியவில்லை. ஆனாலும் வீட்டிற்குள் ஒரு கலகக்காரன் மாதிரி மாறினேன். கிறிஸ்துமஸ¤க்கு எல்லோரும் புது உடுப்புப் போடுவார்கள். நான் போடமாட்டேன். இப்படி அந்த வயதுக்கேற்ற சின்னச்சின்ன கலகங்கள்.

அப்பா நூலகத்திற்குச் சென்று புத்தகங்கள் எடுத்து வந்து வாசிப்பார். கல்கி, அகிலன் என அந்தக் காலத்து எழுத்தாளர்கள்ன் நாவல்களை வாசிப்பது பழக்கம். வீட்டில் எப்போதும் பேப்பர் வாங்குவார்கள். நெடுந்தீவில் என்னுடைய அம்மாவின் பெரிய அண்ணர் வீட்டில் தங்கிக்கொண்டு படித்தேன். அந்த ஊருக்கு வள்ளம்(படகு) வந்தால்தான் பேப்பர் வரும். அதை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். அந்த பேப்பரை வாசித்தபிறகுதான் மற்ற வேலைகளைப் கவனிப்பார்கள்.

நான் மதத்தால் ஒரு கத்தோலிக்கன். கத்தோலிக்க மத வெளியீடுகள் நிறைய வந்தன. எப்படியோ பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கம் தொடர்ந்தது. அதேவேளையில் யாழ் மத்தியக் கல்லூரியில் இரண்டு பேராசிரியர்கள் முக்கியமானவர்கள். எனக்கு வரலாறு படிப்பித்தவர் தமிழ்நாட்டில் உள்ள பச்சையப்பன், கிறித்தவக் கல்லூரிகளில் படித்தவர். திராவிட இயக்கக் கொள்கைக்காரராக இருந்தார். அண்ணாவின் திராவிட நாடெல்லாம் படித்தவர். அவர் பிரெஞ்சுப் புரட்சி பற்றியெல்லாம் சொல்லித் தரும்போது வெகு ஆர்வத்துடன் சொல்வார். எங்களுக்கு நெப்போலியன் பற்றி நிறைய கற்பனைகள் வரும்.

யூசுப் மாஸ்டர் என்று ஒருவர். அவர் ஜனநாயகம், வாக்களிப்பது எல்லாம் பொய் என்பார். என்ன ஜனநாயகம் என்பார். நாங்கள் படிக்கும்போது இலங்கை கல்வி அமைச்சகம் 'சியவச' என்ற பரிசுத் திட்டத்தை அறிவிக்கிறது. இதை எல்லா மாணவர்களும் வாங்க வேண்டும் என்கிறார்கள். அது சிங்களத்தில் இருந்தது. தமிழர்கள் வாங்கக்கூடாது என்று புறக்கணித்தோம். கல்லூரித் தேர்வுகளை ஒரு மண்டபத்தில் எழுதிக்கொண்டிருக்கும்போது ஒரு ஆள் வந்து ஒவ்வொரு டேபிளிலும் டிக்கெட் வைத்துவிட்டுப்போனார். "பரீட்சை எழுத மாட்டோம்; டிக்கெட் வாங்க மாட்டோம்" என்று மறுத்தோம். இப்படி எங்களை முடுக்கி விட்டது அந்த வாத்தியார்தான்.

நான் மாணவர் நிலையில் தமிழரசுக் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்தேன். அவர்கள் புரட்சிகரமாக எதாவது செய்வார்கள் என்று நம்பினேன். பகத்சிங்க் பற்றியெல்லாம் படித்திருக்கிறேன். ர.சு.நல்லபெருமாளின் 'கல்லுக்குள் ஈரம்', போராட்டம் நாவல்களைப் படித்த அனுபவம். இதெல்லாம் சேர்ந்து எண்ணங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தன.

எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கிறது. அப்போது நாங்கள் அயர்லாந்துப் போராளி 'தான்பிரீன்' பற்றிய புத்தகத்தை ரகசியமாக வைத்திருந்து வாசிப்போம். ஒவ்வொருவராக ரகசியமாகப் பரிமாறிக்கொள்வோம். 'எரிமலைத் தியாகிகள்' என்ற புத்தகத்தை அப்படித்தான் படித்தோம். எல்லாம் தனிச்சுற்றுகளாகச் சுற்றி வரும். கீழ் இயக்கம் ஒன்றைத் துவக்குவதற்கான மனோநிலை அப்போதே தொடங்கியது. இப்படி ஒரு சூழல் உருவாகத் தொடங்கியது.

1972-இல் இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்குகிறார்கள். இதுவரை பிரிட்டிஷாரால் வரையப்பட்ட அரசியலமைப்பை இவர்கள் தங்களுக்கானதாகச் செய்யவேண்டும் என்று புதிய அரசு அறிவிக்கிறது. இந்தப் புதிய அரசியலமைப்பு எப்படி இருக்கப்போகிறது, அதில் இங்கே வாழும் தமிழ் பேசும் மக்களுக்கான நிலைமை என்ன, இவர்களுக்கான அதிகாரங்களை எப்படிப் பங்கிடப் போகிறார்கள்? என்பது போன்ற விவாதங்களை எல்லாக் கட்சியினரும் பேசத் தொடங்குகிறார்கள். இதை எதிர்கொள்வதற்காக ஒரே தலைமையாக ஐக்கிய முன்னணியாக இணைய வேண்டும் என்று கருத்தெல்லாம் தமிழ் பேசும் மக்களிடம் இருந்தது.

1972-ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்புச் சட்டம் வரையப்படுவதற்கு முன்பு தமிழர் கட்சிகளெல்லாம் சேர்ந்து ஒரு கோரிக்கையை வைக்கிறார்கள். அது நிராகரிக்கப்படுகிறது. 1972, மே 22ஆம் தேதி இலங்கை குடியரசாக பிரகடனம் செய்யப்படுகிறது. இலங்கை சிலோன் என்ற பெயரில்லாமல் ஸ்ரீலங்கா என்ற புதிய பெயர் அறிவிக்கப்படுகிறது.

அந்த நாளை தமிழர்களின் கரி நாள் (கறுப்பு நாள்) என்று தமிழர்களின் ஐக்கிய முன்னணி அறிவிக்கிறது. மக்கள் வேலைக்குச் செல்லக்கூடாது. கறுப்புக் கொடி ஏற்றி துக்க நாளாக கொண்டாட வேண்டும் என்று 15ஆம் தேதியிலிருந்தே அதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. 'மாணவர்களே பள்ளிக்குச் செல்லாதீர்கள்! ஊழியர்களே அலுவலகங்களுக்குச் செல்லாதீர்கள்!' என்று ஒரு துண்டுப்பிரசுரத்தை ஐக்கிய முன்னணி வெளியிட்டது. நாங்கள்  மாணவர்களாக இருந்தபோது அந்தப் பிரசுரத்தை விநியோகித்தோம். அப்போது போலீஸ் என்னையும் சேர்த்து மூன்று பேரைக் கைது செய்கிறது. அதற்குப் பிறகு தலைவர்கள் 'எங்களையும் கைது செய்யுங்கள்' என்றார்கள். அதெல்லாம் ஒரு துவக்கம்.
மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 15 Jul 2024 19:11
TamilNet
HASH(0x55662f218468)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 15 Jul 2024 19:11


புதினம்
Mon, 15 Jul 2024 19:11
     இதுவரை:  25364092 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4475 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com