அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 16 July 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 24 arrow 'புதிய பார்வை' - நேர்காணல்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


'புதிய பார்வை' - நேர்காணல்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: மணா  
Tuesday, 21 February 2006
பக்கம் 4 of 4

மணா:
நீங்கள் போர்ச் சூழலிருந்து மீண்டு நிம்மதி தேடிவந்த மண்ணில் நிகழும் கலவரங்கள் உங்களை எந்த அளவிற்கு மனநிலையைப் பாதித்திருக்கிறது?

கி.பி.அ-ன்:
எங்களுடைய சமூகம் பாரீசை சொர்க்கம் போலத்தான் நினைத்த்து. ஒருவகையான அரசியல் அறிவும், இந்தப் போக்குகளை அறிந்தவன் என்ற முறையில் எனக்கு எப்போதும் அச்ச உணர்வாகவே இருந்தது. எங்கள் மேல் எதுவும் நடக்கலாம் என்றுதான் நினைத்தேன். நான் முதலில் சொல்லும்போது யாரும் நம்புவதாக இல்லை. எதிர்மறையாக கதைத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்கள். ஜெர்மனியில் நாசிஸம் என்பது கண்ணுக்கு முன் நடந்த ஒரு வரலாறு. பிரான்சிற்கு வந்தவுடன் நாங்கள் எப்படி நடத்தப்படுகிறோம் என்பது புரிந்துவிட்டது. பிரான்ஸ் மிகப்பெரிய காலனிகளைக் கொண்ட நாடு. அங்கு மக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை கண் முன்னால் பார்க்க முடியும்.

மணா:
கலவரச் சூழல் உருவானதற்கான காரணம் என்ன?

கி.பி.அ-ன்:
தங்களுடைய காலனிகளை விட்டுவிட்டு மக்கள் வருகிறார்கள். தவிர்க்கமுடியாமல் பாண்டிச்சேரியில் வழங்கிய மாதிரி பலருக்கு குடியுரிமை வழங்குகிறார்கள். அவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். இதைவிட முக்கியமான நிலைமை, இரண்டாவது உலகப் போரில் ஐரோப்பா பாதிக்கப்படுகிறது. அதைப்போல பிரான்சும் பாதிக்கப்படுகிறது. இப்படி பாதிக்கப்பட்ட பிரான்சைக் கட்டி எழுப்புவதற்கு தொழிலாளர்கள் தேவை. அந்தத் தொழிலாளர்களை தங்கள் காலனிய நாடுகளிலிருந்து வரவழைத்தார்கள். குடியிருக்க வீடு, குடியுரிமை இப்படிக் குடிப்பெயர்வுக்கு என்னென்ன வசதிக்ளோஅவற்றைச் சொல்லி அழைத்து வருகிறார்கள்.

கட்டுமான வேலைகளுக்குக் காலனி மக்களை பயன்படுத்தியதற்குப் பின்னால் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலோ, அவர்களுடைய சமூகத்தோடு தங்களை இணைத்துக் கொள்வதிலோ இவர்கள் அக்கறை காட்டவில்லை. அதனால் தனித்துப் போனார்கள். இதற்கு காலனி மக்களும், பிரான்ஸ் அரசும் காரணமாக இருக்கலாம். அவர்கள் பிரான்ஸிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. அந்த மக்களின் ஐந்தாவது தலைமுறை இங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறது. இன்னமும் வெளிநாட்டவர்களாகவும் இழிவான சொற்களில் அழைக்கப்படுகிறவர்களாகவும்தான் அவர்களை வைத்திருக்கிறார்கள். இந்த காலனி மக்கள் வட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவற்றை 'பிரெஞ்சு மொழி வலைய நாடுகள்' என்கிறார்கள்.

தங்களுடைய சுகாதாரம் கவனிக்கப்படுவதில்லை; கல்வி போதிக்கப்படவில்லை; வீட்டு வசதி சரியாக வழங்கப்படவில்லை என்ற குமுறல் அவர்களிடம் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது.

மணா:
இதுதான் கலவரத்திற்குக் காரணமா?

கி.பி.அ-ன்:
இவை குமுறலாகவே இருந்துகொண்டிருந்தது. அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் சரியாகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை; உருவாக்கப்படவில்லை. அதையும்விட அதிகமாக திட்டமிட்டே ஒதுக்கப்பட்டார்கள். விண்ணப்பங்களில் பெயரைப் பார்த்தே வேலைக்கு அனுமதிக்காத நிலைமையெல்லாம் இருந்தது.

இன்னும் நுணுக்கமாகப் பல்வேறு சம்பவங்களைச் சொல்ல முடியும். பிரான்ஸ் தனது கருத்தாக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதை அறிவித்தது. பிரெஞ்சுப் புரட்சி நடத்தப்பட்டது. இலக்கிய ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தது பிரான்ஸ். இலக்கியச் செழுமையும் நாகரீகம், பண்பாடு கொண்ட நாடாகவும்தான் நாங்கள் அதைப் பார்த்தோம். ஆனால் உள்முகமாக அவர்கள் நேர் எதிராக இருந்திருக்கிறார்கள் என்பது இந்தக் கலவரம் மூலம் தெரிய வருகிறது. இவ்வளவு காலம் தெரியவில்லை. சொன்னால் யாரும் நம்பவுமில்லை.

இதுவரை இந்த பிரான்சில் மாபெரும் இலக்கியம் படைத்தவர்கள், மாபெரும் கருத்தாளர்கள், தத்துவவியலாளர்கள் ஏன் இந்தப் பிரச்சினையைப் பற்றி சொல்லவில்லை. அவர்கள் பேசிய இலக்கியம் என்ன? இந்தக் கலவரம் கொழுந்துவிட்டு எதிர்ந்த பின்னர் சமூக நீதி மறுக்கப்பட்ட நிலை இருக்கிறது. அதைத் திருத்தி அமைக்க வேண்டும். புதிதாக திட்டங்கள் போட இருக்கிறோம் என்று அறிவிக்கிறார்கள்.

உலகம் இன்று வறுமை நிலையை அடைந்து கொண்டிருக்கிறது. வறுமையான நாட்டு மக்கள் வளர்ச்சியடைந்த நாடுகளை நோக்கி ஈசல்கள் போல குவிந்து வருகிறார்கள். பொருளாதார ரீதியான அகதிகளாக வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நெருக்கடியை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. உலகில் அவர்களுடைய பிடிமானங்களும் தளர்ந்த நிலையில் போய்க்கொண்டு இருக்கிறது. சவாலாக கிழக்கு எழுந்து கொண்டிருக்கிறது. இன்று ஐரோப்பாவிற்கு அடுத்து இந்தியாவும், சீனாவும்தான் இன்று உலகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன - ஐரோப்பாவிற்கு அடுத்து.

இந்நிலையில் மக்கள் குவிய குவிய அந்த நாடுகளில் பொருளாதாரம், நிறவாதம், இனவாதம் அதிகரிக்கிறது. தீவிரமாக பேசுகிறவர்களுக்கு செல்வாக்கு அதிகம். அவர்களின் செல்வாக்கைத் தடுப்பதற்காக மரபுவழி அரசியல்வாதிகள் தீவிரவாதத்தை கையில் எடுத்தபோது விளைந்ததுதான் இந்தக் கலவரம். தீவிரவாத சக்திகள்போல இனவாத கருத்துக்களை முன்வைத்து தாங்களும் அவ்வாறானவர்கள்தான் என்று வாக்கு அரசியலுக்காக சில அரசியல்வாதிகள் நடந்துகொண்ட முறை மக்களை அவமதிப்பதாக இருந்தது.

மணா:
இக்கலவரம் புலம்பெயர்ந்த தமிழர்களை ஏதும் பாதித்ததா?

கி.பி.அ-ன்:
புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஏதும் நடக்கவில்லை. பொது அரசியலில் அவர்கள் ஈடுபடவில்லை. ஆனால் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைக்கு போலீசாரால் சுடப்பட்டதுபோல நாளைக்கு எங்களுக்கும் நடக்கலாம். எங்கள் இலங்கைத் தமிழர்கள் இரண்டு பகுதியினரால் அடிபடுவார்கள். ஒன்று ஐரோப்பியர்களிடம். இரண்டு எங்களைப் போல குடியேறியவர்களிடம் அடிவாங்குவார்கள். இந்த இருவரில் எவர் பக்கமும் தமிழர்கள் இல்லை. இப்பொழுதுதான் தமிழர்கள் கண்டுகொண்டிருப்பார்கள். அராபிய, ஆப்பிரிக்க இளைஞர்களின் கோபம் எவ்வளவு ஆபத்தானது என்று.


மணா:
நீங்கள் 90-இல் புலம்பெயர்ந்து விட்டீர்கள். அதற்கிடையில் அமைதி பேச்சுவார்த்தை, நார்வே தலையீடு என பல நிகழ்வுகள் இலங்கையில் தொடர்ந்து நடந்திருக்கின்றது. இப்போது புதிய அதிபர் ராஜபக்சே மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என்று சொல்லியிருக்கிறார். இந்நிலையில் திரும்பவும் ஈழத்திற்குப் போகவேண்டும் என்ற உந்துதல் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் ஏற்பட்டுள்ளதா?

கி.பி.அ-ன்:
புலம்பெயர்ந்த தமிழர்களுக்குத் தங்கள் தாயகம் மீதான ஒரு விருப்பம் இருக்கிறது. பலவற்றை இழந்துவிட்டோம். திரும்பப்போய் அதை அடைய வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதே வேளையில் இவ்வளவு கடுமையாக உழைக்கவேண்டியதில்லை என்ற மனநிலையும் இருக்கிறது. உண்மையில் அங்கொரு அமைதியான சூழலொன்று தோன்றுவதை மனதார விரும்புகிறார்கள். அங்கு சென்று சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு அமைதியாக வாழலாம் என்றும் நினைக்கிறார்கள். இன்னொரு போர் பற்றிய விருப்பமின்மைதான் அவர்களிடம் இருக்கிறது.

ராஜபக்சே போரின் ஒரு குறியீடாகத்தான் பார்க்கப்படுகிறார். அவருடைய கூற்றும், பேச்சும், பின்னணியும் போரின் அறைகூவலாகத்தான் இருக்கின்றன. அவர் இன்னுமொரு பண்டார நாயக, ஜெயவர்த்தன போலவேதான் தனது முகத்தைக் காட்டுகிறார். இது ஒருவிதமான அச்சத்தை தோற்றுவித்திருக்கிறது.

அதேசமயம், இவருடைய கடும்போக்கினால் ஏதோவொரு நிலையில் ஒரு முடிவுக்கு வரும். இனி நீண்டகாலத்திற்கு இழுபட்டுச் சொல்கிற வாய்ப்பை இவருடைய வருகை குறித்துள்ளது. நல்லதொரு தீர்வை நோக்கி நகரப்போகிறோம் என்பதான நம்பிக்கையும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

மணா:
ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியேறி வசதியாக வாழ்கிற தமிழர்களுக்கு இங்கேயே வாழ்ந்துவிடலாம்; இலங்கைக்குச் செல்ல வேண்டாம் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறதே?

கி.பி.அ-ன்:
போருக்கு முன்பே சில புலம்பெயர்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. மலேசியாவிற்கு 1800களிலேயே சென்று அங்கு மலேசிய யாழ்ப்பாணத் தமிழர்களாக வாழ்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து ஈழத்திற்கு வந்த கதைகளும் உண்டு. இப்படி புலம்பெயர்வுகள் தொடர்ந்து நிகழ்ந்துள்ளன. இலங்கை சுதந்திரமடைந்த காலகட்டத்திலும் இலண்டன் போன்ற நகரங்களுக்குச் சென்று குடியமர்ந்துள்ளார்கள்.

இப்போது குடியேறியவர்களும் சொத்துகளோடு இருக்கிறார்கள். நாங்கள் பழுத்த இலைகள். எங்களுடைய தீர்மானம் பெரிதாக எடுபடப்போவதில்லை. ஏனென்றால் புதிய குருத்துகளான தலைமுறை வந்துவிட்டது. அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதுதான் முக்கியமானது. அவர்களை விட்டுவிட்டு நாங்கள் என்ன செய்யமுடியும். இதில் நிறைய கேள்விகள் இருக்கின்றன. பிள்ளைகளுக்கு எவ்வகையான உணர்வுகளைக் கொடுத்து வளர்த்திருக்கிறோம் என்பதில்தான் எங்களுடைய எதிர்காலம் இருக்கிறது.

38 வருட காலம் ஊரில் வளர்ந்த எனக்கிருக்கிற பற்றிற்கும், நான் கொண்டிருக்கிற ஊர் பற்றியதான கனவிற்கும், ஊரே தெரியாமல் பிறந்து வளர்ந்து வருகிற பிள்ளைகளின் கனவிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.

மணா:
புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகள் அங்குள்ள சூழலோடு எளிதாக கலந்திருக்கிறார்களா?

கி.பி.அ-ன்:
அங்குதான் பிறந்து வளர்ந்திருக்கிறார்கள். அந்த மொழியில் கல்வியை கற்கிறார்கள். வீட்டில் எங்கள் மொழ்யை, சாப்பாட்டை உண்டு வளர்ந்தாலும் அவை அவர்கள் எடுக்கிற தீர்மானங்களுக்கு உதவியாக இருக்கும் என்று சொல்லமுடியாது. பாரீஸில் இருந்தாலும் இப்படி இருக்கலாம்தானே? வெள்ளிக்கிழமைகளில் சோறு சாப்பிடவேண்டும். முக்கியமான நாட்களில் சேலை கட்ட வேண்டும். சாமி கும்பிட வேண்டும். அம்மாவிற்கு வணக்கம் சொல்ல வேண்டும்; வீட்டில் ஒரு குத்துவிளக்கு இருக்க வேண்டும். 'அப்பவும் நான் தமிழன்தானே, ஆசியந்தானே' என்றுகூட அவர்கள் கேட்கலாம்.

இந்த தலைமுறையினர் ஈழத்திற்குப் புலம்பெயர்ந்து வருவார்களா? என்பது தெரியவில்லை. இன்னும் எத்தனை தலைமுறை போனாலும் நாங்கள் யாராக இருக்க வேண்டும் என்பதை சூழல்தான் தீர்மானிக்கும், நீ ஆசியன், நீ கறுப்பன், நீ பாகிஸ்தானி  என்பதை ஒருபோது மறைக்க இயலாது. எத்தனை தலைமுறை கடந்தாலும் அடையாளங்கள் மறையாது. இதற்கு வரலாறு முழுக்கச் சான்றுள்ளது. 500 வருடங்களுக்குப் பிறகு கொலம்பஸ் பற்றி எழுதும்போது குறிப்பிடப்படுகிறான்; "Origin Italian. ஸ்பெயினில் அரசிக்காக கப்பல் கட்டிக்கொண்டு போன இடத்தில் அமெரிக்காவைக் கண்டுபிடித்தான்" என்கிறான். இதைத் தவிர்க்க முடியாது.

மணா:
இலங்கை மண்ணைப் பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார்களா?

கி.பி.அ-ன்:
இங்கு கிடைப்பதைவிட ஈழ மண்ணில் இணக்கமான உறவு கிடைக்கும். சுதந்திரம் கிடைக்கும். நீண்டகாலமாக அடைபட்டுக் கிடக்கிற வீட்டி.ல் இருக்கிறோம். அங்கு திறந்த வீட்டில் எங்கேயும் நிற்கலாம்; எங்கேயும் போகலாம். காற்றுக்காக ஜன்னலை திறந்து வைக்கலாம். ஒரு திறந்தவெளி வாழ்க்கை.

புலம்பெயர்ந்த நாடுகளில் அந்த வெளிகள் அடைபட்டுக் கிடக்கின்றன. இத்தனை மணிக்குள் வீட்டிற்குத் திரும்ப வேண்டும்; குளிர்காலமென்றால் ஜன்னலைத் திறக்கக்கூடாது. சில உடுப்புகள் போடவேண்டும். இதெல்லாம் இயல்பிலேயே பழகினால்கூட, சொந்த ஊருக்கு அந்தால் மிக மெல்லிய உடையில் நிற்கலாம். காற்று வாங்கலாம். எதிலும் படுத்து உறங்கலாம். காலாற நடக்கலாம். இதெல்லாம் முக்கிய விஷயங்களாகப் படுகின்றன. ஊர் பற்றிய ஆர்வம் உறுதியாக இருக்கிறது.

தவிர்க்க முடியாமல் பல தேசத்தவர்களோடு பழக வேண்டிய கட்டாய நிலைமை இருக்கிறது. அவரவர்கள் தங்கள் தேசியத் தன்மையைக் கொண்டிருக்கும்போது இவர்களையும் தமிழ் தேசியத்தைப் பேண வேண்டிய நிலைமைக்குத் தள்ளுகிறது. எங்கள் புலம்பெயர்வின் சாதகமான அம்சங்களில் முக்கியமானது மொழி அறிவு. பொதுவாக தமிழ்ச் சமூகத்திற்கு பல மொழி அறிவு கிடையாது. இன்றைக்கு புலம்பெயர்ந்த தமிழச் சமூகத்திற்கு பதினைந்து மொழிகள் தெரியும்.

70.000 பேர் பிரான்சில். 40.000 பேர் யேர்மனியில், இரண்டரை இலட்சம்பேர் இலண்டனில். 15.000 பேர் டச்சில். 10.000பேர் நோர்வேயில் 15.000பேர் டென்மார்க்கில் என ஐரொப்பிய நாடுகளில் அண்ணளவாக ஐந்து இலட்சம்பேர் வாழ்கிறார்கள். அத்துடன் சுவீடன், சுவிஸ், பெல்ஐpயம், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் எல்லாம் வாழ்கிறார்கள். அந்தக் குழந்தைகள் எல்லாம் அந்தந்த மொழியைப் பேசுகிறர்கள். தமிழ்ச் சமூகத்தின் அறிவு பல மொழி அறிவாக விரிவடைந்திருக்கிறது. இந்திய சமூகங்களில் எந்த சமூகத்திற்கும் இந்த வாய்ப்புக் கிடைக்காது.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து உயர் தொழிநுட்பங்களும் நம்மவர்கள் சிலருக்குக் கிடைத்திருக்கின்றன. இது ஒரு முக்கியமான அம்சம். யுத்தங்களும், கலவரங்களும் நிகழ்ந்த நிலையில் அதற்கு நேர் எதிராகக் கிடைத்த பலன்கள் இவை.

சிங்கள அரசு, தமிழ் மக்கள் சின்னாபின்னப்பட்டு அழியட்டும் என்றுதான் எங்களை அனுப்பியது. அந்தச் சூழலை உருவாக்கியது. அதுதான் போராட்டத்திற்குப் பலமாகவும் மாறி, அதற்கு பன்முகத் தன்மையை அளித்திருக்கிறது.

இந்த நுண்ணிய மாற்றம் இன்றைக்கு அறியப் படாமல் இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் இது தமிழ்ச் சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். நூல்கள், இணையத்தளங்கள், ஊடகங்கள் என்று அனைத்தும் இப்போது பரவலாகியிருக்கின்றன.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களுடைய நினைவுகளை உறைந்த நிலையில்தான் வைத்திருக்கிறார்கள். தங்களுடைய தாயகத்தை எங்கிருந்தாலும் புனிதமாகக் கருதுகிறார்கள். புலம்பெயர்ந்து எங்கோ சென்ற நினையில்தான் தங்களுடைய சொந்த நாட்டின் தாக்கத்தை அது மனதில் எழுப்பியிருக்கும் ஆதிக்கத்தை உணரமுடிகிறது. கலாசாரத் தேடல் இருக்கிறது. வெயிலில் நிழலைத் தேடுவது போல எங்களுடைய தேடல் நீடிக்கிறது.

ஆனால் தமிழகத்தில் ஊடகங்களில் அந்தத் தேடல் இல்லை. அதன் வழியாக நஞ்சு வழிகிறது. ஊடகங்கள் வழியாக ஒரு வகையான கலாசாரம் திணிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களையும் இது பாதிக்கிறது. புலம்பெயர்ந்த நாட்டில் பலர் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறபோது ஊடகங்களின், குறிப்பாகத் தொலைக்காட்சியின் ஆதிக்கமும் அதிகம். இளைய தலைமுறையினருக்கு அதுதான் நம்முடைய தமிழர் கலாசாரம் என்று மயக்கத்துடன் புரிந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம். அதன் மோசமான விளைவை பல புலம்பெயர்ந்த தமிழர்கள் கடல் கடந்தாலும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

எப்படிப்பட்ட இரட்டை நிலை இது?


நேர்காணல் நடாத்தியவர்: மணா
தொகுப்பு: சுந்தரபுத்தன்
படங்கள் புதூர் சரவணன்

நன்றி: புதிய பார்வை, டிசம்பர் 16-31 2005.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)
மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 16 Jul 2024 02:14
TamilNet
HASH(0x55687f1a0710)
Sri Lanka: English version not available