அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Saturday, 14 September 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 24 arrow மரியம்மாச்சி
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மரியம்மாச்சி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சித்திரா சுதாகரன் (பரிஸ்)  
Friday, 24 February 2006

     à®à®®à¯à®ªà¯†à®°à¯à®™à¯ காப்பிய நகையணிந்து
     அரும்மறை திருக்குறள் முடி புனைந்து
     நன்னெறி, நன்னூல் தனையுடுத்து
     நானிலமெங்கும் புகழ் பரப்பும்
    
     அன்னை வாழியவே- எங்கள்
     தமிழன்னை வாழியவே !!!!

தமிழ்த்தாய் வாழ்த்து பெண்களின் குழுப்பாடலாய் உற்சாகமாய் ஒலித்துக்கொண்டிருக்க, தமிழன்னை வானத்திலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தாள். சுற்றி ஒளிவட்டம், ஆடையாபரணங்கள் பிரகாசிக்க, கையில் தமிழ்க் கொடி பட்டொளி வீசிப் பறக்க, அன்னை விண்ணிலிருந்து இறங்கி வருகிறாள். என்னால் தெளிவாகப் பார்க்க முடியாமல் மேகக் கூட்டம் மறைக்கிறது. முகில் தாண்டி அன்னையின் ஒளி வீசுகிறது. அன்னையை வடிவாய்ப் பார்க்க ஆவல் கொண்டு உற்றுப் பார்க்கிறேன். இப்போது தமிழ்த்தாய் வாழ்த்து இராகம் மாறி ஒப்பாரி போல மாறுது. அவலக்குரலாய் ஒலிக்குது. அன்னையை சுற்றியிருந்த முகிற்கூட்டங்கள் புகையாகுது சாம்பிராணி வாசம் அடிக்க எனக்கு செத்த வீட்டு ஞாபகம் வருகுது. புகை அன்னையைச் சுற்றி, பட்டொளி வீசிய கொடி கருகிப் போகுது. ஆடைகள் கறுப்பாக, அணிகலன்கள் மங்க, அன்னையின் கோலம்கண்டு பதறுகிறேன். அன்னை ஏக்கமாய் ஏதோ சொல்கிறாள்.  ஒப்பாரிச் சத்தத்தில் எனக்கு ஒண்டும் விழங்கவில்லை. இயலுமானவரை உற்று அன்னையின் முகத்தைப் பார்க்கிறேன். முகமெல்லாம் சுருங்கி பல்லு விழுந்து, அழகொழிந்து கிழவியாகித் தமிழன்னை.........
      
ஐயோ!! இது எங்கிட மரியம்மாச்சி !!!  இவ எப்ப தமிழன்னையானவ??  ஆச்சியை நோக்கி ஓடினன். நான் ஓடின வேகத்தில முழங்கால் சுவரில அடிபட, காலைப் பிடிச்சுக்கொண்டு கட்டிலில எழும்பியிருந்தன். பக்கத்தில படுத்திருந்த என்ர மனுசி நித்திரை குழம்பின சினத்தில  'என்னப்பா கனவில கறாட்டி பழகிறியளோ?" என்று கேட்கத்தான் நிலமை விளங்கிச்சுது. 'ஓமப்பா கனவுதான் கெட்ட கனவு."
நேற்று மகளின் தமிழ்ப் பள்ளியில் நடந்த விழாவில் மகள் தமிழன்னையாய் அபிநயித்ததும், சுனாமி கொண்டுபோன எங்கிட கிராமத்தப் பார்க்க பரிசில இருந்து ஓடிப்போய் பாக்கக் கூடாததெல்லாம் பாத்து, அதுவும் மரியம்மாச்சியை அந்தக் கோலத்தில பாத்ததும் சேர்ந்துதான் இந்தக் கனவு வந்திருக்குமோ?
மனைவி குடிக்கத் தண்ணீர் தந்து நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்து - பரலோக மாதாவே! என்று மாதாவை வேண்டி என்னை மீண்டும் படுக்க வைத்தா.
பரலோக மாதாவே!! மரியம்மாச்சியும் பரலோக மாதாவைத்தான் எல்லாத்துக்கும் கூப்பிடுவா. நல்லதோ கெட்டதோ அழுகையோ ஆச்சரியமோ அவவுக்கு எல்லாமே பரலோக மாதாதான். பரலோக மாதாவுக்கும் மரியம்மாச்சிதான் எல்லாம்.
பல பத்தாண்டுகளுக்கு முன் முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாடு கிராமத்தையடுத்த கரையோரப் பகுதியில் ஆரோ வெள்ளைக்கார சுவாமி எப்பவோ கட்டின பரலோக மாதா கோயில் அநாதையாய் நின்றதாம். அக்கம் பக்கத்தூர் கத்தோலிக்கர்கள் சேர்ந்து வருசந்தோறும் ஆவணி 15 இல் விண்ணேற்றத் திருவிழாக் கொண்டாடுவினம். மற்றப்படி சீசனுக்கு சீசன் மீன் பிடிக்கிறவை வந்து வாடி விட்டுத் தங்கியிற்றுப் போவினம். அது தவிர ஒரு குருவியும் பரலோக மாதாவை எட்டியும் பாக்காதாம்.
அப்பிடியொரு மீன்பிடி சீசனிலதான் மரியான் சம்மாட்டி தலைமையில வாடி விட்டுத் தொழில் செய்த கூட்டம் சீசன் முடிஞ்சு வாடி பிரிச்சு வண்டிலில ஏத்தியிற்று, இவ்வளவு நாளும் காத்து வழிநடத்தியதிற்கு நன்றியாய் பரலோகமாதா கோயிலுக்குள்ள செபமாலை சொல்லிக் கொண்டிருந்தினமாம். -ஐயோ மாதா அழுகிறா.........  மாதாட சுருபத்திலயிருந்து கண்ணீரா வடியுதாம் எல்லாரும் துடைக்கத் துடைக்க கண்ணீர் நிக்கயில்லையாம். மாதாவிட கண்ணீரக் கண்டு பரவசமான மரியான்சம்மாட்டி சடாரெண்டு சத்தியம் பண்ணினேர்.
-மாதாவே உம்மத் தனிய விட்டிட்டு நான் போகையில்ல என்ர சீவிய பரியந்தமும் உம்மோடயே இருப்பன் உம்ம நான் பாத்துக்கொள்ளுறன் என்ன நீர் பாத்துக்கொள்ளும்.......... டக்கெண்டு கண்ணீர் நிண்டிட்டுதாம்.
மரியான் சம்மாட்டியோட ஆறு குடும்பங்கள் குடிசை போட்டு கோயிலடியிலேயே தங்கிவிட, மாதா அருளை மீன் மீனா அள்ளிக் குடுக்க, ஆறு அறுபதாச்சுது. குடிசையெல்லாம் கல்வீடாச்சுது, கடை வந்து றோட்டு வந்து சிற்றர் மடம் வந்து பள்ளிக்கூடம் வந்து அண்டிப் பிழைக்கச் சனங்களும் வந்து, கோயிலடி ஓர் அழகான கரையோரக் கிராமம் ஆச்சுதாம்.
சம்மாட்டியார் தனக்கெண்டு மரியவாசா எண்ட பெரிய வீடுங்கட்டி மாதாங்கோயிலையும் பெருப்பிச்சு மாதாவையும் அந்த ஊரையும் ஆதரவா கட்டிக் காப்பாத்தி வந்தார். அவற்ற பேத்திதான் மரியம்மாச்சி.  சம்மாட்டி இல்லாட்டியும் அவரப் போலவே மரியம்மாச்சியும் பரலோக மாதாவையும் அந்தக் கிராமத்தையும் பராமரிச்சுக்கொண்டு ஒரு இராணி மாதிரி வலம்வந்தா. விருந்தோம்பலுக்கு அவவ அடிக்க அந்த ஏரியாவிலேயே ஆள் இல்ல. நாலு மச்ச வகையோட பத்துப் பேருக்கு சாப்பாடு எப்பவும் தயாராத்தான் இருக்கும்.ஆரு வந்தாலும் முதல் சாப்பாடு பிறகுதான் மிச்சக் கதை. இப்பிடி அவவிட ஒரு சொல்லுக்கு ஊரே கட்டுப் படும் ஊரின்ர அன்புக்கு அவ கட்டுப்பட்டா.
மரியம்மாச்சியின்ர மனுசன் சுவக்கீன் சம்மாட்டி ஒரு நல்ல தொழிலாளி. தொழிலுக்குப் போறதும் கம்மாஸ் விளையாடுறதும் கள்ளுக் குடிக்கிறதும் ஆச்சிய வம்புக்கிழுத்து நக்கல் அடிக்கிறதும்தான் அவற்ற வேல. மிச்சமெல்லாம் ஆச்சிதான். அந்த ஊரில ஒரு குடியா எங்கிட குடும்பமும் இருந்தது. ஆச்சியில பாசத்தப் பொழிஞ்சது. ஆச்சியும்தான். இப்பிடித்தாயாப் பிள்ளையா ஒண்டா இருந்த எங்களைப் பிச்சுப் பிச்சு எறிய சிங்களவற்ற இனத்துவேசம் வந்தது.
77 கலவரம் ஓய்ஞ்சநேரம் தொழிலுக்குப்போய்க் கரைய அடைஞ்ச இயந்திரப் படகுக்குள்ள சுவக்கீன் சம்மாட்டியும் இன்னும் 3 பேரும் நேவி சுட்டு பிரேதமாய்க் கிடந்தினம். -என்ர ராசாவே!!!......... ஆச்சியின்ர ஒப்பாரி மாதாங்கோயில் மணிக்கோபுரத்தில கேக்க 2 வருசத்துக்கு முதல் சம்மாட்டியார் வாங்கிக் கட்டின புது மணி முதன்முதலா துக்க மணியா அடிச்சுது. இதுக்குப் பிறகு இடைக்கிடை நேவி அடிக்க துக்கமணியும் அடிச்சுது.
ஆனால் ஆச்சி 31 முடிய தன்ர 20 வயது மகன் ஜேமிஸோட தொழில நிர்வகிக்கத் தொடங்கியிற்றா. இப்பயும் ஆச்சி மாதாவையும் ஊரையும் பராமரிச்சு வழிநடத்தி வந்தா. இந்தக்கால கட்டத்திலதான் புதுசு புதுசாப் பெடியள் ஊருக்குள்ள வரத்தொடங்கினாங்கள். நோட்டீஸ் குடுக்க கூட்டம் வைக்க வந்தவங்கள மரியவாசா உபசரிச்சது. மரியா-1 என்ற இயந்திரப் படகு மீனுக்குப் பதிலா ஆக்களையும் ஆயுதங்களையும் ஏத்தியிறக்கத் தொடங்கிச்சுது. ஊர்ப் பெடியள் சிலர் காணாமற் போனாங்கள்.  ஆனால் ஆச்சி காணாமல்ப் போன பெடியளிட குடும்பங்களுக்கு ஆதரவா இருந்தா. இப்பயும் ஒரு ராணி போலதான்.
85 இல நேவிக்காரன் கண்ண மூடிக்கொண்டடிச்ச செல்லுகளில சிலது லெக்கா மரியவாசா குசினி, இன்னும் சில வீடுகள், ஹெலிக்குப் பயந்து எங்கிட அப்பர் பதுங்கின பத்தையெண்டு விழ,  18 வயதேயான நான் 2 தங்கச்சியளையும் அம்மாவையும் கட்டிப் பிடிச்சுக் கொண்டு அழுகையையும் ஆத்திரத்தையும் அடக்கேலாமல் திணறிக்கொண்டு நிக்க பெற்றோரையிழந்த ரெண்டு பேரன்களையும் கட்டிப் பிடிச்சு மரியம்மாச்சி வைச்ச ஓலம் பரலோக மாதாவுக்கு ஏன் கேக்கேல்ல எண்டு எனக்கு விளங்கேல்ல. அண்டைக்கு மட்டும் ஒன்பது சாவுகள் எங்கிட ஊரில.
எட்டுச் சிலவண்டு இரவு நாங்கள் பாதிக்கப் பட்ட அஞ்சு பெடியள் இயக்கத்துக்கு வெளிக்கிட்டம். கோயிலடியில வச்சு ஆச்சி வழிமறிச்சா என்னையும் வாத்தியாற்ற சாள்ஸையும் மறிச்சுக்கொண்டு தன்ர மூத்த பேரனையும் மற்ற ரெண்டு பெடியளையும் போகவிட்டா எனக்கு ஒண்டுமா விளங்கேல்ல.தன்ர பேரன விட்டிட்டு என்னையேன் மறிக்கிறா? அவவில கோவமதான் வந்தது. ஆச்சிக்கோ கடுங்கோவம் வந்தது.   'ரெண்டு குமருகளையும் கொம்மாவையும் நடுறோட்டில விட்டிட்டு இயக்கத்துக்கப் போறீரோ? றாஸ்க்கோலே......... "
அம்மாட அழுகையும் சேமிப்பும் ஆச்சியின்ர உதவியுமாய் நான் பரிசுக்கு வர சாளஸ் நோர்வேக்குப் போனான். பிரச்சினையள் வலுக்க கரையோரத்தை விட்டு சிலர் இடம்பெயர, ஆச்சி அசைய இல்லயாம். என்ர தங்கச்சிமார் கல்யாணம் முற்றாகிக் கனடா போக அம்மாவும் கூடப்போக,  ஆச்சி மாவீரனான மூத்த பேரனின் போட்டோவோடும் இளய பேரனோடும் கோயிலடியையும் மாதாவையும் பராமரிச்சுக் கொண்டு, யாழ்ப்பாணத்தில இருந்து இடம்பெயர்ந்த சில அகதிக் குடும்பங்களையும் ஆதரிச்சுக்கொண்டு ராணிமாதிரித்தான் இருந்தாவாம். எங்கிட குடும்பம் ஆச்சியை நன்றியோட நினைக்காத நாள் இல்ல.
இப்பிடி ஊரை உறவைப் பிரிஞ்சாலும் உணர்வுகளோட வாழுற காலத்திலதான் சுனாமி வந்து சூறையாடிச்சுது. கள்ளப்பாடு முற்றாகச்சேதம் என்று சேதிவர கோயிலடியும் மூழ்கியிருக்கும் என்று தெளிவாக,   -ஐயோ என்ர ஊர், உறவு என்று ஊரப்பாக்கப் போனவயோட நானும் வெளிக்கிட்டன்.
ஊர்!!!!!!!!!!!!  கடற்கரையிலிருந்து தள்ளியிருந்த சிற்றர் மடம், பள்ளிக்கூடம் தவிர ஊரே தரைமட்டம். மரியவாசா?? -ஐயோ!!...
அடையாளத்துக்கு ஒரு சுவரும் தூணும் மட்டும் இருந்தது. மாதாகோயில் தரைமட்டம் முடியுடைஞ்ச மாதா சுருபம் தனியா நிண்டது. ஊரெல்லாம் அகதிகளாய் பள்ளிக்கூடத்தில. உறவுகள்தேடி ஆறுதல் சொல்லி ஆச்சியைத் தேடினன். இடுப்புச்சீலையும் சட்டையும் மேல போத்த துவாயுமாய் எங்கோ வெறித்த பார்வையுடன் இளைய பேரனையும் சுனாமிக்குப் பறிகொடுத்த ஆச்சி.  பாண்டவர் வனவாசம் போகேக்க குந்திதேவி இப்பிடித்தான் இருந்திருப்பா. ஆச்சிய ஓடிப்போய்க் கட்டிப் பிடிக்க அழுகை வந்தது. ஆச்சி அழயில்ல  'இப்பிடித்தான் இருக்கிறா ரெண்டு மூண்டு நாளா ஒண்டும் சாப்பிடுறாவும் இல்ல." ஒரு உறவு உரிமையாய்ச் சொல்ல ஆச்சிக்குத்தெண்டிச்சு சாப்பாடு குடுக்கப் பாத்தன். உதடுதுடிக்க ஏதோ சொல்ல வந்தா. டக்கெண்டு விரக்தியா ஒரு புன்னகை வந்தது. பாசமா என்ர தலையத் தடவியிற்று மற்றப் பக்கம் திரும்பியிற்றா.
அண்டைக்கு ஆச்சி என்ன சொல்ல வந்தவ? இண்டைக்கு கனவில தமிழன்னை என்ன சொல்ல வந்தவ?? கனவை றிவைன் பண்ணினன். ஓ.. அன்னை சொன்னது இப்ப விளங்குது.
'இந்தப் பருப்பையும் சோத்தையும் எத்தினை நாளைக்குச் சாப்பிடுறது....."
ஐயோ!! ஆச்சியும் இதத்தான் சொல்ல வந்திருப்பா. தமிழருக்கு ஏற்பட்ட பாதிப்போ கொஞ்சமில்ல. அரச உதவியோ கொஞ்சமுமில்ல. எங்களை நாங்களே தேற்ற வேண்டிய நிலை. அதிக பட்ச உணவுப பூர்த்தியாய் பருப்பும் சோறுமே முகாம்களில் வழங்கப்படுகிறது. இன்னும் எத்தின நாளைக்கு? இந்த உணவு முறையே மக்களை மனதளவில் கொன்றுவிடும். ஆனால் இன்னும் பொதுக்கட்டமைப்பு உருவாக்கிறம் எண்டு வைக்கற் பட்டறை நாய்களாய் சிங்கள அரசு. இரவு ரெண்டு மணி இனி நித்திரை வராது.  என்ன செய்ய? ஆச்சியின்ர பேரனாய், பாதிக்கப்பட்ட ஊரவனாய்,தமிழனாய், ஒரு மனிதனாய் இதுக்கு நான் என்ன செய்ய வேணும்?? எங்கோ ஒரு மூலையிலாவது எனக்கான கடைமை இருக்கும். தேடவேணும். எழுந்து கணனியைத் திறந்து என் கடைமையைத் தேடும் ஒரு வழியாய் இணையத்துக்குள் நுழைந்தேன். வானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது.   

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)
 

                


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sat, 14 Sep 2024 23:30
TamilNet
Even though I first met Viraj Mendis in Geneva, his reputation as a fearless advocate for Tamil liberation preceded him. The movement respected Viraj, and many of our leaders in the diaspora and the homeland sought his clarity and insight. I consider myself fortunate to have worked with him and learned from him.
Sri Lanka: Viraj exposed West?s criminalization of Tamil struggle


BBC: உலகச் செய்திகள்
Sat, 14 Sep 2024 23:24


புதினம்
Sat, 14 Sep 2024 23:24
















     இதுவரை:  25666463 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 12175 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com