அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 04 October 2023

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow நூல்நயம் arrow ஒரு பார்வை.
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்கஜானி

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


ஒரு பார்வை.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கே.எஸ்.சுதாகர்  
Wednesday, 24 May 2006

தி.ஞானசேகரன் சிறுகதைகள்   -         ஒரு பார்வை.

கே.எஸ்.சுதாகர்
ஞானசேகரன் அவர்கள் வைத்திய அதிகாரியாக இலங்கையில் பணியாற்றுபவர். சிறுகதை உலகில் கடந்த நாற்பது வருடங்களாக சளைக்காமல் எழுதி வருபவர். பல இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற்றவர். காலதரிசனம், அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் சிறுகதைத் தொகுப்புகள், புதியசுவடுகள்(1977), குருதிமலை(1980), லயத்துச்சிறைகள் நாவல்கள், கவ்வாத்து குறுநாவல், அவுஸ்திரேலியப்பயணக்கதை பயண இலக்கியம் என்பவை இவர் இலக்கிய உலகிற்கு தந்த படைப்புகள். இவற்றுள் புதியசுவடுகள், குருதிமலை ஆகிய இரண்டும் இலங்கை அரசின் சாகித்திய விருதுகளைப் பெற்றவை. மேலும் குருதிமலை நாவலிற்கு 'தகவம்', இலக்கியப் பேரவை என்பவற்றின் சான்றிதழும் கிடைத்துள்ளன. கவ்வாத்து சுபமங்களா சஞ்சிகை நடத்திய ஈழத்து நாவல் போட்டியில் பரிசு பெற்றது.
ஞானம் என்ற இலக்கிய சஞ்சிகையை கடந்த ஆறு வருடங்களாக தொடர்ந்து வெளியிட்டு வருகின்றார். மல்லிகைக்கு அடுத்தபடியாக இலங்கையிலிருந்து தொடர்ந்து வெளிவரும் சஞ்சிகை இது.
இலங்கையர்கோன், சம்பந்தன், சி.வைத்திலிங்கம் என்பவர்கள் ஈழத்து தமிழ்ச்சிறுகதையுலகின் ஆரம்ப வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்கள். அதன் தொடர்ச்சியாக வரும் எழுத்தாளர்களில் தி.ஞானசேகரனும் ஒருவராவார். இலக்கிய உலகில் தி.ஞானசேகரன் எப்படிப் புகுந்தார் என்பதை இத்தொகுதியிலுள்ள "வாசனை" என்ற சிறுகதை தொட்டுச் செல்கிறது. "தாத்தாவின் கனிவான பேச்சிலும் அவர் சொரியும் அன்பிலும் மயங்கி பல மணிநேரங்கள் அவரது மடியில் அமர்ந்து கதை கேட்டிருக்கிறேன். அவர் கூறிய கதைகள்தான் பிற்காலத்தில் நான் ஓர் எழுத்தாளனாக உருவாகுவதற்கு உரமாக அமைந்தது." என்கின்றார் அவர்.
ஏற்கனவே வெளிவந்த காலதரிசனம், அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்ற தொகுப்புக்களை உள்ளடக்கியதாக  மொத்தம் முப்பது சிறுகதைகள் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் அடங்கியுள்ளன. 1964 ம் ண்டிலிருந்து 1973 ம் ஆண்டு வரைக்குமான 21 சிறுகதைகளும், 1996 இலிருந்து 2004 வரைக்குமான காலப்பகுதியில் எழுதப்பட்ட 9 சிறுகதைகளும் இதில் அடங்குகின்றன. இடைப்பட்ட காலப்பகுதியான 23 வருடங்கள் வெற்றிடமாகக் காணப்படுகின்றது. இடப்பெயர்வின்போது பல சிறுகதைகள் தொலைந்து விட்டன என முன்னுரையில் கூறப்படுவது அதற்கொரு காரணமாக இருக்கலாம். ஞானம் பதிப்பாக வெளிவந்துள்ள  "தி.ஞானசேகரன் சிறுகதைகள்" என்ற தலைப்பிட்ட இத்தொகுதிக்கு, பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் க.அருணாசலம் அவர்கள் 23 பக்கங்களில் நல்லதொரு அணிந்துரை வழங்கியிருக்கின்றார். இவரது படைப்புகள் பற்றி பல எழுத்தாளர்கள் விதந்துரைத்திருக்கின்றார்கள். இதை ஒரு பின்னிணைப்பாக இத்தொகுதியில் காணலாம்.
ஏனோ தெரியவில்லை, ஒரு சில எழுத்தாளர்களின் படைப்புகளைத் தவிர, ஈழத்துப் படைப்புகள் தமிழ்நாட்டு இலக்கிய உலகின் கவன ஈர்பைப் பெறவில்லை. தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் எமது படைப்புக்களைத் தெரிந்து வைத்திருப்பதைக்காட்டிலும், எமது வாசகர்கள் அவர்களையும் அவர்களின் படைப்புக்களையும் நிறையவே தெரிந்து வைத்திருக்கின்றார்கள். இதற்கு சந்தைப்படுத்துதல் ஒரு காரணமாக இருக்கலாம். அந்த வகையில் பார்க்கும்போது திரு. ஞானசேகரனின் 'குருதிமலை' என்ற நாவல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.ஏ பட்டப்படிப்புக்கு 1992-1993 காலப்பகுதியில் பாடநூலாக வைக்கப்பட்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியதொன்று.
இத்தொகுப்பில் வரும் முப்பது சிறுகதைகளுமே ஏதோ ஒரு வகையில் மனசை நெகிழ வைக்கின்றன. எல்லாக்கதைகளும் வாழ்வனுபவத்தின் மீது எழுதப்பட்டிருப்பதால் எமக்கு ஒரு நம்பகத்தன்மையைத் தருகின்றது.  அத்துடன் இதில் வரும் கதைகள் அனுபவத்தை மட்டும் வெளிப்படுத்தாமல், அனுபவத்தை ஆராயவும் செய்கிறது. இலங்கையின் தமிழ் இன விடுதலைப் போராட்டம், சமுதாயம் மற்றும் மலையக மக்களின் அவலங்கள், மனித நேயம் மற்றும் சமூகத்தில் புரையோடிப்போன சாதிக் கொடுமை, சாதிப் பாகுபாடுகள் என்பவற்றையும் இச்சிறுகதைத் தொகுப்பு சொல்கின்றது.
இதிலுள்ள மண்புழு என்ற சிறுகதை அவுஸ்திரேலியாவைக் களமாகவும் ஏனையவை இலங்கையைக் களமாகவும் கொண்டவை. இவரது கதைகள் இலகுவான நடையில் யாவரும் வாசித்துப் புரிந்து கொள்ளக்கூடியவை. தேவையற்ற வர்ணனைகள், சொற்பிரயோகங்கள் இல்லாமல் இலக்கியத் தரம் வாய்ந்தவை. சொல்ல வந்த விடயத்தில் வேகமும், வடிவத்தில் இறுக்கமும் கொண்டவை. அனேகமான சிறுகதைகள் பாத்திரப் படைப்பிலும் நிகழ்ச்சிச் சித்திரிப்பிலும் நுணுக்கமான வரைவுகளைக் கொண்டுள்ளன. பல்வேறு வண்ணங்கள் காட்டி நிற்கும் இந்தச் சிறுகதைகளைப் படிக்கும் போது  மனதில் ஒரு இனிய அனுபவம் ஏற்படுகின்றது.
இனி இத்தொகுதியிலுள்ள சமீபத்திய சிறுகதைகளைப் பார்ப்போம்.
'அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்' இத்தொகுதியிலுள்ள முதலாவது சிறுகதை. இனப்பிரச்சினை சம்பந்தமாக எழுதப்பட்ட கதைகளில் மிகவும் முன்னோடியாக நிற்கின்றது. சில்வா சந்திரனது சிங்கள நண்பன். இருவரும் மருத்துவக்கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். 15 வருடங்களின் பின்பு சில்வா லண்டனிலிருந்து வருகின்றார். போத்தலொன்று உள்ளே இறங்க அரசியல் வெளியே வருகின்றது. உரையாடலுக்கு பக்கபலமாக அல்சேஷன் பேரினவாதியாகவும் பூனைக்குட்டி சிறுபான்மை மக்களாகவும், குறியீட்டு வடிவங்களாகி கதைக்கு வலுச் சேர்க்கின்றன. ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக நகருகின்றது கதை. ஒரு சில பாத்திரங்கள் மூலம் இனமுரண்பாடுகளை அழகாக சித்தரிக்கின்றது இந்தக்கதை.
'ராக்கிங்' ஏற்கனவே இதற்கு முன் பலரால் எழுதப்பட்ட விடயம். இருப்பினும் சொல்லப்பட்ட விஷயமும் நுட்பமும் அதற்கு முன் சொல்லப்படாதவையாக இருக்கின்றன. 'ராக்கிங்' கூடுதலாக பல்கலைக்கழக மட்டத்திலேயே நடப்பதுண்டு. இங்கே  கல்லூரியை ஆசிரியர் ஏன் களமாகத் தேர்ந்தெடுத்தார் என்பது புரியவில்லை. 
'சீட்டரிசி' மலையக மக்களின் கல்விக்காகப் படும் அவலத்தைச் சித்தரிக்கின்றது. அரிசிக்காவும் தேயிலைத்தூளுக்காகவும்  மாவுக்காகவும் சீட்டு பிடிக்கப்படும் அவலம் வேறெந்தப் பகுதியிலும் நடைபெறுவதில்லை. இந்தக் கணினி யுகத்திலும் இப்படிப்பட்டதொரு நிகழ்வு சிந்திக்க வைக்கின்றது.
இனங்களுக்கிடையிலான உறவுகளைப் பற்றியும், செயற்கை முறைக் கருக்கட்டல் பற்றிய மருத்துவ அணுகுமுறைகளையும் விளக்குகின்றது. 'கருவறை எழுதிய தீர்ப்பு' என்ற சிறுகதை. புதிய சிந்தனைகளுடன் கூடிய அறிவியல் சார்ந்த கதை இது. இவரதுமனேகமான சிறுகதைகளில் ஏதோ ஒரு சம்பவம் வணமாகப் பதியப்படுகிறது. இங்கே 'ரிவிரஸ' இராணுவ நடவடிக்கை, மற்றும் நவாலித் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தவர்களை குண்டு வீசித் தாக்கிய படுகொலை பற்றிய சம்பவங்கள் இடம் பெறுகின்றன.
கல்விக்காகப் போராடும் மலையக் மக்களின் இன்னொரு கதை 'திருப்புமுனைத் தரிப்புகள்'.  ஒரு பெண்ணின் மன உணர்வுகளையும் ஒரு இளைஞனின் கல்வி மீது கொண்ட ர்வத்தினையும் கூறுகின்றது. இத்தொகுதியிலுள்ள 'சீட்டரிசி' என்ற கதை போன்று இதன் முடிவும் ஏமாற்றத்தைத் தரப் போகின்றதோ என்று நினைக்கையில், அந்த இளைஞனின் மனதிலே ஒரு புது வைரக்கியம் புகுந்து கொள்வது நல்லதொரு முடிவு.
யுத்தச் சூழலைப் பிரதிபலிக்கும் இன்னொரு கதை 'சோதனை'. பாதுகாப்பு என்ற கோதாவில் சோதனை என்ற பெயரில் கொழும்பில் நடைபெறும் கெடுபிடிகளைக் கூறுகிறது. பல்கலைக்கழகச் சோதனைக்காக ஒரு அறையில் தங்கியிருந்து படிக்கும் இரு மாணவர்களில் ஒருவனை சோதனை என்ற பெயரில் பிடித்து பொலிஸ் நிலையத்தில் தள்ளி விடுகின்றார்கள். பரீட்சை எழுத அவன் படும் அவலங்களையும் அதே நேரத்தில் அவனுடன் தங்கியிருந்த மற்றையவனின் இரகசிய நடவடிக்கைகளையும் எடுத்துச் சொல்கின்றது இக்கதை.
'சுதந்திரத்தின் விலை' என்ற சிறுகதை, வெளிநாடு போவதற்கென கொழும்பு 'லொட்ஜில்' வந்து தங்கி நிற்கும் தமிழ் இளைஞன் ஒருவன் படும் அவலங்களைச் சித்திரிக்கின்றது.
'மண்புழு' அவுஸ்திரேலியாவைக் களமாகக் கொண்டது. இலங்கையிலிருந்து 15 வருடங்களுக்குப் பிறகு தமது மகன், மருமகள், பேரப்பிள்ளைகளைப் பார்ப்பதற்காக சித்திரவேலர் என்பவர் இங்கு வருகின்றார். இங்கே நடைபெறும் கலாச்சாரச் சீரழிவுகளையும், 'கெய்ஸ்' (Gays) இன வாழ்க்கை முறையையும் பார்த்து முகம் சுழித்துப் போகின்றார். "வேற்று மண்ணிலை எங்கட கலாசாரம் பண்பாடுகள் வேர் விடுகிறது கஸ்டம். சூழல் விடாது. எங்கட பிள்ளையள் வேற்று மண்ணிலை வேற்றுச் சூழலிலை வளருதுகள். இதிலையிருந்து இந்தத் தலைமுறை தப்பினாலும் அடுத்த தலைமுறை தப்புமோ தெரியாது." என்று கதையை முடிக்கின்றார். மிகவும் சுவையான இந்தக்கதை 2004இல் வெளிவந்த எழுத்தாளர்விழா ஞானம் சிறப்பிதழில் இடம்பெற்றது. இன்று வெளியிடப்படும் 'உயிர்ப்பிலும்' மறுபிரசுரம் காண்கின்றது.
'காட்டுப் பூனைகளும் பச்சைக்கிளிகளும்'  என்ற கதை சோதனைச் சாவடிகளில் நடைபெறும் கெடுபிடிகளைச் சொல்கின்றது. இதுவும் ஒரு குறியீட்டு வடிவிலமைந்த சிறுகதையாகும். தடைமுகாம் ஒன்றில் இராணுவத்தினரின் இச்சைக்கு ளாக்கப்படும் பள்ளிக்கூட மாணவி ஒருத்தியைப் பற்றிய கதை இது. யாழ்ப்பாணத்தில் நடந்த கிரிஷாந்தி கொலையை இது நினைவுக்குக் கொண்டு வருகின்றது.
இத்தொகுப்பில் கதைகள் ஆண்டு வரிசைப்படி தொகுக்கப்படவில்லை. இவரது ஆரம்ப காலச் சிறுகதைகள் முற்போக்குவாதம் முனைப்புடன் இருந்த காலத்தில் எழுதப்பட்டிருந்த போதிலும், கதைகள் ஆர்ப்பாட்டமில்லாமல் 'ஓ' என்று கத்திக்கூக்குரல் போடாமல் வாசித்து முடிந்த பின்னரும் பலமணி நேரம் சிந்திக்க வைக்கின்றன. கதை உச்சம் பெற்ற பின்னரும் 'ரப்பர்' போல இழுபடாமல், 30 - 40 வருடங்களுக்குப் பிறகும் வாசிப்பவருக்கு விளங்குகின்றது. காட்சிகள் நுணுக்கமாக விபரிக்கப்பட்டிருக்கின்றன. பாத்திரங்கள் கண்களில் நிழலாடுகின்றன. கதை சொல்லும் முறையும், வாழ்வைப் பற்றிய நுண்மையான பார்வையும் சிறப்புற அமைந்த இத்தொகுதி அந்தந்தக் காலங்களில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களின் ஆவணங்களாக திகழுகின்றது.
இவரது எழுத்துக்கள் பல்கலைக்கழகங்களில் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளமை எமக்கெல்லாம் பெருமை தருகின்றது. நல்ல எழுத்து ஒருநாள் வாசகனைச் சென்றடையும் என்பதையே இது காட்டுகின்றது.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 04 Oct 2023 01:57


BBC: உலகச் செய்திகள்
Wed, 04 Oct 2023 02:09


புதினம்
Wed, 04 Oct 2023 01:57
     இதுவரை:  24073133 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3884 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com