அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 15 July 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow வட்டம்பூ arrow வட்டம்பூ - 18
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வட்டம்பூ - 18   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….பாலமனோகரன்  
Monday, 07 August 2006

18.


தேர்தல் முடிந்த அன்று இரவு வானொலியில் தேர்தல் முடிவுகளை  இரவுமுழுவதும் விடியவிடிய ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.  சேனாதிராஜனுக்குத் தேர்தல் முடிவுகள் முக்கியமாகப் படவில்லை.  வானொலியில் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்ட இனிய சினிமாப் பாடல்கள்தான்  அவனுடைய மனதை ஈர்த்தன. நிலவைப் பற்றிய பாடல்கள்தான் எத்தனை!  அவை அத்தனையும் தன் நந்தாவுக்காகவே பாடப்பட்ட பக்திப் பாடல்கள்  என்பதுபோல் சேனாதி இதயம் கனிந்து பரவசப்பட்டுக் கொண்டான்.
எப்போ இந்த வாரம் முடிந்து அடுத்த சனிஞாயிறு வருமென நந்தாவின்  நினைவிலேயே காலத்தைக் கழித்த சேனாதிகூடக் கலங்கும் வகையில்,  தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்த நாட்களில் செய்திகளும், வாந்திகளும்  அடிபடத் தொடங்கின. சிங்களக் காடையர்களினால் சிங்களப் பகுதிகளில்  வாழ்ந்த தமிழர்கள் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டு, சித்திரவதைக்கு  உட்படுத்தப்பட்ட செய்திகள் உண்மையென உர்ஜிதமாயின.
நாலைந்து நாட்களுக்குள் முல்லைத்தீவுக் கடற்கரையோரங்களில் வாடி  அமைத்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த சிங்கள மக்கள் தமது வலை  வள்ளங்களை லாரிகளில் ஏற்றிக்கொண்டு, பொலிஸ் பாதுகாப்புடன் சாரி  சாரியாகச் செல்வதையும் சேனாதி அன்று மாலையில் கண்டான். நந்தாவை  நினைக்கையில் அவனுக்கு நெஞ்சு திக்கென்றது. ஒருவேளை குணசேகரா  இந்தக் கலவர நிலைக்குப் பயந்து, நந்தாவுடன் முல்லைத்தீவுக்குச் சென்று  இந்த லாரி ஒன்றில் ஏறிப் போய்விட்டிருந்தால் என்று நினைக்கவே  அவனுக்கு நெஞ்சு பதறியது. கூடவே, ஆண்டாங்குளத்தில் அவர்களுக்குக்  கெடுதல் விளைவிக்க யார்தான் உண்டு, குணசேகரா பயந்து செல்லவேண்டிய அவசியமே இல்லை, சிங்கராயரும் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்  என அமைதி அடைந்தவனாய் அவன் தங்கள் கச்சான் பிலவை நோக்கிச்  செல்கையில், வழியில் மீன்வியாபாரி சில்வா மாமா கையில் ஒரு சிறிய  பெட்டியுடன் வருவதைக் கண்டான். அருகே வந்த அவரை வழிமறித்து,  'எங்கை மாமா போறியள்?" எனக் கேட்டான் சேனாதி.
'நாங் ஊருக்குப் போறது தம்பி!.. எல்லா இடத்திலும் கச்சால்தானே!" என்ற  சில்வா மாமாவின் முகம் இருண்டு கிடந்தது. 'ஏன் சில்வா மாமா!.. இஞ்சை  உங்களுக்கு என்ன பயம்?.. நீங்கள் கனகாலமாய் இஞ்சைதானே  இருக்கிறியள்.. எல்லாருக்கும் உங்களைத் தெரியுந்தானே! பிறகேன் பயந்து  போறியள்?" என ஆவலுடன் கேட்டான் சேனாதி. சில்வாவின் கவலை  தோய்ந்த முகத்தைப் பார்க்கவே அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. 'ஓவ்!  இஞ்சை எல்லாரும் மிச்சங் மிச்சங் நல்ல மனுசன்தானே தம்பி!.. ஆனா நாங் இருக்கிற வூடு சாரயங் விக்கிற வூடுதானே! இந்தச் சாராயத்தைக்  குடிச்சிட்டுத்தானே இந்தக் காடையங்க கூடாத வேலை செய்யிறது!.. அங்க  நம்ம ஜாதிக் காடையங்க இந்தமாதிரிக் கூடாத வேலை செய்ய இஞ்சை  இருக்கிற நல்லவனுக்கும் கோபங் வர்றதுதானே!.. அதிங்தான் நா இப்ப  போறது!" என்றான் சில்வா. 'இப்ப போனால் பிறகு திரும்பி வரமாட்டியளெ?"  எனச் சேனாதி வினவியபோது, சோகம் ததும்பச் சிரித்தான் சில்வா. 'நம்மடை  ஊரிலை எனக்கு யாரும் இல்லை தம்பி! நா சின்னப் பொடியன் சைசிலை  இந்த ஊருக்கு வந்ததுதானே!.. கச்சால் முடிய நா வாறதுதானே!" எனச்  சொல்லி விடைபெற்றான் சில்வா.
சோனதியின் மனம் மழைமூட்டம் போட்ட வானமாய் இருண்டு கிடந்தது. ...  அம்மாவுக்கு இந்தப் பிரச்சனையைச் சொல்லி, ஒருக்கால் நாளைக்குக்  காலமை ஆண்டாங்குளம் போய்ப் பாத்தால் என்ன? .. ஆமிக்காறரும்,  பொலிசுக்காறரும் கண்டபடி ஆக்களுக்கு அடிக்கிறாங்களாம்!.. அவங்கள்  சிலவேளை ஆண்டாங்குளத்துக்கும் போவாங்களோ?.. எதுக்கும் இதைச்  சொல்லி அம்மாவிட்டைக் கேட்டுக்கொண்டு காலமை ஆண்டாங்குளம  போகவேணும்!.. எனத் திட்டமிட்டு, அந்தத் திட்டம் தற்காலிகமான ஆறுதலில் அமைதியடைந்தவனாய் சேனாதி கச்சான் பிலவைச் சுற்றிப் பார்த்துவிட்டு  வீடு திரும்புகையில் பொழுதுபட்டு இருண்டு விட்டிருந்தது.
வீட்டை நோக்கி நடந்து வந்தவன், சாரயம் விற்கும் அண்ணாவி சின்னையர்  வீட்டருகில் வந்தபோது உடுக்கு அடிக்கும் ஒலிகேட்டு அங்கயே  நின்றுவிட்டான். அந்த முன்னிரவுத் தனிமையில், எல்லையற்ற சோகத்தைப்  பரவும் அந்த உடுக்கின் ஓசை அவன் மனதை எதுவோ செய்தது. அந்த  வளவின் வேலிக்கு மேலாக எட்டிப் பார்த்தான். முற்றத்தின் நடுவில் ஒரு  போத்தல் லாம்பு சிந்தும் வெளிச்சத்தில் சாக்குக் கட்டிலில், கூனிய முதுகும்  கவிழ்ந்த தலையுமாய் அண்ணாவி சின்னையர் உடுக்கு அடிப்பது தெரிந்தது.  கூடவே முற்றத்தின் ஓரமாக மீன்விற்கும் பக்கீஸ் பெட்டியுடன்  நிறுத்தப்பட்டிருந்த சில்வா மாமாவின் சைக்கிளுக்கு அருகில், வெறும்  தரையில் அமர்ந்திருந்த சின்னையரின் சப்பாணி மகள், வெறித்த  பார்வையுடன் அந்தச் சைக்கிளின் பின் சக்கரத்தை மெதுவாக ஓடவிட்டுக்  கொண்டிருந்தாள்.
இந்தக் காட்சி சேனாதியின் மனதைக் கலக்கியது. கூடவே அன்று கே.பி  ஆசிரியர் சிங்கள தமிழ்க் கலியாணங்கள் நடந்தால் பிள்ளைகள்தான்  பிறக்கும், இன ஒற்றுமை பிறக்காது என்று சொன்னது நினைவுக்கு வந்தது. .. இஞ்சை பிள்ளiகூடப் பிறக்கவில்லையே!.. என நினைத்தவன், மெல்லச்  சுற்றிக் கொண்டிருக்கும் சைக்கிள் சக்கரத்தைக் கவனித்தான். கே.பி  பாலையடி இறக்கத்து வெண்மணல் மேட்டு வட்டம் பூக்களைக் குறித்து  எதுவோ சொன்னதும், இப்போது புரியாமல் மனதைக் குழப்பியது.
வீடுசென்றதும் தாய் கண்ணம்மாவிடம் நிலமையை விளக்கி, ஒருவாறு  ஆண்டாங்குளம் செல்வதற்கு அனுமதி வாங்கிக்கொண்டு, சாப்பிட்டதாகப்  பேர்பண்ணிவிட்டுப் படுக்கைக்குச் சென்ற சேனாதி வெகுநேரம் வரையிலும்  தூங்காமல் விழித்துக்கொண்டே கிடந்தான்.
தண்ணீரூற்றிலிருந்து மீன் வியாபரி சில்வா தனது ஊருக்குப் புறப்பட்ட அதே மாலைப் பொழுதில், சிங்கராயருடைய வளவில், முற்றத்தில் அமர்ந்திருந்த  செல்லம்மா ஆச்சிக்குப் பேன் பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தாவதி.
சிங்கராயர் பெரியதொரு தேங்காய்ச சிரட்டையை அகப்பையாகச் செதுக்கி,  அதற்கு மிக நீளமானதொரு பிடியை விண்ணாங்கம் தடியில்  செய்துகொண்டிருந்தார்.
சிங்கராயரையும் தாத்தா என்றே அழைக்கும் நந்தாவதி, அதைப் பார்த்து  வியந்தவளாய், 'ஏன் தாத்தா.. அகப்பகை;கு இம்புட்டு நீளமான புடி?" எனக்  கண்களை அகல விரித்தபோது, 'புள்ளை!.. அந்தக் கலட்டியனைப் புடிச்சு  ஆடாமல் அசையாமல் கட்டி வைச்சிட்டு, நாலைஞ்சு நாள் இரை  தண்ணியில்லாமல் பட்டினிபோட்டு வாடவிடுவன்!.. அதுக்குப் பிறகு அதுக்குப் பக்கத்திலை போய் இரவு பகலாய்ப் புகைபோட்டு, இந்த நீட்டு அகப்பையாலை அதின்ரை முகத்தைத் தடவித்தடவி அதின்ரை குழுக்குணத்தை  மாத்தவேணும்!.. அதுக்குத்தன் இது!".. எனச் சிங்கராயர் விளங்கப்  படுத்தும்போதே அவருடைய வேட்டை நாய்கள் ஐயன் கோவிலடிப்  பக்கமாகப் பார்த்துக் குரைத்தன. அவற்றின் வித்தியாசமான குரைப்பை  அவதானித்த சிங்கராயர் எழுந்துநின்று கண்களை இடுக்கிக்கொண்டு அந்தத்  திசையில் பார்த்தார். எதையும் காணவில்லை. ஆனால் அவருடைய  கூர்மையான செவிகளுக்கு மாட்டு வண்டிகள் வரும் ஓசை மெலிதாகக்  கேட்டது.
'மனுசி! வட்டுவன் தெருவிலை இரண்டு மூண்டு வண்டில் வரூதுபோலை  கிடக்குது!.. நான் போய்ப் பாத்துக்கொண்டு எருமையளையும்  சாய்ச்சுக்கொண்டு வாறன்!" எனச் சொல்லிவிட்டு, நாய்களையும்  அழைத்துக்கொண்டு ஊரை வளைத்துச் செல்லும் அந்த வண்டிப் பாதையை  நோக்கிச் சென்றார் சிங்கராயர்.
செல்லம்மா ஆச்சி கண்களை மூடியவாறே நந்தாவதி பேன் பார்ப்பதைச்  சுகித்துக்கொண்டிருந்தாள். நந்தாவதியின் உள்ளம் சேனாவை நினைத்து  நனைந்து கொண்டிருந்தது. அவளுடைய செவ்விதழ்களில், நந்தா நீ என் நிலா! நிலா! என்ற வரி மிக இலேசாக ஒலித்துக் கொண்டிருந்தது.
சிங்கராயர் வன்னிச்சியா வயல் பனைகளினூடாக நடந்துசென்று  வண்டிப்பாதையை அடைந்தபோது, பாதை வளைவில் நான்கைந்து  மாட்டுவண்டிகள் கொடிவிட்டு வரிசையாக வருவது தெரிந்தது. யாராக  இருக்கும் என அவர் சிந்தித்துக் கொண்டிருக்கையிலேயே வண்டிகள் அவரை நெருங்கிக் கொண்டிருந்தன. அந்த வண்டிகளில், நெல் மூடைகளுக்கு மேல்  பெண்களும், குழந்தைகளும் கைகளில் பொருட்களுடன் அமர்ந்திருக்கக்  கண்டார். கூடவே வண்டிகளோடு சில ஆண்கள் நடந்து வருவதையும் கண்டு  வியப்படைந்தவராய் நின்றார் சிங்கராயர்.
அவர்களின் முகங்கள் அடையாளம் தெரியுமளவிற்கு வந்ததுமே, .. அட  கொக்குத்தொடுவாய்க் கந்தையன்!.. எனச் சிங்கராயர் தனக்குள்  சொல்கையில், முதலில் வந்த வண்டி அவரருகில் நின்றது.
'என்ன கந்தையா! நெல்லு 5ட்டை முடிச்சொடை பெரிய பயணமாய்க்  கிடக்கு!" எனச் சிங்கராயர் விசாரித்தபோது, 'உங்களுக்கு விசயம்  தெரியாதுபோலை! எலெச்சன் முடிஞ்ச கையோடை நாடு முழுக்கச் சிங்களக்  கலாதி தொடங்கீட்டுது!.. ஆரோ அறுவாங்கள் எங்கடை பக்கத்திலை  சிங்களவங்கள் விட்டிட்டுப்போன மீன் வாடியளுக்கு நெருப்பு  வைச்சிட்டாங்கள்!.. ஆமி பொலிசு முழுக்கச் சிங்களவங்கள்தானே!.. அவங்கள் இணடைக்கு இராவைக்கு வந்து எங்கடை வீடு வாசல் எல்லாத்துக்கும்  நெருப்பு வைக்கப்போறாங்கள் எண்டு கதையாய்க் கிடக்கு!.. இதுக்கிடையிலை பதவியாச் சிங்களவரும் வந்து வெட்டுவாங்கள் எண்டு சனம் பயப்பிடுது!..  அதுதான் பொண்புரசுகளையும், புள்ளையளையும், விதை நெல்லையும்  ஏத்திக்கொண்டு வாறம்!.. குமுளமுனை பொன்னாற்றை ராசு வீட்டிலைதான்  சனமெல்லாம் போய் நிக்குது! ..
இதைக் கேட்ட சிங்கராயரின் முகம் சினத்தினால் இறுகியது. 'டே கந்தையா!  அதுக்கு இப்பிடிப் பயந்து ஊரை விட்டிட்டே ஓடினால் வாறவங்களுக்கு அது  வசதியாய் அல்லோ போகிடும்!.. உயிர்போனாலும் உங்கடை இடத்தை  விட்டிட்டு ஒரு முழமெண்டாலும் அரக்கக் கூடாது! உங்களுக்கு  வெக்கமில்லையோ?".. எனக் கர்ஜித்தார்.
கந்தையரின் பின் நின்ற வாலிபர்களில் ஒருவன் சிங்கராயரைப் பார்த்து,  'நாங்கள் எங்கடை உயிருக்குப் பயந்து ஓடேல்ல அப்பு!.. பொண்டு  புள்ளையளைப் பாதுகாப்பாய் ஒரு இடத்திலை விட்டிட்டு, உடனை திரும்பி  ஊருக்குப் போகத்தான் போறம்!".. எனச் சற்றுச் சூடாகவே பதிலளித்தான்.  இதைக் கேட்ட சிங்கராயரின் முகம் மலர்ந்தது. 'அச்சா! அதுதான் ஆம்பிளக்கு அழகு!.. பயந்தால் ஒண்டும் சரிவராது!.. நீங்கள் போங்கோ! பொழுதுபடப்  போகுது!" என அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பிய சிங்கராயர்,  திருக்கோணம் வயலில் நின்ற மாடுகளையும் சாய்த்துக்கொண்டு வீடு  திரும்பினார். மாலையில் குமுளமுனைக்கு சாமான்கள் வாங்கச்சென்ற  குணசேகராவை இன்னமும் காணவில்லையே என்ற எண்ணம் அவருக்குள்  தோன்றியது.
அவர் மாடுகளை அடக்கி, ஒல்லைகளுக்குள் எருமைக் கன்றுகளை  அடைத்து, பட்டி Nவைலையை முடித்துக்கொண்டு திரும்பியபோது,  முற்றத்தில் கவலையும், கலவரமும் மிக்க முகத்துடன் குணசேகரா  உட்கார்ந்திருந்தான்.
'என்ன குணசேகரா, குமுளமுனையிலை என்ன புதினம்?" என்று சிங்கராயர்  வினவியபோது, நாட்டில் நடக்கும் சம்பவங்களையிட்டுப் பயந்தவனாய்ப்  பேசினான் குணசேகரா. 'நம்ம சிங்கள ஆக்கள் எல்லாங் போனதுதானே  ஐயா!.. இனி முல்லைத்தீவுக்கு நாம போறது கஸ்டந்தானே!.. பஸ் ஓட்டமும் இல்தை;தானே!.. நம்ம நந்தாவதியோடை எப்பிடிப் போறது ஐயா!.. நாங்  தனிய எண்டால் செத்தாலும் பறுவாயில்லைத்தானே!.. அது பாவங் சின்னப்  புள்ளைதானே!" எனக் கலங்கினான் குணசேகரா.
ஆச்சியுடன் அடுப்படியில் சமையலுக்கு உதவி செய்துகொண்டிருந்த  நந்தாவதிக்கு நெஞ்சு திக்கிட்டது.
சிங்கராயர் செருமிவிட்டுச் சொன்னார்: 'குணசேகரா! இஞ்சை பார்! நான்  குழுவன் வெட்டிக் காயத்தோடை கிடக்க நீயும் உன்ரை ஆக்களுந்தான்  என்னை உங்கடை தோளிலை சுமந்துகொண்டு போய் உயிர் தந்தனீங்னள்!  ந்ந்தாவதி என்னை புள்ளைபோலை!.. உனக்கோ அவளுக்கோ எங்கடை  ஆக்களாலை ஏதும் ஆபத்து வருமெண்டால், என்னைக் கொண்டுபோட்டு  என்ரை சவத்திலை மிரிச்சுத்தான் ஆரும் உன்னடிக்கு வரவேணும்!.. ஒரு  பெட்டி தோட்டா வைச்சிருக்கிறன்!.. என்ரை நாலு நாயள் காணும்.. நாப்பது  பேரைச் சரிக்கட்ட!.. நீ ஒண்டுக்கும் பயப்பிடாமல் இரு!.. இஞ்சை  ஆண்டாங்குளத்துக்கு ஆர் வரப்போறாங்கள்!" என உணர்ச்சி மேலிடச்  சொன்னார் சிங்கராயர்.
இதைக் கேட்கையில் நந்தாவதியின் இதயம் சற்று ஆறுதலடைந்தது.
'அதிங் இல்லை ஐயா நாங் சொல்லுறது!.. நீங்க எண்டை அண்ணை  மாதிரித்தானே!.. நா வாறபோது நாலைஞ்சு மாட்டு வண்டில் போனதுதானே..  அவங்க என்னைப் பாத்திட்டு.. அவங்களுக்கை கதைச்சது எனக்குக்  கேட்டதுதானே!.. நாங்க சிங்களவனுக்குப் பயந்து எங்கடை ஊரை விட்டிட்டு  போறம்.. இஞ்சை ஒரு சிங்களவன் இருக்கிறான்தானே! எண்டு கதைச்சது  எனக்குக் கேட்டதுதானே! ஐயா.. என்னத்துக்கு வீண் கரைச்சல் உங்களுக்கு?"  என்று அமைதியாகச் சொன்ன குணசேகரா, தொடர்ந்து, 'ஐயா! எனக்கு ஒரு  யோசினை வந்ததுதானே!.. பழையாண்டங்குளம் பக்கம் ஒரு பத்துமைல்  காட்டிலை போனால் பதவிய வருந்தானே! அது சிங்கள ஆக்கள் இருக்கிற  ஊர்தானே! விடியப் போனால் மத்தியானம் போயிடலாந்தானே!" எனக்  குணசேகரா கூறியபோது, நிலைமையை ஆறுதலாக எடைபோட்டார்  சிங்கராயர். அவன் பயப்படுவதில் உள்ள நியாயம் அவருக்குப் புரிந்தது.  குடிவெறியும் இனவெறியும் கண்ணை மறைச்சால் நல்லவன்கூடச்  சிலசமயம் மிருகமாய் மாறிவிடுவான்.. அதோடை நந்தாவதி ஒரு இளம்  புள்ளை!.. எனச் சிந்தித்த சிங்கராயர் ஒரு முடிவுக்கு வந்தவராய் கூறினார்:
'நீ சொல்லுறது நாயந்தான்!.. ஆனால் நான் ஆருக்கும் பயந்து உன்னைக்  காப்பாத்த ஏலாதெண்டு விடேல்லை!.. ஆனால் இவள் புள்ளையை  நினைக்கத்தான் எனக்கு நீ சொல்லுறது போலை செய்யிறதுதான் சரியெண்டு படுகுது!", என்றவர் தொடர்ந்து, 'சரி! நீயும் நந்தாவதியும் இப்பவே போய்  உங்கiடை சாமான்களை எடுத்துக்கொண்டு இஞ்சை வந்து சாப்பிட்டிட்டுப்  படுங்கோ!.. கிழக்கு வெளிக்க முன்னம் நாங்கள் வெளிக்கிட்டால்தான்  மத்தியானமளவிலை பதவியாவுக்குக் கிட்டப் போகிலாம்!.. போய் சாமான்  சக்கட்டை எடுத்துக்கொண்டு வாருங்கோ!" என அவர்களை அனுப்பியபோது,  நந்தாவதி பயமும், துன்பமும் மிக்கவளாய் கலவரப்பட்டுப் போனாள்.
அன்றிரவு தனக்கு அருகிலேயே குணசேகiராவைப் படுக்க வைத்த சிங்கராயர் சொன்னார். 'இஞ்சை பார் குணசேகரா! நீயா நானோ லெச்சனுக்குத்  துண்டுபோடப் போகேல்லை!... ஆனால் எலெச்சன் கலவரம் இந்தக்  காட்டுக்கைகூட வந்திட்டுது!... எல்லாம் இந்த லெச்சன் கேக்கிறவங்கள்  செய்யிற வேலை குணசேகரா!.. கிராமச்சங்க லெச்சன் வந்தால் சாதிப்புறிவு,  ஊர்ப்புறிவு சொல்ல சனத்தைக் கிளப்பிவிடுவாங்கள்!.. யாழ்ப்பாணத்தான்  வன்னியான் எண்டு பிரிவினை செய்வாங்கள்!.. பெரிய லெச்சனிலை  சிங்களவன் தமிழன் எண்டு சொல்லிச் சனத்துக்கு விசரேத்தி துண்டுபோடப்  பண்ணி வெண்டு போடுவாங்கள்!.. இந்தப் பேய்ச்சனம் வெட்டுக் குத்திலை  இறங்கி அழிஞ்சுபோகுது!" என்றார். 'அது சரிங் ஐயா! நம்மடை ஆக்களுங்  இந்தமாதிரித்தானே!.. ஆனா இந்த றஸ்தியாதிக்காறன்தானே இந்தக் கூடாத  வேலை எல்லாங் செய்யிறது!.. எல்லாச் சிங்கள ஆக்களுங் கெட்வங்க  இல்லைத்தானே ஐயா!.. மிச்சங்பேர் நல்லவங்கதானே!" எனப் பதிலளித்தான்  குணசேகரா.
அடுப்படி மோடையில் நந்தா படுத்திருந்தாள். வாசலில் செல்லம்மா ஆச்சி  படுத்திருந்தாள். சேனாதி ஆண்டாங்குளம் வந்தால் வழமையாகப் படுக்கும்  இடத்தில்தான் இப்போது நந்தாவும் படுத்திருந்தாள். சேனாவைப் பிரிந்து  செல்லப் போகின்றோமே... மீண்டும் அவனை எப்போது காண்பது?...  காணத்தான் முடியுமா? என்ற ஏக்கம் அவளுடைய நெஞ்சைப் பிழிந்தது.
மலங்க மலங்க விழித்தவளுடைய கண்களில் மேலே கட்டியிருந்த  கொடியில், சேனாதியின் சாறம் தொங்கியது. சட்டென எழுந்து அதை  இழுத்துத் தன் முகத்தை அதிற் புதைத்தாள் நந்தாவதி. அவனுடைய வாலிப  உடலின் வாடை அந்தச் சாறத்தில் மணக்கவே அதைத் தனது மார்புடன்  அணைத்து, ஆறாய்க் கண்ணீர் பெருகப் படுத்துக்கொண்டாள் அவள்.


மேலும் சில...
வாசகர்களுடன்..
வட்டம்பூ-01
வட்டம்பூ - 02
வட்டம்பூ - 03
வட்டம்பூ - 04
வட்டம்பூ - 05
வட்டம்பூ - 06
வட்டம்பூ -7-8
வட்டம்பூ - 09
வட்டம்பூ - 10
வட்டம்பூ - 11
வட்டம்பூ - 12
வட்டம்பூ - 13
வட்டம்பூ - 14
வட்டம்பூ - 15
வட்டம்பூ - 16
வட்டம்பூ - 17
வட்டம்பூ - 19
வட்டம்பூ - 20 - 21 -
நிலக்கிளி - வட்டம்பூ நாவல்களும் நானும் - 01
நிலக்கிளி, வட்டம்பூ நாவல்களும், நானும் - 02
நிலக்கிளி,வட்டம்பூ நாவல்களும், நானும் - 03

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 15 Jul 2024 20:12
TamilNet
HASH(0x563a371f2808)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 15 Jul 2024 20:12


புதினம்
Mon, 15 Jul 2024 20:12
     இதுவரை:  25364283 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4666 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com