அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 04 October 2023

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow நூல்நயம் arrow முகமற்ற கவிஞர்களின் கவிதைகள்.
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மாற்கு

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


முகமற்ற கவிஞர்களின் கவிதைகள்.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: - கருணாகரன்  
Wednesday, 07 February 2007

பரதேசிகளின் பாடல்கள்.
வெளியீடு :- அப்பால் தமிழ், பிரான்ஸ்.
 
01. 
பழமொழிகளுக்கு யாரும் உரிமைகோருவதில்லை பழமொழிகளை யார் தந்தார்கள்? என்று யாருக்கும் தெரியாது. ஆனால், அவற்றின் பொருளும், அழகும் கவிதைக்கு நிகரானது. இதேபோல, நாடோடிப்பாடல்களுக்கு உரித்தாளர்கள் என்று எந்த தனி அடையாளமும் கிடையாது. ஆனால், அவற்றின் கவித்துவம் அசாதாரணமானது. வாழ்வை அதன் மெய்யான அனுபவத்தளத்தில் வைத்து அவை வெளிப்படுத்துகின்றன. அதனால், அவை மண்ணினதும், மக்களினதும் அடையாளமாக இனங்காணப்படுகின்றன. இன்றைய சமூகவியல் ஆய்வுகளில் பழமொழிகளுக்கும், நாடோடிப்பாடல்களுக்கும் இருக்கும் முக்கியத்துவம் பெரியது.
 
நாடோடிப்பாடல்களை நவீன மொழியில் சொல்வதனால் முகமற்றவர்களின் குரல் எனலாம். முகமற்றவர்கள் உலகெங்கும் இருக்கின்றார்கள் முகமற்றவர்களின் வரலாறு நீண்டது. இந்த வணிக உலகத்தில் மட்டும் மனிதன் முகமற்று போகவில்லை. இதற்கு முன்பு மிக முன்னரே மனிதன் முகமற்றுவிட்டான். மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் மறுபக்கம் என்பது முகமற்றுப்போன மனிதர்களின் வாழ்க்கையே.
 
ஜிப்சிகள் இதற்கு நல்ல உதாரணம். ஜிப்சிகளின் வரலாறு நீண்டது. முகமற்று போனவர்களுக்கும் வரலாறு உண்டா? அவர்களுக்கு எப்படி வரலாறும் சுவடும் இருக்க முடியும்? சுவடுகள் உள்ள மனிதர்கள் எப்படி முகமற்றுபோனவர்கள் என்று சொல்ல முடியும். என்ற கேள்விகள் மேலோட்டமாக பார்த்தால் நியாயமானவை. ஆனால் அவர்களுக்கு எந்த சுவடுகளும் இல்லை என்பதை கவனிக்க வேண்டும். அவர்களின் எச்சங்கள் மட்டுமே எமக்கு கிடைக்கின்றன. இந்த எச்சங்களை நாம் சேர்த்துப் பார்க்கும்போதும், தொகுத்து பார்க்கும்போதும் அதற்குள் ஒரு தொடர் ஓட்டத்தைப் புரிந்து கொள்ளலாம். இந்த தொடர் ஓட்டம் என்பது தீர்மானிக்கப்பட்டதல்ல ஆனால் அனுபவ வாழ்வின் சாரத்தை அதன் மெய்த்தளத்தில் - அனுபவ தளத்தில் பதிவு செய்தவை என்பதால் அவற்றுக்கு வரலாற்று அடையாளம் கிடைத்துவிடுகின்றது. இங்கே துயரம் என்னவெனில் இந்த வரலாற்றில் அவர்களுடைய மனம் இருக்கும். ஆனால், முகம் இருக்காது.
 
முகமற்ற படைப்பாளிகள் எப்போதும் மனதை தருகிறார்கள் காலத்திற்கும் சமுகத்திற்குமாக. ஆனால், அவர்களுக்கு தங்களுடைய முகம் அவசியமில்லை. முகத்திற்கான போராட்டம் அவர்களுக்கு இல்லை. இங்கே ஒரு முரண் உண்டு. உண்மையில் அவர்களுடைய முகம் சிதைக்கப்பட்டதன் வலிதான் அவர்களின் படைப்புலகம். முகத்தை இழந்ததின் வலி என்பது மறு நிலையில் என்ன? முகத்துக்கான எத்தனமல்லவா.... காலத்தின் எல்லா இடுக்குகளிலும், பரப்புகளிலும் முகமற்ற மனிதர்களின் வலி நிரம்பிக்கிடக்கின்றது. உலகம் இந்த வலியையும் கொண்டுதான் சுழல்கிறது.
 
மேற்கில் ஜிப்சிகளின்  படைப்புலகம் துலக்கமாக  நீண்ட  காலமாக   அடையாளம் காணப்பட்டிருக்கிறது.  இந்தவகைப்படைப்புக்கள் ஆபிரிக்கச் சமூகங்களிலும் நிறையவுண்டு. ஜப்பானில் இன்னும் இது அதிகம். முகத்தை  தீர்மானமாக இழக்கும் வாழ்முறையைக் கொண்டிருக்கும் கவிதைகளிலும் இந்தப் பண்பைக் காணமுடியும். தமிழில் நாடோடிப்பாடல்கள் நிறையவுண்டு. அவற்றுக்குச் செழுமையான  மரபொன்றுமுண்டு.
 
இப்போது இந்த   நாடோடி மரபின்  தொடர்ச்சியாக 'பரதேசிகளின்  பாடல்கள்' என்றொரு  நவீன கவிதைத்தொகுப்பு  வந்துள்ளது.  அப்பால்  தமிழ் என்ற  வெளியீட்டகம் இந்தத் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
 
'பரதேசிகளின்   பாடல்கள்'  தொகுப்பில்  இருபது கவிதைகள்  இருக்கின்றன. எழுதியவர்களின் பெயர்கள் என  பரதேசிகளுக்கு கிடையாது.   இதனால் இவை  எத்தனைபேருடைய  கவிதைகள் என்று தெரியாது. அப்படிப்பார்க்கும் போது நமது மனம்   அந்தரிக்கின்றது.
 
நாடோடிப்பாடல்கள் அல்லது ஜிப்சிகளின் பாடல்கள் எல்லாம் அவர்கள் இல்லாத காலத்தில் பின்னர் வேறு யாரோவால்  தொகுக்கப்பட்டன. அல்லது சமூகம் தொடர்ந்து அவற்றை வாய்மொழியாக பராமரித்துவந்து  பின்னர்   அவை  தொகுக்கப்பட்டிருக்கின்றன.
 
ஆனால், இங்கே 'பரதேசிகளின்   பாடல்கள்' எழுதிய காலத்திலேயே எழுதியவர்கள்  இருக்கும் போதே தொகுக்கப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால்  இவற்றைத் தொகுக்கும் போது எழுதிய   படைப்பாளிகள்  அல்லது  பரதேசிகள் தொகுப்புக்கு  அனுசரணையளித்திருக்கிறார்கள். தங்களின் கவிதைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.
 
தொகுப்பின் பதிப்புரையில் பதிப்பாளரே இதனை   வேறு  விதமாக  வெளிப்படுத்துகிறார். 'பரதேசிகளின் பாடல்கள்' என்ற இந்த வகையான தொகுப்பினை ஆண்டுதோறும்   கொண்டுவரும்  எண்ணம் உண்டு. இம்முயற்சியில் ஆர்வம்கொண்டவர்கள் தங்கள் படைப்புக்களை இவ்வாறான தொகுப்பில் இணைத்துக்கொள்ளலாம். படைப்புக்களை அனுப்புவோர் 'பரதேசிகளின் பாடல்கள்' தொகுப்புக்களது என்று தலைப்பிட்டு அனுப்பவேண்டும் என்கிறார்.
 
நாடோடி மரபினடிப்படையில்   இந்தத் தொகுப்பை  அணுகும் போது  இந்த  அறிவிப்பு   சுற்றுச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் இந்த தொகுப்பில் வெளிப்படையில் ஒரு புதுமைத்தன்மையும் அதனடியில் மெல்லிய போலித்தனமும் தெரிகிறது. செயற்கையாகவே பரதேசிகள் என்று பிரகடனப்படுத்திக்கொள்வது போன்ற தோற்றம் இது. இது ஒரு   வகையான  பச்சை  குத்துதலே. ஆனால்,  இந்த முயற்சி  தமிழில் புதியது. மாறுதலானது. முயற்சியின் பெறுபேறும் அதிகமானது. அதே வேளையில்  இந்தக் கவிதைகளின்  பொருள் குறித்து நாடோடி மரபுசார்ந்த கேள்விகள்  இல்லை.  இவை  மெய்யாகவே நாடோடிக்கவிதைகள் தான். அதேவேளை  அதற்கு எதிர்மாறானவையும்கூட.
 
கவிதைத் தொகுப்பின்   புறம் குறித்த விமர்சனங்களுக்கப்பால்  அதன் அகம் தீவிர கவனத்திற்குரியது.
 
02.
 
நாடோடிகளின் குறிப்புகள் வரலாற்றில்   முக்கியமானவை. நாடோடிகள்  இரண்டுவகையில் இனங்கணாப்படுகின்றனர். ஒருவகையினர் 'பயணிகள்'. மற்றவகையினர் "சராசரியான  வாழ்க்கைக்கு கீழும் மேலுமாக  அலைந்து திரிபவர்கள்".
 
பயணிகளான நாடோடிகள் தங்களின் பயணநூல்களிலும், குறிப்புக்களிலும் வரலாற்றை ஆழமாகக்பதிவு  செய்துள்ளார்கள். அல்லது அவர்களுடைய  குறிப்புகளில் இருந்து   பின்னர் வரலாறு ஆதாராபூர்வமாக்கப்படுகிறது. சீன, அரேபிய வணிகர்களும், யாத்திரீகர்களும்கூட ஒருவகையான  நாடோடிகள் தான். அவர்கள் நாடோடிகளாகவும் அதுசார்ந்த பயணிகளாகவும் இருந்துள்ளனர்.   இலங்கை, இந்திய வரலாற்றில் இத்தகைய  நாடோடிகளின் அல்லது பயணிகளின் குறிப்புகள் வரலாற்றியலில் ஆழமாகச் செல்வாக்குச் செலுத்துகின்றன.
 
மேற்கே நாடுகாண் பயணங்களுக்கு முன்னும் நாடுகாண் பயணங்களின் போதும் பின்னும் இது   நிகழ்ந்திருக்கின்றது. இங்கே ஆக்கிரமிப்புவாதிகளையும், கொலனியாதிக்கவாதிகளையும் குறிக்கவில்லை. சில  நாடோடிகள் முகங்களோடுள்ளனர். பலருக்கு முகமில்லை. ஆனால், பொதுவாகவே நாடோடி என்னும் போது மனதில் விழும்   சித்திரம் அவன்  முகமற்றவன் - வேரற்றவன் என்பதே. அது  ஆணோ, பெண்ணோ இதுதான் அடையாளம்.
 
தமிழில் நாடோடி என்ற சொல் எப்படி வந்ததென்றும் எப்படி   பொருள்கொள்ளப்பட்டு வந்ததென்றும் புரியவில்லை.  தமிழர்கள் அநேகமாக  மிகப்பிந்தியே நாடோடி என்ற  விதத்தில் வெவ்வேறு நாடுகளுக்கான பெயர்வைக்கொண்டிருக்கிறார்கள். மற்றும்படி  உள்நாட்டில் ஊரோடிகளாகவே இருந்தனர். ஊரோடிகளின்  பாடல்கள் நாடோடிகளின் பாடல்களாக எவ்விதம் கொள்ளப்பட்டு வந்தன என்று தெரியவில்லை.
 
பாடல்களின் பொருளில் நாட்டுக்கு நாடுமாறியதன் அடையாளங்களைக் காணமுடியவில்லை. ஊரோடிய சுவடுகளே   பாடல்களில் தெரிகின்றன. ஆனால், அவை  பரதேசிகளின்  மனநிலையைப்  பிரதிபலிக்கின்றன.
 
பரதேசி சமூகவாழ்வில் மிகத்தாக்கத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தும் பாத்திரம். விளிம்பு நிலைமனிதர்களின் நிழல் பரதேசிகளில், அல்லது பரதேசிகளின் நிழல்  விளிம்புநிலை மனிதர்களில் படிகின்றது.
 
பரதேசி வேரில்லாத மனிதர் அடையாளங்கள் அற்றவர். சமூக, பண்பாட்டு, வரலாற்று அடையாளங்கள் தீர்மானிக்கின்ற வாழ்வின் ஒழுங்கமைவுகள் பரதேசிகளைக் கட்டுப்படுத்துவதுமில்லை, அச்சுறுத்துவதுமில்லை. அடிப்படையில் 'கட்டற்ற சுதந்திரத்தின்   குரல்களாக' பரதேசிகளின்  குரல்களை  அடையாளம் காணலாம். விருப்பு வெறுப்புக்கள் தகர்ந்த வெளியிலேயே பரதேசிகளின் தளம் இயங்குகிறது. தீர்மானங்களில்லாத வெளி அவர்களுடடையது.
 
'பரதேசிகளின் பாடல்கள்'   அல்லது 'நாடோடிகளின்  பாடல்கள்' சமூக அரசியல்  பண்பாட்டுத்தளத்தில் 'கலகக்குரல்களாகவே'   எப்போதுமிருக்கின்றன. கட்டற்ற  சுதந்திரம் என்பது  'கலகத்துக்கான'  வெளியை பரதேசிகளுக்கு அளிக்கிறது தவிர சமூக பண்பாட்டுத்தளங்களின் பிணைப்பு இல்லை எனவே, அவற்றின் நெருக்குவாரங்களும் அச்சுறுத்தல்களும் அவர்களுக்கு இல்லாமற் போகிறது நாடோடி   பண்பாட்டின் மீது எதிர்க்குரலை கண்டனக்குரலாக  வைக்கிறார்கள்.
 
தமிழல்கூட 'பாலியலை'   இயல்போடும், வெளிப்படையாகவும், கூச்சமில்லாமல், தயக்கமில்லாமல், நாடோடிப்பாடல்கள் சொல்கின்றன. காதல் மற்றும், பால்விவகாரங்களை பேசுவதற்கு  தமிழ்ப்பண்பாட்டுச் சூழல்  அதிகளவு  வெளியை ஒருபோதும்  தருவதில்லை.  அதனால், அது   மொழியில்கூட  அதற்கமைவான புலனையும், முறைமையையும் உருவாக்கியுள்ளது.
 
நவீன படைப்புத்தளத்தில் இன்று ஏற்பட்டிருக்கின்ற மாறுதல்களும், விலகல்களும் இங்கே கவனிக்கப்படுகின்றன. ஆனால், அவை  மிகப்பிந்திய  வரவுகள்.
 
03.
 
'பரதேசிகளின்   பாடல்கள்' காயங்களின்  வலியாகவே  இருக்கின்றன. பரதேசி துயரத்தின்  அடையாளமாக   மட்டும் இருக்கமுடியாது. பரதேசி  தன்னளவில் முழுமைகொண்ட  ஒரு உயிரி. சலிப்பு, துயரம், மகிழ்ச்சி,  ஏக்கம், தவிப்பு, கனவு, நிறைவு, நிறைவின்மை, அலட்சியம், அக்கறை  எனச்சகலமும்  கொண்ட  ஒரு   யதார்த்தவாதி. 'நாடோடிப்பாடல்களில் இதனை நாம் தெளிவுறக்காணமுடியும். சித்தர்களின் கோணம்கூட பரதேசித்தன்மையுடையதே.  சித்தர்களிடத்தில்  அனுபவ   முதிர்ச்சியின்  திரட்சியுண்டு.  'நாடோடிப் பாடல்களில்'  இது  இன்னும்  ஆழமாகவும்,  விரிவாகவும் , முழுமையை நோக்கியிருக்கிறது.  துயரத்தைக்கடப்பதற்கு   நாடோடிப்பாடல்கள்  அநேகமாக எள்ளலைக்  கையாள்கின்றன. அந்த எள்ளல்  நமக்கு   அதிர்ச்சியளிப்பது. அது  ஒருவகையிலான  ஆற்றுப்படுத்தும் உளவியலே அது. அது ஒருவகையில்  மேன் இலக்கியமாகிறது. அதன் விரிவானதும், ஆழமானதும், யாதார்த்தமானதும் அடிப்படையில். தீரமுடியாத தவிப்பையும் அந்தரிப்பையும் காயத்தையும்   வலியையும்  கடப்பதற்கு எள்ளலை ஒரு  உபாயமாகவும் மார்க்கமாகவும்  கொள்கின்றன 'நாடோடிப்பாடல்கள்.' நாடோடிப்பாடல்களின் செல்வாக்கு மண்டலம் அநேகமாக இத்தன்மையினால் நிர்மாணிக்கப்பட்டதாகவே தெரிகிறது.
 
இங்கே 'பரதேசிகளின் பாடல்கள்'   தீராச்சுமையை  நம்மீது இறக்கிவிட முனைகின்றன.  வலியை  நம்முகத்தில் அறைகிறமாதிரி   பரிமாற  இநதப்பரதேசிகள்  முனைகின்றனர். இந்தப் பரதேசிகளுக்கு எல்லாமே  உறுத்தலாக  இருக்கிறது.  எல்லாமே  காயமாகவே படுகின்றன . எல்லாவற்றிலிருந்தும் வலிதெரிகிறது. பரதேதசி காணாமற் போவது இங்கேதான். அதாவது சமநிலை காணமுடியாது தத்தளிக்கினறபோது பரதேசியால் மெய்யான ஒரு பரதேசி நிலையை எட்டமுடியாது. என்பதால்தான் இங்கேயுள்ள பரதேசிக்கு சாதி தீராமுடியாத வலியாகிறது. தொடரும்   அவமானமாகவும்,  குருட்டுத்தனத்தின் சாபமாகவும் நீடிக்கின்றது.
 
'தறி' என்ற   கவிதையின்  பரிமாற்றம் இந்தவலியைப் பகிர்வதாகவே உள்ளது. ஊரைப்பிரிதலே இந்தக்கவிதைகளின்  ஆகப்பெரிய   அம்சம்.  ஊரில்  வேர்விட்ட விருட்சங்கள் (இப்படித்தான்   பல  கவிதைகளின்  குரல்கள் தொனிக்கின்றன) பிடுங்கி எறியப்பட்ட வெவ்வேறு திசைகளில் பெயர்க்கப்பட்டுவிட்டன.   அந்நியம், அந்தரிப்பு  என  தீராத்தவிப்பின் நிழலாகவும், நிஜமாகவும் அச்சமூட்டுகிற வகையில் பொங்குகின்றது.
 
நாடோடியினது   அல்லது பரதேசியின்  உலகம்  ஒருகட்டத்தில் எல்லாச்சலனங்களையும் கடந்தவிடுகிறது.  வாழ்வின்   அனுபவங்கள் சாதாரண மனிதர்களுக்கு கிடைப்பதைப்போல  இவர்களுக்கு இருப்பதில்லை. இவர்களின்  வாழ்தளம்  முற்றிலும் வேறானது. ஏறக்குறைய   ஒரு கட்டத்தில்  அது  'யாதும் ஊரே  யாவரும் கேளீர்' என்ற   நிலைக்கு வந்துவிடும்.
 
இவ்வாறு   திரட்சிபெற்றுவரும்  'பரதேசிகளின்  பாடல்கள்' முழுமைகொண்டு விடுகின்றன.  இது   சமரசமல்ல.  தோல்வியும் அல்ல. எல்லை கடத்தல். 'வாழ்வின் அனுபவச்சாரத்தை உறிஞ்சும் பரதேசி'  அதனை  நமக்கே மீண்டும்   பரிசளித்துவிட்டுப் போகிறார். நமது  மதிப்பீடுகளையும்  எண்ணவுலகையும்  தகர்த்துவிட்டு   எளிமையாகக்கடந்து  போகிறார் அவர். எதனைப்பற்றியும், யாரைப்பற்றியும் பொருட்டில்லாத உலகம் அவருடையது. ஒருவகையில இந்தச் சமுகத்தால்; புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கையும்கூட. இந்தப்புறக்கணிப்பு முதலில் காயத்தையும் தீராக்கோபத்தையும் ஏற்படுத்தினாலும் தொடர்ந்தும் அது மனதில் அவ்வாறு தங்கி விடுவதில்லை. அது பரதேசிகளுக்கு வாய்த்த வாழ்க்கை அமைப்பின்படி உரு சமனிலைக்கு வந்துவிடுகிறது. இதனால், முழுமையான   பரதேசி அல்லது நாடோடியிடம்  வன்மம் இருப்பதில்லை. இந்த வன்மத்தைக் கடக்கவே பரதேசி  எள்ளலை   முன்னிலைப்படுத்துகிறார்.  வன்மம் ஒன்றைப் பெயர்ப்படுத்துவதால்  வருவது. ஒருவரை ஒருதரப்பை   பொருட்டெனக்கருதுவதால்  ஏற்படுவது. இதனால், இந்தப் புதிய  பரதேசிகளின் பாடல்களில்  வன்மம் கொப்பளிக்கிறது. இந்தவன்மம் அடிப்படையில்   அவர்களை  'பரதேசிகளாக்காது' மீண்டும் மீண்டும் மரபுகள் மற்றும் சமுக மதிப்புகளின் எல்லையினுள்  நின்று தத்தளிக்கும்   மனிதர்களின்  இயலாமைக்குள்ளேயே முழக்கமிடுவன. இந்தக்கவிதைகள்  குறித்து  தொடர்ந்து  விவாதிக்கவேண்டியுள்ளது. அது இங்கே அவசியமானது.  அதற்கு  முன்பு  தனியாக  ஒரு சிறு  குறிப்பு இங்கே  எழுதியாக வேண்டியுள்ளது.
 
04.
 
இடைக்குறிப்பு:-
அப்பால் தமிழ் வெளியீட்டகத்தின் முயற்சியில்   'பரதேசிகளின் பாடல்கள்' (கவிதைத் தொகுப்பு)  வெளிவந்திருக்கிறது. இதற்குமுன் 'பாரீஸ் கதைகள்'. அது  இரண்டு பதிப்புக்களைக் கண்டுள்ளது.   ஒன்று இலங்கையிலும்,  மற்றது  தமிழகத்திலுமாக  வெளியாகியுள்ளன. அந்தத் தொகுப்பில் 15 சிறுகதைகள் பதிக்கப்பட்டுள்ளன.  எல்லாமே 'பாரிஸ்' நகரத்தை மையமாகக்  கொண்டவை. மற்றத்தொகுப்பு 'பரதேசிகளின் பாடல்கள்' இதில் இருபது கவிதைகள் உண்டு. சிறிய ஆனால் அழகான புத்தகம். எளிமையும் அழகும் ததும்பும் விதத்தில் வடிவமைக்கமாகக்ப்பட்டுள்ளது. பூமி பிளந்துள்ளது போல ஒரு  வலிமையான ஓவியத்தை   சேர்த்திருக்கிறார்கள். புத்தகத்தில் உள்ள கவிதைகளையும்விட  இந்தக்கோடு  - ஓவியம் கூடுதலான வலிமையுடையது. மிகச் சாதாரண கோடாக   யாருக்கும் தோன்றமுடியாது. நமது இதயம் இங்கே பிளந்துகிடக்கிறது.
 
குருதி வழியமுடியாத அளவுக்கு நமது   இதயம் காய்ந்துவிட்டதாகவும் பாலையாகிவிட்ட இதயம்  பிளந்திருப்பதாகவும் படுகிறது. தி . à®…. றெபேட் படவமைப்புச் செய்திருக்கிறார் மிக நேர்த்தி. ஒரு முன்மாதிரி. 48 பக்கங்கள்.   சிறிய புத்தகம்.
 
05.
    
பரதேசிகள் எனப்படுவோரின் இந்தக்கவிதைகள்   குறித்து சிந்திக்கும் போது புலம்பெயர்  இலக்கியம் குறித்து நமது பதிவுகள் மீள்நிலையடைகின்றன. அந்த மீள்நிலை சில கேள்விகளை   உருவாக்குகின்றன. அதிகபட்சம் ஒருசில கேள்விகள்.
புலம்பெயர் இலக்கியம் இன்னும் ஊர்நினைவில்தான் வரப்போகிறதா?.
கடந்தகாலத்தின் நிழலை உருமாற்றம் செய்யாமலே தொடர்ந்தும் அந்த நிழலைப் பிரதிபண்ணும் எத்தனிப்பிலேயே அது இனியும் கழியப் போகின்றதா?
புலம்பெயர் தளத்தின் -   வாழ்களத்தின் அனுபவங்களை அது சாட்சிபூர்வமாக்க இன்னும் தயங்குவதேன்.?
யதார்த்தத்தில்   சமரசங்களும் அடங்குதல்களும் கொந்தளிப்புகளும் நிகழ்கின்றது. அவற்றை கூச்சமின்றி அது திறக்காதா?
மனவெளியில் நிகழ்கின்ற இரசாயனமாற்றங்களை  பிரதிபலிக்கும் விதமான  பிரதிகளை  எதிர்பார்ப்பதன்  அடிப்படையாகவே இச்சில  நோக்கப்படுகின்றன.
புலம்பெயர்   இலக்கியம் இன்று  பழகிவிட்டது என்பதற்கும் அப்பால் அது  சூத்திரத்தனத்தின் சலிப்பையூட்டவும்  தொடங்கிவிட்டது.
இது ஒரு பக்கம் நியாயமான வேதனைகளின்   பரப்பாக இருக்கலாம். ஆனால், அதற்குமப்பால் நமக்குத் தேவையானது; நிகழ்வாழ்வின் உள்ளமைவுகள் தொடர்பான  ஊற்றும் பெருக்குமென்ன? என்பதே.
வேரற்ற வாழ்களத்தில் எதிர்நோக்குகின்ற   சவால்களும், அனுபவமும் உருவாக்குகின்ற மனிதநிலை என்ன?
இவ்வாறு   எழுகின்ற கேள்விகள்  புலம்பெயர்  இலயக்கியத்தின்  புதிய குணத்தை எதிர்பார்க்க விரும்பிய   ஆவலின்பாற்பட்டதே.
 
இங்கே இந்தத்தொகுதியில் பரதேசி என்பது   என்ன அர்த்தத்தில்  விளக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி  எழுகிறது. முதலில்  பரதேசி  என்றும் தன்னை பரதேசியாக  உணர்ந்தகொள்வதோ  பிரகடனப்படுத்துவதோ இல்லை. அடையாளம் இல்லாதவரே   பரதேசி.  பிறகெப்படி பரதேசிக்கு  அடையாளம் வரும். ஏதொன்று பற்றிய பிரக்ஞையும் பரதேசியாக்காது. ஒரு  அடையாளம், அடையாளத்திற்கான விழுமியம் வந்து அவர் வாழத் தொடங்கும்போது பரதேசி என்ற   அர்த்தம் தொலைந்து போகிறது. ஏதொன்றின்படியும் வாழமுடியாத அவலநிலை. அந்தரிப்பே  பரதேசியின் முதற்படிமம். பிறகு அந்த அந்தரிப்பைக்கடந்த சகலதும் ஒன்றேயென்றதும் அதற்குமப்பால் எந்த நிலையிலும் தளம்பாத சமநிலையோடிருக்கும் தன்மையும்தான் பரதேசியின் முழுஅடையளமாகிறது.
 
எந்த  அந்தரிப்பும் ஒருகட்டத்ததில்  இல்லாமற்போய்விடுகிறது. அதுவொரு இயல்பாகி அந்தரிப்பின்றி அது முழுமைக்கு சென்றுவிடுகிறது. அந்த முழுமையின் ஞானம்   பெரியது. அது  வாழ்வை  அதன்  முழுப் பரிமாணங்களில் வைத்து விசாரணைக்குப்படுத்துகிறது.அந்த ஞானம்   எல்லாவற்றையும் மிக இலகுவாக கடந்துபோய் விடுகிறது. ஒரு  தூசியளவுகூட இல்லை என்போமல்லவா. அந்த  அளவுக்கு. தூசி என்பது ; சாதாரணமானதல்ல. தூசி   கண்ணில் விழும்போது அதுவே  நமக்கு கண்ணுக்குள் மலை விழுந்தது  போலாகிவிடுகிறது. மலை  ஒரு போதும் கண்ணுக்குள்   விழமுடியாது. ஆனால், தூசியோ கண்ணுக்குள்  மலை போலாகிவிடுகிறது. ஏதொன்றும், அதன் இடம்பொறுத்தும், காலம்பொறுத்தும்  முக்கியமாகிவிடுகின்றன. ஆனால், பரதேசிக்கு எதுவும் முக்கியமானதல்ல.
 
பரதேசிக்கு நிறங்கள் தெரியாது.   நிறங்கள்  தெரியவரும்போது அடையாளம்  பிறக்கிறது. பரதேசியை  நாம்தான்   வேறுபடுத்துகின்றோம். அடையாளம் காணுகின்றோம். தனிமைப்படுத்துகின்றோம்.
 
பரதேசிக்கோ எதுவுமில்லை. அதனால்தான்   அந்தவாழ்வை அவரால் அப்படி  வாழமுடிகிறது.  அப்படிப் பரதேசிகள் வாழ்வதற்கு  அவர்கள் முதலில் நினைவை இழக்கிறார்கள். இந்த நினைவிழப்பின் போது அடையாளங்களை இழந்துவிடுதல்  நிகழ்ந்துவிடுகிறது. இழத்தலும், தொலைத்தலும்தான் பரதேசியின் இயல்பு, அது   ஒரு சமூகத்தில் சமூக  நிர்ப்பந்தத்தால் நிகழ்கிறது. இன்னொரு இது விதத்தில்  மனமுதிர்ச்சியால் விளைகிறது.
 
பரதேசியிடம் துக்கமில்லை. துக்கத்தை ஒரு பொருட்டென அவர்கள் கருதுவதில்லை.   எதுவும் பெரிதாக  தோன்றாதவரிடம்  எப்படித்துக்கம்  பிறக்கும்? அதனால் வன்மமோ வலியோ ஏற்படுதில்லை. இதனால் கட்டுகள், எதிர்பார்ப்புகள் எதுவுமிருப்பதில்லை. சமூக   விழுமியங்கள் குறித்த  பதிவுகள்  கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும்  கடந்துவிட்டதனால்   அவை குறித்த  மனப்பதிவுகளோ  துயர்களோ இல்லை.  குடும்பம்   குறித்த  கவலைகளும் இல்லாமலும் போய்விடுகிறது. அப்படிக்குடும்பம் இருந்தாலும் அந்தக்குடும்பமும் பரதேசி நிலையிலேயே ஒரு  வாழ்கிறது. வாழ்ந்து கழிகிறது.
 
ஆனால், அதில் பல இடறுப்பாடுகள்   இருக்கின்றன.  அதனால், அதற்குள் வலியும் சீழும் நிரம்பி இருப்பதுண்டு என்ற போதும் அவை பரதேசிகளுக்கு உறுத்தலாக இருப்பதில்லை.
 
நான் பரதேசிகளின்   பாடல்களில்  ஜிப்சிகளின் கலவையான  பரதேசிகளையே எதிர்பார்த்தேன். மேற்கில் பரதேசிகளான புலம்பெயரிகள் அங்குள்ள ஜிப்சிகளின் கலவையாகுதல் தவிர்க்கமுடியாது போகுதல் சாத்தியம்.   அதனையே எதிர்பார்த்தேன். அது  தவிர்க்கமுடியாத  ஒரு நிலை.
 
 
இருத்தல் சவாலான போது   அதனை  பரதேசிகள்  இன்னொரு  வாழ்நிலையினூடாக   கடந்துபோகிறார்கள். தீர்மானமின்றியே பரதேசிகளின் வாழ்க்கை  நிகழ்கிறது.  தீர்மானங்களில்லாத முறைமை  அல்லது   பயணம் எத்தனை  இனியதும், சுதந்திரமானதும். அது எல்லோருக்கும் எளிதில் வாய்க்காதது.
 
பரதேசிகளின் இதயம்   பேரியற்கையுடன்  இணைந்தது.  இயற்கைக்கு என்றும் முதுமை இல்லை. வானம் என்றும்  புதியதாகவே   இருக்கிறது. கூடவே அழகாகவும். கடலும் அப்படித்தான். மலைகளும், நதிகளும் - சூரியனும், நிலவுமகூட. இவை ஒன்றுடன் ஒன்று இணையும்  போதும் அழகு. விலகும்போதும் அழகு. எந்த நிலையிலும்   அழகு என்பதே  இயற்கையின்  புதுமை.
 
பரதேசிகளின்   இதயமும் அப்படித்தான்.  அது எந்தநிலையிலும்  தளம்பாதது. நிறைந்தது.  முழுமையுடையது. அத்துடன் அது ஆதிமனிதனின் மனக் கூறுகளையுடையது. திரிதல் என்பதே   அதன்  அடிப்படை. கட்டற்றுத்திரிதல் அது. ஆதிமனிதனில்  திரிதல்  அல்லது அலைதல் என்பது   ஒரு பொது நிலையும் யதார்ததமும். அத்துடன் இயல்பானதும்கூட. அலைதல்தான்  ஆதிவாழ்க்கை. அந்த அலைதல்தான் பரதேசியின்  வாழ்க்கையும். ஆக பரதேசியின் மனம்  ஆதிமனம். அந்த ஆதிமனதின்  சுவடுகள்  இந்தப்பரதேசிகளின் பாடல்களில் உண்டா? அது நவீன வாழ்நிலைகளோடும் வாழ்களத்தோடும். 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)

 


மேலும் சில...
கருணாகரனுக்கு ஓர் எதிர்வினை
வாசுதேவனுக்கு ஒரு பதில்

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 04 Oct 2023 01:57


BBC: உலகச் செய்திகள்
Wed, 04 Oct 2023 02:09


புதினம்
Wed, 04 Oct 2023 01:57
















     இதுவரை:  24073054 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3833 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com