அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 30 arrow அச்சு ஊடகங்கள் மீதான கவனிப்பு குறைந்து விடவில்லை
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அச்சு ஊடகங்கள் மீதான கவனிப்பு குறைந்து விடவில்லை   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: -பொ.ஐங்கரநேசன்  
Monday, 12 February 2007

'தை மாதம் என்றாலே சென்னை மாநகருக்குத் தனியானதொரு கொண்டாட்டம்' வந்துவிடும். பொங்கல் விழாக்கள். மெரீனாக் கடற்கரையை மனிதத் தலைகளால் நிறைக்கும், காணும் பொங்கல், தீவுத்திடலை அலங்கரிக்கும் சுற்றுலா - கைத்தொழில் பொருட்காட்சியுடன் இக்காலப் பகுதியில் நடைபெறும் சென்னைப் புத்தகக் கண்காட்சியும் இந்தக் கோலாகலத்துக்கு ஒரு காரணம். வழமை போலவே இம்முறையும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த புத்தகக் கண்காட்சி, வழமையையும் விஞ்சிய புத்தகத் திருவிழாவாக நிகழ்ந்து முடிந்திருக்கிறது. ஆம்! 1977 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் சென்னைப் புத்தகக் கண்காட்சி, அதன் காட்சிப்படுத்தலின் பரிணாம வளர்ச்சியில் இன்று சென்னையின் ஒரு பண்பாட்டுப் பெருவிழாவாகவே அடையாளப்பட்டுள்ளது.

தை 10 தொடங்கி 21ஆம் தேதிவரைக்கும் புனித ஜோர்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இடம்பெற்ற சென்னைப்புத்தகக் கண்காட்சிக்கு (இடஞுணணச்டி ஆணிணிடு ஊச்டிணூ) பல சிறப்புகள் உண்டு. இந்தப் புத்தகக் காட்சிக்கு இது 30வது ஆண்டு. இதை நடத்தி வருகின்ற தென் இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கு இது 55ஆவது ஆண்டு. கடந்த வருடங்களில் சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் கண்காட்சி நடைபெற்றபோது இடப்பற்றாக்குறைவால் நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்தது. பல நிறுவனங்களுக்கு இடங்களை ஒதுக்கமுடியாமற் போனது. நுழைய முடியாமல் ஏராளமான பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இவற்றைக் கருத்திற்கொண்டே கண்காட்சி, பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே, ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்துக்கு இடமாற்றப்பட்டிருந்தது. இதனால், கடந்த ஆண்டு காயிதே மில்லத் கல்லூரியில் 350 அரங்குகளில் இடம் பெற்ற கண்காட்சி இம்முறை புத்தகக் கண்காட்சியின் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 474 அரங்குகளில் நிகழ்ந்தேறியுள்ளது. இருந்தும், `கடந்த ஆண்டைவிட இந்தத்தடவை அரங்குகள் அதிகமாக அமைக்கப்பட்டபோதும் விண்ணப்பிக்கப்பட்டவற்றில் 70க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இடமின்மையால் நிராகரிக்க வேண்டியதாயிற்று' என்கிறார் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவரும், கண்ணதாசன் பதிப்பகத்தின் உரிமையாளருமான காந்தி கண்ணதாசன்.

கண்காட்சியில் புத்தக விற்பனை நிறுவனங்களினதும் பதிப்பகங்களினதும் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு ஏறுமுகமாக இருந்துபோதும், இந்த வருடத்தைப்போன்ற பாய்ச்சல் ஒருபோதும் இருந்ததில்லை. இதற்குத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கரிசனை பதிப்புத்துறையின் மீது திரும்பியிருப்பது பெருங்காரணம். சில மாதங்களுக்கு முன்னால் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அரசு வாங்கும் புத்தகங்களின் எண்ணிக்கையை 600 இலிருந்து 1,500 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்த எண்ணிக்கை 1,000 ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆயிரம் பரதிகளை விற்பனை செய்வதற்கு ஆண்டுக்கணக்காக காத்திருக்கும் நிலைமாறி, அரசே ஆயிரம் பரதிகளை வாங்கிக் கொள்வது மொத்த விற்பனைக்குமான உத்தரவாதத்தைக் கொடுத்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் என்ற பெயரில் தலா இருபது இலட்சம் ரூபாவை அரசு வழங்குகிறது. இதில் இரண்டு இலட்சம் ரூபாவை நூலகம் அமைக்க, ஒதுக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னுமொரு வரப்பிரசாதமாக அரசு விழாக்களில் மாலைகள், பொன்னாடைகள் அணிவிப்பதற்குப் பதிலாக இனிமேல் புத்தகங்களையே வழங்கவேண்டும் எனவும் அரசு ஆணைபறப்பத்துள்ளது. இவையெல்லாம் தமிழ்ப்பதிப்புத்துறைக்குப் புது இரத்தத்தைப் பாய்ச்ச, மளமளவென நூல்களைப் பிரசவிக்க ஆரம்பித்துள்ளன. உயிர்மை பதிப்பகம் கண்காட்சிக்கென்றே 30க்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் ஐம்பதுக்கும் அதிகமான நூல்களைக் கொண்டுவந்துள்ளது. பதிப்புலகில் இப்போதுதான் நுழைந்திருக்கும் தோழமை பதிப்பகம்கூட தன் பங்குக்கு ஏழு நூல்களை வெளியிட்டிருக்கிறது. இவற்றில் இருந்து கண்காட்சியில் இம்முறை வந்து குவிந்திருக்கக்கூடிய நூல்களின் வகைதொகைகளைப் புரிந்து கொள்ளமுடியும்.

தமிழகம் மட்டுமல்லாது ,அண்டை மாநிலங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் பதிப்பாளர்கள் பங்கேற்றனர். தமிழ்நூல்களைக் காட்சிப்படுத்தும் அரங்குகளுக்கு (நூறு சதுரஅடி பரப்பளவில்) வாடகையாக ரூபா 8,000 உம், ஆங்கில அரங்குகளுக்கு ரூபா 16,000 உம் பல்ஊடக (?தடூணாடி ட்ஞுஞீடிச்) நிறுவனங்களிடம் ரூபா 20,000 உம் அறிவிடப்பட்டன. தமிழ் நிறுவனங்கள் 303 அரங்குகளைப்பிடிக்க, வாடகை இரட்டிப்பாக அறவிட்டும்கூட ஆங்கில நிறுவனங்கள் 125 அரங்குகளை நிர்மாணித்திருந்தன. எண்ணிக்கையில் தமிழ் நூல்களுக்கான காட்சியறைகள் அதிகமாக இருப்பது தமிழ் பதிப்பகங்களின் வீறான வளர்ச்சிக்குக் கண்முன்னான சாட்சி` என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார் தென் இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செயலாளரான ஆர்.எஸ். சண்முகம். செண்பகா பதிப்பகத்தின் இயக்குநர் இவர். ஆரம்ப காலங்களில் ஆங்கில நூல்களின் விற்பனையாளர்களும். வெளியீட்டாளர்களுமே கண்காட்சியை அதிகம் ஆக்கிர மித்திருந்தனர். 2002 இல் நிகழ்ந்த கண்காட்சியின்போதுகூட ஆங்கில நூல்களுக்கான அரங்குகள் 91 ஆக இருக்க, தமிழ் உள்ளிட்ட பிறமொழி அரங்குகளின் எண்ணிக்கை 78 ஆக இருந்தது. ஐந்து ஆண்டுகளில் தமிழ் நூல்களுக்கான அரங்குகள் நான்கு மடங்குகளாக உயர்ந்திருப்பது தமிழ்ப் பதிப்புலகு அடைந்துவரும் செழிப்புக்கான அடையாளமாகும்.

சென்னைப் புத்தகக்காட்சி, பதிப்பகங்கள் கொள்வனவுக்காக நூலகத் துறையை மட்டுமே நம்பியிருக்க வேண்டியதில்லை என்பதைச் சொல்லும் விதமாகவும் அமைந்தது. சகல அரங்குகளிலும், வங்கிகள், தொலைபேசி நிறுவனங்கள் போன்ற சேவை மையங்களின் காட்சிக்கூடங்களிலும்கூட பாரபட்சம் இல்லாமல் சனத்திரள் அலை மோதியது. தமிழ் அரங்குகளில் வெகுசன வாசிப்புக்குத் தீனிபோடும் நிறுவனங்கள் தொடங்கி ஆன்மீக வெளியீட்டகங்கள் காத்திரமான வாசிப்பை முதன்மைப்படுத்தும் கீழைக்காற்று. கிழக்கு, அலைகள், அன்னம், அடையாளம், தமிழ்மண், தமிழினி, உயிர்மை, காலச்சுவடு, `சாளரம்' என எல்லாப்பதிப்பகங்களிலும் விற்பனை சூடு பிடித்திருந்தது. கண்காட்சிக்கென்று பிரத்தியேகமாக சாளரம் என்னும் இலக்கியச் சிறப்பு மலரையும், ஒன்பது நூல்களையும் வெளியிட்டிருக்கும் சாளரம் பதிப்பகத்தின் அதிபர் வைகறை, `இணையச் சஞ்சிகைகள், தொலைக்காட்சி - சினிமா போன்ற கேளிக்கை ஊடகங்களின் செல்வாக்கையும் மீறி அச்சு ஊடகம் அதிகம் கவனிப்புப் பெறத் தொடங்கியுள்ளது' எனக் குறிப்பிடுகிறார். காந்தி கண்ணதாசனும் இதையே உறுதி செய்கிறார். கண்காட்சிப் பதிவுகளை ஆதாரம் காட்டிய இவரது கூற்றுப்படி, வார நாட்களில் சராசரியாக முப்பதாயிரம் பேரும், வார இறுதியிலும் விடுமுறை நாட்களிலும் ஐம்பதாயிரம் பேரும் வந்து போயிருக்கிறார்கள். சென்ற வருடம் ஒரு நாளைக்கு ஏழாயிரம் முதல் பத்தாயிரம் பேரே வருகை தந்துள்ளனர் என்பதை வைத்துப் பார்க்கும்போது பதிப்பாளர்களுக்கு இது இன்பஅதிர்ச்சிதான். திரண்ட பெருங்கூட்டம் முழுமையும் புத்தகங்களின் ஆராதகர்களாக இல்லாதபோதும்கூட ஒரு பகுதி, வருங்காலத்தில் வாசகப் பரப்பாக மாறவே செய்யும்.

புத்தகக் கண்காட்சியைத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தொடக்கி வைத்தார். பழுத்த அரசியல்வாதியும், முதுபெரும் இலக்கியவாதியுமான அவரைக் காரண காரியத்தோடுதான் அழைத்திருப்பார்கள் போலும். கலைஞர் தன் சொந்தப் பணத்தில் இருந்து ஒரு கோடி ரூபாவை சங்கத்துக்கு வழங்கிப் பதிப்பாளர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்தார். இதன் வட்டியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஐந்து எழுத்தாளர்களுக்குக் கலைஞர் பெயரால் தலா ஒரு இலட்சம் ரூபா விருதுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. புத்தகக் கண்காட்சிக்கென நிரந்தரமான இடம் இல்லை. எபாஸ் பள்ளி, வூட்லண்ட்ஸ் ஹோட்டல், மெரீனா கடற்கரை, காயிதே மில்லத், கீழ்ப்பாக்கம் என்று அலைந்து கொண்டிருக்கிறது. இப்போது, இதற்கும் விடிவு பிறந்துள்ளது. நிரந்தரமான ஒரு இடத்தை ஒதுக்குவதற்கு அரசு ஆவன செய்யும் என்ற உத்தரவாதத்தையும் கலைஞர் ஒரு முதல்வராக வழங்கிச் சென்றிருக்கிறார். ஆனால் கலைஞர் காட்டிய அக்கறை பதிப்பாளர்கள் சிலரில் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் அரசுகள் கலைஞர் மீதுள்ள கோபத்தை, அவர் ஆர்வம் காட்டிய பதிப்புத்துறையின் மீது காட்டலாம்‌ என்று கவலைப் படுகிறார்கள். சென்ற தடவை ஒரு பதிப்பகம் கலைஞரின் படத்தை விளம்பரத்தட்டியாக வைத்தபோது அதை அகற்றக்கோரி அரசியல் எதிரணி தகராறு செய்தமை இதற்கு உதாரணமாகச் சுட்டப்படுகிறது.

கண்காட்சி நடைபெற்ற இரண்டாவது நாளில் இருந்து தினமும் மாலையில் சிறப்புரைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. `வாசித்தலை சுவாசித்தல்' என்ற தலைப்பில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், `உலகைக் குலுக்கிய புத்தகங்கள்' என்ற தலைப்பல் கவிஞர் தேவேந்திர பூபதி, `வேடிக்கையான மனிதர்கள்' தலைப்பில் தென்கச்சி கோ சுவாமிநாதன், சகவாழ்வும் இலக்கியமும் குறித்து பேராசிரியர் சாலமன் பாப்பையா, `இலக்கியமும் இளைஞர்களும்' பற்றி சிலம்பொலி செல்லப்பனார்... இப்படித் தமிழகத்தின் பிரபலங்கள் பலராலும் வழங்கப்பட்ட கருத்துரைகளுக்கு பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. அதே போன்று, ஏ. கே. செட்டியார் நினைவரங்கில் திரையிடப்பட்ட படங்களும் கண்காட்சிக்கு மாற்றுத் திரைப்பட ரசனை உள்ளவர்களின் கூட்டத்தை அழைத்து வந்தது. இந்நாட்களில் ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், அசோகமித்திரன், பாரதி, தகழி சிவசங்கரப்பள்ளை போன்ற இலக்கிய ஆளுமைகள் பற்றிய ஆவணப்படங்களுடன் அகிரா குரோசாவாவின் `ட்ரீம்ஸ்', `சத்யஜித் ரேயின்', `பதேர் பாஞ் சாலி', டிசிக்காவின் `பைசிக்கிள் தீவ்ஸ்', சார்லி சாப்ளினின் `மொடேர்ண் ரைம்ஸ்', உள்ளிட்ட உலகப்புகழ்பெற்ற பல்வேறு படங்களும் திரையிடப்பட்டன. ஐந்து ரூபா மட்டுமே நுழைவுக் கட்டணமாகச் செலுத்தி உள்ளே நுழைந்த வாசகர்களைப் பதிப்பகங்களும் ஏமாற்றவில்லை. சகல நூல்களுமே 10 விழுக்காடு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டன. கண்காட்சி நிறைவுறும் நேரத்தில் தினமும் நுழைவுச்சீட்டுக்களின் குலுக்கலில் 12 பேருக்குப் புத்தகப் பொதிகள் பரிசுகளாக கொடுக்கப்பட்டன. அத்தோடு, தினமும் இருவரைத் தெரிந்தெடுத்து அவர்கள் சிங்கப்பூர் சென்று வருவதற்கான விமானப்பயணச்சீட்டுகளும் ஆனந்தவிகடனால் வழங்கப்பட்டன. ஒரு நாளில் புத்தகம் வாங்கிச் சென்றவர்கள் கூட மீண்டும் மீண்டும் வந்து புத்தகங்களைப் பார்வையாலேயே பசியறியாமையைக் காண முடிந்தது. அந்த அளவுக்குப் புத்தகங்களின் செய்நேர்த்தி பார்வையாளர்களை வசியம் செய்தது. உண்மைதான் ! தமிழ்ப்பதிப்புகள் குறிப்பாக, காத்திரமான தமிழ்படைப்புகள் உச்சமான அச்சமைப்பு, வடிவமைப்புடன் தமிழ்த்தரம் என்று சொல்லக்கூடிய ஒரு தனித்துவமான அடையாளப்படுத்துகையுடன் அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், `வேலையில்லாப் பட்டதாரியும் மாணவனும்தான் தேடல்மிகுந்த வாசகன். படிப்பதற்காக வாசகன் தண்டிக்கப்படக்கூடாது. எளிமையான தயாரிப்பில் மலிவான விலையில் புத்தகங்கள் வர வேண்டும்' என்கிறார் கலை விமர்சகர் இந்திரன்.

தோழமை பதிப்பகம் கண்காட்சியில் எழுத்தாளரும் விமர்சகருமான பா. செயப்பிரகாசத்தின் (சூரியதீபன்) `ஈழக்கதவுகள் 'என்னும் நூலை வெளியிட்டிருந்தது. 2002 ஆம் ஆண்டு அக்டோபரில் யாழ்ப்பாணத்தில் நடந்த மானுடத்தின் தமிழ்க்கூடல் என்னும் கலை, இலக்கியப் படைப்பாளிகளின் சங்கமத்துக்குச் சென்று திரும்பய பா. செயப்பிரகாசம் தன்னுடைய அனுபவங்களைப் பதிவு செய்திருக்கும் ஒரு பயண இலக்கியம் இது. மிகப்பிந்திய வரவு என்பதால் சரியாக விளம்பரமாகாத நிலையிலும் ஆச்சரியப்படும்படியாக பிரதிகள் அதிக அளவில் விற்பனையானதாகத் தெரிவிக்கிறார், தோழமை பதிப்பக அதிபர் பூபதி. இவர் ஓவியர் புகழேந்தியின் சகோதரர். புகழேந்தியின் `தமிழீழம்' நான் கண்டதும் என்னைக் கண்டதும், நூலையும் தோழமைதான் வெளியிட்டிருக்கிறது .அதிகம் வாங்கப்பட்ட நூல்களில் இதுவும் ஒன்று. ஈழத்தமிழர்களின் அகதிவாழ்வைப் பதிவு செய்திருக்கும் கவிஞர் அறிவுமதியின் `வலி' தொகுப்பும் கண்காட்சியில் கவனிப்புக்கு ஆளானது. ஈழத்தின் கதவுகளைத் திறந்து போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் அந்த மண்ணின் கண்ணீரையும் காயத்தையும். சுதந்திர வேள்வியையும் வேட்கையையும் தமிழகத்து வாசகர்ளுக்குக் கலைத்துவத்துடன் காட்டுகின்ற பங்களிப்பை இந்நூல்கள் செய்திருக்கின்றன.எனினும், `போராட்டத்தைப்பற்றி எழுதுவதற்கும் போராடிக் கொண்டே எழுதுவதற்கும் வேறுபாடுகள் நிறையவே இருக்கச் செய்யும்.

ஈழத்தில் இருந்து கொண்டே இரத்தத்தினால் எழுதிவருகிறவர்களின் படைப்புகள் கிடைக்குமாயின் அவை இன்னமும் ஆழமான தரிசனங்களை எங்களுக்குள் ஏற்படுத்தும்' என்கிறார் தோழமை பதிப்பகத்தில் நூல்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த ஊடகவியலாளரான அ. தமிழன்பன். இதை மறுப்பதற்கு இல்லை.

முற்போக்குக் கருத்துநிலை சார்ந்த இயக்கச் செயற்பாடுகள் வலுவாக இருந்த காலப்பகுதியில் தமிழக இலக்கியச்சூழலில் ஈழத்து எழுத்தாளர்களின் ஊடாட்டம் பரவலாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக சரஸ்வதி, சாந்தி, தாமரை போன்ற இதழ்களில் கணிசமான அளவு ஈழத்துப் படைப்புகள் அச்சேறின. ஆனால் இந்த முற்போக்கு முகாம்களில் ஏற்பட்ட பின்னடைவு, ஈழத்தின் அரசியல் கலாசாரச் சுயத்துவத்தை நிராகரிக்கும் தமிழகத்தின் இலக்கிய மேலாண்மை, பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாராளமாகக் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கும் மைய அரசு, இன்னமும் புத்தகங்களின் இறக்குமதிக்கு விதித்திருக்கும் முரண்நகையான தடை... இவை எல்லாமுமாகச் சேர்ந்து ஈழத்து இலக்கியங்களின் தமிழகத்துக்கான நுழைவை அடைத்து வைத்திருக்கின்றன.

அதே சமயம் ,டொலர்களையும் யூரோக்களையும் குறிவைக்கும் வாணிப உத்திகளும், ஈழவிடுதலைப் பயிருக்கு வெந்நீர் பாய்ச்சும் காழ்ப்பு அரசியலுமாகச்சேர்ந்து சில புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்குத் தமிழகத்தில் தாராள சந்தையை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றன இவர்களது இலக்கியக்கனதியை இங்கு குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் தொடர்ந்து ஒரு சிலரே முன்னிறுத்தப்படும்போது புதிதாக நுழைந்திடும் இளம் வாசகனுக்கு வேறு தெரிவு இல்லாமற்போகின்றது. நடுநிலைமை என்னும் முகப்படாமினை அணிந்திருக்கும் வாசகர்கள் கூட வாசிப்பவன் வழியே புதிய பிரதேசத்தை நோக்கி நகருகின்றார்கள். அப்பிரதேசம் புத்தகத்தினூடாக எழுத்தாளர் உருவாக்கிய பரப்பாகவே இருக்கும். இந்நிலையில் தமிழக வாசிப்புத்தளத்தில் விரல்விட்டு எண்ணைக் கூடிய சில படைப்பாளிகளைப் பற்றிக் கட்டப்பட்டுவரும் பிம்பம் இவர்களை அளவு கோலாகக் கொண்டே தமிழக வாசகன் புலம் பெயர் தமிழ்ச்சூழலையும் ஈழச்சூழலையும் மதிப்பிடும் அபாயத்துக்கு வித்திட்டுள்ளது. இது ஈழத்தின் அரசியல் - கலை - பண்பாடு பற்றிய ஒற்றைப் பரிமாணத்தை அல்லது தவறான புரிதல்களை உருவாக்க வல்லது. உதாரணத்துக்கு ஒன்றைக் குறிப்பிடலாம். டானியலினதும் ஷோபாசக்தியினதும் புனைவுகளை முன்னிறுத்தி, ஈழத்தில் தமிழ்நாட்டைக் காட்டிலும் சாதிய உணர்வும் தீண்டாமைக் கொடுமைகளும் தலைவிரித்தாடுவதாக ஒரு கருத்தியலை . மார்க்ஸ் போன்றோர் திட்டமிட்டுக் கட்டமைத்து வருகின்றனர். தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டமே சாதியத்தை நிலைநிறுத்துவதற்கான உட்கிடக்கையைத் தன்னுள் கொண்டுள்ளதாக இவர்களால் பரப்புரை செய்யப்படுகிறது. பன்முகப்பட்ட வாசிப்பின்மையால் தமிழகத்தின் பொதுப்புத்தி இதனை நம்பும்படி ஆகியுள்ளது.

தமிழ் இலக்கியம் என்பது தமிழக இலக்கியம்தான் என்றிருந்த நிலை மாறி தமிழில் இலக்கியம் என்பது, பேசு மொழி தமிழ் ஆயினும், மாறுபட்ட அரசியல் - பண்பாட்டுப் பின்னணியுடன் கூடிய ஈழம், மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் புகலிட நாடுகளினது தமிழ் இலக்கிய முயற்சிகளையும் உள்ளடக்கியதாக விசாலித்து வருகின்றது. பிற தமிழ்ச்சூழலில் இல்லாத ஈழத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு நெருக்கடிகள் தமிழ் இலக்கியத்துக்குப் புதிய வளங்களைக் கொண்டு வந்து சேர்த்துள்ளன. இதில், அண்மைக் காலங்களில் - குடத்தில் எரியும் விளக்காக - வன்னி மண்ணின் பங்களிப்பு மிக அதிகம். இவை யாவும் தமிழகத்தின் பரந்த வாசிப்புத் தளத்துக்குச் சேர்ப்பக்கப்படல் வேண்டும். அப்போதுதான் தமிழ் இலக்கிய வரலாறு முழுமையும் செழுமையும் பெறும். அடுத்த கண்காட்சியிலேனும் இவை இடம் பெறுவதற்கான பாதையைத் திறக்கும் பணியை தமிழகத்தின் அக்கறையுள்ள பதிப்பகங்களுடன் இணைந்து நமது படைப்பாளிகளும், பதிப்பாளர்களும் முன் எடுக்க வேண்டும். புத்தகங்கள்தானே என்று வாழாதிருக்க வேண்டாம். புத்தகங்கள் எல்லாமே பிரம்மாண்டமான வெடி ஆற்றலைத் தம்முள் கெட்டித்து வைத்திருப்பவை. இதனால்தானே ஜேர்மனியில் பாசிஸ்டுகளும் இலங்கையில் சிங்கள இராணுவத்தினரும் நூலகங்களைத் தீக்கிரையாக்கி மகிழ்ந்தனர்.

நன்றி:தினக்குரல்


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 11:03
TamilNet
HASH(0x559bbbb3b8b0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 11:03


புதினம்
Thu, 28 Mar 2024 11:03
















     இதுவரை:  24712069 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5426 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com