அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Friday, 19 April 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 30 arrow வெயிலின் நிழலில் - 02
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வெயிலின் நிழலில் - 02   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பரணி கிருஸ்ணரஜனி  
Monday, 19 February 2007

'ஒடுக்கப்படவர்களுக்கு கலைகளும் ஒரு போராட்ட வடிவம்தான்'  அமில்கர் கப்ரால்

01.

சிறு நகரம் ஒன்றில் அந்த நகர் சார்ந்து சிறு முதலீட்டில்  நடத்தப்படும் விளம்பர நிறுவனத்தின் அரங்கமைப்பை சிறந்த அழகியலுடன் கலை இயக்குனர் காட்சிப்படுத்தியிருக்க, அந்தச் சூழலை சற்றும் மிகைப்படுத்தாத பின்னணி இசை அடர்ந்து பரவ, தேனீர் அருந்தும்படி வற்புறுத்தும் சிறுவன் ஒருவனின் செய்கைக்கு எந்தவித எதிர்வினையும் புரியாமல் கதிருக்காக (பரத்) காத்திருக்கிறாள் மீனாட்சி (பாவனா). திறந்திருக்கும் சாளரத்தின் வழியே அவளின் பக்கவாட்டுத் தோற்றம் முழுவதையும் ஆக்கிரமித்தபடி வெயில் அவளையும் அந்தச் சூழலையும் உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறது.
கதிர் வருகிறான். அவள் எழுந்திருக்கிறாள். கோபமாக அவளை முறைத்தபடியே தன் இருக்கையில் அமர்கிறான் கதிர். முதல் நாள் நடந்த சம்பவத்தின் நீட்சியாக (அவன் தன் காதலை பொருத்தமற்ற ஒரு சூழலில் கோபமாக - ஆனால் மிக இயல்பாக வெளிப்படுத்தியிருந்தான். அவள் எந்தப் பதிலும் சொல்லாமல்; சென்றிருந்தாள்) அவர்களது உரையாடல் பின்வருமாறு தொடர்கிறது.

'எங்கே வந்தாய்?'
'உங்களைப் பார்க்கத்தான்..'
'பெரிய ஆள் மாதிரி ஒன்றும் சொல்லாமல் போனாய், இப்ப ஏன் வந்தாய்?'
'ஏன் இப்படி கத்திறியள்.. நேற்றும் இப்படித்தான்.. எனக்கு எவ்வளவு படபடப்பாய் இருந்தது தெரியுமா.. எனக்கு அழுகை அழுகையா வருது...'
'உனக்கு அழத்தான தெரியும்..'
'உங்களுக்குக் கத்தத்தான தெரியும்..'
'எனக்கு தேவையில்லாத விளக்கமெல்லாம் வேண்டாம்.விருப்பம் இல்லை என்று போட்டு இப்ப ஏன் வந்தனி...'
'விருப்பமில்லாமலா நாலு மணிநேரம் காத்திருக்கறேன்....'
கதிர் மௌனமாகிறான். அவள் 'நான் போகிறேன்' என்று கூறியபடி புறப்படுகிறாள். 'நான் கொண்டு வந்து விடுகிறேன்' என்று கதிர் எழுகிறான். அவள் 'இல்லை நான் தனியாப் போகிறேன' என்ற படி புறப்படுகிறாள். கதிர் ஆத்திரத்துடன் கத்தியபடி 'நான் கொண்டே விடுகிறேன்' என்று அவளை மறித்து தனது ஈருளியில் அழைத்துச் செல்கிறான். அவனது கோபமும் ஆத்திரமும் காதலும் நிறைந்த பேச்சுக்களைக் கேட்டபடியே அவன் தோளில் சாய்கிறாள் மீனாட்சி.

இது "வெயில்" திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி. வெளிப் பார்வைக்கு மிகச் சாதாரணமாகத் தெரியும் இந்தக் காட்சி பார்வையாளனுக்குள் ஏற்படுத்தும் பதட்டங்கள் மிகத் தீவிரமானவை. இந்தக் காட்சியிலிருந்து என்னைத் துண்டித்துக்கொள்ளவே முடியவில்லை. எனக்கும் என் மனைவிக்கும் இடையிலான உரையாடல் பெரும்பாலான தருணங்களில் இப்படித்தான் இருக்கும். மனம் முழுவதும் அவள் நிறைந்திருக்க அதை வெளிக்காட்டாமல் இத்தகைய உரையாடல்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தன.  அன்பை  வெளிக்காட்டுவதில்கூட சில நுட்பமான அவமானங்கள் இருப்பதையும் உணர்ந்திருக்கிறேன். அது ஒரு சூழலின் விளைவுகளாகவும் அதிலிருக்கும் தர்க்கங்கள் தெளிவற்றவையாகவும் தொடர்ந்து கொண்டிருந்தன. இதிலிருந்து என்னால் என்றுமே விடுபட முடிந்ததில்லை.
2004 ம் ஆண்டு தமிழகத்தில் திருச்சியில் உள்ள ஒரு திரையரங்கில் நானும் எனது மனைவியும் ஒரு திரைப்படத்தை பாhத்துக்கொண்டிருந்தபோது அதில் வரும் நாயகன் தனது காதலியிடம் காதல் வார்த்தைகளை காட்சிக்குக் காட்சி அள்ளிவிட்டுக்கொண்டிருந்தான். அதைப்பாத்துவிட்டு என் மனைவி என்னிடம்  "பாத்தீர்களா அவனை.. எவ்வளவு பாசமாக இருக்கிறான். நீங்களும் இருக்கிறியளே தவணை முறையில் அன்பு செலுத்துவதும் பிறகு கத்து கத்தென்று கத்திறதும்" என்றாள். நான் "இல்லை ரஜி. நீ சினிமாவிலிருந்து வாழ்க்கையைப் பார்க்கிறாய். நான் நிஜ வாழ்விலிருந்து சினிமாவைப் பார்க்கிறேன்.உன்னால் என்றுமே அது புரிந்து கொள்ள முடியாதது." என்று கூறி  மேலும் சில விளக்கங்கள் கொடுத்ததாக ஞாபகம். ஆனால் அதை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வேறு கதை. யதார்த்தத்திற்கும் அப்பால் தமிழ் வாழ்வு குறித்து தமிழக சினிமா  வளர்த்து விட்டிருக்கும் மோசமான கருத்தியல்களில் இதுவும் ஒன்று.
இன்று "வெயில்" திரைப்படத்தை பார்த்திருந்தால் ஒருவேளை அவள் தனது கருத்தை  மாற்றிக்கொள்ளலாம்.  ஆனால் இது குறித்து ஒன்றும் தற்போது நான் அவளிடம் கேட்கவில்லை. கேட்கும் தொலைவில் அவளும் இல்லை.

ஆனால் தமிழ்ச்சூழலில் இளம் காதலர்களுக்கிடையில் - இளம் தம்பதியர்களுக்கிடையில் இது ஒரு சாதரணமான நிகழ்வு என்பதுதான் நிஜம். இது அவரவரின் வாழ்வியற் கோலங்களைப் பொறுத்து சற்றுக் கூடுதலாகவோ குறைவானதாகவோ இருக்கும். காதலும் கோபமும் இயல்பாக வெளிப்படும் தருணங்கள் அவை.அத்தோடு வாழ்வு தரும் நெருக்கடி தமது உயரிய நேசிப்பிற்குரியவர்களாக இருந்தும் மனிதர்களை எப்படி வெளிப்படையாக ஒருவரையொருவர் நேசிக்கவிடாமல் காரணமற்ற வெறுப்போடு நடந்து கொள்ளச் செய்கிறது என்பதும் தமிழ்வாழ்வின் வேதனை மிகுந்த பக்கங்கள் எனலாம். இந்த வாழ்வியற் கோலங்களை மிக இயல்பாகவே இக்காட்சிமுலம் வசந்தபாலன்  சித்திரிக்கிறார். இதற்காக அவர் அதிகம் மெனக்கிடவில்லை. ஒரு சில வினாடிகளே தோன்றி மறையும் காட்சிப்படுத்தலினூடாக அதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார். நுட்பமான பார்வையும் ரசனையும் இல்லாத ஒருவருக்கு இத்தகைய மனவெழுச்சி கிடைப்பது கடினம்தான். கதிரின் கோபம் அவன் எதிர் கொள்ள நேரிடும் வாழ்வின் நெருக்கடிகளில் இருந்து வெளிப்படுவதாகவும்(ஓடிப்போன அண்ணன் குறித்த கவலையும் அதனால் அவன் மீது விழுந்த குடும்பச் சுமையும் தொழிற்போட்டியும்) மீனாட்சியின் அழுகையும் பதட்டமும் அவளது "வாழ்ந்து கெட்ட" குடும்பம் ஒன்றின் இயலாமையிலிருந்து உருக்கொள்வதாகவும் கொள்ளலாம். தமிழ் சினிமா வரலாற்றில் இதை ஒரு முக்கியமான பதிவாக நான் கருதுகிறேன். வாழ்விற்கு நெருக்கமாக வரும்போதுதான் ஒரு படைப்பு அதன் முழுமையை அடைய முடியும். "வெயில்" தமிழ் வாழ்வை மிக நெருக்கமாகவும் நம்பகத்தன்மையுடனும் பதிவு செய்கிறது. அந்த விதத்தில் இது ஒரு முக்கியமான வரவுதான்.

தமிழ்ச் சினிமாவில் காதல் "படும் பாடு" சொல்லி மாளாது. தமிழ் வாழ்விற்கு மிக நெருக்கமாக தமிழ் அடையாளத்துடன் இங்கு காதல் வெளிப்படுகிறது. மீனாட்சி தனது காதலை வெளிப்படுத்தியவுடன் கதிருக்கு "பட்டாம்பூச்சி"கள் எதுவும் பறக்கவில்லை.இருவரும் கட்டியணைத்து முத்த மழையும் பொழியவில்லை. அப்போதும் அவன் அதைக் கோபமாகத்தான் எதிர் கொள்கிறான். வேறு ஒரு தமிழக சினிமாவாக இருந்திருந்தால் இத்தனைக்கும் இருவரையும் ஒரு ஐரோப்பிய நாடொன்றில் தரையிறக்கியிருக்கும். அவர்களும் அங்கு நிலவும் காலநிலை குறித்த பிரக்ஞையற்று "அவிழ்த்துப்" போட்டு ஆடியிருப்பார்கள். கமெராவும் கூச்சமின்றி அதைப்படம் பிடித்திருக்கும். இந்த விபரீதங்களுக்கு இடமளிக்காமல் மிக இயல்பாகவே கதாபாத்திரங்களை உலாவ விட்டிருக்கிறார் வசந்தபாலன்.

காதலை வெளிப்படுத்திவிட்ட அவளை,  அவள் வீட்டில் விடுவதற்காக ஈருருளியில் செல்லும் இருவருக்கும் தமது வாழ்வு குறித்து சில கற்பனைகளும் கனவுகளும் இருக்கத்தான் செய்யும். அதை மிக இயல்பாக வெளிப்படுத்த ஒரு பாடல் காட்சி ஒன்று விரிகிறது. யதார்த்தமாக பயணித்துக்கொண்டிருந்த திரைக்கதை இப்போது மிகை யதார்த்தம் (magical realism) சார்ந்து இயங்குகிறது. அவர்களது கனவுகளையும் கற்பனைகளையும் அதன் போக்கில் விபரிக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றில் இந்த பாடல் காட்சியின் முக்கியத்துவமும் இடமும்  யாராலும் மறுதலிக்க முடியாதது.
ஈருருளியில் சென்று கொண்டிருக்கும் கதிரையும் மீனாட்சியையும் அப்படியே அள்ளிக்கொண்டு போய் வெயில் குடித்து வெறிச்சோடிப் போயிருக்கும் சந்தொன்றில் எறிந்து விடுகிறார் வசந்தபாலன். இதை மீறி வெளியே எங்கும் சென்று விடாதீர்கள் என்று எச்சரித்தும் விடுகிறார். உக்கிரமான நண்பகல் வெயில் போதாதற்கு நெருப்புக் கோளங்கள் வேறு  அந்தச் சந்துகள் வழியே அவர்களைத் துரத்த தமது கனவுகளையும் கற்பனைகளையும் அந்தத் தெருவிற்குள்ளேயே அலைவதனூடாகக் காட்சிப்படுத்துகிறார்கள் கதிரும் மீனாட்சியும்.
ஏராளமான "பிச்சுப் பிடுங்கல்"களுடன் ஒரு சிறிய விளம்பர நிறுவனத்தை நடத்தும் ஒருவனும் அன்றாட தேவைக்கே கடினப்படும் ஒரு குடும்பத்திலிருந்து தனது குரல் வளத்தை வைத்து அவ்வப்போது சிறு வருமானத்தை ஈட்டும் ஒரு பெண்ணும் சேரும்போது உருவாகும் வாழ்வியற் கோலத்திற்கேற்ப அவர்களது கனவுகளையும் கற்பனைகளையும் அந்த சிறு நகரின் தெருக்களுக்குள்ளேயே முடக்கிவிடுகிறார் இயக்குநர். அதுதானே வாழ்வின் யதார்த்தமும்கூட.

 

02.

மேற்குறித்த எனது விவரணத்திற்குரிய கதாபாத்திரங்கள் இந்தப் படத்தில் துணைப் பாத்திரங்களே. நான் முதலில் அது குறித்து விபரித்ததற்குக் காரணம் திரைக்கதையின் மைய நீரோட்டத்திலிருந்து விலகிப் பயணிக்கும் காட்சிகளுக்கே எத்தகைய முக்கியத்துவத்தை இயக்குநர் வழங்கியிருக்கிறார் என்பதை தெளிவுபடுத்தத்தான். அத்தோடு காதல் குறித்தும் காதல் காட்சிகள் குறித்தும் தமிழக சினிமா கடை பரப்பி வைத்திருக்கும் கதையாடல்களை கட்டுடைடைப்பதுடன் பாடல் காட்சிகளில் இருக்கிற நேர்மையை வலியுறுத்தத்தான்.
கதையின் மையப்பாத்திரம் முருகேசன் (பசுபதி). அவன் தனது கதையைச் சொல்வதாகத்தான் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. முன்னும் பின்னுமாக பல திருப்புக்காட்சிளுடன் (flash back) கதை மெல்ல பயணிக்கிறது. வீட்டை விட்டு ஓடிப்போன ஒருவன் வாழ்வில் படும் துயரங்களை அழகியல் ரீதியாகப் பேசுகிறது இத் திரைப்படம். இங்கு முருகேசன் என்ற பாத்திரப் படைப்பினூடாக இயக்குனர் முன்று விடயங்களை முன்வைப்பதாக நாம் கருதலாம்.
01. ஒரு மனிதன் நிராகரிக்கப்படுவதிலுள்ள வலியையும் வேதனையையும்
02. நிஜ வாழ்வின் முன்பாக மனிதனின் இயலாத்தன்மையையும், அதன் வழி அவன் அடையும் குற்ற உணர்ச்சியையும்,  சுய கழிவிரக்கத்தையும்
03. வெற்றி தோல்விக்கும் அப்பால் வாழ்வு ஒரு மனிதனுக்காக விதித்திருக்கும் வாழ்வியற் கோலத்தை..

வீட்டைவிட்டு ஓடிப்போனவர்கள் வாழ்வில் அடையும் "மாபெரும்" வெற்றிகளை தமிழக சினிமாவில் பார்த்துப் பழகிப்போன பர்வையாளனுக்குள் தோல்வி குறித்த மிகத் தீவிரமான சலனங்களை "வெயில்" திரைப்படத்தின் படைப்புச் செறிவினுடாக தோற்றுவித்திருக்கிறார் வசந்தபாலன். அவன் வீடு திரும்பியும் வாழ்வின் கடைசிக் கணம் வரை முருகேசனை "ஓடுகாலி" பட்டம் துரத்திக்கொண்டே இருப்பதை துயரம் நிறைந்த அழகியல் ததும்பும் காட்சிகளினுடாக பதிவு செய்கிறார் வசந்தபாலன்.


இந்தப் படம் தனது முழுமையை எவ்வாறு எய்தியுள்ளது என்பதையும் சாதாரண தமிழக சினிமாவிலிருந்து எந்த அடிப்படையில் வேறுபடுகிறது என்பதையும் நாம் பின்வரும் கண்ணிகளினூடாகப் பெற்றுக்கொள்ளலாம்.
01.கதைக் கரு.
02.கதை சொல்லத் தேர்ந்தெடுத்த கதைக் களம்.
03.தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள்.
04.கதை சொல்லல் உத்தி.
05.சதாரண தமிழ்சினிமா மரபின் பெரும்பாலான கூறுகள் மீதான மறுதலிப்பு.

கதை முருகேசன் என்ற பாத்திரத்தை மையப்படுத்தி இருந்தாலும் அதையும் தாண்டி தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை மற்றைய பாத்திரங்களினூடாக நுட்பமாக நம்பகத்தன்மையுடன் பதிவு செய்கிறது வெயில். இதைத்தான் இப்படத்தின் முக்கிய அம்சமாக நான் கருதுகிறேன். முருகேசன், பாண்டியம்மா, சிவனாண்டித்தேவர், கதிர், வேலுத்தாயி, மீனாட்சி, ஜனனி போன்ற பிரதான பாத்திரங்கள் மட்டுமல்ல சிறிய பாத்திரம் ஏற்று நடித்திருப்பவர்களுடன் கூட ஒப்பிட்டு பார்வையாளன் மனவெழுச்சி கொள்ளும் வகையில் பாத்திரங்கள் உயிர்ப்புடன் உலாவுகின்றன.
இதை ஒரு கலையாக தமிழ்சினிமாவின் அடுத்த கட்டத்திற்கான பாய்ச்சல் என்று துணிந்து கூறலாம்.
கதாநாயக விம்ப வழிபாட்டை முன்னிறுத்தும் தமிழக சினிமாப் பரப்பில் நாயகனை மட்டுமே நிழல் போல  பின் தொடரும் கமெரா மற்றைய பாத்திரங்களை படம் பிடிக்க மறுப்பதும் வெட்கப்பட்டு ஒதுங்குவதும் நாம் அறிந்ததே. ஆனால் இங்கு அந்த தளைகளிலிருந்துலிருந்து விடுபடும் கமெரா சுதந்திரமாக எல்லோரின் மீதும் படிகிறது. திரைக்கதையின் மைய நீரோட்டத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கும் சிறிய பாத்திரங்களின் மெல்லிய அசைவுகளைக்கூட நுட்பமாகப் பதிவு செயகிறது. தேர்ந்த இலக்கியப் படைப்பிற்கு நிகரான இடங்கள் அவை.

இயககுநரின் தொனியை அறிந்து அனைத்துத் தொழில்நுட்ப கலைஞர்களும் கடுமையாக உழைத்திருப்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. பாடல் காட்சிகளும் அவற்றிற்கான நடன அமைப்புக்களும், பாடல் வரிகளும், படமாக்கப்பட்டிருக்கிற விதமும் பராட்டுக்குரியவை. " வெயிலில் விளையாடி " என்ற பால்ய காலத்தை விபரிக்கும் ஆரம்பப் பாடல் தமிழ்வாழ்வின் ஒரு பருவ காலத்தை கண்முன் நிறுத்துகிறது.

வெயில் ஒரு குறியீடாக படம் முழுவதும் விழுகிறது. ஒரு இரவுக்காட்சியினூடாக படம் ஆரம்பித்தபோதும் பார்வையாளனின் மனத்தில் வெயில் மெல்ல மெல்ல குடியேறத்தொடங்கிவிடுகிறது. இரவுக்காட்சிகளில் கூட ஒளிப்பதிவாளரின் உதவியுடன் காட்சிகளை வெப்பமாக்கிவிடுகிறார் இயக்குநர். கதாபாத்திரங்களின் சந்தோசத்தை, துயரத்தை, இயலாமையை என்று அனைத்து உணர்வுகளையும் அவர்கள் மீது வெயிலை விழுத்துவதன் முலம் இரட்டிப்பான உணர்வுக்கு எம்மை இழுத்துச்செல்கிறார் இயக்குநர்.
" வெயிலில் விளையாடி" திரிந்த முருகேசன் திருட்டுத்தனமாக சினிமாவுக்குச் சென்றதால் நிர்வாணமாக்கப்பட்டு நடு வீதியில் சிவனாண்டித்தேவரால் முழு வெயிலையும் குடிக்க வைக்கப் படுவதுடன் தொடரும் அவனது வெயில் பயணம் திரையரங்கின் மேற்கூரையிலிருந்து காதல்வசப் படுவதிலாகட்டும், பாண்டியம்மாவுடன் கந்தக நெடி வீசும் தெருக்களில் நடமாடித் திரிவதிலாகட்டும், வீட்டில் தந்தையாலும் சகோதரிகளாலும் அவமானப்படுவதிலாகட்டும் வெயில் அவனை ஈக்கள்  போல மொய்த்தபடி  சுற்றித் திரிகிறது. படம் தொடங்கியதிலிருந்து வெயிலின் உஸ்ணத்தால் மெல்லமெல்லச் சூடேறத்தொடங்கிய எமது உடல் அவன் வாழ்வில் தோற்று வீடு திரும்புவதற்காக புறப்பட்டு பேருந்தில் இருந்து அழுக்குப்படிந்த வேட்டியுடனும் தேய்ந்து போன காலணியுடனும் இறங்கும் போது உச்சமாகி  அவனது உச்சந்தலையில் படியும்போது வெயில் எமது உச்சி மண்டையைப் பிளக்கிறது.

03.

வெயில் திரைப்படத்தை அதற்குமுன் வெளிவந்த சேரனின் "தவமாய் தவமிருந்து" திரைப்படத்துடன் ஒப்பிட்டுப் பேசலாம். தமிழகச்சினிமாவின் தளைகளிலிருந்து விடுபட்டு தனக்கென ஒரு அழகியலை முன்வைத்த படம் "தவமாய்த் தவமிருந்து". இந்த வரிசையில் வெயில் திரைப்படமும் தனக்கான ஒரு அழகியலை முன்வைத்திருகிறது என்று துணிந்து கூறலாம். "தவமாய் தவமிருந்து"  திரைப்படத்தை நெகிழ்ச்சியின் கருணையின் அழகியல் என்றால் "வெயிலை" நிராகரிப்பின் வலி  எனலாம். தவமாய்த் தவமிருந்து படத்தில் அதன் அழகியல் வடிவம் நீளமான காட்சிக் கோர்வைகளாக அமைந்திருக்கும். ஆனால் வெயிலில் சில வினாடிகளே தோன்றி மறையும் காட்சித்துண்டங்களினூடாக அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் வசந்தபாலன்.
தமிழ்ச்சமுகத்தின் மீதும் தமிழ்வாழ்வின் மீதும் தமிழ் அடையாளங்களின் மீதும் ஈடுபாடும் மதிப்பும் வைத்து படைப்பு முயற்சிகளில் ஈடுபடும் சேரன் போன்ற இயக்குநர்களின் வரிசையில் வசந்தபாலனும் வெயிலின் முலமாக இணைந்து கொள்கிறார். தமிழகச்சினிமா விரும்பித் தொலைத்த தமிழ்க்கலாச்சாரத்தின் ஆதார வேர்களை  தமது படைப்புக்களினுடாக தேடி அலையும் வசந்த பாலன் போன்றவர்களுக்கு  கை கொடுக்கவேண்டியது எம் வரலாற்றுக்கடமை. சொந்த வாழ்வு மீதும் அடையாளங்கள் மீதும் நம்பிக்கையிழந்து போலித்தனமான சொற்களாலும் காட்சிகளாலும்  தமது படைப்பை நிரப்ப முயலும் சாதாரண தமிழக இயக்குநர்கள் மேற்குலக வாழ்வின் மயக்கத்தின் பாலும் பிரமாண்டத்தின் மீது இருக்கிற ஏக்கத்தின் காரணமாகவும் தமிழ்ப்படங்களில் தமிழ் வாழ்வைத் தொலைத்து விட்டார்கள். அதை மீட்டெடுக்கும் ஒரு சிறு அடியாக நாம் வெயிலை கருதலாம். விளிம்பு நிலை மக்களின் வாழ்வை சித்திரிக்கும் போக்கும் நேர்மையும் பாராட்டப்படவேண்டியது.


"தவமாய் தவமிருந்து" , "வெயில்" போன்ற படங்களின் வெற்றி தமிழ்சினிமா பார்வையாளனின் ரசனை  சாதாரண தமிழக சினிமாவின் அலையில் முற்றாக அடித்துச் செல்லப்படவில்லை என்ற நம்பிக்கையை எமக்குத் தருகிறது. இந்த ரசனையை நாம் அப்படியே தக்க வைக்க வேண்டும்.அதுதான் கலைப்படைப்புக்கள் சார்ந்து ஒரு ஆரோக்கியமான சமுகமாக தமிழ் சமுதாயம் வளர்ந்து செல்ல வழிவகுக்கும். ஒரு கலைப்படைப்பை அதன் சரியான அர்த்தத்தில் இனம் காண்பதும் அதன் வழி உள்வாங்குவதும்தான் ஒரு நல்ல சமுகத்தின் நல்ல அடையாளமும்கூட.

தமிழ்சினிமாவின் மிகச்சிறந்த நடிகன் என்ற மகுடத்தை எந்தவித அலட்டலுமின்றி பெற்றிருக்கிறார் பசுபதி. தமிழின் மிகச்சிறந்த நடிகர்களில் இன்னொருவர் ராஜ்கிரண். இது "தவமாய் தவமிருந்து" , "வெயில்" போன்ற படங்களினுடாக வெளிவந்த விமர்சனம் அல்ல. அவர்கள் முன்பு ஏற்று நடித்த சிறிய பாத்திரங்களில் கூட தமது நடிப்பாளுமையை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. பசுபதி தனது உடல் மொழி முலம் துயரத்தை, இயலாமையை, புறக்கணிப்பை மட்டுமல்ல சந்தோசமான கணங்களை, புன்னகையின் சிறு கீற்றை, மெல்லிய காதலை, பெரும் போபத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஆற்றலின் பத்து விழுக்காட்டைக்கூட இன்றுள்ள முன்னணி நடிகர்களால் வெளிப்படுத்த இயலாது.


நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன் எனது பார்வையையும் விமர்சனத்தையும் ஒரு அகவய விமர்சனம் ஒன்றினாடாக முன்வைக்க விரும்புவதாக. இங்கு அகம் என்பது இரண்டு விதமானது. ஒன்று என் தனிவாழ்வு சார்ந்தது. மற்றையது நான் சார்ந்திருக்கும் இனக்குழுமம் சார்ந்தது. தனிவாழ்வு சார்ந்து சில பதிவுகளை முற்பகுதியில் முன்வத்துள்ளபோதும் இன்னும் ஆழமாக விரிவாக என்னால் பேச முடியும். என் வாழ்வை முன்னிறுத்தி வெளியாகப் பேசுவதில் எனக்கு எந்த சங்கடங்களும் கிடையாது. ஆனால் வெளியீட்டாளர்களுக்கு சில சங்கடங்கள் இருக்கலாம். எனவே ஒரு வரையறைக்குள் அதை முடித்துக்கொள்ளலாம். படத்தில் வரும் அனைத்துப் பாத்திரங்களுடனும் என்னை ஏதோ ஒரு விதத்தில் இணைத்து பார்த்து மனவெழுச்சியடைந்தேன். ஆனால் எனக்கு மிக நெருக்கமாக வரும் பாத்திரப்படைப்பு பாண்டியம்மாவினுடையது(ஸ்ரேயா ரெட்டி). இந்தப் படத்தில் முழுமையாக வெளிப்பட்டிருக்கும் சிறப்பான பாத்திரப்படைப்பும் இதுதான். ஒரு பெண் பாத்திரம் ஆணை உருவகிப்பதனூடாக படைப்பின் வீச்சை நாம் விளங்கிக்கொள்ளலாம்.

கந்தகநெடி வீசும் தெருவில் நடந்தபடியே முருகேசனிடம் பாண்டியம்மாள் தனது வாழ்வின் கையறு நிலையை "இந்த தீப்பெட்டிகளுக்கே வாழ்க்கைப்பட்டு விட்டேன் போலிருக்கிறது" என்று பெருமுச்சுடனும் விசும்பலுடனும் சொல்லும் போது யதார்த்தம் எம்மை பேயாய் அறைகிறது. வெற்றி தோல்விக்கும் அப்பால் யதார்த்தம் ஒருவனுடைய வாழ்வை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதை முருகேசன் என்ற பாத்திரப் படைப்பினுடாக பேச விழைந்த இயக்குநர் அதில் சற்றே குழம்பியிருந்தாலும் பாண்டியம்மாவின் பாத்திரப் படைப்பினுடாக ஒரு சில காட்சிகள் முலமே அதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார். அவளையும் முருகேசனையும் திரையில் காட்டும் பல தருணங்களில் சிலர் சாக்குப் பைகளை உதறிக்கொண்டிருப்பதையும் சேர்த்தே  காட்டுகிறார் இயக்குநர். இதன் வழி அவர்கள் இருவரினதும் வாழ்விற்கான அனைத்து எத்தனங்களையும் யதார்த்தம் உதறிக்கொண்டிருப்பதை பூடகமாகச் செல்லியும் விடுகிறார் வசந்தபாலன்.சிறு பத்திரிகைச் சூழிலில் இருந்து வந்தவர்  என்பதை வசந்தபாலன் அழுத்தமாகப் பதிவு செய்யும் இடங்கள் அவை.
குறியீடுகளாக, படிமங்களாக, உருவகங்களாக காட்சிப்படுத்தல்கள் மிக நுட்மாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தமிழ் சினிமாவாக வெயிலைக் குறிப்பிடலாம். வெயில், திரையரங்கு, தீப்பெட்டி அலுவலகம் , சாக்குப்பை, தெருக்கள், ஏன் மனிதர்கள் கூட மேற்குறிப்பிட்ட குறியீடுகளாவும் படிமங்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்கள். முன்பும் சில தமிழ் திரைப்படங்களில் இத்தகைய முயற்சி சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை வெற்றியளித்ததாக சொல்ல முடியாது.ஏன் அண்மையில் வெளிவந்த பாலசந்தரின் "பொய்" திரைப்படத்தில் சில சர்ரியலிச, மிகை யதார்த்த பாத்திரங்கள் உருவகிக்கப்பட்டுள்ள போதும் திரையில் அது கொடுர அனுபவமாக மாறியிருக்கிறது.

04.

இந்தப்படத்தில் குறைகள் இல்லலையா என்று ஒருவர் கேட்கலாம். நிச்சயமாக இருக்கிறது. தமிழக சினிமாவின் பல அபத்தக்கூறுகளை மறுதலித்து தனக்கென ஒரு அழகியலை உருவாக்கக் கடும் பிரயத்தனப்பட்டிருக்கும் இத் திரைப்படம் ஒரு கட்டத்தில் அவ்வழகியலைத் தானாகவே சிதைத்தும் கொள்கிறது. இது இயக்குநருக்குத் தெரிந்தும் தெரியாமலும் என்று இருவகையிலும் நடந்தேறியுள்ளது. இயல்பாக நகரும் திரைக்கதையில் அதன் இறுதிப் பகுதிகளில் வசந்தபாலன் தாறுமாறாகக் குழம்பியிருக்கிறார்.
இந்தக் குழப்பத்திற்கு நாம் பல காரணங்களைச் சொல்லலாம். முக்கியமானது தான் உருவாக்கிய பாத்திரத்தின் மீது இயக்குநருக்குத் தோன்றிவிடுகிற சுய கழிவிரக்கம்தான் காரணம். முருகேசன் புறக்கணிக்கப்படுவதையும் அவன் அவமானப்படுவதையும் அவரால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. படைப்பாளி என்ற மட்டத்திலிருந்து பார்வையாளன் என்ற நிலைக்குக் கீழிறங்கியதால் ஏற்பட்ட நலிவாக இதைக் கருதலாம். ரசிகன் அல்லது வாசகன்தான் முடிவை நோக்கி நகர்வான். உண்மையான படைப்பாளி என்றைக்கும் முடிவைப்பற்றி சிந்திக்கக்கூடாது. பாத்திரங்களை அதன் போக்கில் இயல்பாக உலாவ விட வேண்டும்.அந்த இயல்புத்தன்மையினூடாகவே அவை ஒரு முடிவை எய்தும். முருகேசனையும் அவன் போக்கில் விட்டிருக்கவேண்டும். ஆனால் இயக்குநர் முடிவை தீர்மானிக்கிறார். அதன் விளைவாக இயல்பாக சென்றுகொண்டிருந்த திரைக்கதை தடம்மாறி அது வரை காப்பாற்றி வந்த தனது அடையாளத்தை இழந்து சாதாரண தமிழக சினிமாவாக உருமாறி விடுகிறது. விளைவு நாம் இருக்கைகளில் நெளிய வேண்டியிருக்கிறது.

வீட்டிலிருந்த நகைகள் காணாமல் போனவுடன் திருட்டுப்பட்டம் சூட்டப்பட்டு முருகேசன் அவமானப்படுத்தப்படும் கட்டம்தான் இநதப்படத்தின் உண்மையான இறுதிக்காட்சி(climax). அத்தோடு படம் முடிந்து விடுகிறது. இதுதான் இயல்பும் யதார்த்தமும். அதற்கு பிறகு இயக்குநர் எமக்குக் காட்டும் முருகேசனின் உலகம் சாதாரண தமிழ் சினிமா காட்டும் உலகத்திற்கு நிகரானது. அவன் தனது சகோதரனின் எதிரிகளை வீழ்த்துவதும் அவர்களால் கொல்லப்படுவதும் அதனால் உருவாகும் "தியாகி"பட்டமும் தமிழக சினிமாவில் மட்டுமே சாத்தியமானவை. இறுதியில் "என் மகன்" என்று புலம்பியபடி சிவனாண்டித்தேவர் அவனது நினைவு அஞ்சலியை சுவர் சுவராக ஒட்டித்திரியும் காட்சி சாதாரண தமிழக சினிமாவையே தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறது. வசந்தபாலன் குறித்து அதுவரை கட்டமைக்கபட்டிருந்தத பிம்பம் ஆட்டம் கண்டு பொலபொலவென சரியும் இடம் அது.

தமிழ் சினிமாவை அதன் வீழ்ச்சியின் உச்சத்தில் கொண்டே வைத்திருக்கும் இயக்குநர் சங்கர் தயாரித்ததுதான் இந்தப்படம். தனது படங்களில் தமிழ் வாழ்வையும் தமிழ் அடையாளத்தையும் விரும்பியே தொலைத்தவர் அவர். தனது படங்களில் அதைத் தொலைத்தும் தான் தயாரிக்கும் படங்களில் அதைத்தேடியும் அலையும் ஒரு சுவாரசியமான முரணை அவர் எமக்குக் காட்டுகிறார். இறுதிக்காட்சிகளில் சாதாரண ரசிகனுக்குத தீனி போடுவதற்காகவும் தனது தயாரிப்புச்செலவை ஈடுசெய்வதற்காகவும் சங்கரின் தலையீடு நிகழ்ந்துள்ளதோ என்று ஒரு ஐயம் எழுகிறது.( படைப்பாளியாக அவர் சக படைப்பாளியின் படைப்பு மீது தலையிட்டிருக்கமாட்டார் என்று நம்புவோம். வசந்தபாலன்  மீதே நாம் முழுமையாக இந்த விமர்சனத்தை முன்வைப்போம். அவர் தனது அடுத்தடுத்த படைப்புக்களில் இந்த தவறுகளை களைந்து கொள்வதற்காக.)

முருகேசன்  கதிரின் தொழிற்போட்டியாளர்களால்  கொல்லப்படுவதாக காட்சி அமைத்திருக்கிறார் வசந்தபாலன். இது தவறான அணுகுமுறை. உண்மையில் முருகேசனைக் கொலை செய்தது வசந்தபாலன்தான். அவனுக்கான வாழ்வு இன்னும் விரியக்காத்திருக்கிறது. ஆனால் அது முன்பை விட துயரம் நிறைந்தது. அந்தத் துயரத்திற்கு முடிவு கட்டத்தான் அவர் முருகேசனை கொலை செய்கிறார். அவன் மீண்டும் அவமானப்பட்டு ஊரைவிட்டுப்போய் தனிமைப்படப்போவதை எண்ணி பார்வையாளனின் மனமும் துயருருகிறதுதான். அதற்காக முடிவைத் திணிக்க முடியாது. இன்னொரு வகையில் சொன்னால் முருகேசனைக் கொலைசெய்ததனூடாகத் தான் அது வரை கட்டிக்காத்து வந்த யதார்த்தத்தை கொலை செய்திருக்கிறார் வசந்தபாலன்.

படைப்பாளியாக அவர் இன்னொரு விடயத்தையம் மறந்து விட்டார். தனிமை என்பது மரணத்துடன் முடிந்து விடக்கூடியதல்ல. அது தனிமையை உறுதிப்படுத்தும் இடம் மட்டுமே. சாவிற்குப் பிறகும் தனிமைக்கு ஆறுதல் தேவைப்படுகிறது என்று இலக்கியங்கள் தத்துவங்கள் எமக்குப் போதிக்கின்றன.
இப் படத்தில் வரும் வன்முறைக்காட்சிகள் குறித்தும் சில கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அது குறித்து  என்னால் ஓரளவிற்கு மேல் விமர்சனங்களை முன்வைக்கமுடியவில்லை.ஏனெனில் ஒரு மனிதனுக்கு உச்ச இழப்பும் வலியும் வேதனையும் என்பது அவன் நிராகரிக்கப்படுவதுதான். அந்த துயரம் ஒரு கட்டத்தில் வன்முறையாக வெளிப்படும் என்பதை நான் நடைமுறையில் கண்டிருக்கிறேன்.

ஒருவன் தன் தவறைத்திருத்திக் கொள்ளவதற்கான வாய்ப்பையோ சூழலையோ இந்தச் சமுகம் வழங்குவதில்லை. திருந்தியவர்களையும் அந்த கண்ணோட்டத்திலேயே அணுகுகிறது. அந்த புற யதார்த்தத்தை நகைகள் காணமல் போகும்காட்சித் துணடங்களினூடாக நுட்பமாகப் பதிவு செய்கிறார் வசந்தபாலன். மகன் சிறுவயதில் ஓடியதிலிருந்து ஏக்கத்திலும் கவலையிலும் இருந்த தாய் அவன் திரும்பியவுடன் அடையும் நெகிழ்ச்சியும் பரவசமும்கூட இயல்பாய் பதிவு செய்யப்படுகிறது. அதே தாய் நகைகள் காணாமல் போனவுடன் தந்தையால் எதுவித முகாந்திரமுமின்றி முழுக்குற்றவாளியாக்கப்பட்டு முருகேசன் நையப்புடைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில் அந்த சூழலோடு ஒத்திசைந்து "முருகேசா நகையைக் கொடுத்திடடா" என்று ஒப்பாரி வைக்கிறாள். முருகேசன் நிலை குலைகிறான். இதுதான் இன்று நாம் நம் தமிழ்குடும்பங்களுக்குள் காண்கின்ற இயல்பான போக்கு.
சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் எப்படி தவறிழைக்காதவர்களையும் குற்றவாளியாக்குகிறது சூழ்நிலைக்கைதியாக்குகின்றது என்பதை வெளிப்படுத்துகிறது இக் காட்சி. இந்தக் குற்றத்தை சுமந்தபடி அவன் மீண்டும் வீட்டிலிருந்து வெளியேறுகிற காட்சிப்படுத்தலுடன் வசந்தபாலன் இத் திரைப்படத்தை முடித்திருந்தால் நம்பகமான பன்முக அடையாளங்கொண்ட ஒரு தமிழ்த்திரைப்படம் எமக்குக் கிடைத்திருக்கும்.

குடும்பத்தில் எழுகிற முரண்பாடுகள் பாதிக்கப்படுவோருக்கு நியாயமானதாகவே இருக்கும். சிறு சிறு சந்தேகங்கள் தோன்றுவதும் சின்ன சின்ன சந்தோசங்கள் மறுதலிக்கப்படும்போது முரண்பாடுகள் கூர்மையடைவதும் இதனால் மனித உறவுகளில் விரிசல் உண்டாவதும் தவிர்க்கவியலாததாகிறது. மனித மனம் என்பது யாராலும் திறந்து பார்க்க முடியாத இருண்ட குகையோ என்று அண்மைக்காலமாக நான் சந்தேகப்பட்டுக்கொண்டிருக்கிறேன். வாழ்வில் விசித்திரமான மனிதர்களையும்; அவர்களது விசித்திரமான செய்கைககளுக்கும் முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.அவர்களின் செய்கையால் எனது வாழ்வுகூட விசித்திரமாக விரிந்து செல்கிறது. என்னை வெறுப்பவர்களைக்கூட வெறுக்கமுடியாமல் அலைந்து கொண்டிருக்கிறேன். இருந்தும் வெறுப்பது போல் நடிக்கிறேன். ஆனால் பல சமயங்களில் அது வெளிப்பட்டுவிடுகிறது. அன்பின் ஆழத்தை புரிந்து கொள்ள முடியாத ஆத்மாக்களாக அவர்களை மாற்றியது எது? அவர்களை இயக்குவது எது? என்னை இயக்கப்போவது எது? தேடுகின்றேன்.
வெயில் திரைப்படம் என்னைப் பாதித்ததற்கான காரணங்களில் முக்கியமானது மேற்குறித்த எனது தேடல்தான். அந்த தேடலின் விளைவாய் நான் வெயிலின் சாயையில் ஒரு படைப்பாக்க முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் இது வெளியாகியிருக்கிறது.

சிறு குறைகள் இருந்தபோதும் மனம் விட்டுப்பாராட்டலாம் வெயில் படக்குழுவினரை. இது தமிழக சினிமா அல்ல. தமிழ் சினிமாதான். உலகத்தின் எந்த முலையில் இருந்தாலும் தமிழ்மனதை நிச்சயம் பாதிக்கும். ஈழத்தமிழர்களாகிய நாமும் வெயில் போன்ற படங்களை ஆழமாக உள்வாங்கி நல்ல ஆரோக்கியமான சினிமா சூழலை வளர்ப்போம். இதன்வழி எமக்கான சினிமாவை கண்டடைவோம். 'ஒடுக்கப்படவர்களுக்கு கலைகளும் ஒரு போராட்ட வடிவம்தான்' என்ற அமில்கர் கப்ராலின் கூற்றை எமது விடுதலைப்போராட்டத்திற்கும் பக்கபலமாக்குவோம் நல்ல திரைப்படங்களினுடாக.....

05.

பாரிஸ் நகரின் "மைனஸ் டிகிரி" காலநிலை பதிவான ஒரு நாளில் இத்திரைப்படத்தைப்  பார்த்த நான் முடிவில் எனது அறையில் வெயிலின் உஸ்ணத்தை உணர்ந்தேன். திரையிலிருந்து பயணித்து என் உடலில் பரவிய வெயிலின் சாயைகள் என்னிலிருந்து நழுவி தரைகளில் தண்ணீர்  போல் ஓடிக்கொண்டிருந்தது. அதை வெளியேற்ற நான் எடுத்த எல்லா எத்தனங்களும் தோல்வியில் முடிந்து கொண்டிருந்தன.....அந்த இரவு நிம்மதியற்று இருந்தது...

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(3 posts)


 


மேலும் சில...
வெயிலின் நிழலில்..

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Fri, 19 Apr 2024 20:37
TamilNet
HASH(0x55bb513d1cb8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Fri, 19 Apr 2024 19:46


புதினம்
Fri, 19 Apr 2024 19:46
















     இதுவரை:  24783441 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5508 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com