அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 18 June 2024

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow நூல்நயம் arrow கனகசபாபதி: புதிய கதைசொல்லி
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கனகசபாபதி: புதிய கதைசொல்லி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: க.முகுந்தன்  
Friday, 11 May 2007

தமிழில் சிறாருக்கான கதைசொல்லியின் புதிய வரவு: மாறன் மணிக் கதைகள்
 
எமது வாழ்வுப் பாரம்பரியம் கதைசொல்லிகளுடன் பின்னியது. எல்லாப் பிராயத்தினரும் கதை கேட்பதில் விருப்புடையர். இதனால் கதைசொல்லிகள் கலைஞர்களாக வாழ்ந்தார்கள். அறிந்த கதையை முறையான கதைசொல்லியிடமிருந்து கேட்பதற்காக நம் மூத்த தலைமுறையினருடன் நாம் வண்டில் கட்டிச் சென்று குழுமியதை நம் நினைவில் என்றென்றும் பசுமையாகவே இருக்கும். இன்னும் ஏன் வகுப்பறைகளில் நாம் கேட்ட கதைகள் ஆயிரத்திற்கும் மேலானவை. தவறுகளைத் திருத்த அழகான இலக்கிய நயத்துடனான கதைகளைச் சொன்ன நம் மூதாதையினரையும், ஆசான்களையும் நினைக்க வேண்டும். இது எல்லாச் சமூகத்தினருக்கும் பொதுவானதுதான். ஆனாலும் நம்மவர்களின் பட்டறிவு தனித்துவத்துடனான சிறப்பான அனுபவங்களுடனானது. அதுவும் சொந்த மண்ணைவிட்டு தொலைவிலாகி தொலைந்து போகாமல் வாழத் தலைப்படும் புலம்பெயர் வாழ்வின் புத்தம்புதிய அனுபவக்குவியலில் இருந்து பிரவாகமெடுக்கவுள்ள கலை நதியை ஆவலுடன் எதிர்பாக்கும் காலகட்டமிது.


முன்னைநாள் மகாஜனாக் கல்லூரி அதிபரும், கனடா பல்லினக் கலாச்சார ஆலோசகருமான திரு கனகசபாபதி அவர்களால் எழுதப்பட்ட மாறன் மணிக்கதைகள்-2  என்னும் சிறுவர்கான கதைநூல் வெளியிடப்பட்டுளளது.
மனத்திரையில் சில கேள்விகள் துளாவிக்கொண்டிருந்தன.
‘புலம் பெயர் நாட்டின் மொழிகளில் போதுமான அளவில் சிறார் இலக்கியம் கிடைக்கையில் தமிழில் கதை சொல்ல விளைந்ததேன்?’
‘சிறாருக்கான கதைகள் எழுத எவ்வகையில் தூண்டப்பட்டார்?’
‘இருக்கும் பல (செவிவழிக்)கதைகளையே பதியாத சமூகத்தின் சிறார்களுக்கு புதிய கதை சொல்லல் ஏன் ஏற்பட்டது?’
‘தழுவல்களாக இருக்குமோ?’
நாம் பூமிச் சூழலின் அசைவியக்கத்தில் அதுவும் தொலைத் தொடர்பூடக வளர்ச்சியில் சுருக்கப்பட்ட கையடக்கப் புவியில் வாழ்பவர்கள். இந்தச் சார்பியலை ஏற்றுக் கொண்டே புனைவுகளும், கற்பனைகளும் மற்றும் கலைகளும்; நோக்கப்படல் வேண்டும்...
எனவாக எழும் சிந்தனைகளை ஓரந்தள்ளியவாறு நூலைக் கையிலெடுத்தேன்.
வித்தியாசமானதாக பல்கலைக்கழக ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் கட்டமைப்பின் தோற்றம், ஆனால் தடித்த வர்ண அச்சுப்பதிவு. கண்ணாடித்தாள் ஒட்டி பளபளப்பாக வழுக்கும் பக்கங்கள். ஒவ்வொருகதைக்கும் ஓர் மேலைநாட்டுப் பாங்கிலான ஓவியம் எனவாகிய முதற்தொடுகை பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நூற்பதிவில் இணைக்கப்பட்ட சம்பிரதாய விபரங்களும் புதியதான ஈர்ப்பைக் காட்டவில்லை. ஆயினும் கையெழுத்துப் பிரதியைப் படிக்கும் மனநிலையுடன் கதைகளுக்குள் நுழைகிறேன்.என் சிந்தனைக் கிணற்றில் அடுத்தடுத்து விழுந்த கதைக்கற்களால் மெல்லிய அலைகள் அங்குமிங்குமாகப் படரத்தொடங்கின.
இத்தொகுப்பிலிருந்து இருகதைகளை மட்டும் உதாரணத்திற்காகத் தொட்டுக் கொள்கிறேன்.
 
1. புத்திசாலியுள்ள கொக்கு

இரு சகோதரர்கள் தாம் பயணிக்கும் வாவிக்கரையில் அன்னங்களுக்கு பாண் போட்டுவிளையாடுவார்கள். இதில் கொக்கு ஒன்று ஈடுபாடில்லாதிருக்கும். ஒருநாள் கொக்கு அப்பாண் துண்டினைக் கௌவியவாறு அடுத்த கரைக்குப் பறந்து சென்றது. இது அச்சிறார்களின் கவனயீர்ப்பைப் பெற்றது. இக்கொக்கு என்னதான் செய்கிறது? வினாவெழுப்பிய உந்துதலால் சிறார்கள் திட்டமிடுகிறார்கள். அடுத்த நாள் வாவியின் ஒரு கரையில் ஒருவனும் மறுகரையில் மற்றவனுமாக இருக்க முதலாவது சிறுவன் பாண் துண்டைப் போடுகிறான் கொக்கு அதைக் கௌவியவாறு மறு கரைக்குச் செல்கிறது. இரண்டாவது சிறுவன் என்ன நடக்கிறதென்பதைப் பார்க்கிறான். பறந்து வந்த அந்தக் கொக்கு அப்பாண் துண்டை நீரில் போடுகிறது. அதைச் சாப்பிட மீன்கள் வருகின்றன. அந்த மீனை லபக்கென கௌவிச் சாப்பிடுகிறது கொக்கு. சிறுவர்கள் முகத்தில் பெருமிதம். தமது கண்டுபிடிப்பைச் சொல்ல அம்மாவிடம் செல்கிறார்கள் அவர்களுடன் வாசகர்களும் குதூகலமாகச் செல்கிறார்கள்.
நடந்ததைக் கேட்டு அம்மாவும் சிறார்களுடன் மகிழ்வுற்று யுரேக்கா, யுரேக்கா எனச் சொல்கிறார். அதென்ன யுரேக்கா....? வாய்விட்டே வினவினர் ஆவலுடன் பிள்ளைகள். இதையும் கண்டுபிடியுங்களேன்? என்கிறார் அம்மா புன்சிரிப்புடன். ஆக்மீடிசைத் தேடி சிறுவர்கள் செல்கிறார்கள்.
அந்தக் காலத்தில் புத்தியுள்ள காகம் சிறுகதை படித்திருக்கிறோம். அதனுடன் இதை ஒப்பிடமுடியாது. இதில் இருக்கும் யதார்த்தமான விவேகம் துல்லியமானது. சிறுவருக்கான இந்தக் கதைசொல்லலின் உத்தி நிகழ்காலத்தை விஞ்ஞானபூர்வமாக ஆர்கசிக்கிறது. இதில் இடம் பெறும் கொக்கு புத்தியுள்ளது. இதைத் தேடிய சிறார்கள் புத்திசாலிகள். இவர்களை நெறிப்படுத்தி ஆளுமைத் தூண்டவிடும் தாய் விவேகமானவர். ஆக, இவற்றைப் படைத்த கதாசிரியர் எல்லாவற்றுக்குமான அதிபுத்திசாலியாகி மிளிர்கிறார். இந்தப் புத்திசாலித்தனம் சங்கிலித் தொடர் தொடர்ச்சியாக இதை வாசித்த வாசகர்களுக்குமாகிப் பரவுவதால் இந்த படைப்பாளி வெற்றியடைகிறார்.

2. குழந்தையும் துருவக் கரடியும்

கனடாவின் வடக்கே நுனவுற் என்ற புதிய இடம். துருவக் கரடிகள் பற்றியும், இங்கு வாழும் மிருகங்கள் பற்றியும் கட்டுரை வரைவதற்காக பயணிக்கிறது எழுத்தாளர் குடும்பம். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை. இக்குழந்தையின் தொடுகைத் துணை கரடிப்பொம்மை. பயண அவசரத்தில் இப்பொம்மையை மறந்து சென்றனர் பெற்றோர். அன்று ஞாயிற்றுக் கிழமை. தூக்கம் கலைந்து எழுந்த குழந்தை தன் பொம்மையைத் தேடுகிறது. பெற்றோர் தடுமாறுகின்றனர். சமாதானப்படுத்த முனைகின்றனர். குழந்தை அழுகின்றது. வழியில் கண்ட துருவக் கரடியைக் காட்டி தனது பொம்மை என்கிறது. பெற்றோர் திண்டாடுகின்றர். அழுத குழந்தை களைப்பில் தூங்கிவிடுகிறது. நாளைக்கு எல்லாம் சமாளித்துவிடலாமென்ற எண்ணத்துடன் பெற்றோரும் உறங்கினர். ஏதோ எண்ணத்துடன் எழுந்த தாய் மகளைக் காணாது பதறினார். விடுதியில் இருந்த அனைவரது தூக்கங்களும் கலைகின்றன.
பனியால் மூடப்பட்டிருந்த வெண்தரையில் குழந்தையின் காலடிகள் வெளியில் செல்வது அனைவரது பார்வையையும் ஈர்த்துத் தொடரவைக்கின்றது. தூரத்தில் குழந்தையை துருவக்கரடி கட்டிப்பித்தவாறு இருக்கிறதை அனைவரும் பார்த்துப் பதறுகின்றனர்.
ஆட்களின் நடமாட்டத்தால் குழந்தையை விட்டுவிட்டு கரடி ஓடிவிடுகிறது. பனியில் உறைந்த குழந்தையின் நிலையை பற்றி எவராலும் முடிவெடுக்க முடியவில்லை. வைத்தியசாலையில் வைத்தியர்களும் கைவிரிக்கின்றனர். ஆனால் தகப்பனின் வேண்டுதலுக்கு இணங்கிய மருத்துவரின் முயற்சியால் குழந்தை காப்பாற்றப்படுகிறது.

அப்பாடா...! எல்லோரும் அதாவது வாசகர்களும் பெருமூச்சை விடுகின்றனர். அத்தனை விறுவிறுப்பாக இக்கதை செல்கிறது. இத்தொகுப்பு கதைகளில் எனது மகனால் வாசிக்கப்பட்ட அவனது விருப்பைப் பெற்ற கதையாக இது தெரிவானது.
இக்கதையில் வரும் பெற்றோர் சாதாரணமானவர்களில்லை. அறிவுஜீவிகள். எதையும் நுட்பத்துடன் ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்கள். குழந்தை வளர்ப்பில் தவறுதலாக அமைந்த ஒரு சம்பவம் என்னபாடுபடுத்துகின்றது என்பதை இக் கதை பதிவு செய்கிறது. இது பிள்ளை மனத்தை அழகாகப் பதிவு செய்து பெற்றோருக்கான கதையாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இத்தொகுப்பில் இடம் பெற்ற கடைசிக் கதை இது. அதாவது குழந்தைகளுடன் சேர்ந்தவாறு பெற்றோரும் வாசிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அர்த்தங் கொள்ளமுடியும். ஆக இத்தொகுப்பை பெற்றோருக்குமானது எனச்சுட்டுகின்றார் தொகுப்பாளர்.

தவிர்க்க முடியாத தலைமுறை இடைவெளியிலான வாழ்வுப் பயணத்தில், பசுந்துளிர்களான சிறார் உலகில் மீண்டும் சஞ்சரிப்பதென்பது இலகுவானதன்று. எல்லோராலும் முடியாதது. இதனால்தான் சிறார்களை ஈர்க்கும் கதை சொல்லல் தனித்துவமாக பெரும் சவால்களைக் கொண்டது என்கிறார்கள்.
சிறார்களின் விருப்புலகப் பயணத்தில் கதை சொல்ல வேண்டும். இலக்கு - நோக்குள்ளதாக கதை கூற வேண்டும். அவர்களது மென்மனம் நோகடிக்கப்படாதவாறு முடிவுகள் இடம்பெறல் வேண்டும். சொன்னதைத் திரும்பவும் சொல்லக் கூடாது. இலகுவான சொல்லாடல்களில் மென்மையான சிறு வாக்கியங்களுடன் சொல்லுவதும், இவை சிறார்களிடம் போய்ச் சேர்கின்றனவா என அவ்வப்போது உறுதியிடவும் வேண்டும்.

மாறன் மணிக் கதைத் தொகுப்பில், 1. ஆமையும் எலியும், 2. நன்றி மறவாத டொல்பின், 3. புத்தியுள்ள கொக்கு, 4. சுறா மீனும் பெண்மணியும், 5. குழந்தையும் கொறில்லாவும், 6. குழந்தையும் துருவக்கரடியும் என்பதாக ஆறு கதைகள் இடம் பெற்றுள்ளன.

இந்தத் தலைப்புகளே சிறார் உலகத்தைச் சுட்டுகின்றன. சிறார்களின் விருப்பத்துக்குரிய கதைகளின் களமாக கடலும் கடற்கரையும், வாவியும் வாவிக்கரையும், விலங்கினக் காட்சியகம், புதிய விலங்குகள் பற்றிய தேடலுடனான வடதுருவம் என்பன அமைந்துள்ளன. கதைகளில் குறிப்பிடப்படும் நாடுகளாக அவுஸ்திரேலியா, கியூபா, மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, கென்யா, கனடா, நுனவுற் என்ற வடதுருவம் என்பன பதிவாகியுள்ளன. கதைகளில் ஆமை, எலி, டொல்பீன், சுறா, அன்னம், கொக்கு, மீன், கொறில்லா, குரங்கு, பனிக்கரடி, கறிபோ, கங்காரு, கிவி ஆகிய விலங்குகள் இடம் பெறுகின்றன. சிறார்களால் பெரிதும் விருப்பப்படும் டொல்பீன் நேசிப்புடன் பதிவாகியிருக்கிறது. சிறார்களின் பெருவிருப்புக்குரிய குடும்ப உறவாகும் தாத்தா- பாட்டியின் கதையும் இருக்கிறது.

இத்தொகுப்பில், மனித நேயம், உதவுதல், நன்றி மறவான்மை, பாசம், பற்று, குழந்தை மனம், புத்திசாலித்தனம், குடும்ப உறவு, அறிவுத்தேடல் -ஆராய்ச்சி, மருத்துவம் செய்தலின் அவசியம் எனவாகப் பல மென்மனவுணர்வு தொடப்படுகின்றது.

இதுவரையில், தமிழில் பதிவுறும் கதைகள் பெரும்பாலும் சமூகப் பிரக்ஞையுடனான மொழியிலாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. சென்ற நூற்றாண்டிலிருந்து துறைசார் அறிஞர்களின் கதைசொல்லலும் இடம் பெறத் தொடங்கியுள்ளன. அதிக வார்த்தை விபரணக் கோவைகளில்லாத இத்தகையவர்களின் எழுத்து விரைவான ஆர்கசிப்பைப் பெறுகின்றன. இதை இத்தொகுப்பும் பதிவு செய்திருக்கிறது.

இருபத்தியொராம் நூற்றாண்டின் தகவல் தொடர்பூடக யுகத்திற்கமைவாக இவரது எழுத்துகள் நூல் வடிவில் மாத்திரமில்லாது காணொளி வடிவங்கள் பெற்றால் உலகின் கவனயீர்ப்பினைப் பெறும்.

மாறன் மணிக்கதைகள்-2
ச.பொ.கனகசபாபதி (கனடா)
- வெளியீடு: கலை இலக்கியக் கழகம், தெல்லிப்பழை, இலங்கை

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 18 Jun 2024 16:26
TamilNet
HASH(0x557c52ec84a0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 18 Jun 2024 16:26


புதினம்
Tue, 18 Jun 2024 16:26
     இதுவரை:  25187527 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 14939 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com