அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 15 July 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 34 arrow விடுதலையின் விரிதளங்கள் - 01
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


விடுதலையின் விரிதளங்கள் - 01   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பரணி கிருஸ்ணரஜனி  
Tuesday, 15 May 2007

விடுதலையின் விரிதளங்களும்,
வாழ்வின் புதிரான முடிச்சுகளும்.

பரணி(பிரான்சில் வசித்துவரும் ஊடகவியலாளர் பரணிகிருஸ்ணரஜனி...தன் வாழ்க்கையை ஒரு வரலாற்று நூலாக எழுதிக்கொண்டிருக்கிறார்.
ஈழத்தமிழ்ச் சூழல் குறித்த தார்மீகக் கேள்விகளையும், பெண்ணியம், உளவியல், பண்பாடு, விடுதலை சார்ந்த அறவியலையும் முன்வைத்து இவ் வரலாற்று நூலை அவர் எழுதி வருகிறார். அந்நூல் விரைவில் முழுத்தொகுப்பாக வெளிவர இருக்கிறது.
இந் நூலில் 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் என்ற ஆளுமை குறித்தும் அவரது 'விடுதலை'  நூல் குறித்தும் மிக ஆழமாக, விரிவாக எழுதியிருக்கிறார்.  விடுதலை நூல்பற்றிய அப்பகுதியை சில மாற்றங்களுடன் உங்களுக்காக இங்கு தருகிறோம்.)

01.
நான் யார்?
ஒரு மனிதன் என்றைக்கு இந்தக் கேள்வியை எதிர்கொள்ளத் தொடங்குகிறானோ அன்றே சமூகத்தில் அவனுக்கென்று ஒரு இடமும், இருப்பும், தனித்த ஒரு அடையாளமும் சேர்ந்தே உருவாகிவிடுகின்றன.

இன்று உலகம் போற்றும் மாமேதைகளும், தத்துவவாதிகளும், கோட்பாட்டாளர்களும், இறையியலாளர்களும் தமது வாழ்வின் ஒரு தருணத்தில் இந்தக் கேள்வியை எதிர்கொண்டதன் விளைவாகத்தான் தோற்றம் பெற்றார்கள் - சமூகத்தில் மேற்படி நிலையை அடைந்தார்கள்.

இந்தக் கேள்வியின் எல்லா இடுக்குகளிலும் பயணம் செய்து அதைத் தீவிரமாக எதிர்கொண்டவர்களே பின்னாளில் உலகம் போற்றும் மேதைகளாயினர்.  இந்தக் கேள்வியிலிருந்து தப்பித்துக் கொண்டவர்கள் சாதாரண மனிதர்களாகி மறைந்து போயினர்.

சாதாரண தனிமனித வாழ்வின் இயங்கியல் போக்கின் ஒரு கட்டத்தில் இயல்பான பொது வாழ்விலிருந்து அவர்களைத் துண்டித்துக் கொண்டது இந்தச் சமூகம். அவர்களின் வாழ்விற்கான சௌகர்யமான எல்லாப் பாதைகளையும் அடைத்துவிட்டு வேறொரு பாதை திறக்கப்பட்டது.  நிராகரிப்பு சில சமயம் கட்டங்கட்டமாகவும் பல தருணங்களில் முழுவதுமாகத் திணிக்கப்பட்டது. அது தந்த வலி மனித உடலில் ஆன்மாவின் இருப்பில் சலனத்தை ஏற்படுத்தியது. விளைவு,மேற்கண்ட கேள்வியை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

இதை எதிர்கொள்வதற்குள் இக் கேள்வியின் உக்கிரம் தாங்காமல் பலர் உயிரை மாய்த்துக் கொண்டனர். பலர் மனப்பிறழ்வைச் சந்தித்து மனநோயாளிகளாகினர். பலர் விரக்தியின் விளிம்பில் நின்று குற்றங்களை நோக்கி ஓடினர்.

உலகில் மனிதம், மனித விடுதலை, மனித வாழ்வு குறித்த நெறிமுறைகளும் தத்துவங்களும் உருவான கதையின் சோகமான பின்புலம் இது.

கடந்த ஐந்து வருடங்களாக என்னைப் பாடாய்ப்படுத்திய இக்கேள்வி கடந்த வருடம் இதே நாட்களில் என் ஆன்மாவையும் உடலையும் ஒருங்கே அசைத்துப் பார்த்தது. விபரீதத்தை உணர்ந்து சாதாரணமனிதன் போல் தப்பிக்க முயன்றேன். அப்போதுதான் ஒரு பேருண்மை தெளிவாகப் புரிந்தது. நான் தப்புவதற்கான எல்லாப் பாதைகளும் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டதென்பதை......

விளைவு,  இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் வாழ்வு இஸ்டம் போல் என்னைத் தூக்கியடித்து விளையாடியது. மைதானத்தில் விளையாட்டு வீரர்களின் காலடியில் கிடந்த பந்தின் நிலையானது என் கதை. வாழ்வின் விளிம்பு வரை துரத்தப்பட்டேன். சக மனிதர்கள் குறித்த - மனித வாழ்வு குறித்த நம்பிக்கைகளை இழக்கத் தொடங்கினேன்.

எனது உயரிய நேசிப்புக்குரியவர்களே எனக்கெதிராகத் திரும்பியபோது எனது ஆன்மா நையத்தொடங்கியது. ஆனால் எனது வாழ்வியற் செல்நெறியினூடாக அவர்கள் மீது நான் வைத்திருந்த பேரன்பும் பெருங்காதலும் இதனால் எந்த வகையிலும் குறைந்து விடவில்லை. என்னளவிலான அவர்கள் மீதான எனது எதிர்வினை சில மனவருத்தங்கள், சில கோப வெளிப்பாடுகள், மனச் சோர்வால் ஏற்பட்ட மூர்க்கத்தனமான வார்த்தைப் பிரயோகங்கள்..... அவ்வளவே. இதில் எந்தத் திட்டமிடலும் இல்லை. ஆனால் அவர்களின் ஆழ்ந்த மௌனமும் எதிர்வினையும் ஒட்டுமொத்த மனித இயக்கமும் எனக்கெதிராக ஒரு கூட்டணியை வைத்துக்கொண்டனவோ என்ற அச்சமாக மேலெழுந்து எனது மன அடுக்குகளின் ஒழுங்கைச் சீர்குலைத்தன.

முடிவில் மனநல மருத்துவர்களின் முகவரிகளையும் தொலைபேசி எண்களையும் தேடி அலையத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் மனம் முறிவைச் சந்திக்கத் தொடங்கியது. பிறிதொரு கட்டத்தில் இந்தச் சமூகத்திற்கெதிராகக் குற்றங்கள் புரிவது குறித்துச் சிந்திக்கத் தொடங்கியது. எல்லாம் ஒழுங்கற்றும் கட்டற்றும் இருந்தன. எல்லாமுமே.........

ஒருகட்டத்தில் தப்பிக்க வழியேதுமற்ற நிலையில், மனித வாழ்வின் ஆதாரமான அந்தக்கேள்வியை முழுவதுமாக எதிர்கொள்வதென்று முடிவு செய்தேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். தனிமையின் உக்கிரம் பீடித்த கண்களுடன் எனது வாசிப்பை அதிகப்படுத்தினேன். வாசித்தது குறித்து எழுதத் தொடங்கினேன்.

வாசிப்பையும் எழுத்தையும் தவிர வேறு எந்த வகையிலும் என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியாதெனவும், மனித வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாதெனவும் தெளிவாகப் புரிந்து கொண்டேன். மனதை ஒருநிலைப்படுத்தி வாசிப்பை அதிகப்படுத்தினேன். கையில் அகப்பட்டதெல்லாவற்றையும் வாசித்தேன். ஆனால் என்னைத் தொந்தரவு செய்த அந்தக் கேள்விக்கான விடை என் கைகளுக்குள்  சிக்கவேயில்லை.

இத்தகைய ஒரு தருணத்தில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கடந்த வருடம் மே மாதத்தின் இறுதி நாட்களில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து கிடைத்த செய்தி ஒன்றின் துர்சகுனங்களின் தீவிரம் தாங்கமுடியாமல், ஏற்கனவே குரூரமாகச் சிதைந்திருந்த மனம் பிறழ்வை நோக்கி சரியத் தொடங்கியது.

நிலமையின் விபரீதத்தை உணர்ந்து என்னை ஒருநிலைப்படுத்த எடுத்த எல்லா எத்தனங்களும் தோல்வியில் முடிய, அளவுக்கதிகமான நித்திரைக் குளிசைகளின் உதவியுடன் தூங்கமுற்பட்டேன். அதிரும் எனது ஆழ்மனம்  மருத்துவ விஞ்ஞானத்தைத் தோற்கடித்தது. மனம் எதிர்நிலையில் கூடுதல் விழிப்படைந்து  அதிர்வு தீவிரமாகியது.

ஏற்கனவே பல தடவை வாசிப்புக்குள்ளான நூல்கள் மனதை ஒருநிலைப்படுத்தாமல் வாசிப்பில் சலிப்பை ஏற்படுத்தின. புதிதாக ஏதோ ஒன்றை மனம் நாடியது. என்ன செய்வதென்று புரியாமல் ஒருவித மூர்க்கத்துடன் புத்தக அலுமாரியை  இழுத்து வீழ்த்தினேன். எனது அறையை புத்தகங்களால் நிரப்பினேன். என் கால்களுக்கிடையில் தண்ணீர் போல் புத்தகங்கள் நிரம்பத் தொடங்கின.

இழுத்த வேகத்தில் எல்லா நூல்களும் சரிந்து விட ஒரு நூல் மட்டும் சிறிது கணம் தாமதித்து பரணில் இருந்து விழுந்து என் காலடியில் சிதறியது. எல்லா நூல்களும் மூடியபடி என் அறையை நிறைத்துக்கொண்டிருக்க இது மட்டும் திறந்தபடி அசைவற்றிருந்தது.

உற்றுப் பார்த்ததேன். திறந்திருந்த பக்கத்தில் "மனிதனைத் தேடும் மனிதன்" என்ற தலைப்பின் கீழ் பின்வரும் வாசகங்கள் அசைந்து கொண்டிருந்தன..

"ஆதி மனிதன், தனது உலகானுபவத்தை அர்த்தமுள்ள சப்தங்களாக வார்த்தைகளில் உருவகித்து, பேசும் ஆற்றல் பெற்று சுயமாகச் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே அவனிடம் அந்தக் கேள்வி பிறந்தது.
கேள்விகளுக்கு எல்லாம் மூலக் கேள்வியாக, வாழ்வியக்கத்தின் அர்த்தத்தையே தொட்டு நிற்கும் கேள்வியாக, ஆதி மனிதன் தன்னை நோக்கி அந்த வினாவை எழுப்பினான்.
'நான் யார்?'
எல்லையற்ற பிரபஞ்சத்தின்  எங்கோ ஒரு முலையிலிருந்து திசை தெரியாது தவித்த மானிடத்தின் அவலக்குரலாக அந்தக் கேள்வி எழுந்தது.
அந்தக் கேள்வி பிறந்த கணத்திலிருந்து  இன்று வரை, ஒரு நீண்ட முடிவில்லாத சுயவிசாரணைத் தேடலாக மனிதன் தன்னைத்தானே தேடிக்கொண்டிருக்கிறான். அந்தத் தேடுதல் இன்னும் முடியவில்லை."

ஆச்சர்யமும் ஒருவித அச்சமும் என்மனதை ஒருங்கே ஆக்கிரமித்தன. புத்தகத்தைத் திருப்பி அது என்னவென்று பார்த்தேன்."விடுதலை : அன்ரன் பாலசிங்கம்" என்றிருந்தது.

எனது உணர்வுகளை ஒருநிலைப்படுத்தி நூலை வாசிகத் தொடங்கினேன்; வாசித்தேன்- வாசித்துக் கொண்டேயிருந்தேன்.
முடிவில் அன்ரன் பாலசிங்கம் என்ற மனிதர் குறித்து நான் இதுவரை கட்டமைத்திருந்த பிம்பம் மெல்ல மெல்லக் கலைந்து அது வேறொரு வடிவம் எடுத்திருந்தது.

இது எப்படி என் கைகளுக்குள் சிக்காமல் இருந்தது என்ற எண்ணம் மட்டுமல்ல 'விடுதலை' நூலில் அவர் இதையா எழுதியிருந்தார் என்ற எண்ணமும் சேர்ந்து  ஆச்சர்யம் கலந்த அதிர்வகளை மனதில் ஏற்படுத்தின.

சிறுநீர் முட்டி சிறுநீர்ப்பை வெடித்துவிடும் என்றவொரு கட்டம் வந்தபோதுதான், கிட்டத்தட்ட 18 மணித்தியாலங்கள் அந்த நூலை நான் வாசிப்புக்குட்படுத்தியுள்ளேன் என்பதை உணர்ந்தேன்.

புத்துணர்வு பெற்றவனாக - புது மனிதனாக அறையிலிருந்து வெளியேறினேன். எனது ஆழ்மனத்தின் அனைத்துத் திசைகள் மீதும் "விடுதலை" வெளிப்படுத்திய விழிப்புணர்வு சட்டென ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தியது. அந்த வெளிச்சம்  எனது  ஆழ்மன அடுக்குகளில் மின்சாரத்தைப் பாய்ச்சியது. அது தந்த புத்துணர்ச்சியும் கவித்துவமும்  சீர்குலைந்த எனது மன அடுக்குகளை மீளொழுங்கு  செய்து சீராக அடுக்கத் தொடங்கின.

நான் கடவுளை உணர்ந்த தருணங்கள் அவை.  நான் கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவன். கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவருக்கே மட்டும் சாத்தியப்படக்கூடிய ஒரு ஆத்மார்த்த நிலையை அன்று நான் உணர்ந்தேன்.

'விடுதலை' எனக்கு எந்தவிதமான விசாலமான வெளியையும் திறந்து விடவில்லை. ஆனால் வாழ்வு குறித்து நம்பிக்கை இழந்தவனாக, மனித வாழ்வு குறித்த ஆதாரமான கேள்விகளுக்கு பதில் தேடியவனாக எந்தப் பாதையும் தெரியாமல் வழியும் புரியாமல் திகைத்து நின்ற எனக்கு "விடுதலை"யின் வழி ஒரு பாதை திறக்கப்பட்டிருக்கிறது.

ஒழுங்கற்றும் கட்டற்றும் இருந்த மனிதர்கள் குறித்த எனது விசாரணையை ஒரு ஒழுங்குக்குள் கொண்டுவந்திருக்கிறது 'விடுதலை'. இதன் வழியே எனது வாழ்வின் வட்டம் விரிகிறது.

எனது வாசிப்பும்  தேடலும் எழுத்தும் மட்டுமல்ல எனது வாழ்வே பேரியக்கமாக விரிகிறது. எனது ஒவ்வொரு அசைவும் இந்த உலகத்திற்கான கோட்பாடுகளாகவும் தத்துவங்களாகவும் மனித விடுதலை குறித்த தார்மீகக் கேள்விகளுக்கான பதில்களாகவும் நகரத் தொடங்கியுள்ளன.

என்னை வாழ்வின் விளிம்பு வரை துரத்தியவர்கள் பலர் இன்று எனது வாழ்வியற் கோட்பாட்டின் உக்கிரம் தாங்காமல் ஓடத் தலைப்பட்டுள்ளனர். அதுகூட அவர்களைப் பொறுத்த மட்டில் ஒரு ஆத்மார்த்த நிலைதான் என்பதை அவர்களுக்கே புரிய வைக்கும் முயற்சிதான் எனது எழுத்துக்களாக விரிகின்றன.

இதன்வழி எல்லா அபத்தங்களுடனும் வாழ்வைக் கொண்டாடுவது குறித்த கலைகளைக் கற்றுத் தேர்ந்திருக்கிறேன். இதை எனக்கு சாத்தியப் படுத்துவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர்தான் அன்ரன் பாலசிங்கம் அவர்கள்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அன்ரன் பாலசிங்கத்தின் 'விடுதலை" நூலைத் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன். வாசிப்பு என்ற சொல்லாடல் அந்தப் பிரதிக்கும் எனக்குமான உறவை - நெருக்கத்தை விபரிப்பதற்கு போதுமானதல்ல என்றே கருதுகிறேன். அந்த பிரதியின் கனபரிமாணமும் கனதியும் எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்களையும் விளைவுகளையும் பற்றித்தான் நான் உங்களுடன் உரையாட இருக்கிறேன்.
வாசிப்பு, மறு வாசிப்பு, மீள்வாசிப்பு என்று விரிந்த எனக்கும் விடுதலைக்குமான உரையாடல் ஒரு கட்டத்தில் விசாரணையாக பரிமாணம் கண்டது.
இது பின்நவீனத்துவ யுகம் (post modernism). பின் நவீனத்துவம் ஒரு படைப்பை பிரதியாகவே (text)  நெருங்குகிறது.
எனவே விடுதலையையும் ஒரு பிரதியாகவே அணுகினேன் நான்.
படைப்பு பிரதியாகும் போது வாசிப்பு என்ற சொல்லாடல் மறைந்து வாசகனுக்கும் பிரதிக்கும் இடையில் புது உறவொன்று மலர்கிறது. பிரதியுடனான ஊடாட்டமாக அதுமாறி பிரதியை தொடாந்து எழுதிச்செல்லும் நிலைக்கு வாசகன் நகர்கிறான். முடிவில் அந்தப் பிரதியாகவே அவன் மாறி விடுகிறான்.
எனவே நானும் வரும் நாட்களில் விடுதலையின் தொடர்ச்சியை எழுதிச் செல்வேன் -அவர் விட்ட இடத்திலிருந்து....

நான்தான் "விடுதலை".  நான்தான் பாலசிங்கம். ஏன் நீங்கள்கூடத்தான்....

(தொடரும்..)

கட்டுரையாளருடனான தொடர்புக்கு: parani@hotmail.com

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


மேலும் சில...
விடுதலையின் விரிதளங்கள் - 02
விடுதலையின் விரிதளங்கள் - 03
விடுதலையின் விரிதளங்கள் - 04
விடுதலையின் விரிதளங்கள் - 05
விடுதலையின் விரிதளங்கள் - 06

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 15 Jul 2024 20:12
TamilNet
HASH(0x563a371f2808)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 15 Jul 2024 20:12


புதினம்
Mon, 15 Jul 2024 20:12
     இதுவரை:  25364311 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4694 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com