அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 15 July 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 34 arrow மரணத்தின் வாசனை – 03
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மரணத்தின் வாசனை – 03   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: த.அகிலன்  
Wednesday, 23 May 2007

ஓர் ஊரில் ஒரு கிழவி..

அவளது ஒரு பேத்திக்கு  லண்டனில் அவளால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத பெயரைக் கொண்ட ஒரு ஊரின்  மண்டபத்தில் கலியாணம் நடந்த 6ம் நாள். இன்னொரு பேத்தி சாமத்தியப்படுவதற்கு சரியாக 25 நாட்கள் முன்பாக அம்மம்மா செத்துப்போனா. அவ சாவுக்கு நான் தான் காரணம் என்றாகிப்போனேன். என்னை கொலைகாரனாக்கி விட்டு அம்மம்மா செத்துப்போனா.

சாகிற வயசுதான் சுமார் 60தைக் கடந்து விட்டிருந்தா. தீராத  நோயாளியைப்போல மாத்திரைகளும் கையுமாய் வாழ்ந்து கொண்டிருந்தவள் தான் அவ. ஆனாலும் அவ அதிஸ்டக்காரி. மறுபடியும் தான் வாழ்ந்த ஊரிலேயே செத்துப்போகிற வாய்ப்பு அவ வயுசுக்காரிகளிலேயே அவவுக்குத்தான் கிடைத்திருக்கிறது. அந்த ஊர் அவவுக்கு மிக நெருக்கமானது. கணவன் பக்கத்து வீட்டுக்காரியோடு ஓடிப்போனபிறகு தனது 7 பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்து சேர்ந்தா இந்த ஊருக்கு. அப்போதெல்லாம் மனிதர்கள் குறைவாக இருந்தார்கள் ஊரில். தெருக்கள் முளைக்காத இடங்கள் அதிகம் இருந்தன. இந்த ஊரின் பலதெருக்கள் இவ பார்த்துக்கொண்டிருக்கத்தான் முளைத்தன என்கிற இறுமாப்பு இவவுக்கு சாகும் வரையிலும்  இருந்தது.

1996ல் ஊரே இடம்பெயர்ந்து காடுகளுக்குள்ளும், இன்னுமின்னும் வெகுதொலைவில் தாங்கள் இது வரைக்கும் கேள்விப்பட்டிராத பெயர்களைக் கொண்ட ஊர்களுக்கு, வாழ்ந்த ஊரிலிருந்து நினைவுகளை மட்டும் சுமந்துகொண்டு  பயணப்படுகையில், இவ எவ்வளவு மறுத்தும் கேட்காமல் மூத்தவன் இவவை ரைக்ரர் பெட்டியில் குண்டுக்கட்டாக கட்டி ஏத்திக்கொண்டு போய்விட்டான். அன்றைக்கு ஊரைவிட்டுப்போன இவ வயசுக்காரர்களில் பெரும்பாலானவர்கள் வெளியூர்களிலே எரிந்து சாம்பலாகிப்போனார்கள். அல்லது மறுபடியும் ஊருக்கு திரும்பும் முடிவில்லாது யுத்தம் தீண்டவே தீண்டாது என்று அவர்கள் நம்பும் நகரங்களிலோ நாடுகளிலோ குழந்தை குட்டிகளுடன் நிரந்தரமாக தங்கி விட்டார்கள்.


ஆனால் அம்மம்மா இங்கு மறுபடியும் வந்து விடவேண்டும் என்பதில் உறுதியாயிருந்தா. அல்லது அதற்காகவே தான் அவ தனது உயிரை வைத்துக்கொண்டிருந்தா என்று தோன்றுகிறது. எனக்குத் தெரியும் அவ வாழ்க்கையில் மொக்குத்தனமான இரண்டு விடயங்களை நேசித்தா. ஒன்று சித்தி மற்றது அவவின் திருநகரில் இருக்கும் கோயில். அம்மன் கோயில். அவ அம்மன் தான் தன் பிள்ளைகளை வளர்த்தது, கல்யாணம் பண்ணி வைச்சது, தன் வாழ்க்கையில் எல்லாம் இந்த அம்மனால்தான நடந்தது என்று அடிக்கடி சொல்லுவா.

தன்னையும் தன்ர பிள்ளைகளையும் புருசன் கைவிட்டுப்போக நல்லதங்காள் மாதிரி பிள்ளைகளையும் கொன்று தானும் சாகிற முடிவிலிருந்தவ, அதையெல்லாம் கடந்து இந்த திருநகருக்கு வந்து காடுவெட்டி ,வீடு கட்டி. கோயில் கட்டி, பிள்ளைகளைப் படிப்பிச்சு, கல்யாணம் கட்டிக்குடுத்து என்று தான் செய்கிற எல்லாச் செயல்களுக்கும் அம்மாளாச்சிதான் காரணம் என்று அதீதமாய் நம்புகிறவ அவ. ஆனால் அவ புருசன் தன்னை விட்டு  ஓடிப்போன பிறகு எந்த கோயிலுக்கும் போனது கிடையாது. அதனால் தான் அவ தன்காணியிலேயே அவ அம்மனுக்கு சிறிதாக ஒரு கோயில் எழுப்பினா. தனக்கேயான கோயில், தான் கும்பிடுவதற்கான கோயில் அவதான் அங்கே எல்லாமே.

செல்லையா அதான் அவ புருசன் பக்கத்து வீட்டுக்கார மிக்கர் கிழவியோட ஓடிப்போனபிறகு திருநகருக்கு வந்து, அப்பம் சுட்டு வித்து, இடியப்பம் அவிச்சு கடைகடையாய் கொடுத்துவிட்டு, மூத்தவனை அரிவு வெட்டுக்கு அனுப்பி இப்படி பூச்சியத்திலிருந்து தனது வாழ்க்கையின் இரண்டாவது பாகத்தை தொடக்கிவைத்த ஊரை அம்மம்மா அளவுக்கு அதிகமாவே நேசித்தா.

அவ தன்னை விடவும் கோயிலை அதிகமாக நேசிக்க இன்னொரு காரணமும் இருந்திருக்கலாம். இந்தக் கோயில் தான்  அவவுக்கு ஊருக்குள் அப்பக்காராச்சி என்றிருந்த பெயரை மாற்றி கோயிலாச்சி என்று அவவை ஒரு மரியாதையுடன் ஊர்க்காரர்கள் அழைக்க காரணமாக இருந்தது. அம்மம்மா இதனால் தான் கோயிலை அதிகமாக நேசிக்கிறாவோ என்று தோன்றும். இதுவும் காரணமாக இருக்கலாம். ஆனால் அவவின் கோயில் மீதானதும் ஊரின் மீதானதுமான நேசம் அற்புதமானது. ஊர் அவவுக்கு தோழியைப்போல ஒரு மகளைப்போல. ஏனெனில் இவ தனது புதிய வாழ்க்கையை ஊர்பார்க்கத்தான் ஆரம்பித்தா, ஊரும் இவ பார்க்கத்தான் வளர்ந்தது.

அவ கணவனைப் பிரிந்த காலத்திலிருந்தே அவ மனசுக்குள் மூடிய ஒரு பாகத்தை வைத்துக்கொண்டிருந்தா.  அவ அன்றிலிருந்து விதவையாக மாறிவிட்டா. கணவன் இரண்டாம் தாரமாக வேறொருத்தியை கட்டி உயிருடன் இருந்த போதும் அவ பொட்டுவைத்துக் கொள்ளாமல் பூவைத்துக் கொள்ளாமல் திரிந்தா. அவவைப் பொறுத்தவரையில் அவ தன் கணவனுக்குத் தலைமுழுகி விட்டா என்று எல்லோரும் நம்பும்படியாக நிறுவினா. உண்மையும் அதுவாகத்தான் இருந்தது.  
 
அல்லது அப்போதே இதெல்லாம் வெறும் சடங்குகள் என்னை கணவன் கட்டிப்போடப் பயன்படுத்தும் நாடகங்கள் என்ற புரிதலினால் களைந்தாவோ தெரியாது. ஆனால் அவற்றையெல்லாம் விரும்பாமல் திமிர் பிடிச்சவ என்ற பேரெடுத்துக்கொண்டும் கடைசி வரைக்கும் அப்படியே வாழ்ந்து விட்டவ அவ.  
 
 
தனியொரு பெண்ணாக தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயங்களை எழுதத் தொங்கினா. அவ தானே தன் கதை எழுத ஆத்திரக்காரியாக இருக்கவேண்டியிருந்து. அடாவடிக்காரியாக வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் பைத்தியக்காரியாகக் கூட ஆகவேண்டியிருந்து ஆனால் எல்லாவற்றையும் கடந்தா. அப்பக்காரியாகவும் ஆத்திரக்காரியாகவும் இருந்த அவ இந்த கோயில் மூலம் கோயிலாச்சி ஆகிப்போனா. கோயில் திருநகரில் எல்லோரையும் தன் பக்கதர்கள் ஆக்கியது. தனக்கு நேத்திவைக்க வைத்தது. அதற்கு பொங்கல் வைக்க வைத்தது. காலப்போக்கில்  கோயிலும் கோயிலாச்சியும் புதுமையானவர்களாக மாறிப்போனார்கள்.
நான் என்ன சின்ன வயசுகளில் அம்மம்மா பூசை செய்யும் போது மணியடித்துக்கொண்டு பக்கத்தில் நின்று கொண்டிருப்பேன். அம்மம்மாவின் கோவிலில் மணியடிப்பதற்காக எனக்கும் தம்பிக்கும் நிறைய ரத்தக்களறிகளே ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் அவ அம்மனோடு பேசுபவவாக இருந்தா. அம்மனோடு கதைத்தா, சிரித்தா, கோபப்பட்டா. அவ ஒரு சினேகிதியைப்போல அந்த அம்மாளோடு நடந்து கொண்டா.

இப்போது அவவுக்கு எல்லாமும் என்றிருந்த கோயிலை விட்டு விட்டு போகும்படி சண்டை அவவை துரத்துகிறது. பின்வேலி வரைக்கும் செல்வந்து வீழ்ந்தாகிவிட்டது. யுத்தம் அகோர யுத்தம் அவவை அவவினது உயிருக்குயிரான மண்ணை விட்டும் கோயிலை விட்டும் துரத்துகிறது. அவவினது எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், திமிறல்கள் எல்லாவற்றையும் கடந்து ரைக்ரரில் முத்தவன் வற்புறுத்தி ஏற்றும் போதே அம்மம்மா பேசுவதை நிறுத்தியிருந்தா. அவவால் அந்த பிரிவை தாங்கமுடியவில்லை அம்மாளே தாயே என்று வழியெல்லாம் அரற்றியபடியே வந்தா. அவவினது அரற்றலையோ, ஏக்கங்களையோ, வலிகளையோ புரிந்து கொள்ள நேரமில்லாமல் வெடிச்சத்தம் ஊரை நெருங்கிக் கொண்டிருந்தது. தெருவெங்கும் செல் சத்தம் விரட்டியபடியே இருந்தது. அக்கராயனில் புதிதாக ஒரு இரவல் வீட்டின் தாழ்வாரத்தில்  தூக்கமின்றி எல்லோரும் முழித்திருந்த அன்றைய இரவில் அம்மம்மா எதுவும் பேசவில்லை. அம்மா என்ன எல்லோரும் முழித்திருந்தும் யாரும் பேசவில்லை, பேச முடியவில்லை. தவளைகள் பூச்சிகள் எல்லாம் மௌனமாக இருந்தன. இருட்டு ஒரு ஊமையைப்போல எல்லார் மீதும் படர்ந்து இறுகியது. தொலைவில் வீழ்ந்து வெடித்தபடியே இருந்தன செல்கள். அதற்குப்பிறகு மறுபடியும் கிளிநொச்சிக்கு யாராலும் போகமுடியவில்லை. நாங்கள் ஒரு இரவல் வளவுக்குள் கொட்டிலைப் போட்டுக்கொண்டு ஒரு அகதி வாழ்க்கையின் முதல் நாட்களில் வாழப் பழகிவிட்டிருந்தோம்.

திருநகரை விட்டு வந்த 4ம் நாள் திடீரென அம்மம்மா தூக்கத்தில் எழுந்து அய்யோ என்ர அம்மாளே என்று வீரிட்டுக்கத்தினா. தூரத்தில் எங்கேயோ குண்டு விழுந்து வெடிக்கும் ஓசை  கேட்டு அடங்கியது. அம்மம்மா சரி என்ர அம்மான்ர சன்னிதி உடைஞ்சு போச்சு என்று புலம்பினா. யாராலும் தேற்றமுடியாமல்  அப்படியே அழுதழுது மயங்கிப்போனா. அன்றைக்கு பிறகு அம்மம்மா பேசுவதை குறைத்து விட்டா பேசினாலும் சித்தியொடு மட்டுமே பேசுவா. அவ அம்மனுக்கு அடுத்த படியாக நேசித்தது சித்தியைத்தான். சித்தி கல்யாணம் அமைந்து போகாமல் அல்லது காதல் தோல்வியால் திருமணமே வேண்டாம் என்று அம்மம்மாவோடயே இருந்து விட்டவ. அம்மம்மா அவவோடு மட்டும் தான் பேசுவா. எப்போதாவது அரிதாக எங்களோடு பேசினால் ஆச்சரியப்படுவோம் நாங்கள்.

பிறகு ஒரு நாள் சித்தியும் பாம்பு கடித்து அக்கராயன் ஆஸ்பத்திரியில் மருந்தில்லாமல் செத்துப்போக அம்மம்மா நடைப்பிணமாகிவிட்டா. ஆனால் அம்மம்மா ஊரை விட்டு வரும் போது அழுத அளவுக்கு சித்தியின் சாவுக்கு அளவில்லை. வெறித்தபடியிருந்தா.  பெரும்பாலும் மௌனம். திடீரென்று ஒரு அழுகை என்று சித்தியின் சாவின் பின் அவ அவவுக்கான ஒரு உலகத்தில் வாழத் தொடங்கியிருந்தா என்று சொல்வேண்டும்.

ஆனால் அம்மம்மா இடைக்கிடை என்னோடு பேசுவா. வெத்திலை வாங்கினியா, இந்தப்பொய்லை சரியில்லை, சாப்பிட்டியா இப்படி உதிரியான சில வசனங்களை அவ சித்தியின் இறப்புக்கு பிறகு என்னோடு பேச ஆரம்பித்தா. எனக்கே ஆச்சரியமாப்போயிருந்தது. சித்திக்குப்பிறகு அம்மம்மா பேசுவதற்கு என்னை தேர்ந்தெடுத்திருக்கிறா என்றால் அம்மம்மா என்னை நேசிக்கிறா, சித்திக்கு அடுத்த படியாக என்று தானே அர்த்தம்.

மறுபடியும் யுத்தம் குண்டுகள், விமானங்கள், இரத்தம், காயங்கள், வீரச்சாவுகள், சாவுகள், என்று மறுபடியும் அகோர யுத்தம். இந்த முறை சத்தம் கொஞ்சம் தூரமாய்போனது. கொஞ்சநாளாகத் தொடர்ந்த சத்தம் ஒரேயடியாக தூரமாகப்போனது ஆனையிறவைப் பெடியள் பிடிச்சிட்டாங்களாம்  என்று ஊரே கொண்டாட்டமாகத் திரிந்தது. ஆனையிறவின் வீழ்ச்சி மறுபடியும் ஊருக்குப் போவதற்கான அனுமதியாகியது.

கண்ணிவெடிகளை எடுத்த பிறகு தான் போகலாம் என்றார்கள். அவாப்பட்டு அல்லது தன்பிள்ளைகளைத் தேடிப்போவது போல உடனடியாகப்போனவர்கள் காலைஇழந்தார்கள் சிலபேர் உயிரையும். அதற்குப்பிறகு ஊரில் காணவில்லை என்று தேடப்பட்டவர்களுக்கு எல்லாம் விடைகிடைத்தது 250 க்கு மேல் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. நிறையப் பெண்கள் மறுபடியும் தன் கணவன் வருவான் என்ற நம்பிக்கையில் தாம் வைத்திருந்த குங்குமத்தை இழந்தார்கள். 5 அல்லது ஆறுவருடங்களுக்கு பிறகு செத்தவீடுகள் நடந்தன. குழந்தைகள் அப்பாவை இழந்தன அல்லது அப்பா இருக்கிறார் என்ற நம்பிக்கையை இழந்தன். தாய்மார் மகன்களை இழந்தார்கள். அடிக்கடி காவல்துறையில் எலும்புக்கூடுகள் அடையாளம் காண்பதற்காய் வைக்கப்பட்டன.

"இது அவற்ற சேட்டு"
"இது அவற்ற வெள்ளிமோதிரம்"
"இது அவன்ர சங்கிலி"

உயிரோடு இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கை சிதறிப்போக, கண்ணீரும் நம்பிக்கையும் உடைந்து விழ புதிய துயரங்கள் பிறக்க ஆரம்பித்தன. யுத்தம் தீர்ந்து போன பின்பும் துயரங்களை முழுவதுமாக எடுத்து செல்லவில்லை எனப் புரிய நீண்டகாலமானது.

இன்னும் சில எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படாமலே கிடந்தன. அந்த எலும்புக்கூடுகள் சட்டையின் ஒரு  பகுதியையோ மோதிரத்தையோ கொண்டிராமல் தம்மிடமிருந்த எல்லாவற்றையுமே இழந்து விட்டவையாயிருந்தன. இன்னும் சிலபேர் காணமல் போனோர் பட்டியலில் இருந்து தமது உறவுகளை செத்துப்போனவர்கள் பட்டியலுக்கு மாற்ற மனமில்லாதவர்களாய் இந்த அடையாளம் காட்டுதலுக்கெல்லாம் வரமறுத்தவர்களாய் அவர்கள் உயிரோடிருக்கிறார்கள் எனும் நம்பிக்கையைக் கட்டியபடி குறுகிக்கிடந்தார்கள்.

மரணமும் துயரமும் மட்டுமே நிரம்பிக்கிடந்த ஒரு நாளில் திடீரென்று அம்மம்மா காணாமல் போனா. வாசலில் வெத்திலை துப்பிக்கொண்டிருந்தவவை காணவில்லை. சைக்கிளை எடுத்துகொண்டு ஒழுங்கை ஒழுங்கையாய் தேடினேன். கடைசியில் கிளிநொச்சிக்கு போகிற றோட்டில் அம்மம்மா ஒரு வேகத்தோடு போய்க்கொண்டிருந்தா. எணேய் எணெய் எங்கபோறியள் நான் வார்த்தைகளை காற்றிலனுப்பி மறிக்க முயற்சி செய்தேன் அவ காதில் வாங்காமல் முன்னேறிக் கொண்டிருந்தா. சைக்கிளை குறுக்கவிட்டு கையைப் பிடித்தேன்.

என்னை விடுமோனை நான் வீட்டை போப்போறேன். என்ர அம்மாளிட்ட போப்போறன் அம்மம்மா பீறிட்டுக்கத்தினா. நான் அதுக்கேன் நடந்து போறியள் என்னைக்கேட்டா நான் கூட்டிக்கொண்டு போயிருப்பன் தானே என்று சமாதானப்படுத்தினேன். நீ பொய் சொல்லுறாய் அம்மம்மா ஒரு குழந்தைமாதிரி கேவிக்கொண்டே கேட்டா. இல்லை வெள்ளிக்கிழமை கட்டாயம் போகலாம் குமார் அண்ணையின்ர மோட்டசைக்கிள்ள ஏத்திக்கொண்டு போறன் எண்டு சமாளிச்சு மறுபடியும் வீட்டை கூட்டிக்கொண்ட வந்தேன்.

அம்மம்மா அதன்பிறகு சூரியனை விரட்டுகிறவமாதிரி பகல் முழுதும் வெளியில் உட்கார்ந்திருப்பா. வெள்ளிக்கிழமை நானும் அம்மம்மாவும் வெளிக்கிட்டோம். எனக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டக்கிடைத்ததே என்று ஒரே புழுகமாயிருந்தது. அம்மம்மா அன்றைக்கு வழமையைவிட பிரகாசமாக இருந்தா. திருநகரில் இருந்த கோயிலாச்சியாக மிகமிகச் சந்தேசாசமாக இருந்தா என்று தோன்றகிறது.

போற வழியில் மூலைப் பெட்டிக்கடையில் கற்பூரமும் நெருப்புப் பெட்டியும் வாங்கிவரச்சொன்னா. பிறகு வழிமுழுதும் சொல்லியபடியே வந்தா. நீதான் கோயிலுக்கு பூசைசெய்யோணும் உனக்குத்தான் அந்தக்காணியை எழுதிவைப்பன். அப்படி இப்படி என்று நிறைய பேசினா. நான் இம் கொட்டிக் கொண்டேயிருந்தேன். வார்த்தைகள் என்னிடம் குறைவாகவும் அவவிடம் அதிகமாகவும் சிக்கிக் கொண்டிருக்கின்றதோ என்று தோன்றியது.

மறபடியும் நான் சின்னப்பையனாக ஓடித்திரிந்த ஊருக்கு வந்தேன். ஊர் அந்நியமாகத் தெரிந்தது என் ஞாபக அடுக்குகளில் இருந்த அடையாளங்கள் எல்லாம் அழிந்து போய் இருந்தது. காணாமல் போன பொருள் மறுபடியும் கிடைத்தும் அடையாளம் தெரியாதவனாய் நான் என் பிள்ளைப் பருவத் தெருக்களில் திணறினேன்; ஒரு புதிய வருகையாளனைப்போல. பாதைகள் அணைகளாகியிருந்தன அல்லது பதுங்கு குழிகளாயிருந்தன. புதர்மண்டிக்கிடந்த தெருக்களின் வழி திருநகருக்கு வந்தேன். அம்மம்மா இப்போது அதிகமான மௌனத்தோடு இருந்தா. மோட்டார்சைக்கிள் கிடங்குகளில் திணறியது. நான் அம்மம்மா வீட்டு ஒழங்கைக்குள்ளால திரும்பி போய்க் கொண்டேயிருந்தேன். என்னால் இலகுவில் காணியை கோயிலை அடையாளம் காணமுடியவில்லை எதுவுமேயில்லை எல்லா வீடுகளும் இடிந்திருந்தன. அம்மம்மா திடீரென மோட்டசைக்கிளில் இருந்து குதித்தவ அழுதபடி கத்தினா. என்ர ஆச்சி தாயே உன்னை இந்தக் கோலத்திலயோ பாக்கோணும் வாயெல்லாம் குழற வார்த்தைகள் புரியமல் அம்மம்மா எதையோ சொல்லிச்சொல்லி அழுதா. குமுறிக்குமுறி இது வரை தேக்கிய தன் நேசத்தையெல்லாம் பரிவையெல்லாம் தீர்த்து விடுகிற மாதிரி கேவிக்கேவி அழுதா. அழுததழுதே தான் கொண்டு போன கற்பூரத்தை எங்கே கொழுத்துவதெனத் தெரியாமல் வீதியில் வைத்து கொழுத்தினா.

திடீரென ஆவேசம் வந்தவவைப்போல “வேசை உன்னை இந்தக்கோலத்திலயோடி நான் பார்க்கோணும் தோறை தோறை அறுந்தவேசை உன்னை இப்பிடி நான் பாக்கோணும் எண்டுதானே என்னை உயிரோட வைச்சிருந்தனி” எண்டு அழுகையும் கோபமுமாக கத்தினா. நான் பேசாமல் மௌனியாய் ஒரு சாட்சியைப்போல நின்று கொண்டிருந்தேன். இத்தனை அழுகையையும் பேச்சையும் ஆராவாரத்தையும் கேட்டு கூடுவதற்கு காக்காய் கூட கிடையாது இப்போது ஊரிலே.

கத்திக்கொண்டிருந்த அம்மம்மா திடீரென்று வீதியில் இருந்து செல்விழுந்து உதிர்ந்து போய் புதர் மூடிக்கிடந்த கோயிலின் சிதிலங்களை நோக்கிப்பாய்ந்தா. நான் தடுப்பதற்காக ஒடினேன் விர்ரா என்னை விர்ரா என்று திமிறியபடி அம்மம்மா விக்கித்துச் என் கைகளில் சரிந்தா. அது தான் அம்மம்மாவின் கடைசிப்பேச்சு மூச்சு இரண்டும் எல்லாம் முடிந்து விட்டது. அவ நேசித்த கோயிலின் எதிரில், அவபார்க்க வளர்ந்த ஊரினதும் கோயிலினதும் சிதைவுகளைத் தாங்கமுடியாமல் என்கைகளில அம்மம்மா பிணமாகிப்போனா.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)
 


மேலும் சில...
மரணத்தின் வாசனை – 01
மரணத்தின் வாசனை – 02
மரணத்தின் வாசனை – 04
மரணத்தின் வாசனை - 05
மரணத்தின் வாசனை - 06
மரணத்தின் வாசனை - 07

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 15 Jul 2024 18:11
TamilNet
HASH(0x560abbe710b8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 15 Jul 2024 18:11


புதினம்
Mon, 15 Jul 2024 18:11
     இதுவரை:  25363824 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4259 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com