அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Sunday, 26 May 2024

arrowமுகப்பு arrow இலக்கியம் arrow நூல்நயம் arrow கேள்விகளும் சவால்களும்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கேள்விகளும் சவால்களும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கருணாகரன்  
Monday, 11 June 2007

சோ.ப.வின் நினைவுச்சுவடுகள்
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

01.
கவிதை பற்றிய மேலும் பல கேள்விகளை எழுப்புகின்ற விதமாக  சோ.ப. வின் 'நினைவுச்சுவடுகள்' என்ற புத்தகம் வந்திருக்கிறது. à®•à®Ÿà®¨à¯à®¤ வாழ்வின் உயிர் நிரம்பிய  அழியாச்சித்திரங்களையும் இழப்பின் கனதியையும் இந்தப்புத்தகம் தருகிறது. புத்தகத்தில் இரண்டு  விசயங்கள் முக்கியமானவை. ஒன்று சிவசேகரத்தின் முன்னுரையும்  சோ.ப.வின் என்னுரையும். இரண்டாவது சோ.ப.வின் நினைவுச்  சுவடுகள் அல்லது படைப்புகள்.
 
முதலில் சிவசேகரம் நவீன கவிதைப் பின்புலத்தைப்பற்றிச்  சொல்வதை கவனிக்கலாம். இப்போது கவிதை என்ற பெயரில்  அதிகமாக எழுதப்பட்டு வருகின்றவற்றால் புதிய கவிதைகளுக்கு  ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைப்பற்றியும் அவை எதிர்கொள்கிற  சவால்களைப்பற்றியும் சிவசேகரம் தெளிவாகச் சொல்கிறார்.
 
மரபுக்கவிதை என்ற பழைய கவிதைக்கு மாற்றாக புதுக்கவிதை  வந்ததா அல்லது புதுமையாக எதையாவது செய்யவேண்டுமென்ற  வேறுபட்ட தன்மையின் வெளிப்பாடாக கிளம்பிப் பின்னர் ஒரு  வகையான பண்டிதத்தனங்களுக்குள்ளும் வரட்சிக்குள்ளும் அது  சிக்குண்டிருக்கிறதா என்ற கேள்விகளை எழுப்புகிறார் சிவசேகரம்.
 
மரபு சார்ந்த கவிதையின் குறைபாட்டையும் போதாமைகளையும்  நிவர்த்திப்பதற்காக உருவாகியது மாற்றுக்கவிதை. அப்படி உருவாகிய  புதிய கவிதை எப்படி மீண்டும் அந்த மாறுதலுக்கெதிரான  பண்டிதத்தனங்களுக்குள் சிக்குப்பட்டிருக்க முடியும் என்பதும் அது  எவ்வாறு எதிர்நிலைக்குத் திரும்பியிருக்கலாம் என்பதும்  சிவசேகரத்தின் கேள்விகள்.
 
புதிய கவிதை என்பது அடுத்த கட்டத்தின் வளர்ச்சி என்பதும்  ஜனநாயகமயப்பட்டது என்பதும் சிவசேகரத்தின் வாதமாகிறது.  அதனால்தான் அதற்கு அதிக மதிப்பென்றும் அவர் சொல்கிறார்.
 
தமிழ்க்கவிதை அதன் வேரிலிருந்து வளர்ச்சியடைந்து  நவீனப்பட்டிருக்குமானால் பேச்சோசையைத் தவிர்க்க வேண்டும்  என்பதில் பிடிவாதத்தையோ கடுமையான மறுப்பையோ கொண்டிராது என்பதும் சிவசேகரத்தின் நிலைப்பாடு. இதுமாதிரியான கருத்துகளை  முன்வைத்துப் பலரும் முன்னரும் விவாதித்திருந்தாலும்; இன்னும்  அது கவனத்திற்குரியதாகவே இருக்கிறது.
 
குறிப்பாக இன்றைய உலக மயமாதலின் நெருக்கடிப் பின்னணியில்  அடையாளங்கள் முக்கிய கரிசனைக்குரியனவாகின்றன.  அப்படிப்பார்க்கும்போது தமிழ்க்கவிதை தன் வேரிலிருந்து தன்னுடைய அடையாளத்துடன் நவீனப்பட்டிருக்க வேண்டும் என்றொரு  நியாயமுண்டு. அந்த அடையாளம் தேவைக்கேற்றவகையில்  பொருளிலும் வெளிப்பாட்டிலும் கலந்தும் விடுபட்டும் இருக்கும். ஒரு தருக்கபூர்வமான வளர்ச்சி நிலையில் அடைகின்ற புதுமையில் இது  நிச்சயம் நடந்தே தீரும்.  
 
இவ்வாறு இயல்பாக ஏற்படுகின்ற வளர்ச்சியில் அடையாளமும்  அடையாளக்கூறுகளும் செறிவடைந்திருக்கும். 
 
தமிழ்க்கவிதை என்பது ஒரு அடையாளம். அதில் தமிழ்த்தனமும்  தமிழின் தொடர்ச்சியும் வரவேண்டுமே எனக்கருதுவதில்  தவறிருக்கமுடியாது.
 
இந்தத் தமிழ்த்தனம் என்பதும் தமிழ்த்தொடர்ச்சி என்பதும்  ஊடாட்டங்களுக்கப்பாலான வரண்டு தனித்த தனமென்று  அர்த்தமில்லை. தன் வேரிலிருந்து கிளைக்கின்ற அதேவேளை பிற  மூலங்களின் அசைவுகளிலிருந்தும் அவற்றின் கூறுகளிலிருந்தும்  தனக்குரியதை எடுத்து தன்னை வளப்படுத்தலாம். அப்படி  வளப்படுத்துவது அவசியமும் கூட. அதுதான் பன்முகச் செறிவுடைய  நவீன வளர்ச்சிக்குரியதாகும்.
 
இங்கே சிவசேகரம் அடுத்துக்குறிப்பிடுவது அல்லது வலியுறுத்துவது  பேச்சோசையை கடுமையான தீர்மானத்துடன் புதிய கவிதை  புறக்கணிப்பதைப் பற்றியது.
 
பேச்சோசையைத் தீர்மானகரமாகப் புறக்கணிக்கும்போது கவிதையின்  இயல்பில் வரட்சி ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம் உண்டு.  தவிரவும் பேச்சோசையோடு கவிதை மேற்கிளம்பி வருகையில்  அந்தக்கவிதை பிறக்கிற சூழல், காலம், தரப்பினர் - மனிதர்கள்,  அவர்களின் மனவுலகு, உறவு எனப்பலவும் இயல்பாக இணைந்து  புலப்பாடடைகின்றன.
 
இதில் முக்கியமாக கவிதை இயல்படைகின்றது எனலாம். அதற்காக  வலிந்து பேச்சோசையையோ சந்தத்தையோ பிரயோகிக்க  முனைகையில் கவிதை பலவீனமடைந்து விடுகின்றது. இங்கே  கவிதைக்கு எதையும் 'பிரயோகித்தல்' என்ற வகையில்  கையாண்டால் அது கவிதையை வீழ்ச்சியிலேயே  கொண்டுபோய்விடும். படிமப்பிரயோகமானாலும் சரி பேச்சோசையோ  சந்தமோ கருத்து நிலையோ எதுவானாலும் சரி வலிந்த பிரயோகம்  என்ற நிலையில் அவற்றைத் திட்டமிட்டால் அது கவிதையின்  சரிவுக்கே கொண்டுசெல்லும்.
 
இதற்கு நல்ல உதாரணம், பிரமிள். பிரமிளின் பிந்தைய கவிதைகள்  சிலவற்றில் அவர் வலிந்து பிரயோகித்த படிமங்களும் கருத்துகளும்  பலவீனமானவையாகவே இருந்துள்ளன. குறிப்பாக அவருடைய  அதிரடிக்கவிதைகள்.
 
பிரமிள் தொடக்க காலத்தில் எழுதிய கவிதைகளையும் விட அவர்  கவிதையில் முதிர்ச்சியை எட்டியபின்னர் எழுதப்பட்ட  இந்தக்கவிதைகளில் அவர் தோற்றிருந்தார்.
 
பேச்சோசைக்கும் சந்தத்துக்கும் அதிக இடமளிக்கும்போது  அபூர்வமாக சில வெற்றிகள் அதில் ஏற்பட்டாலும் அது  ஆகக்கூடுதலான முயற்சியும் நுட்பத்திறனும் கையாளப்பட்டதால்  ஏற்பட்ட அசாத்தியமான விளைவாகவே உருவாகி இருக்கும்.
 
பேச்சோசை தமிழ்க்கவிதையில்  விசேசமான அடையாளங்களை  பிராந்திய ரீதியாகவும் சமூகரீதியாகவும் காட்டுகிறது.  குறித்துச்சொல்வதானால் இதன்மூலம் திணைகளை உணரலாம்.  அதேவேளை அது கவிதைக்கு அதிக யதார்த்தத்தன்மையை  அளிக்கிறது. அத்துடன் அந்தக்காலத்தோடும் அந்தக்களத்தோடும்  அந்த மனிதர்களோடும்  நெருக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
 
இதேவேளை பேச்சோசையை முறையாகப் பயன்படுத்தத்  தவறும்போது எதிர்மறை அம்சங்கள் ஏற்பட   வாய்ப்புண்டு  என்பதையும் கவனிக்க வேண்டும். அதற்குத் தமிழில் நிறைய  உதாரணங்களுண்டு. சான்றாக வழவழாச் சீரழிவுகள் எரிச்சலூட்டும்படி ஆயிரமாயிரமாக இருக்கின்றன.
 
ஆனால் பேச்சோசையை சரியான நுட்பத்துடன் கையாளும்போது  முன்னரே சொன்னதுபோல கவிதை நிகழ்களத்தையும் காலத்தையும்  மனிதர்களையும் அவற்றின் உயிர்ப்போடு உணர வைக்கிறது  எனலாம்.
 
இதற்கு நாம் நல்ல அடையாளமாக மு.சுயம்புலிங்கத்தின்  படைப்புகளை காணலாம். சுயம்புலிங்கம் தன்னுடைய  கவிதைகளிலும் கதைகளிலும் பயன்படுத்தும் மொழியினூடாக  தன்னுடைய பரப்பை நிஜமாக்குகிறார். இந்தமாதிரி வட்டார  மொழிகளில் பலர் தங்களின் பரப்பை திறம்பட நிஜமாக்கியுள்ளனர்.
 
பேச்சோசையின் இன்னொரு சிறப்பம்சம் புழங்கு மொழியை கையாள வேண்டியதும் கையாளக்கூடியதுமான அவசியமும் நிலையுமாகும்.
 
ஒவ்வொரு காலகட்டத்திலும் புழங்கு மொழி  வேறுபட்டுக்கொண்டேயிருக்கிறது. தலைமுறைகள் மாறும்போதும்  சமூக ஊடாட்டங்கள் நிகழும்போதும் இந்த மாற்றம் நிகழ்கிறது. அது  அப்படி நிகழ்ந்தே தீரும்.  
 
மக்கள் பேசும்மொழியென்பது புழங்குமொழியே. பேசுமொழியில்  மக்களின் வாழ்நிலையும் வாழ்முறையும் புலனாகிறது. கவிஞர்  இதனைக் கையாளும்போது இதன்வழியாக இயல்பாகவே கவிதை  எளிமையை அடைகிறது. அத்துடன் பேச்சோசையுடன் வரும்  கவிதையில் சாதாரண மக்களின் மொழிக்கும் வாழ்வுக்கும் அதிக  இடம் கிடைக்கிறது. சாதாரண மனிதர்களும் கவிதையில்  இடம்பெறுகின்றனர். கவிதை இயல்பாகவே ஜனநாயகப்படுத்தலுக்கும்  உள்ளாகிறது. கவிதைப்பண்பும் மாற்றமடைகிறது. 
 
இங்கே இவ்வாறு கூறுவதன் நோக்கம் பேச்சோசையை  முதன்மைப்படுத்துவதற்கல்ல. பதிலாக பேச்சோசை கவிதையில்  இணையும்போது நிகழ்கின்ற சாத்தியங்கள், விளைவுகள் குறித்த  அவதானங்களுக்காகவே.
 
சோ.ப. முன்னிறுத்துகிற மனிதர்களின் வழியான உலகத்தையும்  அவர்களின் பேச்சு, வாழ்முறை மற்றும் உறவு நிலை  என்பவற்றுக்கூடாகவும் கவிதையை - இந்தப்புத்தகத்தை  அணுகிச்செல்கிறார் சிவசேகரம்.

02.
சோ. ப இங்கே   காட்டுகின்ற உலகம் வெகு சுவாரஷ்யமானதே. அடுத்து, தன்னுடைய நினைவுச்சுவடுகளை, வாசகரின் தீர்மானங்களை  நோக்கி விடுகிறார் சோ.ப. இதை அவர் தன்னுடைய இந்த நூலுக்கான  முன்னுரையிலேயே சொல்கிறார். இதில் உள்ளவை கவிதைகளா  அல்லது கதை கூறலின் இன்னொரு முறைமையா அல்லது வேறு  ஏதாவது ஒரு வடிவமா என வாசகர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்  என்றும் அதில் அவர் குறிப்பிடுகின்றார். 
 
'பேச்சு வழக்குத்தழுவிய எளிமையான சித்திரங்கள்',  'நினைவுச்சுவடுகளை எங்ஙனம் வகைப்படுத்துவரோ அறியேன்',  'இவை கவிதைகளே அல்ல என்று சிலர் அடித்துச்சொல்லக்கூடும்.  வாசகன் என் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டாற்போதும். என்ன  பேரிட்டு அழைக்கிறான் என்பது பொருட்டல்ல. பெயரில் என்ன  இருக்கிறது', 'இக்கவிதைகளை ஆக்குவதில் நான் கதை சொல்லியாக மாறி விட்டேனா என்றெல்லாம்'; அவர் தெரிவிப்பதை புரிந்து  கொண்டு அப்பாலே செல்லலாம்.
 
அதாவது இவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது இந்த  'நினைவுச்சுவடுகள்' பொறுத்து நாம் இலகுவில் ஒரு முடிவுக்கு  வந்துவிடலாம். பரிசோதனை முயற்சி என்றோ இவை கவிதைதான்  என்றோ  அவர் வாதிடவும் இல்லை. அவரே சொல்வதுபோல இவை  ஒரு கதை சொல்லியின் வகையினதாக அமைந்துள்ளன.
 
உரை நடையில் புனைகதைக்கு கிட்டியதான பத்தி எழுத்துகள்  மற்றும் பத்திக்கும் புனைகதைக்கும் இடையிலான வகை எழுத்துகள்  தமிழில் கடந்த பத்தாண்டுகளில் அதிகம் எழுதப்பட்டுள்ளன.  வாசகர்களிடம் இந்த வகை எழுத்துகளுக்கே இப்போது அதிகம்  வரவேற்பிருக்கிறது. இந்நதவகையில் à®….முத்துலிங்கம்,  ஜெயமோகன், எஸ். ராமகிருஸ்ணன், கி.ராஜநாராயணன்.  சோலைக்கிளி, இரவி அருணாசலம், கருணாகரமூர்த்தி எனப்பலரை  இங்கே குறிப்பிடலாம்.
 
சோ.ப சொல்வதைப் போல கவிதையோ இல்லையோ என்பதற்கப்பால் இவை அவருடைய நினைவுச்சுவடுகள். அவர் வாழ்ந்த காலத்தின்  பதிவுகள். அவ்வாறு பதிவுகொள்வதின்மூலம் இவை அக்காலத்தின்  நினைவுச்சுவடுகளாகவும் ஆகிவிடுகின்றன.
 
முதல் அர்த்தத்தில் இவற்றை சோ.ப. என்ற ஒரு மனிதரின்  நினைவுகள் என்று எடுத்துக்கொள்ளலாம். கடந்த நூற்றாண்டின்  நடுப்பகுதியையொட்டி யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த ஒரு  மனிதரின் வாழ்க்கைச் சுவடுகளிவை. அதுவும் படித்து பிறகு  உத்தியோகம் பார்ப்பதற்காக வெவ்வேறிடங்கள்வரை பயணம்செய்யும் வாழ்வைக் கொண்ட மத்தியதர வர்க்க மனிதரின் தடங்களிவை  எனலாம். 
 
இந்த நினைவுச்சுவடுகள் மிகச் சுவாரஷ்யமானவை. எளிமையான  வாசிப்பிலேயே சோ.ப. காட்டுகிற ஒரு காலகட்டத்தையும் அதன்  மனிதர்களையும் நாம் காணமுடிகிறது. இதில் சோ.ப. அடைகிற  முதல் வெற்றி ஒவ்வொரு சுவட்டிலும் அவர் வாசகமனதில்  எழுப்புகிற காட்சிகளாகும். அப்படி ஒவ்வொரு சுவடுகளும்  காட்சிகளை அலாதியாக எழுப்புகின்றன.
 
மனிதர்களையும் அவர்கள் வாழுகின்ற காலச்சூழல்.  சமூகச்சூழல்களையும் அவர்கள் வாழும் முறை, பேசும் முறை  என்பவற்றையும் காட்சியாக்கி விடுகிறார் சோ.ப. இதற்காக அவர்  திட்டமிட்டுச் செயற்பட்டதாக உணர முடியவில்லை. அவருக்கு  இயல்பாக அத்தகைய தன்மை வந்திருப்பதாகவே தோன்றுகிறது.  காலம் மற்றும் சூழல் சித்திரிப்பிலும் அவர் அதிகமாக கவனம்  செலுத்தியதாகவும் இல்லை. வேண்டுமானால் அவர் தன்னுடைய  மனிதர்களைத்தான் அழுத்தமாக அறிமுகப்படுத்துகிறார் என்று  சொல்லலாம்.
 
பெரியம்மா, ஐயன்னா கானா. அருள் அண்ணா, மாமா, பெரியப்பு,  சின்னமாமா, அம்மா என ஒரு பெரிய உறவுவட்டம். இதுதான்  சோ.ப.வின் நினைவுச்சுவடுகளில் பதிந்துள்ள நினைவுவட்டம். இந்த  வட்டத்திலுள்ள மனிதர்களை அறிமுகப்படுத்துவதனூடாக அவர் ஒரு காலகட்டத்தையும் ஒரு சமூகத்தையும் நமக்குக் காண்பிக்கிறார். அது கழிந்த காலம். ஆனால் மனதில் இன்னும் உயிர்ப்போடுள்ள காலம்.
 
அதிகம் இயந்திரமயமாகியிராத  அந்தக்காலத்தின் அமைதியும்  அழகும் இயல்பும் உறவுகளின் நெருக்கமும் அன்பும்  இவற்றுக்குள்ளிருக்கிற முரண்களும் வெளியும் இறுக்கமும் எனப்பல விசயங்களைச் சோ.ப எளிமையாகச்சொல்கிறார்.
 
அதிகமும் சோ.ப வின் சொந்த வாழ்வின் நினைவு மீட்டலாகத்  தெரியும் இந்தச் சுவடுகளில் யாழ்ப்பாணச்சமூகத்தின் சராசரிக்  குடும்பமொன்றின் ஐம்பதாம் அறுபதாம் ஆண்டுக்காலத்து  அகத்தையும் முகத்தையும் காணலாம். அத்துடன் கல்வியறிவுக்கு  முதன்மையளிக்கத் தொடங்கும் சராசரி விவசாயக்குடும்பத்தின்  உள்முகத்தை இதில் காணமுடியும்.
 
ஒரு பக்கம் தன்னுடைய நெருங்கிய உறவுகளைச் சொல்லி   அவர்களை அறிமுகப்படுத்தும் சோ.ப அவர்களையும்  அந்தக்காலத்தையும் அதிகம் விமர்சனத்துக்குள்ளாக்கவில்லை. சோ.ப வின் மனச்சேகரிப்பில் நல்ல பதிவுகள் மட்டுமே மிஞ்சியிருப்பதால்  அவர் இவற்றை எழுதும்போதும் அவையே மீட்கப்பட்டுள்ளனவோ  என்று எண்ணத்தோன்றுகிறது. காரணம் அவருடைய அம்மா  சொல்வதைப்போல 'அவை செய்யிறது அவைஅவையோடை'  என்பதற்கமைய சோ.ப வும் கசப்புகளையும் கரும்புள்ளிகளையும்  அவற்றுக்குரியவர்களுடன் விட்டுவிட்டாரா. அல்லது பிற காரணங்கள்  ஏதேனுமுண்டா அவற்றை அவர் திட்டமிட்டுத் தவிர்ப்பதற்கு என்று  தெரியவில்லை. ஆனால் படைப்பில் மறுபக்கம் இல்லாதிருப்பது  யதார்த்தமின்மையையும் நம்பகத்தன்மையையும்  சிதறடிக்கும்படியாகவே காணப்படுகின்றன.
 
இதில் முதல் வட்டம் உறவினர்கள் என்றால் இரண்டாவது  வட்டத்தில் வரும் அவருடைய மனிதர்கள் அதேகாலத்தின் ஏனைய  யாழ்ப்பாணத்தவரும் மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலைச்  சூழலும் அங்குள்ள மனிதரும்.
 
சோ.ப வின் இந்த நினைவுச்சுவடுகளை அவர் எந்த வடிவத்தினூடாக  எழுதியுள்ளார் என்பதல்ல பிரச்சினை. இங்கே வடிவம் சார்ந்த  பிரச்சினையை நாம் அதிகம் முதன்மைப்படுத்த வேண்டியது  அவசியமில்லை. இவை கவிதைகளா இல்லையா எனபதைத்  தீர்மானிக்கவேண்டியது வாசகர்களே என்று அவர் ஏற்கனவே சொல்லி விலகிவிட்டாரல்லவா. எனவே அது குறித்து இங்கே நாம்  விவாதிப்பதை விடவும் இப்படைப்பின் பிற அம்சங்கள்  பற்றிக்கவனிப்பது பொருத்தமாகும். 
 
சோ.ப. கவிதைக்குக் கிட்டவான ஒரு வகை வடிவத்தில்  பேச்சுமொழியில் சுவாரஷ்யம் ததும்ப தன்னுடைய மனிதர்களை  அறிமுகமாக்கி ஒரு உலகத்தைக்காட்டுகிறார். அவர்களின்  கதைகளைச் சொல்கிறார். இதில் முக்கியமானது சோ.ப  அறிமுகமாக்கும் மனிதர்கள்.
 
ஒரு காலத்தில் சிரித்திரன்சுந்தர் அறிமுகப்படுத்திய மனிதர்கள்,  கே.டானியலின் மனிதர்கள், எஸ் பொவின் மனிதர்கள்,  வ.à®….இராசரத்தினத்தின் மனிதர்கள் என்று நாம் ஏற்கனவே அறிந்த  மனிதர்களைப்போல சோ.ப. வின் மனிதர்களும் வருகிறார்கள்.
 
இதில் இரவி அருணாசலத்தின் காலம் ஆகிவந்த கதையின்  மனிதர்களுக்கும் சோ.ப வின் நினைவுச்சுவடுகள்  மனிதர்களுக்குமிடையில் அதிக இணைவுண்டு. இருவரும் வெவ்வேறு வடிவங்களில் தங்களின் வெளிப்பாட்டு முறைகளையும் வெவ்வேறு  காலகட்டத்தையும்   பொருளையும் கொண்டிருந்தாலும்  அடிப்படையில் ஒன்றிணைகிறார்கள்.
 
தவிர, சோ.ப ஒரு வரலாற்றாசிரியராகவும் இயங்குகிறார். வரலாற்று  விசயங்களைத் தேடிச்செல்லும் முனைப்பு அவரிடம் அதிகம்  இல்லையென்றாலும் கடந்த தலைமுறைகளின் வாழ்க்கைச்  சுவடுகளை பதிவதினூடாக அவர் சமூகவியலிலும் வரலாற்றிலும்  தன்னுடைய பங்களிப்பைச் செய்கிறார். குறிப்பாக இந்தச்சுவடுகளை  சமூகவியல் உளவியல் கண்ணோட்டங்களில்  கூடுதலாக  அணுகமுடியும். அவ்வாறு அணுகுவதற்கான வாசல்களை  இவைதிறந்தும் கொள்கின்றன. இவ்வாறான எழுத்து முறையில்  இதற்கான சாத்தியமும் அதிகமாக இருப்பதுண்டு.
 
பேச்சு மொழியை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும்  இந்தப்படைப்புகள் மு.தளையசிங்கம் சொல்வதைப்போல மெய்யுள்  சார்ந்த வடிவத்தை உருவாக்கு கின்றனவோ என்றும்  எண்ணத்தோன்றுகின்றன.
 
இன்றைய நவீன கவிதை அசாத்தியமான பல தளங்களில் பல  ரூபங்களில் நகர்ந்து செல்கிறது. அது மொழியின் அசாத்தியமான  நுட்பங்களையும் சிந்தனையின் புதிய வெளிகளையும்  அடுக்குகளையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இங்கே சோ.ப கையாள்கிற மொழி மற்றும் சொல்முறை என்பன  சாதாரணமானவை. எளிமையானவை. ஏறக்குறைய மரபசார்ந்தவை.  ஆனால் அவர் இவற்றுக்கப்பால் கடந்த காலத்தின் மனிதர்களையும்  அந்தக்களத்தையும் அந்த காலத்தையும் உறைய விடாமல்  நகர்த்துகிறார் என்பதே முக்கியமானது. இந்தத்தொகுப்பின் ஆதார  சுருதி அதுதான்.
 
இன்றைக்கு பொருட்பாடற்றவையெல்லாம் அல்லது  சாதாரணமானவை என்றாகி விட்டவையெல்லாம் முன்பு ஒரு  காலத்தில் மிகப் பிரமாண்டமானவையாகவும்  வியப்புக்குரியவையாகவும் இருந்திருக்கின்றன. அப்போது ஒரு மாட்டு வண்டில் பயணம் என்பதே எத்தனை முக்கியமானவையாக இருந்தது. ஒரு சைக்கிள் ஊருக்குள் பெரும் அதிசயப்பொருளாக இருந்தது.  பெற்றோமக்ஸை பற்ற வைப்பதே பெரும் சாதனையாகக்  கொள்ளப்பட்டது.   இந்தமாதிரி இருந்தவை இன்று  பொருளற்றவையாக இருக்கலாம். ஆனால் அன்று இதையெல்லாம்  கடக்கவேண்டியிருந்தது. தவிரவும் இன்றைய அதிசயங்களெதுவும்கூட நாளை இது மாதிரி மிகச்சாதாரணமாகிவிடும் என்றும் உணர்த்துகிறார் சோ.ப.
 
மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது என்பது ஒருகாலத்தில் மனித  குலத்தின் மாபெரும் மகத்தான சாதனையாகும். ஆனால் அது  இன்றைக்கு ஒற்றைவரித் தகவலாகிவிட்டது. 
 
அன்று யாழ்ப்பாணத்தில் சைக்கிள் ஒரு முக்கியமான பொருள். அது  ஒரு வகையில் லக்ஸ்ஸறிப் பொருளாகவும் இருந்தது. அந்தச்  சைக்கிளை ஓட்டப்பழகுவதும் பெரும் சாதனைக்கு நிகராகவே  பார்க்கப்பட்டது. அதைப் பழகுவற்கென்றே அரிய பெரு முயற்சிகள்.  அதுவொரு பெரும் வேலைபோல இருந்தது. இன்னும்  இதைதச் சொன்னால், சைக்கிளோட்டுவது ஒரு கலையாகவே  அப்போதிருந்தது. அந்தக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்களின்  நினைவுப்பரப்பில் இதெல்லாம் என்றைக்கும் அழியாப்பரப்புகளே.  சோ.ப. இப்படிப் பலதை அள்ளிப்போட்டிருக்கிறார், தன்னுடைய  நினைவுச்சுவடுகளில்.
 
இந்த வகையில் இந்த நினைவுச்சுவடுகளுக்கு அதிக  பெறுமானமுண்டு.  சோ.ப இந்தச்சுவடுகளின் ஊடாக பல  நுட்பங்களைக் காட்டுகிறார். முதலாவது அவர் எழுப்புகின்ற காட்சிப்  படிமங்கள். அந்தக்காட்சிப் படிமங்களை அவர் உயிர்ப்புடன்  எழுப்புவதில் பெரும் வெற்றியைப்பெறுகிறார். கடந்த காலத்தை-  இறந்த காலத்தை உயிருடன் வாசகருள் இயங்கவைப்பதன் மூலமாக  இந்தச்சாதனையை அவர் நிகழ்த்துகிறார்.
 
காட்சி ஊடகமொன்றில் இதனைச்சாதிப்பது இலகுவானது. அதில்  இதற்குச் சாத்தியங்களும் அதிகமுண்டு. ஆனால் இதை மொழியை  மட்டுமே கொண்டு சாதிப்பது என்பதுதான் படைப்பாளியின் ஆளுமை  எதிர்கொள்கிற சவால். சோ.ப வின் மனிதர்களுடைய பேசும்மொழியும் முறைமையும் கூட ஒலிப்படிமமாக நமக்குக் கிடைக்கின்றன.
 
உதாரணமாக:  
  
  'சின்னப்பெட்டையா இருக்கேக்கையும்
  இப்படித்தானடா நான்
  இரவு
  எல்லாரும் சாப்பிட்டுட்டுப் படுத்திடுவினம்
  நான் சாப்பிட்டுக் கொண்டிருப்பன்
  அப்பு திண்ணையில இருப்பார்
  சுருட்டுக் குடித்தபடி
 
  நீ ஆறுதலாயச் சாப்பிடு பிள்ளை
  நானிருக்கிறன். '
 
இது உணர்த்துகிற தனிமைக்கெதிரான உளவியற் பலம், அன்பின்  ஆதரவு என்பன ஒரு பக்கமிருக்க மறுபுறத்தில் இதில் ஒருவகையான  நாடகீயத்தன்மை, அதில் காட்சியும் ஒலியும் மேலெழும்புவதைக்  காணலாம்.
 
ஒரு சிறுமி, தனித்திருந்தபடி  மங்கிய விளக்கொளியில் ஆறுதலாக  மிக அமைதியாக தனித்துச் சாப்பிடுகிறாள. அந்தச் சின்னப்பிள்ளை  மீது தந்தைக்கிருக்கும் அன்பும் அக்கறையும் புரிந்துணர்வும்  இயல்போடு நுட்பமாகக் கவனப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவர் மீதான,  பெண்பிள்ளைகள் மீதான கரிசனை மிக்க வாழ்வும் உறவும்  அந்நாட்களில் எப்படி இருந்துள்ளன என்பதை ஆதாரப்படுத்துகிறார்   சோ.ப. இப்படிப்பல நல்ல கணங்களை அவர் கவனப்படுத்தியுள்ளார்.
 
அன்றைய மனிதரிடத்தில் பேதைமையும் அப்பாவித்தனமும் எதற்கும்  சலியாமையும் பொதுக்குணமாக இருந்ததையும் அவர் காட்டுகிறார்.  இவை யெல்லாவற்றிலும் ஒரு மெல்லிய துயரமும் அங்கதமும்  கலந்து இழையோடுவதையும் வாசகர் காணமுடியும்.
 
சோ.ப ஏற்கனவே 'வடக்கிருத்தல்' என்ற கவிதைத் தொகுதியை  வெளியிட்டிருக்கிறார். ஆபிரிக்கக்கவிதைகள்,  தென்னிலங்கைக்கவிதைகள் என இரண்டு மொழிபெயர்ப்புத்  தொகுதிகளையும் தந்திருக்கிறார். இவை தவிர ஆங்கிலம் வழியாக  தமிழுக்கு பல படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறார். தமிழிலிருந்து  ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்ப்புகளைச் செய்து வருகிறார்.
 
எனவே அவருக்கு உலக இலக்கியப் பரிச்சயம் நிறையவுண்டு.  அதிலும் தமிழிலும் தமிழல்லாத வேறு பரப்புகளிலும் உள்ள பழைய  இலக்கியப்பரிச்சயமும் நவீன இலக்கிய அறிமுகமும்  தாராளமாகவுண்டு.
 
இவையெல்லாவற்றையும் கடந்து அவர் இந்த நினைவுச்சுவடுகளை  ஆக்கியிருப்பதன் நோக்கம் மூன்றாம் உலக மண்டலம் இன்று எதிர்  கொண்டிருக்கிற அடையாளமிழத்தலுக்கெதிரான முயற்சி எனவே  படுகிறது. அத்துடன் இன்று போரினாலும் சர்வதேச மயப்படுத்தப்படும்  வணிக உலகத்தினாலும் சிதைந்தும் அறுந்தும் போகிற வாழ்வின்  சுவடுகளை சேகரித்தளிக்கிற காரியமாகவும் இருக்கிறது. ஒரு  நற்பணியாக அவர் இதைச்செய்தளித்திருக்கிறார் என்றே படுகிறது. 
 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(2 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Sun, 26 May 2024 06:51
TamilNet
HASH(0x55dce2b260e8)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Sun, 26 May 2024 06:51


புதினம்
Sun, 26 May 2024 06:51
     இதுவரை:  24936182 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5112 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com