அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 30 April 2025

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 39 arrow மரணத்தின் வாசனை - 07
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


மரணத்தின் வாசனை - 07   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: த. அகிலன்  
Wednesday, 05 September 2007

அந்த முதலாமாண்டு நீலப்புத்தகப்பையை இன்னமும் நினைவிருக்கிறது. அந்த இலுப்பை மரத்தடியும் முருகுப்பிள்ளை ரீச்சரையும் கூடத்தான் ஞாபகத்தின் சுவர்களில் அழுத்தமான ஓவியங்களாய் வரைந்து வைத்திருக்கிறேன்.

ஆனால் எல்லாவற்றையும் விட அவனது நினைவுகள் அற்புதமானவை. தனக்கென ஒரு சுவரையே எனது நினைவறையில் அவனுக்கு ஒதுக்கிவைத்திருக்கிறான் அவன்.

முயல் அவனது பட்டப்பெயர். முயலைப்போன்ற பெரிய காதுகள் அவனுக்கு. நான் உண்மையில் எனது பெரியகாதுகளை மறைக்கத்தான் அவனது பெரிய காதுகளை நக்கலடித்துக்கொண்டிருப்பேன். ஆனால் அவன் அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. பட்டப்பெயர் சொல்லி கோபப்படுத்த முடியாதவனாக அவன் இருந்தான்.

 
பள்ளிக்கூடத்தின் முதல் நாட்கள் எல்லோருக்கும் திகிலும் தித்திப்பும் நிறைந்த அனுபவங்களாயிருக்கும் அந்த முதல்நாளில் எல்லோரும் அடுத்தவன் முகத்தை பார்த்து பார்த்து அழுதபடியிருப்பார்கள். நானும் அவர்கள் எல்லோரையும் போலத்தான் அழுதுகொண்டிருந்தேன்.

'ஏன் அழுகிறியள்.. அழக்கூடாது' இந்த வார்த்தையை சொல்லிச்சொல்லி ரீச்சர்மார் அலுத்துப் போய்விடுவார்கள். எதற்கென்று தெரியாமல் அழுகை பிய்த்துக்கொண்டு வரும். ஒருவேளை இனிமேல் இங்கேயேதான் இருக்க வேண்டும் என்கிற நினைப்பும், மறுபடியும் வீட்டுக்கு போவதற்கான ஒரு பிரயத்தனமுமாக எல்லோரும் அழுகொண்டிருப்பார்கள்.

 à®…து பள்ளிக்கூடத்தில் முதல்நாளில் எல்லோருக்குமான எழுதாத விதி. சிலர் கொண்டு வந்து விடும்போதே அழுது ஆர்ப்பாட்டம் செய்து தகப்பன் மாரின் ஒற்றைக்கையில் தொங்கிக்கொண்டு வகுப்பறைக்குள் வருவார்கள்.

பிறகு பள்ளிக்கூடமே கதியென்று இரவிரவா சரஸ்வதிபூசைக்கு கரும்பு கட்டினதும், மேடையை அலங்கரிச்சதும், ஒளிவிழாவிற்கு கேக்கடிச்சதும் என்று போன உயர்தர வயதுகளில் எப்போதாவது எனக்கு முதல் நாள் அழுகை ஞாபகம் வரும். என்னையும்    அறியாமல் சிரிப்பு பீறிட்டுக்கிளம்பும்.

நான் வந்தவுடனெல்லாம் அழவில்லை வகுப்பில் எல்லாரும் அழ அழ என்னையும் அது தொற்றிக்கொண்டது. முதல்நாளில் எனக்கு கொஞ்ச நேரத்தில் அழுகை போரடித்து விட்டது. நான் சுற்றி எல்லாரையும் பார்த்தேன். மரத்துக்கு கீழே குண்டிக் காச்சட்டை ஊத்தையாகும் என்கிற எந்தவிதமாக எண்ணங்களும் அப்போதெல்லாம் இருக்கவில்லை. அல்லது நல்ல சுத்தமாக இருக்கிற கதிரையை ஊவ் உவ் எண்டு நாலுதரம் ஊதி அதில எச்சிலைப் பறக்கவிட்டு பிறகு கைக்குட்டையால் அதை துடைச்சுப்போட்டு இருக்கிற நாகரிக அறிவெல்லாம் அந்த வயதில் வந்திருக்க வாய்பே இல்லையல்லவா?

நான் எனது புத்தகப்பையை இறுகப்பற்றியிருந்தேன். யாரும் களவாடிவிடலாம் என்கிற எண்ணம் எனக்கு வீட்டில் ஊட்டப்பட்டிருந்தது. 'கவனம் வரேக்குள்ள கொப்பி, தொப்பி, சிலேட், பென்சில் எல்லாம் கொண்டு வரவேணும் என்ன..' வீட்டில் வெளிக்கிடுத்தி விடும்போதே அக்கா சொல்லுவாள். நான் இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தேன் எனது புத்தகபாக்கை. என்னைமாதிரியே இன்னொருத்தனும் அழுவதை நிறுத்திவிட்டு புத்தகபாக்கை கட்டிப்பிடித்துக்கொண்டு நின்றான். என்னுடையதே மாதிரி புத்தகபாக். அதே நீலக்கலர் நான் வியப்பாக அவனைப்பார்த்தேன். அவனும் பார்த்தான். அவனும் நோக்கினான் இந்த அகிலனும் நோக்கினான். அன்றைக்கு பூத்த ஒரு புன்னகையின் கணம்தான் எனது வாழ்வில் நட்பின் முதல் நொடி.

ஒரு வெளி நபருடன் நட்பாக எனது புன்னகையை பகிர்ந்து கொண்ட முதல் தருணம் அது. எனது தெருவே எனது உறவினர் வீடுகளால் ஆனது யாரும் வெளியாட்கள் கிடையாது. அதனால் எல்லோரும் அண்ணா, தம்பி, மச்சான், மச்சாள், அக்கா, தங்கை இந்த வகையறாக்களிற்குள் அடக்கிவிடலாம். அதனால் நட்பு என்பது கிடையாது. தெருக்களில் விளையாடித்திரிவது என்றாலும் இவர்களுடன்தான்.

பள்ளிக்கூடத்தில் இடைவேளை வரைக்கும் நானும் அவனும் மாறி மாறி முகங்களையும் புத்தகபாக்குகளையும் பார்த்துக்கொண்டிருந்தோம். ரீச்சர் 'சரி பிள்ளையள் இன்ரேவல் இப்ப சாப்பாட்டு பெட்டியளை எடுங்கோ' என்றார். புத்தகபாக்கோடு தண்ணீர்ப்போத்திலும் சாப்பாட்டு பெட்டியுக்க ஏதாவது இருக்கும். பாணும் ஜாமும். அல்லது புட்டும் முட்டைப்பொரியலும். அம்மா நான் கழுவுவதற்கு சிரமப்படுவன் என்று நினைத்துக்கொண்டு அடிக்கடி பாணும் ஜாமும் தான் அதிகமா வைச்சு விடுவா. இது பிறகுதான் ஆனால் நான் முதல் நாள் சாப்பாடெதுவும் கொண்டு போகவில்லை. ரீச்சர் ஒவ்வொருவரா என்ன சாப்பாடு எண்டு பார்த்துக்கொண்டே வந்தா ரமேஸ் நீங்கள் என்ன சாப்பாடு கொண்டு வந்தனியள்.

அவனது பெயர் ரமேஸ் என்று தெரிந்து கொண்டேன். எல்லோரும் இடைவேளையின் போது ஓடித்திரிந்தார்கள். நான் எப்படி அவனுக்கருகில் போனேன் எனத்தெரியாமல் போயிருந்தேன். நான் ரீச்சர் சாப்பாடு கொண்டு வராவிட்டால் அடிப்பாவாக்கும் என நினைத்துக்கொண்டிருந்தேன்.ஏதோ புத்தகம் கொப்பி கொண்டு வராததைப்போல. எனக்கு ஆழுகை வெடிக்க தயாராக இருந்தது. 

அவன் ரீச்சரிடம் ஒரு மலிபன் பிஸ்கெட்டுக்கள் போட்ட சாப்பாட்டுப்பெட்டியை காட்டினான். ரீச்சர் என்னை நோக்கி திரும்பவும் நான் திடீரென்று ரீச்சருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க நினைத்து வீரிட்டுக்கத்த தொடங்கினேன். அடியிலிருந்து தப்பும் வழியாக அது ஒன்றுதான் எனக்கு தெரிந்திருந்தது. வீட்டில் மேசையில் பூ வாஸ் உடைந்திருந்தாலோ அல்லது இன்னபிற இத்தியாதி குழப்படிகளிற்காக அடிவிழப்போவது உறுதி எனத்தெரிந்தால் அடிவிழ முன்பாகவே அழுது ஒரு தற்காப்பை செய்வேன்.

அதைப்போல இப்போதும் ரீச்சர் சாப்பாடு கொண்டு வராததற்கு சாத்தப்போறா எண்டு நினைச்சு ஒரு தற்காப்பு அழுகை அழுதேன். ரீச்சர் திடுக்கிட்டுப்போய் 'ஏனப்பன் அழுகுறீங்கள்' எண்டு என்ர கண்ணெல்லாம் துடைச்சு விட்டா. அப்ப கொஞ்சம் நிறமா கலரா இருந்த என்னை முத்தமிட்டு தான் ஒரு அகிம்சாவதி என்று ரீச்சர் எனக்கு காட்டு மட்டும் நான் அழுதுகொண்டிருந்தேன். ரீ்ச்சர் 'சீச்சி ஆம்பிளைப்பிள்ளை அழுகுறதே வெட்கக்கேடு' என்றார். இப்போது புரிகிறது நான் ஆண் என்கிற எண்ணம் எப்படி எனக்குள் கட்டமைக்கப்பட்டது என்பது. அவன் தனது சாப்பாட்டுப்பெட்டியில் இருந்து ஒரு பிஸ்கெட்டை எனக்கு நீட்டினான். நான் அம்மா வீட்டில் எல்லாரிட்டயும் வாங்கி சாப்பிடக்கூடாது என்கிற போதனைக் கண்டிப்பை முதல் நாளிலேயே மீறினேன்.
 
அன்றைக்கு பின்னேரம் வீட்டை சண்டையோ பெரிய சண்டை எனக்கு சாப்பாடு கட்டித்தரவேணும் என்று அடம்பிடித்து அடுத்தநாள் கட்டிக்கொண்டு போய் அவனுக்குப்பகத்தில்  தேடிப்பிடித்து இருந்து à®…,ஆ.இ,ஈ சொல்லி படித்துவிட்டு சாப்பாடுகளைப் பகிர்ந்து கொண்டு நட்பை வளர்த்துக்கொண்டோம்.

பள்ளிக்கூடத்தில் சேர்ந்த புதுசில் ரீச்சர் மாருக்க குட்மோணிங் சொல்வதில் ஒரு புழுகம் இருக்கும் எல்லோருக்கும். 8.30க்கு ரீச்சர் மரத்துக்கு கீழே வரும் போதே குட்மோணிங் ரீச்சர் என்கிற குரல் அந்த இலவ மரத்தையே ஒருக்கா அசைக்கும். நாங்கள் இருவரும் அதிலும் ஒரு புது ரெக்னிக்கை கையாண்டு எல்லாரும் குட் சொன்னாப்பிறகு தான் எங்கட குட்டை தொடங்கி கடைசியா பெரிசா எங்கள் குரல்கேட்கும்படி கத்தி குட்மோணிங்சொல்லி எங்கள் ஆழுமையை காட்டிக்கொண்டிருந்தோம்.

முருகுப்பிள்ளை ரீச்சர் ஒருக்கா இந்த விளையாட்டுக்கு தடைபோட்டு எங்கள் மரியாதையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்போது. ஒளிந்திருந்து முருகுப்பிள்ளையை 'முறுக்குப்பிள்ளை ரீச்சர்' என்று கத்திவிட்டு ஓட்டமெடுத்தபோது அவா அவனைக்கண்டு விட்டு பிடித்து சாத்தும்போது என்னை காட்டிக்கொடுக்காமல் அடிவாங்கி நட்புக்கு அவன் முதலாமாண்டிலேயே இலக்கணமாகியிருந்தான்.


இடைவேளைக்கு ரீச்சர் சாப்பிடச்சொன்னால் மட்டும் சாப்பிடுற பழக்கம் அடுத்தடுத்த ஆண்டுகளில் அருகி மூன்றாமாண்டில் ரீச்சருக்குத் தெரியாமல் பாக்குக்குள் தலையை ஓட்டி ஓட்டி இடைவேளைக்கு முதலே சாப்படை காலிபண்ணிவிட்டு இடைவேளையின் போது டெனிஸ்போலை மைதானத்துக்குள் உருட்டித் திரிந்தோம்.

'சம்போல்' என்று ஒரு விளையாட்டு இருந்தது. இரண்டு அணியாகப்பிரிந்து கெர்ண்டு பந்தால் ஒருவனுக்கொருவன் எதிரணியை அடித்துக்கொள்வது. பந்துகள் பட்டு முதுகை நெளிக்கும் போது என்ன புளிக்குதா என்று கேட்டு சிரிப்போம். இடைக்கிடை எமக்கும் புளிக்கும். ஒருத்தனாக இருந்த நண்பர் வட்டம்  இரண்டு பேராகி பல்கிப்பெருகி பிறகு தோழிகளையும் சேர்த்துக்கொண்டோம். என்னதான் சேர்த்துக்கொண்டாலும் அவளுகள் எங்களை டேய் என்றால் 'என்ன டேய் என்று சொல்கிறாய்' என்று அவளுகளிற்கு அடித்துவிட்டு ஓடுகிற வன்மம் அப்போதிருந்தது.

அதான் ரீச்சரும் அம்மாக்களும் சொல்லித்தந்த ஆம்பிளைப்பிள்ளை என்கிற வன்மம்.  மற்றபடி அவள் பெண் நாங்கள் ஆண் என்கிற வித்தியாசம் எல்லாம் அப்போது தெரிந்திருக்கவில்லை.

அப்பா செத்து அந்தரட்டிக்குப் பிறகு மொட்டை அடித்துக்கொண்டு பள்ளிக்கூடம்போன என்னை ஐங்கரன் 'மொட்டைப்பாப்பா' என்று பழிக்க இடைவேளைக்கு அவனைக் கரண்ட்போஸ் தேக்கமரத்தடி வரைக்கும் துரத்தி துரத்தி கீழவிழுத்தி அடிஅடி என்று அடித்தபோது உதவி செய்த காரணத்தால் வினோதனையும் நாங்கள் எங்கள் அணியில் சேர்த்துக்கொண்டோம். 

பிறகு மூண்டு பேரும் ஒரு ரீமாகி அப்பவே திறிக்கீஸ் விளையாட்டுகளைக்காட்டிக்கொண்டு திரிந்திருக்கிறோம். வகுப்பிலும் படித்தபடியால் ரீச்சர்மாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் வராமல் தகிடுதத்தங்களைச்செய்வது எளிதாயிருந்தது. ரிப்போட்டுகள் நூறுகளால் நிரம்பியிருந்ததால் எங்கள் குழப்படிகள் ரீச்சரின் காதுகளை எட்ட மறுத்தன. அல்லது கண்டும் காணாமல் விடப்பட்டன. ரீச்சர் கம்புமுறிக்க அனுப்புகிற ஆட்களாகத்தான் நாங்கள் இருந்தோமே ஒழிய கம்புகளினனால் நாங்கள் வேட்டையாடப்பட்டதில்லை….

பிறகு அவனது அம்மாவும் திடீரென்று இறந்து போக. அது ஒரு தற்கொலை. அவன் ஒரு மாதிரி சோகமானவனாக திரிந்தான். அவனது தாயின் செத்தவீட்டில் அவன் தெருக்களில் புரண்டு அழுதானாம் என்று இன்னொரு வகுப்புப்பெடியன் அவனிடம் நக்கலாக சொல்ல அவனையும் நையப்புடைத்து கெட்டவார்த்தையால் திட்டினோம் நானும் வினோதனும். வன்முறை எப்படி பிறக்கிறது நாங்கள் அவமானப்படுத்தப்படுகிறபோது.

இன்னொருவன் அதை குத்திக்காட்டுகையில் வன்முறை எங்கள் ஆயுதமாகியது. ஆனாலும் வகுப்பில் எங்களைவிட சண்டியர்கள் நிறையப்பேர் இருந்தார்கள். தினம் தினம் இடைவேளைக்கு அடுத்தவனின் மண்டையை உடைத்துவிட்டு தினமும் அதிபரிடம் போயக்கொண்டிருப்பவர்கள். ரீச்சர் மார் எங்கள் வன்முறைகளை கண்டுகொள்ளாமல் விட்டதற்கு நாங்கள் ஏதாவது காரணத்தோடு தான் அடித்திருப்போம் என்று நினைப்பதும். மற்றது நாங்களோ எங்களிடம் அடிவாங்கியவர்களோ ரீச்சரிடம் புகார் செய்வதில்லை என்பது வேறு விசயம்.

ஐந்தாமாண்டில் "மந்திரக்காரன்டி அம்மான்டி"என்று தமிழ்த்தினப்போட்டியில் ஆடிய தில்லைநாயகியை நான் "மந்திரக்காரன்டி அம்மாண்டி" என்று பழிப்புக்காட்டி ஆடியபோது. வேண்டாம் என்று தடுக்கும்போது எனக்குப்புரிந்துபோனது அவள்மீதான அவன் பிரியம். அது என்ன என்று தனியான பெயரெல்லாம் கிடையாது ஏதோ பிரியம் அவ்வளவுதான் முதலாம் பிள்ளையாய் வருகிறவனுக்கும் இரண்டாம்பிள்ளையாய் வருகிறவளுக்கும் மோதல் இருந்தாலும் உள்ளே ஒரு நேசம் ஒடிக்கொண்டிருக்குமே அதுபோன்ற பிரியம்.

அஞ்சாம் ஆண்டுக்கு பிறகு பாலர் வகுப்பு தொகுதியல் இருந்து மாற்றப்பட்டபோது. நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம் அடிக்கடி நாங்கள் படித்த பாலர்வகுப்பு மரங்களை இடைவேளைகளில் வந்து பார்த்துச்செல்வோம் நானும் அவனும்.
 
முதல் முதலாகச் சுற்றுலா போனபோது ஜன்னலோர இருக்கையை எனக்கு விட்டுத்தந்தான். இரணைமடுக்கோவில் திருவிழாவில் ஐஸ்பழம் குடித்துக்கொண்டு றோல்துப்பாக்கியில் வெடிவெடித்து திரிந்திருக்கையில் கூடத்திரிந்திருக்கிறான். அவர்களது வைரவர் கோயில் திருவிழாவில் நிறைய வடைகளையும் வாழைப்பழங்களையும் எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக வயல்வெளிக்குள் ஓடியிருக்கிறோம். ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோயிலுக்கும் சுற்றுலாபோகையில் நாங்கள் சேதுபதி சேரோடு எடுத்துக்கொண்ட போட்டோவில் நிற்கிற மூன்றுபேருக்குமே அம்மாவோ அல்லது அப்பாவோ இல்லை என்று ஒரு வேதனையான ஒற்றுமையை கண்டுபிடித்தபோது ஒரு அழுகையற்ற பெருமைபோலத் தோன்றியதே. அதெல்லாம் என்ன ஒரு நட்பு.

சல்பூரிக்கமிலத்துக்குள் நாகத்தை போட்டு ஐதரசன் வாயுவை ஒரு பலூனுக்குள் அடைத்து நகுலன் சேர் பள்ளிக்கூடப்பேரைப்போட்டு ஒரு சீட்டெழுதி அதில் கட்டச்சொன்னபோது அவருக்குத் தெரியாமல் எங்கள் பேரையும் எழுதி பலூனில் கட்டி வானத்தில் பறக்க விட்டோம்.
 
அவனுக்கு ஒரு தங்கையிருந்தாள். சுகன்யா அவளது பெயர். நாங்கள் அவங்கட வீட்டைபோய் பின்னேரங்களில் கிளித்தட்டு விளையாடுவம் சனிஞாயிறுதினங்களில்.அவளும் விளையாடுவாள். பள்ளிக்கூட நாட்களில் பள்ளிக்கூடம் விட்டாப்பிறகு நாலைஞ்சு மணிவரைக்கும் கிரிக்கெட் கதிரையை விக்ககெட் என்று வைச்சுவிட்டு. சிக்சர் பவுண்டரி என்று எங்களிற்கு தகுந்தமாதிரி எல்லைகள் வகுத்துக்கொண்டு. விளையாடினோம். அதற்காக வீ்ட்டில இவ்வளவு நேரமும் எங்க நிட்டிட்டு வாறாய் எண்டு விழுகிற சிக்சர் புவண்டரிகளை கணக்கில சேர்க்கமுடியாது. நாங்கள் அவுட்டாகிற சந்தர்ப்பங்களில் எறிபோல் சேப்பில்லை எண்டு குழப்பினோம்.

கொழும்பிலிருந்து வந்த லிங்கேஸ் என்கிற பெடியன், எங்களது ரூல்ஸ் எல்லாத்தையும் பிழைஎண்டு சொன்னபோது அவனோடு சண்டைக்குப்போனோம். முயலிற்கு களுவிதாரணவை மிகவும் பிடிக்கும் இலங்கை ரீமில்.  எனக்கு இந்தியாவின் கபிதேவைத்தான் பிடித்திருந்தது. அப்போது கபில்தான் 432 விக்கெட் எடுத்திருந்தார் உலக சாதனை. எனக்கு நினைவு தெரிஞ்சாப்பிறகு வந்த சூரியகிரகணத்தை அவர்களின் வீட்டு ரீவியில்தான் நான்பார்த்தேன். ஒரு சில கிரிக்கெட் மட்ச் கூடப்பார்த்திருக்கிறேன்.
எல்லாம் ஒரு நாளில் முடிவுக்கு வந்தது.

ஆமி ஊருக்குள் வந்தபோது நாங்கள் எட்டாம் ஆண்டில் இருந்தோம்.  இடம்பெயர்ந்தபோது. அவன் புத்துவெட்டுவானில் இருந்த தாத்தாவீட்டிற்கு போயிருப்பான் என்று தோன்றியது. நாங்கள் கனராயன்குளம் பேனோம் பிறகு பள்ளிக்கூடத்தைப் பற்றிய நினைவுகளற்றுக் கிடந்தேன் நான். அம்மா கனனராயன்குளத்துப் பள்ளிக்கூடத்தில் சேருமாறு சொன்னபோது போய்விட்டு இரண்டுநாள் படித்துவிட்டு மறுபடியும் போகமனமில்லாமல்  விட்டுவிட்டேன். அம்மா எப்படி அதை அனுமதித்தா என்பது எனக்கு ஆச்சரியம்தான் இப்போதும்.

என்னால் அந்தப்பள்ளிக்கூடத்தோடு இணைய முடியவில்லை மனம் ஏனோ புதிய பள்ளிகளை வெறுத்தது. முதலாமாண்டிலிருந்து ஒரேபள்ளிக்கூடத்தில் படித்தது கூட ஒரு காரணமாயிருக்கலாம். ஓமந்தையால் ஆமி வெளிக்கிட்டபிறகு நாங்கள் மல்லாவிக்குப்போனோம். ஒன்றரை வருடத்திற்குள் சுமார் 4 வீடுகளும் 3 இடங்களையும் மாறினோம். ஆனால் அங்கேயும் என்னால் பள்ளிக்கூடம் போகமுடியவில்லை. பிறகு ஒரு வழியாக ஸ்கந்தபுரம் வந்து சேர்ந்தபோது எனது பள்ளிக்கூடம் அங்கே இயங்கிக்கொண்டிருந்தது ஒரு பாதிசெத்த எலியைப்போல. என்றாலும் எனது பள்ளிக்கூடம் என்கிற திருப்தி இருந்தது. பெயர்ப்பலகையைப் பார்க்கும்போதே ஒரு பரவசம் தொற்கிகொண்டது.  வினோதனைத்தவிர வேறு நண்பர்கள் யாரும் இருக்கவில்லை முயல் எங்கயடா என்று கேட்போதும் யாருக்கும் விபரம் தெரியவில்லை…. பிறகும் நாங்கள் அவனை மறந்து விட்டோம் என்றில்லை அவ்வப்போது அவனை நினைத்துக்கொண்டோம்.

பத்தாமாண்டில் தில்லைநாயகி யாரோ ஒருத்தனோடு ஓடிப்போனதாக தகவல் வந்தபோது ஏனோ நான் அவனை நினைத்துக்கொண்டேன். பள்ளிக்கூடத்திற்கு சாப்பாடு கட்டிக்கொண்டுவரும் வழக்கத்தை விட்டபிறகு பழகிப்போன இடைவேளை ரீயும் கொம்புபணிசும் பிறகும் தொடர்ந்தது. ஒரு நாள் கொம்புபணிஸ் சாப்பிடுகையில் அவனது ஞாபகம் வந்தது. அவனது அப்பாவின் கடையில் இருந்து திருடிய ஒரு முழு 100 ரூபாயத்தாளை இரண்டு கொம்புபணிசிற்கும் இரண்டு ரீயிற்கும் மாற்றமுயற்சித்தபோது ஒரு முறை கன்ரீன் ஐயாவிடம் மாட்டிக்கொண்டோம்.

7ம்ஆண்டு பெடியன்; 5ரூபாய் வைத்திருப்பதே பெரிய விசயம். ஆனால் இவன் 100 ரூபாய் வைத்திருக்கிறான் என்று கன்ரீன் ஐயாவிற்கு வந்த சந்தேகம். நகுலன் வாத்திவரைக்கும் வந்தது. அவனது அப்பாவை கூட்டிக்கொண்டு வரச்சொல்லி நகுலன் வாத்தி சொன்னார். வீட்டுக்கு போனா சாத்து விழப்போகுது மச்சான் என்று பயந்தவனிடம். மச்சான் நாளைக்கு வர்த்தக சங்க கூட்டம் அதால அப்பா வரயில்லை எண்டு சொல்லு. பிறகு சனி ஞாயிறு பள்ளிக்கூடம் இல்லை திங்கள் கிழமை மறந்திருவார் என்று ஐடியா குடுத்து அதில் வெற்றியும் பெற்றது ஒரு பெரிய சாதனையாக கருதப்பட்டது. பிறகு அதன் வெற்றி அருணா ஐஸ்பழக்கொம்பனியில் ஆளுக்கு இரண்டிரண்டு சொக் வாங்கி அடுத்தடுத்து குடித்து கொண்டாடப்பட்டது.

பிறகு வினோதனும் வெளிநாடு போகப்போறன் எண்டு போட்டான். இப்போது தொடர்பில்லை எங்கேயோ சுவிசில் என்று கேள்வி. அவனது  அம்மாவை பிறகொருநாள் நான் கண்டன் சும்மா கதைக்கும்போது சுவிசிற்குப்போயிட்டான் என்றார். நான் தொலைபேசி இலக்கம் எதுவும் கேட்கவில்லை. நான் ஏதோ அவனிடம் காசுகேட்பேன் என்கிற எண்ணம் அவாவிற்கு இருக்கும் என்று நான் நினைத்தேன். நிறைய வெளிநாட்டுக்காரர் அப்படித்தான். நம்பர் கேட்டா புது நம்பர் தெரியா எண்டுவினம். இங்க இருக்கிறவையும் சும்மா இல்லை வெளிநாட்டு காரரை காசுகாய்க்கிற மரம் எண்டு நினைச்சு இழுத்துப் பிடுங்குவினம். அதால நான் அவாவையும் பிழைசொல்ல ஏலாது.
 
அதன் பிறகு நானும் அலைந்தேன் வடிவாப் படிக்கவில்லை அஞ்சாறு வருசம் ஓடிப்போச்சு.பிறகு திரும்பவும் நாங்கள் கிளிநொச்சிக்கு போகலாம் என்று ஒரு நிலைமை வந்தது. நானெல்லாம் அப்போது கவிதை எழுதத்தொடங்கியிருந்தேன். இலக்கியம் அது இதெண்டு அது சார்ந்த நண்பர்கள் முளைத்தார்கள். எப்போதாவது வினோதனதும் முயலினதும் நினைவுகள் வந்து போவதுண்டு. இப்போதும் முயல் என்கிற அவனது பட்டப்பெயர் தான் வருகிறது றமேஸ் என்கிற அவனது சொந்தப்பெயர் புழங்குவதில்லை.

 
நாங்கள் கிளிநொச்சிக்கு மறுபடியும் போனோம். முதலாமாண்டு இலுப்பை மரம் இரண்டு கிளைகளுடன் மட்டும் குற்றுயிராக இருந்தது. பள்ளிக்கூடம் சில்லுச்சில்லாகவும் துளைகளாவும் சிமெந்தின் உடைந்த துண்டுகளாலும் நிறைந்து கிடந்தது. வீடுகள் காணிகள் தங்கள் அடையாளத்தையும் தங்களையும் இழந்து கிடந்தது.கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருந்தன.  நான் ஒரு பத்திரிகைக்காரனாக ஆகிப்போனேன் சிதைவின் இயல்புகளை அவை இருந்த இயல்புகளை எனது கவிதைகளில் கொண்டுவரமுயன்று தோற்றேன். உடைபாடுகளை எனது கமராவுக்குள் சேர்த்துக்  கொண்டேன்.

நிறைய எலும்புக்கூடுகளை மீட்டபிறகு எல்லாவற்றையும் அடையாளம் காண்பதற்காக வைத்திருந்தார்கள். நான் செய்திக்காக போயிருந்தேன். நிறைய கண்ணீர் அதிகமான இறுக்கம் இருந்தது. துக்கத்திலும் நாட்பட்ட துக்கம் இருக்கிறது போலும். திடீரென்று என்பின்னே முளைத்த ஒருத்தி கேட்டாள்.
"நீங்கள் அகிலன் அண்ணாதானே"
"ஓம்".
"நான் சுகன்யா? ரமேசின்ர தங்கச்சி".
எனக்கு அவளை அடையாளம் தெரியமல் போனது குறித்து வெட்கப்பட்டேன்.
"எங்கே யிருக்கிறியள்? யாரோட வந்தனியள் ரமேஸ் எங்க? " நான் படபடவெனக்கேட்டேன்.
அவள் கண்கணில் துளிர்த்த நீரைக்கவனியாது.
அவள் சொன்னாள். "அவனைப் பார்க்கத்தான் வந்திருக்கிறன்." எனக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. வார்த்தைகளை தேடுவதை நிறுத்தியிருந்தது என் சிந்தனை. நான் கமராவை மூடி கமராபாக்கிற்குள் வைத்தேன். என்ன நடந்தது?  எதேச்சையாய் எனது வாயினின்று உதிர்ந்தன வார்த்தைகள்.

"நாங்கள் இடம்பெயர்ந்து புத்துவெட்டுவானில் இருக்கிற தாத்தா வீட்டிற்கு போனாங்கள்.ஒரு நாள் தாத்தா சொல்ல சொல்ல கேக்காமல் வீட்டைப்போய்ப் பார்க்கபோறன் எண்டு போனவர். வைரகோயிலடிக்கு ஆமி வரயில்லை எண்டு வைரவருக்கு விளக்கும் வைச்சிட்டு வீட்டையும் பாத்திட்டு வாறதெண்டு போனவர். அண்ணாவும் அவரோடு போனவன் போனவன்தான் அவனும் வரயில்லை தாத்தாவும் வரயில்லை." அவள் விசும்பியழுதாள்.

நான் அவளோடு எலும்புக்கூடுகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு போனேன். அவர்களுடைய எலும்புக்கூடுகள் இருக்ககூடாதென்றும் ஏதேனும் சிறைச்சாலை அறைகளில் அவர்கள் விழித்துக்கொண்டிருக்கலாம் என்றும் மனம் எண்ணிக்கொண்டிருந்தது. அவள் திடீரென்று கத்தினாள் அண்ணா… அவள் அழுத இடத்தில் இருந்தது ஒரு 14 வயதுப்பெடியனின் எலும்புக்கூடு. அதனோடு ஒரு பெரிய எலும்புக்கூடு. எனக்கு ஏனோ அவனது முயல்காதுகள் இரண்டும் ஒரு முறை நினைவுக்கு வந்தன. அவள் அழுதுகொண்டிருந்தாள் எனது கால்களைப்பற்றியிருந்த அவளது கைகளை விடுவித்துக் கொண்டு வேகமாய் வெளியேறினேன். எனக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை…… எங்கேயோ மோட்டார் சைக்கிளை விரட்டினேன் அது நிற்கும் போது பாதி உயிருடன் இருந்த இலுப்பை மரத்திற்கு கீழே வந்து நின்றிருந்தது. நான் மரத்தை பார்த்தேன் .. விரிந்து கோறிய அதன் அடியிடமோ உதிந்து கொண்டிருந்த கிளைகளிடமோ எந்த சலனமுமில்லை… எனக்கு அழவேண்டும் போல இருந்தது. என்னைச் சுற்றி சுற்றி யாருமே இல்லை. அதற்கு மேலும் அடக்கமுடியாமல்  நான் கத்தி அழத்தொடங்கினேன்.

 

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)

 


மேலும் சில...
மரணத்தின் வாசனை – 01
மரணத்தின் வாசனை – 02
மரணத்தின் வாசனை – 03
மரணத்தின் வாசனை – 04
மரணத்தின் வாசனை - 05
மரணத்தின் வாசனை - 06

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 30 Apr 2025 21:42
TamilNet
The JVP has recently lent itself to US efforts to consolidate the unitary state and realise its long-held ambition to capture state power in Colombo. In this regard, they have also engaged with a range of actors, from the IMF, Washington, and New Delhi, as well as attempted to woo Eezham Tamils and other Tamil-speaking people to opt for the NPP in the 2024 SL Presidential Elections. Norway-based Eezham Tamil anthropology scholar Dr Athithan Jayapalan writes that the NPP and Lionel Bopage speak of equality without addressing the right of an oppressed nation to secession in the face of national oppression and genocide. Instead, the NPP, aligned with the US position, vows to neutralise the Eezham Tamil political struggle for self-determination.
Sri Lanka: JVP always denied Eezham Tamils?inalienable self-determination: Anthropology scholar


BBC: உலகச் செய்திகள்
Wed, 30 Apr 2025 21:42


புதினம்
Wed, 30 Apr 2025 22:04
















     இதுவரை:  26928677 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3507 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com