அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 42 arrow பொங்கலும் ஈழமும்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பொங்கலும் ஈழமும்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கி.பி.அரவிந்தன்  
Wednesday, 30 January 2008

எஸ்.பொ"புதுவருஷமும் தீபாவளியும் பெரிய பண்டிகைகளே. ஆனால் யாழ்பாணத்தில் பொங்கலுக்கு நிகரான பண்டிகை இல்லை எண்டு சொல்லலாம்." இவ்வாண்டு 75 அகவையை நிறைவு செய்திருக்கும் ஈழத்து எழுத்தாளர் எஸ்.பொ தனது நனவிடை தோய்தலில் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.

அத்துடன் "யாழ்ப்பாணப் பொங்கல் விழா, கமக்காரர் விழாவாக, பாட்டாளிகளின் விழாவாக, தமிழர் பண்பாட்டு விழாவாக, விளைவுக்கு உதவும் கதிரோனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக, பழையன நீக்கி புதியன புனைந்து, புதியன கொண்டு வந்து சேர்க்கும் என்ற நம்பிக்கைகளின் நுழைவாயில் விழாவாக பொங்கல் பண்டிகையை யாழ்ப்பாண மக்கள் கொண்டாடினார்கள்" எனவும் கூறிச் செல்கிறார்.
 
இதேபோல்தான் இலங்கைத் தமிழர்தம் ஆதிப்பண்பாட்டின் மையமானதும், இலங்கையின் நெற்களஞ்சியம் எனப் புகழப்படுவதுமான திருக்கோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பொங்கல் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.

பாலசுகுமார்"மார்கழி திருவெம்பா நடைபெறும் பொழுதே பொங்கல் சூடுபிடித்துவிடும். பொங்கல் பண்டிகையை அப்புச்சி மிக உற்சாகமாக கொண்டாடுவார். சூரியனுக்காக பொங்கலும் மாட்டுப் பொங்கலும் எங்கள் ஊரில் தனித்துவமான பண்புகளுடன் கொண்டாடப்படுகின்றது." இவ்வாறு கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைத் துறை பீடாதிபதி பாலசுகுமார் தனது தந்தையார் பற்றிய நினைவுகளின் ஊடாக பண்பாட்டு நிகழ்வை பதிவு செய்கிறார்.

கருணாகரன்"வன்னிப் பெருநிலப்பரப்பில் சித்திரை நாளைக் கொண்டாடுவதையும் விட தைப்பொங்கலையே அவர்கள் சிறப்பாக கொண்டாடும் வழக்கமுண்டு. காரணம் தைமாதத்தில் வன்னி நிலமே பொதுவாக செழித்திருக்கிறது. பருவகால நிலையும் மிக அருமையாகப் பொருந்தி வெக்கையுமில்லாமல் குளிருமில்லாமலிக்கிறது. நிலமே மக்களுக்கு பேராறுதலைக் கொடுகிறது. இது இயற்கையின் கொடைக்காலம். எனவே அவர்கள் இயற்கையை வாழ்த்துகிறார்கள். வணங்குகிறார்கள். இப்போது பொங்கலும் இல்லை. பூசுதலும்  இல்லை. நாடு காடாகிக் கொண்டிருக்கும்போது பொங்கலை யார் தான் சிந்திப்பார். சனங்கள் மரங்களின் கீழே அகதியாக குந்தியிருக்கும்போது பொங்கலை யாரால்தான் நினைக்க முடியும்." எனக் கேள்வியெழுப்பும் படைப்பாளி கருணாகரன் அதேவேளையில் களமுனைப் போராளிகள் பொங்கல் நாளில் பொங்க தயங்குவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

இலங்கைத் தமிழர்களின் கத்தோலிக்க மதத்தினரும் பொங்கலுக்கு முக்கியத்துவம் வழங்குகிறார்கள். வழிபாட்டிடங்களிலேயே பொங்கல் நாளில் பொங்குகின்றனர். 1968ல் இடம்பெற்ற இரண்டாம் வத்திக்கான் எனப்படும் பேராயர்கள் கூடிய இரண்டாவது மாநாடு தேசியங்களின் பண்பாட்டை அங்கிகரித்தது. அதனால் தமிழ்க் கத்தோலிக்கம் வீச்சுப்பெறத் தொடங்கியது. பியானோவின் இடத்தில் தமிழர்களின் இசைக்கருவிகள் அனுமதிக்கப்பட்டன. அதேபோல்தான் பொங்கலும் அங்கிகரிக்கப்பட்டது.


இலங்கைத் தமிழர்களில் இஸ்லாம் மதத்தினரும் பொங்கலை 70களுக்கு முன்னர் அங்கிகரித்திருத்தனர் என்பதற்கான சாட்சியங்கள் உண்டு. இப்படி மதங்கடந்து, பிரதேசம் கடந்து, சாதி கடந்து கொண்டாடப்பட்டது பொங்கல்.
 
இன்று பொங்கல் அன்றைய அதே உற்சாகத்துடன் ஈழத்தமிழர்களால் கொண்டாப்படுகின்றதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். சொந்த இடங்களை விட்டு துரத்தப்பட்டவர்களாகவே பெரும்பாலான ஈழத்தமிழர்கள் வாழ்கின்றனர்.

இலங்கையின் நெற்களஞ்சியமான கிழக்குமாகாணத்தின் பெரும்பாலான வயல்கள் கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன. பொங்கல் பொங்குவதற்கான சொந்த வீட்டு முற்றமும், நெல் அறுவடை செய்வதற்கான வயல்களும் இல்லாத நிலையில் கண்ணீர்ப்பொங்கல் மட்டுந்தான் சாத்தியமாகி உள்ளது. அத்துடன் பலருக்கும் நினைவுப் பரப்பில் வெறும் நிழல்களாக மட்டுமே அது அசைகின்றது.

யதீந்திரா"பொங்கல் என்றால் அன்று இரவு முழுவதும் நித்திரை கொள்ளாமல் பேச்சுதான். அம்மம்மா நான் எனது மாமா சத்திய சீலன்,  எங்களது பேச்சு ஒரு மணிவரை நீளும், இடையில் ஒரு குட்டித் தூக்கம் மீண்டும் நாலுமணிக்கு சக்கரை நறுக்குவதிலிருந்து வேலைகள் தொடங்கிவிடும் இந்த நேரத்தில் கிராமமே விழித்திருக்கும். மஹாகவி ஊர் கூடித் தேர் இழுத்தல் என்று சொன்னது போன்று இது ஊர் கூடி நிகழ்த்தும் பொங்கல். நான் எனக்குத் தெரிந்த வேலையில் மூழ்கிவிடுவேன் மணலை பரப்பி மேடையமைத்து கோலம் போடுவது வரைக்கும் எனது வேலைதான் இதற்காக முதல் நாளே எங்கள் வீட்டிற்கு பக்கத்திலுள்ள கோப்பிரட்டி ஒழுங்கையில் மணல் அள்ளிக் கொள்வோம். சதுரமாக அமைந்த மேடையில் நாலு பக்கமும் கூராக அமையுமாறு மேடை அதில் சிகப்பிலும் வெள்ளையிலுமாக கோலம். வெள்ளைக்கு கோதுமை மாவையும் சிகப்பிற்கு செங்கல் தூளையும் பாவிப்போம். பின்னர் கிணற்றடியில் உள்ள கரும்பில் ஒன்று இரண்டை வெட்டிக் கொள்வேன் அத்துடன் எனது வேலை முடிந்தது, இனியென்ன சீனாவெடியை ஒரு முறை பார்த்துக் கொள்வதுதான். சரியாக சூரிய வெளிச்சம் பரவத் தொடங்கியதும் பானையில் பால் பொங்கி வழியும். நான் சீனாவெடிக்கட்டை கொழுத்திப் போடுவேன் ஒவ்வொரு இல்லத்தினதும் சீனாவெடி ஓசைகள் ஒன்றாக காற்றில் கலக்கும்.
இப்பொழுது அதனை நினைக்க மட்டும்தான் முடிகிறது. அப்படியொரு குதூகலம் மீண்டும் வாய்க்காதா? எல்லாவற்றையும் இழந்து நிற்கும் போதுதான் கடந்த காலம் குறித்து நமக்கு நாட்டம் ஏற்படுகின்றதோ என்னவோ."

தம்பலகாமம் என்னும் தனது ஊரைவிட்டு வீட்டு முற்றத்தை விட்டு வெளியேற்றப்பட்ட ஆதங்கத்தை இவ்வாறு பதிவு செய்கிறார் எழுத்தாளர் யதீந்திரா.

ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் பொங்கல் ஒரு பண்பாட்டு அடையாள நாளாக மாறி வருவதை அவதானிக்க முடிகின்றது. பொங்கலை தமிழர் திருநாளாக மலேசியத் தமிழர்களே முதலில் முன்னெடுத்தவர்கள். தற்போது புலம்பெயர்ந்த ஈழத்தமிழரிடையேயும் பொங்கல்நாளை தங்கள் அடையாள நாளாக, பொங்கலை தங்கள் பண்பாட்டு நிகழ்வாக கொள்ளும் பழக்கம் விரிவாக்கம் பெற்று வருகின்றது.


முகுந்தன்"ஆண்டுகளாகச் சுழலும் வாழ்வில் தமிழுக்காக ஒரு நாள் இருக்கிறதென்றால் அது இந்தத் தைப்பொங்கல் நாள் தான். இன்று பிரதேசங்களால் – நாடுகளால் – மதங்களால் - சாதியங்களால் - வர்க்கவேறுபாடுகளால் எனப் பலவாகப் பிளவுண்டுள்ள தமிழ்ப் பேசும் மக்களை ஒன்றிணைக்கூடியப் பொது நாள் இந்தப் பொங்கல் நாள். இதுதான் தமிழர் திருநாள். அமெரிக்காவில் பெயர்ந்த கறுப்பர்கள் தங்களது அடையாளத் தேடலில் பத்து நாட்களைக் கொண்ட பெரிய அடையாள மீட்புக் கலாச்சார ஒன்றுகூடலை நடைமுறைப்படுத்துகிறார்கள். உலகமெங்கும் விரவியுள்ள சீனர்கள் தங்களுக்கான தனித்துவமிக்க புதுவருட நிகழ்வை எல்லோரும் அறியச் செய்துள்ளார்கள். இவ்வேளையில் இங்குள்ள சிறப்பு பல்பொருளங்காடிகள் சீன வாரத்தைக் கொண்டாடுவதைக் காண்கிறோம்.
இந்த வகையில் நாமும் தமிழ் வாரத்தை (பொங்கல் தினம் வரும்) வருடம்தோறும் பிரகடனப்படுத்தி தமிழர் திருநாளை அடையாள தினமாக்க வேண்டும். இதற்கு உலகளாவிய தமிழார்வலர்களும், தமிழ்த் தாராளர்களும் இவர்களை ஒருங்கிணைக்கும் முன்னெடுப்பாளர்களும் களமிறங்கிடும் தருணமிது."
என உரத்த குரலில் கூறுபவர் பொங்கல் நாளை பிரான்சில் ஒருங்கிணைக்கும் சிலம்பு அமைப்பின் செயலாளர் க.முகுந்தன்.

தமிழர்களின் ஏனைய பண்டிகை நாட்கள் தமிழர்களை ஒருத்துவப்படுத்தும் வீரியத்தை கொண்டிருக்கவில்லை.
பிரான்ஸ் போன்ற பல்தேசியத்தார் வாழும் இடங்களில், பலதேசிய தமிழர்கள் (தமிழ்நாடு-புதுச்சேரி, ஈழம், மலேசியா, மொறிசியஸ், ரியூனியன், குவாதுலூப், மாட்னிக், ---) குழுமி வாழும் நகரங்களில் தமிழடையாளத்தால் ஒன்றுபட வேண்டியது அவசியமாகின்றது. அதற்கு பொங்கலே பொருத்தமானதாக அமைகின்றது.  பிரான்சில் உள்ள சிலம்பு அமைப்பின் அயராத முயற்சியினால் மூன்று சங்கங்கள் இணைந்து 2007ம் ஆண்டு பொங்கல் 'தமிழர் திருநாள் - 2007 பிரான்ஸ்" என்ற தலைப்புடன் கொண்டாடப்பட்டது. அதில் மரபான இசைக்கருவிகளும், நடன நிகழ்வுகளும், சிலம்பாட்டம், கோலமிடல் போன்ற நிகழ்த்து கலைகளும் முதன்மைப்படுத்தப்பட்டன. அத்துடன் ஏடு தொடக்குதல் அதாவது குழந்தைகளுக்கு முதன்முதலாக தமிழை எழுதப்பழக்குதல் என்னும் அகரம் எழுதுதலும் அறிமுகப்படுத்தப்பட்டது. 2008ம் ஆண்டு பொங்கலை ஆறு சங்கங்கள் இணைந்து கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

(இக்கட்டுரை சென்னையில் இருந்து வெளிவரும் ஆனந்த விகடன் வெளியிட்ட பொங்கல் à®®à®¿à®©à¯ மலரில் இடம் à®ªà¯†à®±à¯à®±à®¤à¯. பின்னர் பிரான்சில் இடம்பெற்ற தமிழர் திருநாள் - 2008ன் சிறப்பிதழிலும் வெளியிடப்பட்டது. புலிகளின் குரல் வானொலியிலும் ஒலிபரப்பானது.) 

 


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 21:09
TamilNet
HASH(0x55f4a3cc9138)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 21:09


புதினம்
Thu, 28 Mar 2024 21:09
















     இதுவரை:  24714091 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4304 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com