அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 28 March 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 7 arrow புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழிக் கல்வி   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: சுமத்திரி பிரான்சிஸ்  
Monday, 05 July 2004
பக்கம் 2 of 2

அந்த அணுகுமுறையை ஏன் நாம் தமிழ்மொழியைப் போதிப்பதற்குப் பயன்படுத்தக்கூடாது? நாம் செய்கின்ற மிகப் பெரிய தவறு, தமிழ்மொழியிலுள்ள எல்லா எழுத்துக்களையும் (247) குழந்தைகளுக்கு முதலில் அறிமுகப்படுத்துவதுதான். எல்லா எழுத்துக்களையும் பார்த்தவுடன் குழந்தைகள் மிரண்டுவிடுவார்கள். தமிழ் நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்களிற் பல இன்று புழக்கத்தில் இல்லாதனவாகவும் வேறு சில ஓரிரு சந்தர்ப்பங்களில் மாத்திரம் பயன்படுத்தப்படுவனவாகவும் உள்ளன. எமது ஆசிரியர்கள், பெற்றோர்கள் மரபுவழிக் கற்பித்தலின்படி எழுத்து முறை வாசிப்பான அ,ஆ,இ,ஈ.. என்று சொல்லிக் கொடுப்பதை நிறுத்தி, இலகுவாகக் குழந்தைகள் விளங்கிக் கொள்ளும் எழுத்துக்களைக் கொண்டதான சொல்முறை வாசிப்பின் அடிப்படையில் முதலில் புரியவைப்பது பயனுடையதாக அமையும்.. ப, ட, ம போன்ற எழுத்துக்கள் அவற்றால் அமைக்கப்படும் சொற்களும் குழந்தைகளால் இலகுவில் எழுதக்கூடியதும் ஞாபகத்தில் நிற்கக் கூடியனவுமாகும். காலப் போக்கில் ஏனைய எழுத்துக்களை எழுதுவதில் அல்லது தெரிந்து வைத்திருப்பதில் அவர்களுக்கு அதிக சிரமமிருக்காது. இவ்வகை தமிழ் பயிற்றுவித்தல் முறைமை 1970களின் முற்பகுதியில் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பாரம்பரிய தமிழ் ஆசிரியர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் அத்திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. நாம் தாயகத்தில் கற்ற கல்விச் சூழல் வேறு. தமிழ்மொழி மாத்திரம் பேசப்படுகின்ற ஒரு சூழலிலிலும் பாடசாலையில் சகல பாடங்களையும் தமிழ்மொழியில் கற்கின்ற நிலையிலும் இருந்தபடியால் எழுத்துக்களிலுள்ள சிற்சில மயக்கங்கள் நீங்கிவிட்டன. ஆனால் இங்கு அப்படியல்ல.
            ல் - ள் - ழ்
            ண் - ன் - ந்
            ர் - ற்

என்ற இந்த  எழுத்துக்களில் எமது சிறுவர்களுக்கு ஏன் பெரியவர்களுக்கே ஒருவித மயக்கம் உண்டாகவே செய்யும். இவ்வெழுத்துக்கள் மிகச் சிறிய ஒலி வேறுபாடுகளைக் கொண்டிருப்பதும் சிறுவயதில் இவ்வெழுத்துக்களைக் கிரகிப்பதில் நாம் சிரமத்திற்குள்ளாகி இருந்ததும் எல்லோரும் அறிந்ததொன்றுதான். பெரும்பாலான எழுத்துக்களை நாம் எழுதும்போதும் பேசும்போதும் ஒரேமாதிரியே உச்சரிக்கின்றோம். கதைக்கும்போது "ள், ழ்" எனபன வித்தியாசப்படுவதில்லை. "ந்" என்ற எழுத்து சொல்லின் நடுவில் "த்" என்ற எழுத்துக்கு முன்னால் வரும்போது தான் "ந்" என்ற உச்சரிப்பைப் பெறுகிறது. உ-ம் பந்து, சிந்து, குந்து, ஏனைய சந்தர்ப்பங்களில் "ன்" ஆகவே உச்சரிக்கப்படுகிறது. உ-ம் நாய், நண்டு, நரி. குழந்தைகளுக்குத் தொல்லை தருகின்ற இத்தகைய எழுத்துக்களை சிறுவயதிலிருந்தே வேறுபடுத்தி உச்சரித்துப் பழக்கினால் சிக்கல்கள் சிறிது குறைவதற்கு வாய்ப்புண்டு.

இன்னுமொரு முக்கிய அம்சம் தமிழ்மொழியில் சில எழுத்துக்கள் வேறுபட்ட ஒலியன்களைக் கொண்டிருப்பது. உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோமேயானால் "க" என்ற எழுத்து மூன்று விதமான ஒலியமைப்புக்களைக் கொண்டிருக்கின்றது.
             பக்கம் என்ற சொல்லில் வரும் ககரம் (ka) ஒலியையும்
             மகன் என்ற சொல்லில் வரும் ககரம் (ha)   ஒலியையும்
             தங்கம் என்ற சொல்லில் வரும் ககரம் (ga)  ஒலியையும்
பெறுகிறது. மேலே கூறிய மூன்றுவிதமான ககரத்தையும் பிள்ளைகள் "க (ka)" என்றே உச்சரிக்கிறார்கள். இதுபோன்று இன்னும் பல எழுத்துக்கள் உள்ளன. தமிழ்மொழியிலுள்ள இந்த மிக நுண்ணிய ஒலிவேறுபாடுகளைப் புரியவைக்கின்ற பொறுப்பு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உண்டு. ஆனால்  நளினமாக நாகரிகமாகக் கதைப்பதாக நினைத்துத் தமிழைக் கொலை செய்பவர்கள் பலர் எம்மிடையே உள்ளனர். பெரியவர்களே இப்படியிருக்கும்போது சிறுவர்களுக்காவது சரியான உச்சரிப்பைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
 
பிரெஞ்சு மொழியில் சிறுவயதிலேயே ஒலியன்களை மாணவர்களுக்குப் புகட்டுகிறார்கள். அந்த நேரங்களில் புலம்பெயர்ந்த குழந்தைகள் திணறுகிறார்கள் - திக்குமுக்காடுகிறார்கள். உச்சரிப்பில் சிக்கல்படுகின்ற குழந்தைகளை அவதானித்து, இனங்கண்டு ஆசிரியர்கள் அந்தக் குழந்தைகளை அதற்கெனவுள்ள வைத்தியரிடம் பயிற்சிக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களுக்குப் பணிக்கிறார்கள்.

எழுத்துக்களைக் குழந்தைகளுக்குப் புகட்டும்போது எழுகின்ற சிக்கல்களை விட, சொற்களைப் புரியவைக்கும்போது வேறுவிதமான பிரச்சனைகள் தோன்றுகின்றன. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற குழந்தைகளைத்தான் அவை பெரிதும் பாதிக்கின்றன. மொழி சமூகமயப்பட்ட கருத்துத் தொடர்புச் சாதனம் என்ற காரணத்தினால் அதற்கும் சமூகத்திற்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. தாயகத்தைவிட்டு வெகுதூரம் வந்திருக்கும் இக் குழந்தைகளுக்குப் பெருவாரியான சொற்களுக்குப் பொருள் என்னவென்று தெரியாது. சொல்லிக் கொடுக்கவும் முடியாது, சொன்னாலும் அவர்களுக்குப் புரியாது.

"குழந்தையின் சுற்றாடலுக்கு ஏற்பக் குழந்தையின் சொல்லறிவும் வேறுபடும். எந்தெந்தச் சொற்களைப் பாடத்தில் சேர்த்துக் கொள்வது என்பது பிரச்சனை. கொழும்பில் உள்ள கல்லூரி ஒன்றில் ஜி.சி.இ. வகுப்பிலே புழுங்கல் என்ற சொல்லைப் புரிந்து கொள்ளவில்லையாம்." இதனை ஈழத்து மொழியியல் அறிஞர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இந்த நிலையென்றால் புலம்பெயர் நாடுகளில் நிலமை எப்படி இருக்கும். உதாரணமாக துலா, கிணறு போன்ற இன்னும் பல சொற்களை இங்கு சொல்லிக் கொடுக்க முயல்கின்றோம். அல்லது இவ்வகைப் பாடத்திட்டம் கொண்டதான இலங்கை இந்திய பாடநூல்களை மொழி பயிற்றுவித்தலுக்குப் பயன்படுத்துகிறோம். ஆதலால் இதற்கான மாற்றுவழிகளை நாம் தேடவேண்டும். புலம்பெயர் நாடுகளில் அவர்கள் அன்றாடம் காணுகின்ற, பரிச்சயமான சொற்களைத் தேர்ந்தெடுத்து முதலில் அவற்றை அறிமுகப்படுத்தவது தான் மிகச் சிறந்த வழி. இந்த வகையில் மொழியை உள்வாங்குகின்ற குழந்தை எதிர்காலத்தில் தனக்குப் பரிச்சயமில்லாத சொற்களைக் கூட புரிந்துகொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றுவிடும்.

எவ்வளவோ தொழில்நுட்ப வசதிகளுக்கு மத்தியில் வாழுகின்ற நாம், இது சம்பந்தமான விடயங்களை வீடியோக்கள் மூலமாக குழந்தைகளுக்கு இலகுவில் புரியவைக்கலாம். அவுஸ்திரேலியாவில் வெளிவந்த "பாப்பா பாரதி" ஒளிப்பதிவு நாடா இந்த விடயத்தில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் மொழி சம்பந்தமாக ஏதாவது புகுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். வெறுமனே நெடுங்கணக்க மட்டைகளை வெளியிடுவதாலோ, பாலர் வகுப்பு நூல்களை மறுபிரசுரம் செய்வதாலோ இவற்றுக்குத் தீர்வு காண முடியாது.

புலம்பெயர் நாடுகளில் மிக நல்ல நோக்கத்தோடு குழந்தைகளுக்கான பல நூல்கள் மறுபதிப்புச் செய்யப்பட்டிருக்கின்றன. சிறுவர்களுக்கான நூல்கள் என்றபடியால் மிகவும் அவதானமாக, உன்னிப்பாக சகல விடயங்களையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். இவ்வகையான நூல்களை மறுபிரசுரம் செய்வோர் மொழி பற்றிய பூணர அறிவு உடையவர்களாக இருந்தால்தான்  வெற்றி கிட்டும். இவ்வாறு வெளியிடப்பட்ட நூல்களில் அநேக எழுத்தப் பிழைகள் மலிந்துபோய் உள்ளன. இதனால் பாதிக்கப்படுவது குழந்தைகளே! புலம்பெயர் நாடுகளில் வெளிவருகின்ற பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றில் எழுத்துப் பிழைகள் தாராளமாக மலிந்துள்ளன. பெரியவர்கள் வாசிக்கும்போது, அவர்களால் அதைத் திருத்தி வாசிக்க முடிகிறது. குழந்தைகள் அப்படிச் செய்யமாட்டார்கள். எனவே தான் அவர்கள் விடயத்தில் நாம் விழிப்பாக இருக்கவேண்டும். குழந்தைகளுக்கான நூல்களை வெளியிடும் போது பணம் சம்பாதிப்பதை மாத்திரம் நோக்கமாகக் கொள்ளாது குழந்தைகள் நலனிலும் சற்றுக் கவனம் செலுத்தவது நல்லது.

சிறுவர்களுக்குக் கல்வி போதிப்பதை நாம் சுலபமாக நினைத்துவிடக் கூடாது. மிகக் கடினமான ஒரு பணி இது. புலம்பெயர் நாடுகளில் எவராலும் சிறுவர்களுக்குக் கல்வி கற்பிக்கமுடியும் என்ற மலினமான எண்ணம் பலருக்கு உள்ளது. கலாநிதிப் பட்டம் பெற்ற பேராசிரியர்களால் கூட சிறுவர்களுக்குக் கல்வி போதிக்கமுடியுமோ தெரியவில்லை. ஆசிரியர்கள், குழந்தைகளோடு குழந்தைகளாகத் தாம் மாறி அவர்களில் ஒருவராக இணைந்து விளையாட்டாகத் தான் படிப்பை அவர்களுக்குப் புகட்டவேண்டும். இந்த இடத்தில் தாயகக்தில் நாம் கல்விகற்ற காலத்தைப் பின்நோக்கி இரைமீட்டுப் பார்த்தோமேயானால் எல்லாமே புரியும். ஆசிரியரைக் கண்டாலே நடுக்கம். அவர் கையிலோ நீண்ட பிரம்பு. கனிவில்லாத பார்வை. பயந்துபயந்து நடுநடுங்கி  நாம் கற்ற நிலை அன்று.

இங்கே வாழ்கின்ற பெற்றோர்களுக்கு நன்றாகத் தெரியும், இங்குள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்குமான அன்னியோன்னியம். ஆசிரியர்களோடு நண்பர்கள் போல பழகுவார்கள். பெயர் சொல்லித் தான் அவர்களை அழைப்பார்கள். விடுமுறைநாட்களில் கூட பாடசாலை தொடங்கும் நாளை எதிர்பார்த்தவண்ணம் இருப்பார்கள். இவ்வாறாகக் குழந்தைகளுக்கு ஆவலைத் தூண்டும் வகையில் எமது கற்பித்தலையும் நாம் அமைத்துக் கொள்ளல் வேண்டும்.

எவ்வளவுதான் முயற்சியெடுத்து தமிழ்மொழியைப் போதித்தாலும் அந்தக் குழந்தைகள் பிரெஞ்சுமொழி தெரியாதவர்களுடன் மாத்திரம் தான் தமிழில் கதைக்கிறார்களே தவிர சகோதரர்களுடனோ அல்லது தமது நண்பர்களுடனோ தமிழ் மொழியில் உரையாடுவதில்லை. ஏனெனில் தமிழ் அவர்களுக்கு இரண்டாவது மொழி. வீட்டில் எனது பிள்ளைகள் தமக்கிடையே பிரெஞ்சு மொழியில் உரையாடும்போது, "வீட்டிலாவது ஒருவரோடொருவர் தமிழில் கதைக்கலாம் தானே" என்று நான் சொன்னால் சிறிது நேரம் தமிழில் உரையாடுவார்கள். பின்னர் தம்மை அறியாமலேயே பிரெஞ்சுமொழியைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள். காரணம் அவர்களது எண்ணம், சிந்தனையில் பதிந்திருப்பது அவர்களது முதல்மொழியாகிய பிரெஞ்சுமொழியே. சில பெற்றோர்களின் ஆய்க்கினைகளால் குழந்தைகளிற் சிலர்; தமிழைக் கற்றாலும் தொடர்ந்து வரும் எமது சந்ததிக்கு அவர்கள் இதைக் காவிச் செல்வார்களா? அப்படித்தான் அச்சந்ததி தமிழைப் கற்க விரும்பினாலும் பிரெஞ்சுமொழி வழியேதான் தமிழைக் கற்பார்களே தவிர தமிழ்மொழி மூலமாகக் கற்பார்களா என்பதும் கேள்விதான்.

* நன்றி: பவளமல்லி. பாரிஸ் மகாஐனா பழையமாணவர் சங்கம்

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)




மேலும் சில...
பெண் என்றாலே நிர்வாணம்தான் - ஆணாதிக்க ஓவியமொழி குறித்து
விலங்குப் பண்ணை
யாழ்ப்பாணப் பண்பாட்டின் தெரியப்படாத பக்கங்கள்
காணாமல் போனவை

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Thu, 28 Mar 2024 17:07
TamilNet
HASH(0x55f5199c69a0)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Thu, 28 Mar 2024 17:07


புதினம்
Thu, 28 Mar 2024 17:07
















     இதுவரை:  24713327 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 6204 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com