அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 11 December 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow சலனம் arrow பொதுப்புத்தி அவமதிக்கப்படுகின்றது
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



கிக்கோ (Kico)

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


பொதுப்புத்தி அவமதிக்கப்படுகின்றது   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: à®….யேசுராசா  
Thursday, 29 July 2004

யேசுராசா
படம்: மூன்றாவது மனிதன் (சஞ்சிகை)

யாழ்ப்பாண நகரை அண்டிய குருநகரைச் சேர்ந்த à®…. யேசுராசா, தமிழ் இலக்கியச் சூழலில் நன்கு அறியப்பட்டவர். இலங்கை அஞ்சலகத் திணைக்களத்தில் பணியாற்றி (1967-1987) ஓய்வு பெற்றவர். "அலை" என்னும் கலை இலக்கிய சிற்றிதழின் ஆசிரியர் குழுவிலும் பின்னர் ஆசிரியராகவும் இருந்தவர். இவ்விதழ் ஈழத்தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்புபற்றி நாம் அனைவரும் அறிவோம். யாழ். திரைப்பட வட்டம் (1979-1981), "தமிழியல்" ஆகிய அமைப்புக்களின் அமைப்பாளர்களில் ஒருவர். "திசை" வார இதழின் துணை ஆசிரியர் (1989-1990). இளங்கவிஞர்களிற்காக வெளிவந்த "கவிதை" இதழின் ஆசிரியர், வெளியீட்டாளர் (1994-1995). படைப்பு சார் பணிகளோடு, விமர்சனத்துறையிலும் இவரது பணி முக்கியமானது. இவரது படைப்புக்கள் நூல் வடிவிலும் வெளிவந்துள்ளன. "தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்"  (சிறு கதைத்தொகுப்பு - 1974), "அறியப்படாதவர்கள் நினைவாக" (கவிதைத் தொகுப்பு - 1984) என்ற வரிசையில் அண்மைக் காலத்தில் வெளிவந்தவைகளாக "தூவானம்" (பத்தி எழுத்துக்கள் - 2001) மற்றும் மொழிபெயர்ப்புக் கவிதையாக "பனிமழை" (2002) ஆகியன அமைகின்றன. சிறந்த நூல்களிற்கான இலங்கையின் சாகித்திய மண்டலப் பரிசை 1975 இலும், வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பரிசை 2002 இலும் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈழத்து இலக்கியப்பரப்புக்கு அப்பாலும் பேசப்படும் மனிதராக யேசுராசா இருந்து வருகிறார். எழுத்துப்பணிகளோடு ஓவியம், சினிமா போன்ற துறைகளிலும் ஆர்வமும் அறிவும் நிரம்பியவராகவும் இருக்கிறார். படைப்பாளி, விமர்சகர் என்ற தளங்களுக்கு அப்பால் "கலாசாரச் செயற்பாட்டாளராக" இயங்குவதிலேயே அவர் விருப்புக்கொண்டவர். தற்போது தெரிதல் என்னும் 'இளைய தலைமுறைக்கான கலை-இலக்கிய இருதிங்கள் இதழின்' வெளியீட்டாளராகவும் ஆசிரியராகவும் பணியாற்றுகிறார்.

பொதுப்புத்தி அவமதிக்கப்படுவதை உணரமுடியாத பார்வையாளர்கள்!

- அலை யேசுராசா

>>> திரைப்படம் என்னும் வடிவம் பற்றிய விளக்கத்தை முதலில் கூறுங்கள்...!

நவீன அறிவியல், தொழில்நுட்ப சாதனைகளில் ஒன்றுதான் திரைப்படம். ஆயினும் மிகமுக்கியமான கலைவடிவமாக நிலைநிறுத்தப்பட்டு நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டன. இதுவரை, மேதைமை நிறைந்த திரைக்கலைஞர்களினால் உலகெங்கிலும் ஏராளமான திரைக்காவியங்கள் உருவாக்கப்பட்டு, மனித குலத்திற்கு அளிக்கப்பட்டுள்ளன.
 à®‡à®²à®•à¯à®•à®¿à®¯à®®à¯, நாடகம், ஓவியம், இசை போன்றவற்றை இணைத்த "கூட்டுக்கலை"யாகவும் அது உள்ளது. வெவ்வேறு துறைக் கலைஞர்களின் பங்களிப்பு இருந்தாலும், இறுதி ஆய்வில் அது "நெறியாளரின் ஊடகம்" எனவே அழைக்கப்படும். 1895 இல் "லூமியர் சகோதரரின்" "பகற்போசன வேளை" என்ற துண்டுப் படத்துடன் ஆரம்பங் கொண்டது. ஆரம்பத்தில் மௌனப்படமாகவே இருந்தது. 1927 இல் "ஜாஸ் பாடகன்" முதலாவது பேசும் படமாக வந்தது. 1913 இல் "ராஜா ஹரிச்சந்திரா" என்ற முதலாவது இந்திய மௌனப் படத்தை "தாதாசாகேப் பால்கே" பம்பாயில் வெளியிட்டார். இந்தியாவின் முதலாவது பேசும் படமான "ஆலம் ஆரா" 1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்தது. தமிழ்நாட்டில் முதலாவது மௌனப்படமான "கீசகவதம்" 1916 இல் நடராஜ முதலியாரால் வெளியிடப்பட்டது. முதலாவது தமிழ்ப் பேசும்படமான "காளிதாஸ்" 1931 ஒக்ரோபரில் வெளிவந்தது.

>>> இன்றைய நமது சமூகச் சூழலில் திரைப்படம்பற்றிய பொதுப் பார்வை எப்படி இருக்கிறது?

பெரும்பாலும் கலையாக அன்றி ஒரு "பொழுதுபோக்குச் சாதனமாகவே" திரைப்படம் பார்க்கப்படுகிறது. மகிழ்ச்சியாய்ப் பொழுதைப் போக்குவதற்குரிய ஒன்றுதான் திரைப்படம் எனக் கருதப்படுவதால், நம்பமுடியாத கதையமைப்பு, பாத்தரங்களின் அதிதீவிர சாகசங்கள், பொருத்தமில்லாத கோஷ்டி நடனங்கள் (உடற்பயிற்சிகள்...?) நகைச்சுவை என்ற பெயரிலான "அலட்டல்கள்" என்பனவெல்லாம் கேள்விக்கிடமேதுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தமது பொதுப்புத்தி தொடர்ந்தும் அவமதிக்கப்படுவதை உணர முடியாதளவிற்கு, பழக்கமாகிப் போய்விட்ட ஒரு இரசனை முறைக்குள் பார்வையாளர் சிக்கியுள்ளனர். கல்வித்தரம், வர்க்கவேறுபாடு என்பவற்றைத் தாண்டி பரவலாக இந்த இரசனைப் போக்கே காணப்படுகிறது!.

>>> திரைப்படம்பற்றிப் பேசும்போது "திரைப்பட மொழி" என்ற சொற்றொடர் அதிகம் கையாளப்படுகிறது. இது தரும் விளக்கம் என்ன?

இலக்கியம் எழுத்தையும், ஓவியம் வர்ணங்களையும் கோடுகளையும், இசை ஒலியையும் அடிப்படையாகக் கொண்டிருப்பது போலத் திரைப்படம் காட்சியை, ஒளியை அடிப்படையாகக் கொண்ட "கட்புல ஊடகமாக" உள்ளது. காட்சிகள் மூலமாகத்தான் செய்திகளோ, கதையோ சொல்லப்படுகிறது. உதாரணமாக, வானொலியில் வாசிக்கப்படும் அதே செய்தியை வெறுமனே தொலைக்காட்சியில் வாசிப்பதுடன் நிறுத்துவது தவறு. வாசிக்கப்படும் செய்திக்குரிய "காட்சிகளைக் காட்டுவது" தொலைக்காட்சி என்ற ஊடகத்திற்கு முக்கியம். ஏனெனில், அது அடிப்படையில் ஒரு "கட்புல ஊடகம்".
 à®Žà®©à®µà¯‡, திரைப்படத்திற்குரிய காட்சிரூப மொழியில் காட்சி (Shot), கட்டம் (Scene), அங்கம் (Sequence) என்பன அமைகின்றன. இவற்றை முறையே - வாக்கியம், பந்தி, அத்தியாயம் எனச் சொல்லலாம். இவ்வாறு காட்சிகளைத் தொடர்ந்து கட்டமைக்கும் முறையில் அண்மைக் காட்சி (Close-up), தொலைவுக் காட்சி (Long Shot), மத்திய காட்சி (Medium Shot), நோக்குக் கோணக் காட்சி (P.O.V. Shot), இருண்டு தோன்றல் (Fade in), மங்கி மறைதல் (Fade out), காட்சிக் கலப்பு (Dissolve), ஆக்க இணைப்பு உத்தி  (Montage), உறைகாட்சி (Freeze), மெதுவான அசைவு (Slow Motion), விரைவான அசைவு (Fast Motion), விசிறிக் காட்சி (Panning Shot), பொருளை எம்மைநோக்கிக் கொண்டுவருதல் (Zoom), போன்றவை கையாளப்படும். இத்தோடு தொகுப்பு (Editing), முக்கியமானதாக இருக்கிறது. இன்னும் வேறு அம்சங்களும் உண்டு. ஒலி, இசை துணைப் பொருளாகக் கையாளப்படும். இவ்வாறாக கதைகூறப் பயன்படுத்தப்படும் ஊடக முறைமையே "திரைப்பட மொழி" எனப்படுகிறது.

>>> "நல்ல திரைப்படம்" என்ற முடிவு எந்த அளவு கோல்களைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது?

கலை, இலக்கிய மதிப்பீடுகள் அகச்சார்பானவை: எனவே, எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய "பொது அளவுகோல்" இல்லை. ஆயினும் ஒரு கலைப்படைப்பின் அடிப்படை அம்சங்கள் எனச் சில உண்டு. அவற்றைக் கவனத்தில் எடுக்கவேண்டும். திரைப்பட வடிவத்தில் காட்சிப்படுத்தும் பண்பு முக்கியமானது. இயல்பான - நம்பத்தகுந்த கதை, செம்மையான பாத்திர உருவாக்கம், இயல்பான நடிப்பு, சம்பவச் சூழலின் உணர்வு வெளிப்பாட்டிற்குத் துணைசெய்யும் இசை - இயற்கை ஒலிகள் என்பன இணைந்து, இறுக்கமானதாய் - பிசிறல்கள் அற்று - வடிவ நேர்த்தியுடன் அமையும் திரைப்படத்தை "நல்ல திரைப்படம்" எனச் சொல்லலாம்.

>>> "நல்ல திரைப்படம்" என்ற வகையினுள் அடங்கக்கூடிய தமிழ்ப் படங்கள் சிலவற்றைக் கூறமுடியுமா?

பூரணமான அர்த்தத்தில் நல்ல கலைத் திரைப்படம் எனக் கூற முடியாவிட்டாலும், பல சிறப்பம்சங்களைக் கொண்ட படங்கள் உருவாக்கப்பட்டே உள்ளன. இவற்றை "நடுத்தரப் படங்கள்" (Middle Cinema) என்ற வகையினுள் அடக்கலாம். அந்த நாள், ஏழைபடும்பாடு, தாகம், திக்கற்ற பார்வதி, உன்னைப் போல் ஒருவன், அக்கிரஹாரத்தில் கழுதை, குடிசை, உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுகள், பசி, அழியாத கோலங்கள், அவள் அப்படித்தான், தண்ணீர் தண்ணீர், மறுபக்கம், கறுத்தம்மா, பாரதி, குட்டி, நிலாக்காலம், நாயகன், தேவதை, முகம், பன்னீர்ப் புஷ்பங்கள், ரெறறிஸ்ற், அழகி என்பவற்றோடு வேறு சிலவற்றையும் சொல்லலாம். ஈழத் திரைப்படங்களில் பொன்மணி, காற்றுவெளி, முகங்கள், நிதர்சனம் தயாரிப்பில் வெளிவந்த பல குறும்படங்கள் என்பவை முக்கியமானவை.

>>> வகைதொகையற்ற தமிழ்த் திரைப்பட வெளியீடுகளிடையே "சிறந்த படம்" ஒன்றைத் தெரியமுனையும் ஒருவரின் அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும்?

யதார்த்தமான கதை, அதாவது தான் காணும் - கேள்விப்படும் - மனிதர்களின் பிரச்சினைகளை, உண்மையான வாழ்க்கையைச் சித்தரிப்பதாக உள்ளதா எனப் பார்க்கவேண்டும். தனது பொதுப்புத்தியை அவமதிக்கும் - தன்னை மடையனாக்கும் - அம்சங்களைக் கொண்டுள்ளவற்றைப் புறக்கணிக்கவேண்டும். ஆபாசமான காட்சிச் சித்தரிப்புக்களின் மூலம் தன்னைக் கவரமுயலும் படங்கள் தன்னைக் குறைவாக மதிப்பிட்டு  இழிவுபடுத்துபவை என்று உணர்தல் வேண்டும். ஆகவே அவற்றை ஒதுக்கவேண்டும். குறைந்தளவு குறைபாடுகளுடன், வித்தியாசமான கதையுடன், காட்சிரூப வெளிப்பாடாக வருவனவற்றையும் தெரியலாம். உதாரணமாக பவித்ரா, காதல் கோட்டை, மூடுபனி, சிட்டுக்குருவி, ஜானி, என்னுயிர்த் தோழன் போன்ற படங்களைச் சொல்லலாம். நல்ல படங்களைப் பற்றிய தகவல்களைப் படிக்கும்போதோ கேட்கும்போதோ குறித்து வைத்துக்கொள்வதும் தெரிவதற்கு உதவியாய் அமையும்.        

>>> எமது விடுதலைப் போராட்டம் - ஈழத் தமிழ்மக்கள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கி வெளிவந்த தமழகத் திரைப்படங்கள் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

சிறிய எண்ணிக்கையிலான படங்களே இவ்வாறு வந்துள்ளன. உலகெங்கும் பரந்துவாழும் ஈழத்தமிழர் சந்தையை இலக்காகக் கொண்டு, பண வருவாய்க்காகவே இத்தகைய படங்கள் அங்கு தயாரிக்கப்படுகின்றன. "காற்றுக்கென்ன வேலி" ஒரு புறநடை. இவற்றில் பெரும்பாலானவற்றில் ஈழத்தமிழரின் உண்மைநிலைமைகள் சித்தரிக்கப்படவில்லை. அடிப்படைப் பிரச்சனைகள் என்னவென்றும் சொல்லப்படவில்லை. "கன்னத்தில் முத்தமிட்டால்" படம் பல விடயங்களைக் கொச்சைப்படுத்துகிறது. எதிர்ப்பிரச்சாரம் செய்கிறது. "காற்றுக்கென்ன வேலி" ஈழத்தமிழருக்கு ஆதரவான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளபோதும், பல தவறான அம்சங்களைக் கொண்டுள்ளது. "ரெறறிஸ்ட்" ஒரு தற்கொலைப் போராளியின் உளவியலை ஆராயும் படமாக உள்ளது. அதன் முடிவு சர்ச்சைக்குரியது. வேறு கோணங்களில் அதனை நோக்கும் வாய்ப்பும் உள்ளது. ஆயினும், திரைப்பட மொழியினைக் கையாண்ட முறையில் முக்கியத்துவம் நிறைந்தது. போராட்டச் சூழல், பாத்திரங்களின் உருவாக்கம், உளவியல் பரிமாணம் என்பவற்றிலும் சிறப்பம்சங்களைக் கொண்ட படம். "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்", "நந்தா" ஆகிய படங்களில் ஓரிரண்டு குறிப்பிடத்தக்க அம்சங்களைக் காணலாம்.

>>> தொடர்ச்சியான அசாதாரண நெருக்கடிச் சூழல், கடந்த இருபது வருடங்களிற்கு மேலாக இருந்துவருகிறது. இத்தகைய நிலையிலும் மோசமான திரைப்பட இரசனை எவ்வாறு நிலவுகிறது?

மக்களின் பார்வைக்குக் கிடைப்பவை தமிழ்நாட்டுத் திரைப்படங்கள் தான். இவற்றில் பெரும்பாலானவை பொழுதுபோக்கு "மசாலாப் படங்கள்"!. இப்படங்களும், இவைபற்றி வணிகப் பத்திரிகைகள் வெளிப்படுத்தும் போலிக் கருத்துக்களுமே பொதுமக்கள் திரளின் இரசனையைக் கட்டமைத்துவருகின்றன. இவற்றுக்கு மாற்றான நல்ல திரைப்பட இரசனைபற்றிய கருத்துக்களோ, நல்ல திரைப்படங்கள் அவற்றின் சிறப்பம்சங்கள் பற்றிய விளக்கங்களுடனோ மக்களைச் சென்றடைவதில்லை. நல்ல இரசனை பற்றிய புரிதல் மிகச் சிறிய தொகையினரிடம்தான் நிலவுகிறது. துன்பங்கள், நெருக்குதல்களை மறந்து பொழுதைப் போக்குவதற்குரிய சாதனம்தான் திரைப்படம் என்ற கருத்தே, பெரும்பாலான மக்களிடம் ஆழப்பதிந்துள்ளது. அது ஒரு கலை வடிவம் என்ற உணர்வு இல்லை. தொடர்ந்துவரும் இப் பின்னணியில்தான் அவலங்கள் - அழிவுகள் நிறைந்த அசாதாரணச் சூழலின் அழுத்தங்களிலிருந்து தப்புவதற்கும் "மசாலாப் படங்களையே" சரணடைகிறார்கள். இது ஒரு கசப்பான யதார்த்தம். இந்த நிலைமையை மாற்றுவது மிகவும் கடினமானது. நிறுவன பலத்துடன், பரந்துபட்ட மக்களைச் சென்றடையும் வேலைத்திட்டத்துடன் - பாடசாலைகள், சனசமூக நிலையங்கள், கலை நிகழ்வுகள் என்பவற்றில் - தொடர்ச்சியாகச் செயல்படுவதன்மூலம்தான் கொஞ்சம் கொஞ்சமாகவாவது மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

>>> திரைப்படம் பற்றிய விடயங்களைத் தாங்கிவரும் ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகைகள் அவற்றைக் கையாளும் முறைபற்றிக் கூறமுடியுமா?

தினகரன், வீரகேசரி, சுடர் ஒளி, தினக்குரல், சங்குநாதம், தினமுரசு, இடி போன்ற பத்திரிகைகள் இவ்வாறு சினிமாச் செய்திகள், கிசுகிசுக்கள், நடிக நடிகையரின் நிழற்படங்கள் என்பவற்றை வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக நடுப்பக்கங்களில் "கிளுகிளுப்பூட்டும்" ஆபாசக் காட்சிகளையே வர்ணப் படங்களாக பெருமளவில் பிரசுரிக்கின்றன. அதிலும் அரைகுறை உடைகளுடன்கூடிய நடிக நடிகையரின் அரை நிர்வாணத் தோற்றங்களே பெரும்பாலான இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளன. இங்கு "பெண்ணுடலை" வைத்து இந்த அச்சு ஊடகங்கள் "விபச்சாரம்" நடத்துகின்றன. மறுபுறம் இதே ஊடகங்கள்தான் தமிழ்ப்பண்பாடு, ஒழுக்கம், தேசிய இனத்தின் சீரழிவு, சமய உணர்வு என்றெல்லாம் உரத்து முழக்கமிடுகின்றன. யாருக்கும் வெட்கமில்லை!. நல்ல சினிமா பற்றிய குறிப்புக்கள் மிகமிக அரிதாகவே இந்தச் சினிமாப் பக்கங்களில் வெளிவருகின்றன!.

>>> தமிழ்த் திரைப்படங்களின் "உள்ளடக்கம்" பற்றிக் கூறுங்கள்...!

சில புறநடைகளைத் தவிர்த்தால் "வாய்ப்பாட்டு" ரீதியிலான உள்ளடக்கத்தையே கொண்டுள்ளன. காதல் - செக்ஸ், கோஷ்டி நடனம், சவால், பழிவாங்கல், வன்முறை, அடிதடி, நகைச்சுவை அலட்டல், திடீர்த் திருப்பம், இறுதியில் சுப முடிவு என்றவிதமான "வாய்ப்பாட்டில்" நம்பமுடியாத ஒரு கதை இணைக்கப்படும். கொஞ்சம் கொஞ்சம் வேறுபாடான பாத்திரங்கள், பின்னணிக் களங்கள் கையாளப்பட்டாலும் அடிப்படைச் சூத்திரம் மாறாது: எனவே, உள்ளடக்கம் "ஒரேவித மசாலா" தான்!.

>>> தென்னிந்தியத் தமிழ்ப் படங்களிற்கு மாற்றீடாக, நமது சூழலில் படங்களைத் தயாரிக்க முடியுமா?

இத்தகைய படங்கள் "90 நிமிடங்களிற்கு" மேற்படாமல், குறைந்த செலவுத் திட்டத்தில் "வீடியோவில்" தயாரிக்க முடியாதென்றில்லை. "நிதர்சனம்" நல்ல படங்களை இவ்வாறு தயாரித்த முன்னுதாரணம் ஏற்கனவே உள்ளது. அக்கறை கொண்டோர், கலை - இலக்கியத் துறையில் செயற்பட்டு வருவோர்க்கு நிதி ஆதரவை வழங்கி, இத்தகைய முயற்சிகளில் ஈடுபடவேண்டும். எமது வாழ்க்கையை - பிரச்சினைகளை, எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்தும் திரைப்படைப்புக்களிற்கு ஆதரவு வழங்கவேண்டியது எல்லாரதும் தார்மீகக் கடமை என்ற உணர்வும் சமாந்தரமாக எமது மக்களிடையே உருவாக்கப்பட வேண்டும். சிங்களப் படத்துறை வளர்ந்துள்ளது போல், தேசியத் தமிழ்ப்படத் துறையும் வளர்க்கப்பட வேண்டும்.

>>> இறுதியாக, திரைப்படத்தில் சமூக மாற்றத்துக்கான சாத்தியப்பாடுகளை எதிர்பார்க்க முடியுமா?

அச்சு வடிவிலமைந்த இலக்கியங்களின் வீச்செல்லை குறுகியது. மக்கள் திரளைப் பரவலாகச் சென்றடையும் சாதனம் திரைப்படம். காட்சிகளும் இசையும் பார்ப்பவரிடை இலகுவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. அந்தவிதத்தில் சமூக மாற்றத்திற்குரிய செய்திகளைக் கதைவடிவிலும், விவரண வடிவிலும் திரைப்படத்தின் மூலம் வலுவுடன் கொண்டுசெல்ல இயலும். ஏற்கனவே தி.மு.க. வினர் தமது கருத்துக்களைப் பரப்புவதற்கு தமிழ்த் திரைப்படங்களைப் பயன்படுத்தியுள்ளனர். திரைப்படம் மட்டும் தனியே சமூகத்தை மாற்றிவிடும் என்றில்லை. ஆனால், மாற்றத்திற்குத் துணைபோகும் எண்ணங்களை அதனால் மக்களிடம் தோற்றுவிக்க இயலும். ஆயினும், வெறும் பிரச்சாரமாக அல்லாது, கலைத்துவத்துடன் கருத்துக்களைக் கொண்டுசெல்லும் படைப்பு முயற்சிகளே மனங்களில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும்!.

(இப்பேட்டி யாழ்பாணத்தில் இருந்து வெளிவரும் ஆத்மா என்னும் சஞ்சிகையில் இருந்து மீள்பிரசுரமாகின்றது.)


மேலும் சில...
ஆக்காண்டி
சமாதானச்சுருள் திரை மாலை
அழுத்தம்
தமிழ்த் திரையுலகு: [பகுதி 1] [பகுதி 2]
எங்களுக்கானதொரு சினிமா!?

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 11 Dec 2024 03:16
TamilNet
The JVP has recently lent itself to US efforts to consolidate the unitary state and realise its long-held ambition to capture state power in Colombo. In this regard, they have also engaged with a range of actors, from the IMF, Washington, and New Delhi, as well as attempted to woo Eezham Tamils and other Tamil-speaking people to opt for the NPP in the 2024 SL Presidential Elections. Norway-based Eezham Tamil anthropology scholar Dr Athithan Jayapalan writes that the NPP and Lionel Bopage speak of equality without addressing the right of an oppressed nation to secession in the face of national oppression and genocide. Instead, the NPP, aligned with the US position, vows to neutralise the Eezham Tamil political struggle for self-determination.
Sri Lanka: JVP always denied Eezham Tamils?inalienable self-determination: Anthropology scholar


BBC: உலகச் செய்திகள்
Wed, 11 Dec 2024 03:16


புதினம்
Wed, 11 Dec 2024 03:16
















     இதுவரை:  26133059 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 13247 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com