அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Monday, 15 July 2024

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 22 arrow வள அறிஞராக ஜீவா..
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


வள அறிஞராக ஜீவா..   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: பேராசிரியர் சோ.சந்திரசேகரன்  
Sunday, 06 November 2005

இலங்கையில் தமிழியல் ஆய்வுத் துறைக்கு வள அறிஞராகப் பயன்படக் கூடியவர் ஜீவா!

டோமினிக் ஜீவா(* மல்லிகை டொமினிக் ஜீவாவுக்கு இலங்கை அரசு 'சாகித்யரத்னா' விருது வழங்கியதை முன்னிட்டு 'ஞானம்' நடத்திய பாராட்டு விழாவில் ஆற்றிய உரையின் தொகுப்பு)
(நன்றி: தினக்குரல் 20-102005)

சிறுகதை எழுத்தாளரும், இலக்கிய வாதியும், சஞ்சிகை ஆசிரியரும் எனப் பன்முக ஆளுமை கொண்ட டொமினிக் ஜீவா, இலங்கை இலக்கிய உலகில் கடந்த 50 ஆண்டு காலப்பகுதியில் இலக்கியத்தில் சாதனைகளை நிகழ்த்திய சிலரில் ஒருவர். அத்தோடு, இலக்கிய உலகில் பெயர் பதித்த சிலரில் ஒருவர். இவருடைய பாணியில் இலக்கியமே உலகம், வாழ்க்கை என்ற முறையில் வாழ்ந்து தடம் பதித்து வருபவர்கள் ஒரு சிலரே. கடந்த 50 ஆண்டு கால வாழ்க்கையை இலக்கிய சிந்தனைக்கும் படைப்புக்கும் அர்ப்பணித்தவர் என்ற முறையில் இத்தகைய உயர் விருது தாமதமாகவே கிடைத்துள்ளது என்று கூறுவதில் தவறில்லை.
இலக்கியப் படைப்பாளிகள் தாம் வாழும் காலத்தில், அரசாலும் சமூகத்தாலும் இவ்வாறு உயர் விருது வழங்கப்பட்டு பாராட்டப்படுவது அரிதாகவே நிகழ்ந்துள்ளது. அவ்வகையில் டொமினிக் ஜீவாவுக்கு இவ்விருது கிடைத்தமைக்கு இரு மடங்கு பாராட்டுகள் உண்டு.
இலங்கையின் சமூக, இலக்கிய வரலாற்றில் ஜீவா என்ற படைப்பாளியின் உருவாக்கம் எவ்வாறு நடைபெற்றது என்பதை நோக்குதல் வேண்டும். இதற்கு இலங்கையின் கல்வி வரலாறு என்னும் பின்புலத்திலிருந்து விடை காண முயல்வது கல்வித்துறை சார்ந்த எனக்கு பொருத்தமான ஒரு பணியாகும். மேற்கு நாடுகளிலும் கிழக்கு நாடுகளிலும் எப்போதுமே கல்வி வாய்ப்புகள் எல்லாச் சமூகப்பிரிவினருக்கும் சமமாக வழங்கப்பட்டதில்லை. அப்படி வழங்கவும் கூடாது என்றும் தத்துவம் பேசப்பட்டது. வரலாற்று ரீதியாகக் கல்வி உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள் என்ற பட்டியலில் பெண்கள், சிறுபான்மையினர், பின்தங்கிய சாதியினர் என்று சுட்டப்பட்டவர்கள், கஷ்டப் பிரதேச மக்கள், தொழிலாளர் வகுப்பினர், வலது குறைந்தவர்கள் எனப் பலரும் அடங்குவர். இருபதாம் நூற்றாண்டில் யாவருக்கும் கல்வி, கல்வி ஒரு மனித உரிமை என்ற சமவாய்ப்புத்தத்துவங்களுடன் அச்சுசாதனத்தின் பயன்பாடு, பத்திரிகைத்துறை என்பவற்றின் வளர்ச்சியையும் காண முடிகின்றது. கடைசி இரு வளர்ச்சிகள் தோற்றம் பெற்ற ஆங்கிலேயர் காலத்தில் மேல்நாட்டு இலக்கிய வடிவங்களும் அறிமுகமாகின்றன. இலங்கையில் இலவசக் கல்வி, கட்டாயக் கல்வி, மத்திய பாடசாலைகள், தாய்மொழியில் இடைநிலைக் கல்வி என்னும் கல்விச் சீர்திருத்தங்கள், பின்தங்கிய பிரிவினர்களையும் தேசிய கல்வி நீரோட்டத்தில் இணைக்க உதவின. அவர்களுக்குக் கல்வி உரிமையை மறுத்து வந்த சக்திகள் பலம் இழந்தன. அரசியல்துறை சனநாயகம் கல்விக்கும் விஸ்தரிக்கப்பட்டு, கல்வியை சனநாயகப்படுத்தும் நோக்கு அரச ஆதரவுடன் நிறைவு செய்யப்படும் முயற்சிகள் மேலோங்கின.
இதுவரை காலமும், படிப்பறிவு பெற்றிருந்த ஒரு சாரார் இலக்கிய உலகிலும் படைப்பிலக்கியத்துறையிலும் வகித்து வந்த ஏகபோக நிலை சிதைவடைய இக் கல்வி வளர்ச்சி காரணமாயிற்று. உயர் கல்வி பெறாவிட்டாலும் நல்ல படிப்பறிவு என்ற அத்திவாரத்துடன் சராசரி மனிதன் இலக்கிய உலகில் நுழைகின்றான்; தன்னைப் பற்றியும் இதுவரை உரிமை மறுக்கப்பட்ட தனது சமூகத்தைப் பற்றியும் அதற்குக் காரணமான பொருளாதார, சமூக சக்திகளைப் பற்றியும் சிந்திக்கின்றான். தனக்குப் பரிச்சயமான, தனது சமூகத்தை ஒடுக்கி தன்னை மட்டும் மேம்படுத்திக் கொண்ட சமூக அமைப்பையே தனது இலக்கிய படைப்புகளுக்குத் தளமாகக் கொள்கின்றான். இப்பின்புலத்தில் டொமினிக் ஜீவா, டானியல் போன்ற அடிநிலை மக்களின் இலக்கியப் பிரதிநிதிகள் இலக்கிய உலகில் நுழைகின்றார்கள். படித்த உயர் வகுப்பினர் ஆதிக்கம் செலுத்தி வந்த தமிழ் இலக்கியப் பரப்பில் புதிய சிந்தனைகள், புதிய படைப்புகள் உருவாகின்றன. இப்பின்புலத்தில் ஈழத்து இலக்கியம் பல புதிய பரிமாணங்களைக் கண்டது. தமிழகப் பாணியைப் பின்பற்றி வந்த ஈழத்து இலக்கியம் பல புதிய பரிமாணங்களைக் கண்டது. தமிழகப் பாணியைப் பின்பற்றி வந்த ஈழத்து இலக்கியம் தனது சொந்த மண்ணையும் அம்மண்ணின் மக்களையும் அவர்களின் வாழ்க்கைச் சூழலையும் மையமாகக் கொள்கின்றது.
இவ்வாறு படிப்பறிவு மேம்பாட்டால் இலக்கிய உலகிலும் சர்வசன வாக்குரிமையால் அரசியலிலும் எழுந்த புதிய எழுச்சிகள் உடனடியாக யாவராலும் வரவேற்கப்படவில்லை.
சிறுகதை எழுதியவர்களை `சிறுகத்தை' எனக் கற்றோர் குழாத்தில் சிலர் எள்ளி நகையாடியதாகக் கூறக்கேட்டதுண்டு. வாக்குச் சாவடியில் யாவருடனும் எவ்வாறு வரிசையில் நின்று வாக்குப் போடுவது என்று அவர்களில் சிலர் கேட்டனர்.
இவ்வாறு எழுச்சி பெற்ற டொமினிக் ஜீவா, டானியல் போன்ற எழுத்தாளர்களின் பணிக்குத் தத்துவார்த்த நியாயங்களை வழங்கி வழிகாட்டும் இடதுசாரி இலக்கிய இயக்கங்கள், இவ்வகையான இலக்கிய முயற்சிகளுக்கு ஒரு முக்கிய உந்து சக்தியாக விளங்கின. சிறுகதை உருவம் மூலம் சமூகத்தை ஆழமாக நேசிக்கக் கற்றுக் கொடுத்து அன்று புதுயுகக் குரலாக மிளிர்ந்த முற்போக்கு இலக்கிய அணியின் முக்கிய குரலாகத் தனித்துவ கம்பீரத்துடன்' ஜீவாவின் எழுத்துக்கள் அமைந்தன.
பல சாகித்திய விருதுகளைப் பெற்ற சிறுகதை எழுத்தாளராக மட்டுமன்றி, சஞ்சிகை ஆசிரியர், இலக்கிய இயக்கமொன்றை நடாத்தும் ஒரு தலைமகன், ஒரு இலக்கிய கருத்து நிலைப்பாட்டை உருவாக்கும் சிந்தனையாளர், படைப்புகளை மக்கள் மயப்படுத்தும் ஒரு சனநாயக இலக்கியவாதி, நாடெங்கும் பரந்து வாழும் இலக்கியப் படைப்பாளிகளுக்குக் களமமைத்துக் கொடுக்கும் பண்பாளர் எனப் பன்முக ஆளுமை படைத்து விளங்கும் ஜீவாவுக்கு இவ்விருதும் கௌரவிப்பும் பொருத்தமானதே! மணிக்கொடியும் எழுத்து சஞ்சிகையும் வளர்த்த எழுத்தாளர் பரம்பரை என்பது போல் மல்லிகை எழுத்தாளர் பரம்பரையொன்றை உருவாக்கிய பெருமையும் அவரைச் சாரும்.
'சாகித்திய இரத்தினம்' என்னும் விருது ஜீவாவின் படைப்புப் பணியை மட்டுமன்றி, அவருடைய நீண்ட கால இலக்கிய ஈடுபாட்டையும் தொடர்ச்சியான இலக்கியப் பணிகளையும் ஒருங்கே கருத்திற் கொண்டு வழங்கப்பட்டுள்ளது எனக் கொள்வதில் தவறில்லை. இலக்கியத்தை வாழ் தொழிலாகக் கொண்டு வெற்றி காண முடியும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாகவும் ஜீவா விளங்குகின்றார்.
ஜீவாவின் இலக்கிய சிந்தனை, இலக்கியப் பங்களிப்பும் அனுபவமும் நிச்சயமாகப் பல்கலைக்கழக நிலையில் நவீன இலங்கையின் இலக்கியம் பற்றிப் பயில்பவர்களுக்குப் பெரிதும் உதவும் எனக் கருதுகின்றேன். தமிழகப் பல்கலைக்கழகங்கள் சுந்தர இராமசாமி, நீல.பத்மநாதன், வானமாமலை, இராஜநாராயணன் போன்ற எழுத்தாளர்களை தமிழ் ஆய்வுக்கான வள அறிஞர்களாகப் பயன்படுத்திக் கொண்டதாக அறிகின்றேன். இலங்கையின் தமிழியல் ஆய்வுத்துறைகளும் இவ்வாறான ஒரு மரபினை உருவாக்க ஜீவாவைப் பயன்படுத்தலாம் எனக் கருதுகின்றேன்.
ஜீவாவின் இப்பாராட்டு விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் எதிர்கால இலக்கிய வளர்ச்சிக்கு வழிகாட்டக் கூடிய இயக்கங்கள், நிறுவனங்களின் தேவை, சிறப்புற இலக்கியப் பணியாற்றுவோரை இனங்கண்டு ஊக்குவிப்பதற்கான தேவை, தமிழிலக்கிய வளர்ச்சியில் பத்திரிகைகள் ஆற்ற வேண்டிய பணி முதலாம் விடயங்கள் பற்றிய புதிய கருத்தாடல்களில் ஈடுபட வேண்டும்; அவை இலக்கியத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் வகையில் அமைதல் வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)


மேலும் சில...
பிரெஞ்சு தீவு
ஒரு நாள் ஒரு கனவு…
கலாயோகி ஆனந்த குமாரசாமி
நிர்வாண விழிகள்
இடுக்குகளின் வழியே...
அம்மா எனக்கொரு சிநேகிதி.

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Mon, 15 Jul 2024 20:12
TamilNet
HASH(0x563a371f2808)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Mon, 15 Jul 2024 20:12


புதினம்
Mon, 15 Jul 2024 20:12
     இதுவரை:  25364301 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 4684 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com