அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 16 July 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow பிரெஞ் படைப்பாளிகள் arrow அல்பிரட் து மியூசே
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்பாலமனோகரன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


அல்பிரட் து மியூசே   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: வாசுதேவன்.  
Thursday, 30 June 2005

"How glorious it is, but how painful it is also, to be exceptional in this world!" (from Le Merle Blanc, 1842)

அல்பிரட் மியூசே

'நிகழ்காலம் சகிக்கமுடியாத சுமை கொண்டதாகவுள்ளது' , 'எதிர்காலம் அவநம்பிக்கைகள் நிறைந்ததாகவுள்ளது'
போன்ற கூற்றுத்தொடர்களால் உணரப்படும் 19 ம் நூற்றாண்டின் ஆரம்பகால 'பிரஞ்சு மனோநிலை' ஏற்கெனவெ ஜேர்மனியிலும், பிரித்தானியாவிலும் ஆரம்பமாகிவிட்டிருந்த ரோமான்ரிசப் போக்கிற்குத் தயார்படுத்தப்பட்டிருந்தது. காதல், சோகம், துன்பியல், அரசியலிலான அலட்சியப்போக்கும் அவநம்பிக்கையும் போன்ற அம்சங்களால் வரையறுக்கக்கூடிய இம்மனோ நிலையின் பின்னணி வரலாற்றையொட்டிப் புரிந்து கொள்ளப்படவேண்டியது.

பொணபாட்டின் இடைவிடாத போர்களினால் சிதைந்துபோன பல குடும்பங்கள், தந்தையற்று வாழும் பிள்ளைகளின் விரக்தி உளநிலைகள், அரசியல்
அடக்குமுறைகளால், பேச்சுச் சுதந்திரத் தடைகளினால் ஏற்படுத்தப்பட்ட சலனம் நிறைந்த மனப்பாங்கு போன்ற சமூக நிபந்தனைகளால் உருவாக்கம் கண்டிருந்த பிரஞ்சுச் சமூகம் துன்பியல்-ரோமான்ரிசத்திற்குத் தன்னை இலகுவாக வசப்படுத்திக்கொண்டது.

நெப்போலியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, பிரஞ்சுப் புரட்சியின்போது மரணதண்டனை விதிக்கப்பட்ட பதினாறாவது லூயியின் சகோதரன் பதினெட்டாவது லூயி, நெப்போலியனை வெற்றிகொண்ட ஐரோப்பிய மேலாண்மை முடியாட்சிகளால், பிரஞ்சு முடியாட்சியின் வாரிசாக மீண்டும் அரியாசனத்தில் அமர்த்தப்பட்டபோது, பிரஞ்சு மக்களின் மனதில், குறிப்பாக இளைஞர்களின் மனதில் நிரம்பியிருந்த எதிர்காலக் கனவுகள் யாவும் ஆட்டங்கண்டுகொண்டன.

பிரான்ஸின் மேலாண்மையை ஐரோப்பா முழுவதிலும், உலகெங்கிலும் உறுதிசெய்து போருக்குப் பின் போர்புரிந்து வெற்றிகளையீட்டிய காலம் ஒழிந்தது கண்டு பிரஞ்சு மக்கள் விரக்தியடைந்திருந்தார்கள். வெற்றிக் கண்களுடனும், நம்பிக்கையொளியுடனும் கனவுகண்டுகொண்டிருந்த ஒரு மக்கள் கூடடம் போரும் முடிந்து, தோல்வியும் மேலோங்கி, பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைப் பலிகொண்ட பிரஞ்சுப் புரட்சி எந்த முடியாட்சியைத் தூக்கியெறிந்ததோ அந்த முடியாட்சியை மீண்டும் அரியாசனத்தில் பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. 1815 ல் ஆரம்பித்த அரசியல்-சமுக ஸ்திரமற்ற இந்த காலகட்டத்தில் சோம்பேறித்தனமும் வேண்டாவெறுப்பான வாழ்வும் தாரகமந்திரமாக மாறிய நிலையில்தான் பிரான்ஸில் மேலோங்கியது ரோமான்ரிசக் கலையிலக்கிய இயக்கம். 1793 ல் கொலையுண்ட புரட்சி, 1814 ல் சிதறுண்ட எதிர்பார்ப்பு எனும் இருபெரும் காயங்களுக்கு மாற்று மருந்தாக பிரஞ்சு இலக்கியப் போக்கு ரோமான்ரிசத்தை முன்வைத்தது.

பிரஞ்சு ரோமான்ரிஸத்தின் 'துடுக்குக் குழந்தை' என வர்ணிக்கப்படும் அல்பிரட் து மியூசே பத்தொன்பதாம் நூற்றாண்டின் பாரிஸ் இளம் சமுதாயத்தின் மனோநிலையைப் படம் பிடித்துக்காட்டும் இன்னுமொரு முக்கிய இலக்கியகர்த்தாவாகக் கணிக்கப்படுபவர். 47 வயதில் 'இருட்டில்' இறந்துபோன இக்கவிஞர் தனது 14 வது வயதிலேயே சிறப்பான கவிதைகள் பலவற்றை எழுத ஆரம்பித்தார்.

கவிதைகள் மட்டுமன்றி நாடகத்துறையிலும் இவரது தடயங்கள் அழிக்கமுடியாதவை. பிரான்ஸின் ரோமான்ரிச நாடகங்களின் மிகப்பெரிய முன்னெடுப்பாளராக மியூசே கருதப்படுகிறார்.

இருபது வயதாகையில் தனது முதலாவது கவிதைத் தொகுப்பை வெளிக்கொணரும் வேளையிலேயே ஏற்கெனவே பிரபல்யம் பெற்ற பிரஞ்சு ரோமான்ரிஸ எழுத்தாளர்களின் - சார்ல் நோர்டியே, விக்டர் ஹியூகோ, அல்பிரட் து விஞ்ஞி, சன்த் பேவ் என இன்ன பிறர் பங்கு கொள்ளும்- 'ரோமான்ரிச அவை' யில் பங்குகொள்ளுமாறு அழைக்கப்பட்டவர் இவ்விளம் படைப்பாளி.

தந்தையின் மரணமும், பிரான்சின் மிகப்பெரிய பெண்ணெழுத்தாளர்களில் ஒருவரான, தன்னைவிட ஏழு வயது அதிகமான, ஜோர்ச் சான்ட் உடனான கசப்பான காதலுறவினால் பெற்ற துன்பியல் அனுபவங்களும் மியூசேயின் வாழ்க்கையிலும் அவரது படைப்புகளிலும் கணிசமானளவு மாற்றங்களை ஏற்படுத்தின. ஆரம்பகாலத்தில் இவரால் எழுதப்பட்ட நாடகங்களில் பல தனிப்பட்ட வாழ்க்கையுடனான நெருக்கம் கொண்ட கருக்களைக் கொண்டதாகவே அமைந்திருந்தது. தனது ஆரம்பகால நாடகங்கள் மேடையேற்றங்களில் சந்தித்த தோல்விகளைச் சகிக்கமுடியாத மியூசே பிற்காலத்தில் வாசிப்பிற்காக மட்டுமே நாடகங்களை எழுதினார். இருப்பினும் இருபதாம் நூற்றாண்டில் இவரது நாடகங்கள் எதிர்பாராத வெற்றியைச் சந்தித்தன.

'காதலுடன் விளையாடக்கூடாது' ('on ne badine pas avec l'amour') என்ற துன்பியல் நாடகம், 'நூற்றாண்டின் குழந்தையொன்றின் ஒப்புதல்கள்' ('la confession d'un enfant du siècle') என்ற சுயசரிதை போன்ற படைப்புகள் ஜோர்ச் சான்ட் உடனான உறவுகளின் நேரடி எதிரொலிகள். இவைபோன்றே 'மேமாத இரவு' , 'ஆகஸ்ட் மாதஇரவு', ஒக்டோபர் மாத இரவு', 'டிசம்பர் மாத இரவு' போன்ற கவித்துவத் தொகுப்புகள் மியூசேயின் ரோமான்ரிஸ மேலாண்மைக்குப் பகரும் சான்றுகள். கவிதைத் தேவதையுடன் கவிஞன் கொள்ளும் உரையாடலாய் அமையும் இப்படைப்புகள் மியூசே விரக்தி கொண்டு இலக்கிய உலகிலிருந்து விடுபட எண்ணும் மனோநிலையிருந்த காலகட்டத்தில் எழுதப்பட்டவை. உயிரிற் பட்ட காயங்களை உயரிய மொழியின் ஒளியில் எழுதினார் மியூசே என இப்படைப்புகள் பற்றிக் கூறப்படுகின்றது. 'லமார்த்தினுக்கான கடிதம்', 'நினைவுகள்', போன்ற கவிதைகளும் வாசிக்கப்படவேண்டியன.

இன்றும் தரம் குன்றாது அவ்வப்போது பாரிஸின் பிரபல நாடக அரங்குகளில் மேடையேற்றப்படும் Lorenzaccio  நாடகம் ரோமான்ரிச நாடகமொன்றின் மிகப்பெரிய வெற்றியாக அக்காலத்திலேயே கருதப்பட்டது. இத்தாலியில் ப்ளோரன்ஸ் குறுநிலத்தை ஆழும் கொடுங்கோலனை ஆட்சியிலிருந்து கவிழ்த்து குடியரசை நிறுவுமுகமாக ஆட்சியிலிருக்கும் குறுநிலப்பிரபுவைச் சதிதீட்டிக் கொல்லும் இந்நாடகத்தின் கதாநாயகன் அவ்வாறு கொலைசெய்த பின்னரும் கூட ஆட்சி மீண்டும் இன்னொரு குறுநிலப்பிரபுவின் கைகளில் சென்றுவிடுவதையும் தனக்கு மரணம் காத்திருப்பதையும் அறிகிறான். அப்படியிருந்தும் தானே நேரில் சென்று மரணத்திற்கு தன்னை விருப்பின்பேரில் அர்ப்பணிக்கிறான்.

பிரான்சில் 1830 யூலையில் நடைபெற்ற மக்கள் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டு மீண்டும் லூயி-பிலிப் அரியாசனம் ஏறுவதும், வெகுஜனப்புரட்சி அர்த்தமற்றுப் போவதும், அரசியல் சமூக இயக்கங்கள் வலுவற்று ஆளும்வர்க்கத்தின் முன் மீண்டும் மீண்டும் மண்டியிடவேண்டிய நிலையைக்குத் தள்ளப்படுவதும் இந்நாடகத்தினூடே ஆசிரியரால் தெளிவுற வெளிக்கொணரப்படுகின்றது. வாழ்வின் அர்த்தமின்னை, போராட்டங்களின் வெறுமை, விரக்தி , சமகாலத்தைய மனிதர்களுடனான கருத்துப்பகிர்வுகளை ஏற்படுத்த முடியாமை போன்ற இன்னோரன்ன அம்சங்கள் இங்கு அடிக்கோடிடப்படுகின்றன. வெறும் துன்பியல் ரோமான்ரிச நாடகமாக மட்டுடன்றி, உயரிய அரசியல்-சமூகவியற் கருத்துகளை உள்ளடக்கிய நாடகமாகவே இந்நாடகம் இன்றும் கருதப்படுகின்றது.

அளவுக்கதிகமான குடிப்பழக்கம், பெண்களுடனான கட்டற்ற உறவுகள் என்பன மியூசேயை 30 வயதிலேயே நோயாளியாக்கிவிட்டது. ஏமாற்றமும் விரக்தியும் கொண்டு ஒதுங்கி வாழ்ந்த மியூசேயின் 'கவலை' என்ற கவிதை ஒருவேளை அவரின் வாழ்வைச் சுருக்கமாக புரியவைக்கக்கூடும்.

அல்பிரட் து மியூசே பிரபல  'Acadamie Française'  ன் உறுப்பினராக 1852 ல் தெரிவு செய்யப்பட்டுக் கௌரவிக்கப்பட்டபோதும், அவர் 1957 ல் இறந்தபோது புதைகுழிவரையும் அவருடன் வழிச்சென்றவர்கள் மிகச் சிலரே.

கவலை.
வலுவிழந்தேன், வாழ்விழந்தேன்.
நண்பரையும் மகிழ்வையும் இழந்தேன்.
என் திறமையை நம்ப வைத்த
பெருமையையும் இழந்தேன்.
உணமையைக் கண்டறிந்த வேளையில்,
அது என் நண்பியென்றிருந்தேன்.
அதை உணர்ந்து உள்வாங்கியவுடனேயே
அதன் மீது வெறுப்புற்றேன்.
இருந்துமென்ன, உண்மை நித்தியமானது.
இவ்வுலகில் இவ்வுண்மையை புறக்கணித்துப்
போனோர் எதுவும் அறிந்திலர்.
இறைவன் பேசுகிறான். பதிலளித்தாக வேண்டும்
- சிலவேளைகளில் அழுதேன் என்பது மட்டுமே இவ்வுலகில்
என்னிடம் இன்னமும் எஞ்சியிருக்கும் சொத்து.

அல்பிரட் து மியூசே.


மேலும் சில...
ஆந்த்ரே ஜீத் (1869-1951): ஒரு அறிமுகம்
குயிஸ்தாவ் ப்ளோபேர்
எமில் ஸோலா
விக்டர் ஹியூகோ
சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்ல் போதலயர்.
பல்ஸாக் அல்லது நுண்விபரிப்பின் அறுதிப் பலம்.

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 16 Jul 2024 00:13
TamilNet
HASH(0x5620e3e09b00)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 16 Jul 2024 00:13


புதினம்
Tue, 16 Jul 2024 00:13
     இதுவரை:  25365097 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5480 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com