அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Wednesday, 11 December 2024

arrowமுகப்பு arrow தொடர்நாவல் arrow பிரெஞ் படைப்பாளிகள் arrow சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்ல் போதலயர்.
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



தயா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்ல் போதலயர்.   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: க.வாசுதேவன்  
Thursday, 29 September 2005

Voracious in my appetite for the uncertain and unknown, I do not whine for paradise as Ovid did, expelled from Rome . Baudelaire.

 
'புல்லின் இதழ்கள்' (Leaves of grace) என்ற தலையங்கம் எவ்வாறு வோல்ட் விற்மனை உடனடியாக நினைவுக்குக் கொண்டுவருகிறதோ , அவ்வாறே 'துன்பத்தின் பூக்கள்' (Fleurs du mal) என்று கூறியவுடன் ஷார்ல் போதலயர் என்ற நாமம் ஞாபகத்தின் மேற்பரப்பில் மிதக்கவாரம்பிக்கிறது.
ஏழு வயதில் தந்தையை இழந்து, தாயே தன் பிரபஞ்சமென்று அடங்காத பாசங்கொண்டு வாழ்ந்த சிறுவன் ஷார்ல் அவளின் இரண்டாந்தாரத் திருமணத்தின் போது தான் இரண்டாந்தரம் அனாதையாக்கப்பட்டதாக உணர்கிறான். தனக்கும் தாய்க்குமான பிரத்தியேகப் பாச உறவில் வேறொரு உறவு புகுந்து தன்னை வெளியேற்றிவிட்டதாக உணர்ந்து வேதனைப்படுகிறான். இருப்பினும், இளவயதிலேயே தந்தையை இழந்த தாயின் புதியவாழ்க்கையிலான மகிழ்ச்சி அவனுக்குத் திருப்தியை அளிக்கிறது. தனது புதிய தந்தையுடன் ஓரளவான சுமூக உறவையும்பேணிக்கொள்கிறான்.

ஏதாவது ஒரு நாட்டின் தூதுவராலய ராஜதந்திரியாக வருவதற்கு நீ கல்வி கற்க வேண்டும் என்று தாய் கூறினாள். அவளின் கணவனான இராணுவ அதிகாரி இராணுவத்தில் சேர்ந்து கொண்டு பெரிய பதவியை அடையவேண்டும் என வற்புறுத்தினார். ஆனால் ஷார்ல் போதலயர் தான் ஒரு எழுத்தாளனாக வரவேண்டும் எனத் திடமாக உறுதி பூண்டிருந்தான். எல்லோரினதும் தொல்லை தாங்காது இறுதியில் சட்டப் படிப்பைத் தொடர்வதற்குச் சம்மதம் தெரிவித்தபோதும் கவித்துவப் பூரணத்தைக் கண்டடைவதையே அவன் மனம் இலக்காக் கொண்டிருந்தது.
விக்டர் ஹிகோவின் நாடகமொன்றைப் பார்த்த புளகாங்கிதத்தில், அவருக்குத் திறந்த மடையாக சிறிய வயதில் போதலயர் எழுதிய கடிதமே அவனின் துணிவையும், இலக்கியத் திறனையும் வெளிப்படுத்தப் போதுமானது.
அழகற்ற யூதச் சிறுமி ஒருத்தியுடன் விபச்சார உறவில் (முதல் உடலுறவு அனுபவம்) ஈடுபட்டு நோயையும் உள்வாங்கிய இளைஞன் ஷார்ல் தன்னை அந்நோயிலிருந்து கடினமாகவே விடுவித்துக் கொள்கிறான்.
இளவயதிலேயே உலகத்தால் வெறுப்படைந்த போதலயர் அபத்த உலகை மறப்பதற்காய் தன்னை வாசிப்புப் பழக்கத்தில் ஈடுபடுத்திக்கொண்டான். "இவ்வுலகின் வஞ்சகங்களையும், அழுக்குகளையும் மறப்பதற்காய் வீர்ஜலை வாசிக்கப்போகிறேன்" என்று கடிதமொன்றில் தன் சகோதரனுக்குக் குறிப்பிட்டிருக்கிறான்.
இளைஞனான காலத்தில், ஹொஸ்டலில் சேர்க்கப்பட்ட போதலயருக்குக் கூடாத கூட்டுகளும் கட்டற்ற வாழ்வும் கடன்தொல்லைகளை உருவாக்குகின்றன. சகோதரனின் உதவி ஓரளவு கிடைத்தபோதும் நிலை மிகவும் சங்கடத்திற்குள்ளானது.
"உனது கூட்டாளிகள் உன்னைப் பெண்களிடத்தில் கூட்டிச் சென்றார்கள். நீ ஒழுக்கமற்ற வாழ்வை மேற்கொண்டாய். அப்பெண்களுக்கு உணவும் உடையும் தேவையானவையும் வழங்குவதற்காய் உன் பணத்தைக் கண்டபடியெல்லாம் செலவளித்துக் கொண்டாய். கடனாளியானாய். எதிர்பார்ப்புகளை வழங்கிய குழந்தையாகவிருந்த உன்னை நீயே ஒரு கட்டற்ற ஆடவனாக்கினாய். சமூக விதிகளை உடைத்தெறிந்து, அதனுடடான கட்டுக்களை அவிழ்த்தெறிந்து, வாழ்க்கை பற்றிய பார்வையை வித்தியாசமாகக் கொண்டிருந்த வயதில் அதிகமானோரையும் மதிக்காது, ஒருநாள் வாழ்வை உண்மையென நம்பி, மறுநாட்களை மறந்து வாழ்ந்தாய்... " எனச் சகோதரன் போதலயருக்கு எழுதிய கடித வரிகள் நிலைமையைத் தெளிவுற விபரிக்கின்றன.
செய்தியைக் கேள்வியுற்ற வளர்ப்புத் தந்தை "வழுக்கல் நிறைந்த பாரிஸின் வீதிகளை" விட்டுத் தன் வளர்ப்பு மகனைக் காப்பாற்று முகமாக எங்காவது நீண்ட பயணமொன்றிற்கு போதலயரை அனுப்பி வைக்கத்திட்டமிட, ஒரு வருடம் நீடிக்கக்கூடிய இந்தியப் பயணமொன்றிற்கு போதலயர் அரைமனத்துடன் கப்பலேறினான். கப்பல் வாழ்கைமுறைகளுக்கு அடங்கி நடக்காதபோதும், தன்கடமையைச் சரிவரச் செய்யவேண்டுமென்ற நோக்கில் கப்ரன் இவ்விளைஞனை அக்கறையுடன் பராமரித்த போதும் , றெயூனியோன் தீவில் பயணத்தை இடைநிறுத்தி தான் மீண்டும் பிரான்ஸிற்குப் போகும் இன்னொரு கப்பலில் ஏறுகிறான் இருபது வயதான இளைஞன் போதலயர். கல்கத்தா வரையும் செல்ல வேண்டிய பயணம் அரைவழியில் முடிந்துவிடுகின்றது.
தந்தைவழியால் உரித்தான தனது பங்குச் சொத்தைப் பெற்றுக்கொண்டு, குடும்பத்திடமிருந்து பிரிந்து தனியான வாழ்வை ஆரம்பிக்கும் போதலயரின் செலவுகள் கட்டுக்கடங்காது, காணிகளையும் விற்று அனைத்தையும் தொலைத்துவிட்டு மீண்டும் பரதேசியாகும் நிலைக்கு போதலயர் தள்ளப்படுகிறான். தாய், வளர்ப்புத் தந்தை, சகோதரன் எல்லோருமாக வழங்கிய ஆலோசனைகள் ஏதும் பலனற்றுப் போய் குடும்பத்துடனான முறிவு உருவாகுகின்றது. சட்ட ரீதியாக இவரின் பணநலன்களைக் கவனிக்கும் முறையில் இவரது குடும்பத்தினால் இவருக்குச் சட்டக் கட்டுப்பாடுடடான பரிபாலனம் உருவாக்கப்படுகின்றது. இவரின் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் மேற்பார்வைக்குள்ளாக்கப்படுகிறது. தனது தாயாரின் விண்ணப்பத்தின் பேரில்தான் இவையனைத்தும் நடைபெறுகின்றன என்பதால் சிறிது காலம் தாயாருடடான மனத்தாங்கல்கள் தொடர்கிறது. வளர்ப்புத் தந்தையுடனான வெறுப்பு மேலோங்குகிறது.
ஜான் என்ற கறுப்பு-வெள்ளைக் கலப்பினப் பெண்ணொருத்தியுடனான வக்கிரமும், பாலியல் வாஞ்சையும் கொண்ட காதலுறவு ஒன்றே இந்நிலையில் வாழ்வின் ஆதாரமாகப் பரிணமிக்கிறது. பத்து வருடங்கள் நீடித்த இந்த உறவும்கூட இறுதியில் வெறுப்புக்குரியதாக மாற்றமடைகிறது. இக்காலகட்டத்தில்தான் போதலயர் பத்திரிகைகளுக்கான கட்டுரைகளை தன்பெயரிலும், புனைபெயரிலும் வெளியிடுகிறார்.
1848 ல் நடந்த புரட்சி, மீள நிறுவிய முடியாட்சியை வீழ்த்தியபோது, போதலயரும் அதில் ஆர்வமுடன் பங்குகொண்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசியலில் தன்னையும் இணைத்து "வெகுசனச் சுபீட்சம்' என்ற சிறு அரசியல் பத்திரிகையொன்றையும் நண்பர்களுடன் இணைந்து வெளியிடுகின்றார். ப்ளோங்கி எனப்படும் தீவிர இடசாரிப் போராளியினால் உருவாக்கப்பட்ட 'குடியரசுவாதிகளின் அமைப்' பில் உறுப்பினராகவும் இணைகிறார். இக்காலகட்டத்தில்தான் ப்ரூடோனை சந்திக்கப் பிரயத்தனம் செய்யும் போதலயர், சந்திக்கமுடியாத சூழ்நிலையில், அவருக்கு உயிராபத்திருப்பதையும் முன்னெச்சரிக்கை செய்துகொள்கிறார். நீண்டமாதங்களின் பின்னரே ப்ரூடோனைச் சந்திக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கின்றது. ஆழமான அரசியற் கரிசனை கொண்டிருந்த போதலயர், லூயி-நெப்போலியனின் ஆட்சியுடன், வெறுப்புற்று, அரசியலிலிருந்து முற்றுமுழுதாகவே ஒதுங்கிவிடுகிறார்.
கட்டற்ற வாழ்க்கை, அளவுக்கதிகமான மதுப்பழக்கம், வறுமை, சோம்பல்... என வாழ்ந்த அமெரிக்கத் தீர்க்கதரிசி எழுத்தாளரான எட்கார் போ வினுடைய மரணத்தின் பின், போதலயர் தன்னுடைய பாதைக்கும் தான் ஒரு போதும் கண்டிராத இவ்வெழுத்தாளனுடைய பாதைக்குமான சமாந்தரத் தன்மையைக் கண்டு அவருக்கு மரியாதை செலுத்துமுகமாக அவரின் ஆக்கங்களை பிரஞ்சில் மொழிபெயர்க்கின்றார். இதை தனது தார்மீகக் கடமையென்றே போதலயர் கருதுகின்றார்.
தெயோபீல் கோத்தியே என்ற சமகாலப் பிரஞ்சு ரோமான்ரிச எழுத்தாளருடனான போதலயரின் தொடர்பும், ஆழமான நட்புறவும் அவரைப் போதை வஸ்துப் பாவனைக்கான சூழ்நிலைக்குள் கொண்டுவருகின்றன.. "செயற்கைச் சொர்க்கம்" என்ற நூலில் போதலயர் தனது போதை அனுபவங்களைப் பற்றியும் அதன் நன்மை தீமைகளைப் பற்றியும் விபரிக்கின்றார்.
செவ்விலக்கிய, ரோமான்ரிசப் பாணிகளைத் தாண்டி, கவியாக்க விதிகளெனும் தளைகளை அவிழ்த்தெறிந்து வசன கவிதைகளைப் பிரஞ்சு இலக்கியத்திற்குள் துணிவுடன் வழங்கிய முதலாவது கவிஞர் போதலயர். "வசனச் சிறுகவிதைகள் அல்லது பாரிஸின் மனச்சோர்வு" எனும் வசனக் கவித் தொகுப்பு இதில் குறிப்பிடத்தக்கது. இவருக்கு முதல் பிரஞ்சில் வசன கவிதைகளை எழுதியோர் சிலர் இருந்தபோதும் அவர்களின் ஆக்கங்கள் போதலயரினவற்றைப் போன்று முக்கியத்துவம் பெறவில்லை.
செவ்விலக்கிய, ரோமான்ரிச விதிகளை முற்றுமுழுதாக தூக்கியெறியாத 'துன்பத்தின் பூக்கள்' போதலயரின் மிகச்சிறந்த கவிப் படைப்பாகும். இக்கவித்தொகுப்பு அதன் உள்ளடக்கத்தாலும், வடிவத்தாலும் ரோமான்ரிசப் பாணியிலானதெனவே கருதப்படுகின்றது.
நிர்மாணிக்கப்ட்ட சமூக-ஒழுக்கவியல் எல்லைகளைத் திட்டமிட்டமுறையில் தாண்டிச்செல்வதும், சமூகத்தின் ஒழுங்கமைப்புகளுக்குச் சவால் விடுவதும், பூர்ஷ+வா மனோநிலையின் அடித்தளத்தை தீர்க்மான முறையில் உலுப்புவதும் போதலயரின் ஆரம்பகால ஆக்கங்களில் வெளிப்படகின்றன. ஆனால், இறுதிக்காலத்தில், வெறுப்பும் மனச்சோர்வும் விரக்தியும் நிராசைகளும் நிறைந்த கவிதைகளே உருவாக்கமடைகின்றன.
வாழ்வின் சுமை, அதன் தவிர்க்க முடியாத அபத்தம், வெறுமை என்பன போதலயரின் கவிதைகளில் தாராளமாகவே காணப்படுகின்றன. 19 ம் நூற்றாண்டின் நடுப்பகுதியின் பின்னர், பாரிஸில் ஏற்பட்ட தீவிர 'நகர்மயப்படுத்தல்' இந்நககரின் குடிமக்களை தனிமைக்குள் கொண்டு சென்று வாழ்க்கை முறையில் அடிப்படை மாற்றங்களை உருவாக்கி மனிதர்களுக்கிடையிலான உறவு முறைகளையும் சீரழித்து அவர்களை மேன்மேலும் தனிமைக்குள் தள்ளிவிடுகின்றது. இக்காலகட்டத்தில் வாழ்ந்த போதலயரின் மன உளைச்சல்கள், மனச்சோர்வுகள் என்பன அவரின் கவிதைகளுக்கூடாகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
நுண்ணுணர்வும், ஆழமான சிந்தனைப் போக்கும் கொண்ட போதலயர் வாழ்க்கையிடமும், காலத்திடமும், மனிதர்களிடமும் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவேதான் எழுதினாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சொல், மர்ம மனிதனே, நீ யாரை அதிகம் விரும்புகிறாய் ?
தாயை? தந்தையை? சகோதரியை ? சகோதரனை ?
- எனக்குத் தாயுமில்லை, தந்தையுமில்லை, சகொதரியுமில்லை, சகோதரனுமில்லை.
- உனது நண்பர்கள் ?
- இதுவரையும் நான் அர்த்தம் அறியாத ஒரு சொல்லை உபயோகித்தல்லவா நீங்கள் பேசுகிறீர்கள்.
- உனது தேசம்?
- அது இவ்வுலகில் எங்கிருக்கிறதென அறியேன்.
- அழகு ?
- ஓ அதுவா ,தேவதையானதும் அழிவற்றதுமான அதில் வேண்டுமானால் நான் விருப்புறுவேன்.
- தங்கம் ?
- நீங்கள் கடவுளை வெறுப்பதுபோல், நான் அதை வெறுக்கிறேன்.
- அப்படியானால், அசாதாரண அந்நியனே, நீ எதைத்தான் விரும்புகிறாய் ?
- நான் மேகங்களை விரும்புகிறேன். அதோ அங்கே.. இங்கேயெல்லாம்... தாண்டிச் செல்லும் மேகங்களை, அற்புதமான அந்த மேகங்களை நான்விரும்புகிறேன்.

"அந்நியன்" என்ற இந்த வசன கவிதையில், நிரந்தரமான உறவுகளின்றி, நாடின்றி, எதன்பாலும் கட்டுண்டுவிடாது, கடந்து செல்லும் நிரந்தரமற்ற மேகங்களை நேசிக்கும் மனிதனை வர்ணிக்கிறார். போதலயரே இவ்வாறு ஒர மனிதனாகத்தான் இருந்தார் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை.
புலனுக்கு அகப்படும் வாழ்வின் அபத்தத்தையும் , காலத்தின் கொடூரத்தையும் மறந்து வாழ்வதற்கான கருவியாக போதலயர் போதையைப் பயன்படுத்துகிறார்.
எந்நேரமும் போதையுடனிருக்கவேண்டும், எல்லாம் அதில்தானிருக்கிறது. ஒரேயொரு பிரச்சினை அதுமட்டும்தான். உங்களது தோள்களை முறித்து நிலத்தை நோக்கிச் சரியவைக்கும் காலத்தின் கொடூரமான சுமையை உணராதிருக்க இடையீடின்றிப் போதை கொள்ள வேண்டும்.
எதனால் போதை கொள்வது ? கள்ளால், கவிதையால், ஒழுக்கத்தால்... எதனால் வேண்டுமானாலும் போதை கொள்ளுங்கள் !
சிலவேளைகளில், ஒரு மாளிகையின் மாடிப்படிகளில், பள்ளமொன்றில் படர்ந்திருக்கும் பசும்புற்களில், போதை தெளிந்து, மயக்கம் கலைந்து நீங்கள் விழிக்க நேரிட்டால், காற்றிடமும், அலையிடமும், ஆகாயமீனிடமும், புள்ளிடமும், நேரங்காட்டியிடமும், ஓடிக்கொண்டிருக்கும் அனைத்திடமும், துடித்துக்கொண்டிருக்கும் எல்லாவற்றிடமும், உருண்டு கொண்டிருக்கும் ஒவ்வொன்றினிடமும், பாடும் எல்லாவற்றிடமும், பேசும் அனைத்திடமும் இப்போ நேரம் என்னவென்று கேளுங்கள்.
காற்றும், அலையும், நட்சத்திரமும், புள்ளும், நேரங்காட்டியும் இது போதைகொள்ளும் நேரமென உங்களுக்குப் பதிலளிக்கும்.
காலம் பலிகொள்ளும் அடிமையென ஆகாது இருப்பதற்காய், போதை கொள்ளுங்கள், இடையறாது போதை கொள்ளுங்கள், கள்ளால், கவிதையால், ஒழுக்கத்தால் எதனால் வேண்டுமானாலும் போதை கொள்ளுங்கள் !
"கள்ளால், கவிதையால், ஒழுக்கத்தால்... எதனால் வேண்டுமானாலும் போதை கொள்ளுங்கள்" என்ற இந்த "போதை கொள்ளுங்கள்" என்ற கவிதை வரிகள் ஒழுக்கவியல் தீர்ப்பு எவற்றையும் வழங்காது, அனைத்துப் போதைகளையும் ஒரே நிலையில் நோக்குவது குறிப்பிடத்தக்கதாகும். தனது சொந்த வாழ்வுடன் முரண்படாது போதலயர் முன்வைக்கும் போதையின் மீதான உபயோகவாதம் கண்ணதாசனின் "பண்பான போதை" என்னும் கருத்துடன் முரண்படுவது அவதானிக்கப் பட வேண்டியது.
"துன்பத்தின் பூக்கள்" என்ற கவிதைத் தொகுப்பின் தலைப்பே அதன் உள்ளடக்கத்தைப் பறைசாற்றுகிறது. வாழ்வியல் அனுபவங்களிலிருந்தும், அவதானங்களிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் பெற்றுக்கொண்டவற்றை, உள்வாங்கியவற்றை கவிதைப் ப+க்களாக வரைந்திருக்கும் போதலயரின் அகஅவலங்கள் பாரதூரமாவை.
"எதிரி" என்ற தலைப்புடனான கவிதையில் வரும்
ஓ ! உளஉபாதையே, உளஉபாதையே, காலம் வாழ்வை உண்கிறதே.
புலப்படாத எதிரியான எம் இதயத்தை அரிக்கும்(அபத்தங்களிலாலுருவாகும்) சலிப்போ
நாம் இழக்கும் உதிரத்தை அருந்தி கொழுத்தப் பருக்கிறதே.
என்ற வரிகளும், "மனச்சோர்வு" என்ற கவிதையில் வரும்
நீள் சலிப்பிற்கிரையாகி முனகும் மனதில் மூடியைப்போல்
பாரமுற்றுப் பதிந்த மேகம் சுமையாகும் போது,
சுற்றிய வட்ட அடிவானம் எங்கிருந்தும் அது
எம்மில் இரவினும் இருண்ட பகலை வார்க்கும் போது,
பூஞ்சணம் பீடித்த மேற்சுவர்களில் தiலையை மோதி,
பறக்க மறுக்கும் இறக்கைகளால் சுவர்களைத் தட்டி,
வெளவால் ஒன்றைப்போல் நல்லெதிர்பார்ப்பு விட்டுச் செல்லும்
ஈரநிலவறையாய் இவ்வுலகம் மாறிவிட்ட போது,
பரந்த தன் சுவடுகளை விரவும் மழைக்கதிர்கள் பூமியெனும்
மிக அகன்ற சிறைச்சாலைக் கம்பிகளாய்த் தோற்றமுறும் போது,
நம் மூளைகளின் ஆழத்தில் அருவருக்கும் ஊமைப்
புலிநகச் சிலந்திகளின் கூட்டம் வலைவிரிக்கும்போது,

தேசமின்றியவையும் அலைபவையுமான ஆத்மாக்கள்
பிடிவாதமாய்ச் சிணுங்கி அழுவதுபோல்,
ஆவேசமாய்த் திடீரென (ஆலய) மணிகள் அடித்து
ஆகாயத்தை நோக்கித் தாங்கொணாது அலறுகின்றன.
இசையின்றிப் பறையுமின்றி நீள் பாடைகள் என் உயிருக்குள் மெதுவாய்ஊர்வலம் போகின்றன. தோற்கடிக்கப்பட்ட எதிர்பார்ப்பு அழுகின்றது.கொடூரம் நிறைந்த இனந்தெரியாப்பய உணர்வு தன் கருங்கொடியை
என் சாய்ந்த மண்டையோட்டில் சர்வாதிகாரமாய் நாட்டுகிறது.
எனப்படும் வரிகளும் சபிக்கப்பட்ட இக்கவிஞனின் நீண்ட, தேற்றமுடியாத அலறல்களாக வெளிப்படுகின்றன. "துன்பத்தின் பூக்கள்" தூக்கத்தைக் கெடுக்கவல்லன. துயரத்தைக் கொடுக்க வல்லன. தூக்கத்தை இழந்தும், துயரத்திற்கு அஞ்சாமலும் வாழ்வின் நிஜமுகத்தைத் தரிசிக்க வேண்டுமெனில் போதலயரின் "துனபத்தின் பூக்களால்" அலங்காரம் செய்யப்பட்ட கட்டிலில் கண்ணயர்ந்து பார்க்க வேண்டும்.

 


மேலும் சில...
ஆந்த்ரே ஜீத் (1869-1951): ஒரு அறிமுகம்
அல்பிரட் து மியூசே
குயிஸ்தாவ் ப்ளோபேர்
எமில் ஸோலா
விக்டர் ஹியூகோ
பல்ஸாக் அல்லது நுண்விபரிப்பின் அறுதிப் பலம்.

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Wed, 11 Dec 2024 04:17
TamilNet
The JVP has recently lent itself to US efforts to consolidate the unitary state and realise its long-held ambition to capture state power in Colombo. In this regard, they have also engaged with a range of actors, from the IMF, Washington, and New Delhi, as well as attempted to woo Eezham Tamils and other Tamil-speaking people to opt for the NPP in the 2024 SL Presidential Elections. Norway-based Eezham Tamil anthropology scholar Dr Athithan Jayapalan writes that the NPP and Lionel Bopage speak of equality without addressing the right of an oppressed nation to secession in the face of national oppression and genocide. Instead, the NPP, aligned with the US position, vows to neutralise the Eezham Tamil political struggle for self-determination.
Sri Lanka: JVP always denied Eezham Tamils?inalienable self-determination: Anthropology scholar


BBC: உலகச் செய்திகள்
Wed, 11 Dec 2024 04:17


புதினம்
Wed, 11 Dec 2024 04:17
















     இதுவரை:  26133197 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 13252 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com